No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

வக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…வக்கீல் தொழில் ஒழுக்கக்கேட்டையே போதிக்கிறது. வக்கீல் தொழிலுக்கு வருபவர்கள் பணம் சம்பாதிக்க வருகிறார்களே ஒழிய துன்பப்படுபவர்களுக்கு உதவி செய்வதற்காக அல்ல. பணக்காரர் ஆவதற்கான தொழிலில் வக்கீல் தொழிலும் ஒன்று. 

மனிதர்களுக்குள் தகராறுகள் ஏற்படும் போது, வக்கீல்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். வக்கீல்களுக்கு வேலை என்பதே இல்லை. இவர்கள் சோம்பேறிகளாக இருப்பவர்கள். இவர்கள் தெய்வப்பிறவியோ என்று ஏழை மக்கள் எண்ணும் வகையில் ஆடம்பரத்தையும் மேற்கொள்கின்றனர்.

இவர்கள் சகோதரர்களை விரோதிகள் ஆக்கியிருக்கிறார்கள். இவர்களால் குடும்பங்கள் அழிந்து போயிருக்கின்றன. மக்கள் தங்களின் தகராறுகளை தங்களுக்குள்ளேயே தீர்த்துக் கொள்ள வேண்டும்.
வக்கீல் தொழில், விபச்சாரத்தை போல இழிவானது என கருதி, வக்கீல்கள் கை விட வேண்டும். வக்கீல் தொழில் குறித்து நீங்கள் நன்றாக அறிந்திருந்தால், எனக்கு இருக்கும் இவ்வெறுப்பே உங்களுக்கும் ஏற்படும்.

நீதிபதிகள் குறித்து தாத்தா மகாத்மா காந்தி…
வக்கீல்களைப் பற்றி நான் கூறியனயாவும் நீதிபதிகளுக்கும் பொருந்தும். நீதிபதிகள் பெரியப்பன் பிள்ளைகளைப் போன்றவர்கள். வக்கீல்கள் சிற்றப்பன் பிள்ளைகளைப் போன்றவர்கள். ஒருவருக்கொருவர் பக்க பலமாய் இருப்பவர்கள். இவைகள் முற்றிலும் உண்மை. இவைகளுக்கு எதிரான எந்த கூற்றும் பாசாங்கு (நடிப்பே) ஆகும். 
ஆதாரம்: தாத்தா மகாத்மா காந்தி 1909 – ஆம் ஆண்டு, தனது நாற்பதாவது வயதில் எழுதிய முதல் நூலான இந்திய சுயராஜ்யம் நூலின் 11 – வது கட்டுரையில் இருந்து சுருக்கித் தொகுத்தவர், சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா. 
தமிழ் வெளியீடு: காந்திய இலக்கியச் சங்கம், மதுரை – 625020. நிலைப்பேசி எண் 04522533957. 2012 ஆம் ஆண்டில் விலை ரூ.15 நவஜீவன் பப்ளிகேசன்ஸ், அகமதாபாத் – 380 041.
தொலைபேசி, +91-79-2754132,  இணையதளம்: www.navajivantrust.org 
மகாத்மாவின் பொற்காலம் 02-10-1869 முதல் 30-01-1948 வரை.

அரசு ஊழியர்கள், வக்கீல்கள் மற்றும் 

நீதிபதிகள் குறித்து பகுத்தறிவுப் பெரியார்…

வக்கீல் தொழிலும், அரசு ஊழியமும் ஆங்கிலேய ஆட்சியின் பயனாய், இந்திய மக்களுக்கு ஏற்பட்டுள்ள இரண்டு துன்பங்கள். இவ்விரண்டும் இந்த நாட்டில் பிரபுத் தன்மையை காப்பாற்ற இருக்கிறதே தவிர, நியாயத்தைச் செய்யவோ, ஏழைகளைக் காப்பாற்றவோ இல்லவேயில்லை.

நாட்டில் இவ்வளவு ஒழுக்கக்குறைவும், நாணயக்குறைவும், தரித்திரமும், மக்களுக்குக் கஷ்டமும், அலைச்சலும், எதிரெதிரான ஏழைத்தன்மையும், பணக்காரத் தன்மையும் இருப்பதற்கு காரணமும் இவ்விரு தொழில்களே. ஏழைகளையும், மத்தியத்தர மக்களையும் தலையெடுக்க விடாமல் செய்து வருவது, இவ்விரு தொழில்களுமே தவிர, வேறொன்றுமில்லை.
சாதாரண மக்களுக்கு நீதி கிடைப்பதில்லை என்பதோடு, பணக்காரனாய் இருப்பவன் பணத்தின் மகிமையால், 100 க்கு 90 வழக்குகளில், தன் இஷ்டப்படி நியாயம் பெறுகின்றான். நீதிபதிகளும், வக்கீல்களும் ஏழை மக்கள் நீதி பெறுவதற்கு இடையூறாகவும், பணக்காரர்கள் தங்கள் இஷ்டப்படி நீதி பெறுவதற்கு அனுகூலமாகவும் இருக்கின்றார்கள்.
இன்றைய வக்கீல் முறையே, மனித சமூகத்தின் ஒழுக்கத்திற்கும், நாணயத்திற்கும், சாந்திக்கும், ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் நேர் விரோதமானதாகும். அதுமாத்திரமல்லாமல், தேசத்தின் ஒழுக்கமும், நாணயமும், சுயமரியாதையும் கெட்டுப் போனதற்கு வக்கீல்களே காரணஸ்தர்கள் என்று சொல்வது சிறிதும் மிகைப்பட கூறுவதாகாது.
நமது நாட்டுப் பணக்காரர்கள் அநேகருக்கு அயோக்கியத்தனமும், ஆணவமும், நாணயக் குறைவும், நாட்டின் நலனுக்கு பொறுப்பற்ற தன்மையாய் நடந்து கொள்ளவும் காரணமே வக்கீல்கள்தாம். விவசாயிகள் பெரிதும் கடன்காரர்களாக இருப்பதற்கும் வக்கீல்களே காரணமாவார்கள்.
பிரச்சினைகளில் மக்களுக்கு அதிக நம்பிக்கையும், ஆசையும் ஏற்படுவதற்கு வக்கீல்களே காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.
நாளுக்கு நாள் வழக்குகள் அதிகரித்துக் கொண்டே போவதற்கும், நீதிமன்றங்கள் அதிகமாக  கூடுவதற்கும் வக்கீல்களே காரணமாவார்கள். உண்மையை ஒளிக்காமல் தெளிவாய் சொல்லப் வேண்டுமானால், மக்கள் அயோக்கியர்கள் ஆனதற்கும், நாணயக் குறைவாய் இருப்பதற்கும் கூட, வக்கீல்களே மிகமுக்கிய பொறுப்பாளிகள் ஆவார்கள்.
வெள்ளைக்கார வக்கீல்களிடமும், வெள்ளைக்கார அதிகாரிகளிடமும் காணமுடியாத, அநேக ஒழுக்கக் குறைவுகளும், நாணையக் குறைவுகளும், நடுநிலையற்ற தன்மையும், நம் வக்கீல்களிடமும், அரசு ஊழியர்களிடமும் தாராளமாய் இருந்து வருகின்றன.
இதனால் ஒழுக்கமும், நாணயமும் உள்ளவர்கள் வக்கீல் தொழிலுக்கும், அரசு ஊழியத்துக்கும் அருகதையற்றவர்களாகி விட்டனர்.
சிவில் நீதிமன்றங்களில், அழைப்பானை சார்பு செய்யும் சேவகன் முதல் குமாஸ்தா உள்ளிட்ட ஊழியர்கள் வரை, ஒழுக்கத்திலும், நாணயத்திலும், யோக்கியப் பொறுப்பிலும் மிக மிக மோசமாக நடந்து கொள்ள வெகுகாலமாகவே அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
நீதித்துறையில் லஞ்சமும், மாமூலும், மோசமும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், அத்துறையின் தலைவர்கள் என எல்லோருக்கும் தாராளமாய் தெரிந்தும், வேண்டுமென்றேயும் அனுமதித்துக் கொண்டிருக்கும் அளவு, மனிதனால் சொல்லக் கூட தகுதியுடவை அன்று.
வக்கீல்களின் தொல்லைகளும், நீதிபதிகளின் தொல்லைகளும் ஒருபாகம் என்றால், மற்ற ஊழியர்களின் தொல்லைகள் சகிக்க முடியாதவையாகும். இந்தத் துறைகளில் சீர்திருத்தமோ, ஒழுங்கோ செய்வதற்கு ஒரு அரசியல்வாதியோ, தேசியவாதியோ கிடையவே கிடையாது.
இதனால், வலுத்தவன் இளைத்தவனை நேருக்கு நேராய் உதைத்துத் தொல்லைப்படுத்தி, அவனிடம் உள்ளதைப் பிடுங்குவதை விட, நீதிமன்றம் மூலமும், வக்கீல்கள் மூலமும் பிடுங்கிக்  கொள்வதும், தொல்லைப்படுத்தி அவனை ஒழிப்பதும் மிகவும் சுலபமானதும், சட்டப் பூர்வமானதுமான காரியமாகவே இருந்து வருகிறது.
இம்முறையானது பணக்காரர்களுக்கு மிகவும் அனுகூலமாய் போய் விட்டதால், அவர்களும் சந்தோசத்தோடும், முழுப் பலத்தோடும் ஆதரிக்கிறார்கள்.
நடுநிலைமையற்ற அதிகாரிகளும், நாணயமும், ஒழுக்கமும், பொறுப்புமற்ற வக்கீல்களும், நீதிமன்ற ஊழியர்களும் தாங்கள் இந்த காரியங்களை செய்வதற்காக அடையும் ஊதியத்தையும், வரும்படியையும் பார்த்தால், உலகத்தில் எந்த யோக்கியமான நாணயமான மனிதனும், தொழிலாளியும் அடையும் ஊதியத்தை விட, எத்தனையோ மடங்கு அதிகமாக பெறுகின்றார்கள்.
ஒரு முன்சீப் என்பவர் (கீழ்நிலை சிவில் நிதிபதி) 300 ரூபாயில் ஆரம்பமாகி அக்கிரமங்களைச் செய்வதன் மூலம் படிப்படியாக மாதம் 4500 ரூபாய் வரை பெரும் உயர்நீதிமன்ற நீதிபதி வரை உயர்த்தப்படுகிறார்.
வக்கீல் மாதம் 100 ரூபாய் முதல் அக்கிரமமும், அயோக்கியத்தனமும், நாணயக்குறைவும், பித்தலாட்டமும் செய்யும் அளவிற்குத் தக்கபடி படிப்படியாய் கெட்டிக்காரனாகி மாதம் 10 ஆயிரம், 20 ஆயிரம், 50 ஆயிரம் ரூபாய் வரை பெறும்படியான யோக்கியதை உடையவனாகிறான்.
ஒரு வழக்கு தொடுத்து 20 வருடத்திற்கு மேலாகியும், இன்னமும் முடிவுறாது இருக்கிறதென்றால், விசாரணை முறையில் இருக்கும் யோக்கியதையைச் சொல்ல வேண்டுமா?
உலகத்தார் எல்லோராலுமே ஒழுக்கமற்றதென்றும், நாணயமற்ற தென்றும், வெளிப்படையாய் தெரியும் படியாக நடந்து கொள்ளும் இத்தொழில்கள், “ஈனத் தொழில்களே”.

இத்தொழிலில் இவ்வளவு அக்கிரமத்திற்கான

 காரணமும், தீர்வும்

வக்கீல்களும், நீதிபதிகளும் ஒரே கூட்டத்தினராய் இருப்பது. அதாவது, வக்கீலே நீதிபதியாவதும், நீதிபதி வக்கீலாவதுமான முறை இருப்பது முதல் குற்றமாகும். வேறுபல நீதிபதிகளின் தீர்ப்புரைகளை மேற்கோள் காட்டி தீர்ப்புரைப்பது இரண்டாவது குற்றம். நியாய உலகம் சீர்பட வேண்டுமானால், அதில் ஒழுக்கத்திற்கும், நியாயத்திற்கும் சிறிதாவது இடமிருக்க வேண்டுமானால், முக்கியமாக இவ்விரண்டு முறைகளையும் ஒழித்து விட வேண்டும்.
மேலும், வக்கீல்கள் ஏராளமாக உற்பத்தி செய்யப்படுவதையும், கணக்கு வழக்கில்லாமல் வக்கீல்களை தொழில் நடத்த அனுமதி கொடுப்பதையும், நிறுத்திட வேண்டும். வக்கீல்கள் பெருகுவது, இந்த நாட்டின் நியாயத்தையும், ஒழுக்கத்தையும், சாந்தியையும் (அமைதியையும்) கெடுப்பதற்கு ஏற்பட்ட விஷக் கிருமிகளை வளர்ப்பதற்கே ஒப்பாகும். 
ஆதாரம்: 10-05-1931 தேதியிட்ட குடியரசு வார இதழின் தலையங்கத்தில் இருந்து தேவைக்கு ஏற்ப சுருக்கியும், ஒருங்கிணைத்தும் தொகுத்தவர், சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா அவர்கள். 


தந்தைச் சொல்மிக்க மந்திரமில்லை!

நாம் இயற்கையை அனுசரித்துப் போனால், இயற்கையாகவே சட்டம் நமக்கு உதவுகிறது என்பதால், வக்கீல் தொழிலில் பொய்யை அனுசரித்ததே இல்லை. இதனால், நியாயமான வழக்குகள் மட்டுமே என்னிடம் வர, பொய் வழக்குகள் எல்லாம், வராமல் போய் எனது வேலை மிக எளிமையாகி விட்டது. வக்கீல்கள் மத்தியில் என் மதிப்பும் அதிகமாகியது.
வழக்கு தரப்பினர்களிடம் நட்பு கொண்டு, பிளவுப்பட்டிருக்கும் அவர்களை ஒன்றாக்கி, சமரசம் செய்து வைப்பதுதாம் உண்மையான வக்கீலின் கடமை. இக்கடமையைத்தாம் இருபது ஆண்டுகள் ஆற்றினேன். சமரசம் என்பது, இருதரப்புக்கும் வெற்றியைத்தரும் அழகுணர்ச்சி என்பதால், வக்கீல்களுக்கு எல்லா விதத்திலும் நன்மைதானே தவிர, எவ்விதத்திலும் நட்டமில்லை.
வழக்கு செலவுக்கு மீறிய கட்டணத்தை வாங்கியதே கிடையாது. நீதிமன்றம் தீர்ப்பு சொல்லும் வழக்கு செலவுத்தொகையே எனது கட்டணம். வழக்கை நடத்த முடியாமல் போனால், வாங்கிய கட்டணத்தை திருப்பித் தந்து விடுவேன். வழக்கின் வெற்றி தோல்வியை வைத்து, கட்டணத்தை நிர்ணயித்ததில்லை. ஆனாலும், எதிர்பார்த்ததை விட, தொழிலும் வருமானமும் நன்றாகவே இருந்தது. எனது இவ்வருமான தொழிலைக் கூட, பெரிய மனம் படைத்தோர் சேவை என்றே கூறினர்.
கட்சிக்காரருக்கு கிடைக்க வேண்டிய நியாயம் மற்றும் தண்டனையைப் பெற்றுத்தர தவறியதில்லை. அவமானம் என்பது குற்றம் புரிவதில்தாம் இருக்க வேண்டுமே தவிர, அக்குற்றத்திற்காக சிறை செல்வதில் அல்ல என்பதால், கட்சிக்காரருக்கு தண்டனையைப் பெற்றுத்தருவதும் நியாயமே. 
அதேபோல, உரிமைகளுக்காக சிறை செல்லவும் தயாராய் இருக்க வேண்டும். எனது வாழ்நாளில், உரிமைகளுக்காக வருடக்கணக்கில் சிறையில் இருந்துள்ளேன்.
சட்டங்களைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. சாட்சிய சட்டத்தில் ஓரளவு தெளிவுண்டு.
தெரியாத சட்ட விசயத்தில், கட்சிக்காரர்களிடம், தெரிந்ததுபோல் காட்டிக் கொண்டதோ, வழக்கை நடத்தி தருகிறேன் என முன் வந்ததோ இல்லை. ஆனாலும், கட்சிக்காரர்கள் நானே நடத்த வேண்டும் என விரும்பினால், மூத்த வக்கீலிடம் ஆலோசனையைப் பெற உரிய கட்டணத்தைப் பெற்றும், உரிய ஆலோசனையைப் பெற்றும் நடத்திக் கொடுத்தேன்.
எனது திறமையை, சக்தியை பெரிய விசயங்களில் போராடுவதற்காக சேமித்து வைத்துக் கொண்டேன். பொது நலனுக்காக வழக்கு நடத்தியுள்ளேனே தவிர, எனது சொந்த வழக்கை நடத்தியதில்லை. ஒரே சமயத்தில் நான் ஏற்று நடத்திய எழுபது வழக்குகளில் ஒன்று மட்டுமே தோற்றது.
சத்தியமானது மலர் போல் மென்மையானதே ஆயினும், கல்போல் கடினமானது. சரியாக சிந்திக்காத சொல் எதுவும் என் நாவில் இருந்தோ அல்லது பேனாவில் இருந்தோ வெளிவந்ததில்லை.
ஆதாரம்: மகாத்மா காந்தி அவர்கள் 1925 இல், தம்முடைய அறுபத்தி ஆறாவது வயதில் எழுதிய, சுயசரிதையான சத்தியசோதனையில் இருந்து ஒருங்கிணைத்து தொகுத்தவர், சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா. 


சத்தியாக்கிரகத்தின் சக்தி

சட்டத்தால், சட்டத்தை, சத்தியத்தின் வழியில் நின்று மீறுவதே, “சத்தியாக்கிரகம்”.
சத்தியாகிரகம் என்பது, தர்மத்துக்கு விரோதமான சட்டங்களை சட்டப்பூர்வமான முறையில் எதிர்த்து, அதற்காக விதிக்கப்படும் சிறைத் தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாகும்.
நியாயமற்ற சட்டங்களுக்கும், உத்தரவுகளுக்கும் பணிவது ஆண்மையற்ற செயல் என்பதை நாம் உணர்ந்திருந்தால், எந்தச் சட்டமும், உத்திரவும் நம்மை ஒன்றும் செய்திட அல்லது அடிமைப்படுத்தி விட முடியாது.
தனது உடமைகள், போலி கௌரவம், உறவினர்கள், மரணம் என எதற்கும் அஞ்சாதவர்களே, சத்தியாக்கிரகத்தை பின்பற்றவும், வெற்றியடையவும் முடியும்.
சத்தியாக்கிரகியின் அகராதியில், “எதிரி” என்ற சொல்லே இருக்கக் கூடாது. எந்தச் சூழ்நிலையிலும் பொய்ச் சொல்ல ஏமாற்ற, துன்புறுத்தக் கூடாது. தனது உயிரைத் துறந்தாகிலும், பிறரது உயிரைக் காக்க வேண்டும்.
சத்தியாக்கிரக கைதி, தனக்கும் சாதாரணக் கைதிக்கும் வேறுபாடு இருப்பதாகக் கருதக் கூடாது. சிறையில், சிறப்புச் சலுகை எதையும் பெறக்கூடாது. சுயக்கட்டுப்பாட்டில், சக கைதிகளுக்கு முன்னுதாரணமாய் இருக்க வேண்டும்.
ஒரு சத்தியாக்கிரகி, வெளியில் இருப்பதை விட, சிறைக்குள் இருக்கும்போதுதான், தனது லட்சியத்துக்கான தகுதியைப் பெறுகிறார். எந்த அளவிற்கு, அகிம்சையோடு சிறை விதிகளை மதித்து நடக்கிறாரோ, அந்த அளவிற்கு கொள்கையில் உயர்வார்.

அகிம்சை என்பது, ”இம்சையை அறிந்தே அனுபவிப்பது”. 
ஒத்துழையாமை என்பது, ”அநீதிக்கு ஒத்துழைக்காமல் இருப்பது”.
பலமும், அறிவும் உள்ள ஒரு சத்தியாக்கிரகி, தானே முன்வந்து அநீதிக்கு ஒத்துழைக்காது, இம்சைகளை ஏற்பதால் மட்டுமே, நீதியைக் காக்கவும், அவதூறுகளைப் போக்கவும் முடியும்.
சத்தியாக்கிரகம் ஒன்றே, சமத்துவம், சமாதானம், சமநீதிக்கான சரியான வழி. 

மற்றவை எல்லாம் அழிவுக்கான வழியே; பகையே!

ஆதாரம்: மகாத்மா காந்தி 1924 ஆம் ஆண்டு எரவாடா சிறையில் இருந்த போது எழுதிய, சத்தியாக்கிரகம் என்னும் நூலில் இருந்து ஒருங்கிணைத்தும், சுருக்கியும் தொகுத்தவர், சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா. 

பொய்யர்கள்,  குமாஸ்தாக்களைப்  

பற்றி தேசிக விநாயகம்பிள்ளை

--- உண்மைக் கெல்லாம் உறைவிட மாகியும்
கருணைக் கெல்லாம் களஞ்சிய மாகியும்
வாழும் நியாய வாதிகள் தங்கும்
வீதியை முற்ற விலகிச் சென்று,வீண்
விவகா ரங்கள் விளைநில மாகியும் 

பொய்கள் அடைக்கல புகுமிட மாகியும்
குதர்க்கம் கடிகொளும் குகையிட மாகியும்
திருஅவ தாரம் செய்தன் றிருந்தவோர்
அண்டப் புரட்டன் வக்கீல் ஆபீசில்
ஆனைப் பொய்யன் குமஸ்தனை அறிந்து 

காரியம் சொன்னார், கதைகளும் சொன்னார்
‘காரண வனைப்பல காரணத் தாலே
மாற்றும் படிக்கு வந்தோம்’ என்றார்
புற்றை விட்டுப் புறம்போ காமல்
பட்டினி கிடக்கும் பாம்பின் வாயில் 

தேரை குதித்துச் சென்று விழுவது
நாகம் முன்செய்த நல்வினைப் பயனோ?
தேரை முன்செய்த தீவினைப் பயனோ? ---

--- ‘இரவும் பகலும் இடைவிடாமல்
பற்பல வருசம் படித்து பீ.எல்

எம்.எல் பட்டம் எல்லாம் பெற்று
வந்திடும் பெரிய வக்கீல் மாரும்
யாங்க ளில்லையேல் என்செய் வார்?’எனப்
புத்தி யில்லாது புலம்பித் திரியும்
குமாஸ்தா வெனும்ஈக் கூட்டம் உம்மைக் 

குத்தி ரத்தம் குடித்திடும், ஐயா!
கோர்ட்டில் சென்று குதித்திட வேண்டாம்!
குதித்துக் குடியைக் கெடுத்திட வேண்டாம்!
இன்ன படியென்று எழுதி விட்ட
சிவனே வரினும் சிறிதும் அஞ்சேன், 

விதியினுக்கு ஆயிரம் விக்கினம் சொல்வேன்,
வருகிற வழியாய் வந்(து)எனைக் கண்டால்
சிக்கெலாம் போக்கித் தீர்ப்பையும் நடத்தித்
தருவேன்’ என்று சற்றும்வாய் கூசாது
உரைக்கும் அந்த உத்தம புருசன்

நிறையா வயிற்றை நிறைந்திடக் கடலைத்
திறந்துவிட் டாலும் திகையுமோ? ஐயா!
வீட்டை விட்டு வெளிவரா உமக்குக்
கோர்ட்டுக் காரியம் கொஞ்சமும் தெரியுமோ?
பாரப் படிகளும் பட்டிகைப் படிகளும் 

சாட்சிப் படிகளும் சமன்சுப் படிகளும்
கணக்கி லடங்காக் கமிசன் படிகளும்
ஜப்திப் படிகளும் லேலப் படிகளும்
வாரண்டுப் படிகளும் வாசற் படிகளும்
ஏணிப் படிகளும், இப்படி அப்படி 

எல்லாப் படிகளும் ஏறி இறங்கி
வாணாள் கொடுத்து வாண தீர்த்தம்
ஆட ஆளும் நீரோ? ஐயா!
கோர்ட்டுப் பீசு குமாஸ்தாப் பீசு
கூடிக் காப்பி குடிக்கப் பீசு 

வெற்றிலை வாங்கிட வேறொரு பீசு
வக்கீல் பீசு மகைமைப் பீசு
வக்கா லத்து வகைக்கொரு பீசு
எழுதப் பீசு சொல்லப் பீசு
எழுதிய தாளை எடுக்கப் பீசு 

நிற்கப் பீசு, இருக்கப் பீசு
நீட்டின கையை மடக்கப் பீசு
பாரப் பீசு கீரப் பீசு
பார இழவு பயிற்றுப் பீசு
கண்டு பீசு, காணாப் பீசு 

முண்டுத் துணிக்கொரு முழுமல் பீசு
அந்தப் பீசு, இந்தப் பீசு
ஆனைப் பீசு, பூனைப் பீசு
ஏறப் பீசு இறங்கப் பீசு
இப்படி யாக என்றென் றைக்கும்

பீசு பீசாகப் பிச்சி எடுக்கும்
கோர்ட்டில் சென்று குதித்திட வேண்டாம்!
குதித்துக் குடியை முடித்திட வேண்டாம்! --- 

--- வாதி பாகத்து வக்கீல் உம்மைக்
கூட்டில் ஏற்றிக் குறுக்கு மறுக்காய்க்
‘கிராசு’ கேட்டுக் கிடுக்கி விடுவான் 
சந்தேக மில்லை, சந்தேக மில்லை
நீர்,
அண்டப் புரட்டனை அறிய மாட்டீர்,
புத்தியில் பெரியவர், பொல்லாத வம்பர்;
ஆளும் தரமும் அறிந்திட வல்லவர் 
சீரும் திறமும் தெரிந்திடச் சமர்த்தர்
ஆடிக் கறப்பதை ஆடிக் கறப்பவர்,
பாடிக் கறப்பதைப் பாடிக் கறப்பவர்,
தயவாய்ச் சொல்லுவார், தக்கில் கேட்பார்,
இரைந்து சொல்லுவார், எச்சில் எழுப்புவார், 
பார்ப்பார் என்பார், பல்லைக் கடிப்பார்
போருக்கு நிற்பார், புலிபோல் பாய்வார்,
அங்கும் இங்கும் அசையாதே என்பார்,
குனியாதே என்பார், கோட்டைப்பார் என்பார்,
கோட்டையும் கூடக் கூட்டாக் காமல் 
கேள்விகள் பலவும் கேட்க வருவார்.
ஓடும் குதிரைக்கு உச்சியில் கொம்புகள்
ஒன்றா? இரண்டா? உடன்சொலும் என்பார்!
நாம்
‘குதிரைக்கு ஏது கொம்புகள்?’ என்றால்
அது
கோர்ட்டு அலட்சியக் குற்றம் என்பார்,
‘கேள்வியை நன்றாய்க் கேட்டுச் சொல்லும்
இரண்டா? ஒன்றா? என்பதுஎன் கேள்வி;
உண்டா? இல்லையா? என்றுநான் உம்மிடம் 
கேட்டே னாஓய்? காதுகேட் காதோ?’
என்றெலாம் சொல்லி ஏமாற்றி விடுவார்,
குண்டில் விழுந்த குள்ள நரியைப்
படுத்தும் பாடெலாம் உம்மைப் படுத்துவார்,
இவர்,
ஈரங் கிகளை எடுத்துச் சொன்னால்
பீரங்கிகளும் பின்னிட் டோடும்
பொல்லாதவர்அவர், பொல்லா தவர்அவர்.
‘இந்த வக்கீலுக்கு ஏழரை நாட்டனும்
இணையா வாரோ! இணையா வாரோ? 
அறிந்து பிழையும் அறிந்து பிழையும்
சொந்த வீட்டில துரும்பையும் தூக்கி
எறியச் சற்றும் இயலாது என்பவர்,
வக்கீல் வீட்டில் வரிக்கல் பிடுங்கப்
போவதும் எத்தனை புத்திகேடு ஐயா! --- 

--- வியாபா ரங்கள் மிகுந்த நாட்டில்
உழைப்புகள் பற்பல ஓங்கிய நாட்டில்,
வழக்குகள் நிதமும் வளர்ந்து வருவது
சகஜம் என்று ஸ்தாபித் திடநான்
‘அத்தா ரிட்டிகள்’ ஆயிரம் காட்டுவேன். 
அண்டப் புரட்டன் வக்கீல், என்ன
ஆளைத் தூக்கி விழுங்கிடு வாரோ?
இவர்வீச் செல்லாம் யாரிடம் செல்லும்?
ஏழை பாவம் யாவ ரேனும்
வந்தால், கொஞ்சம் வாலை முறுக்குவார், 
அன்றி,
பதிவு சாட்சி பலவேசம் பிள்ளை
கூட்டா ளிகளைக் கூட்டிற் கண்டால்
வாயைத் திறவார், மௌனம் கொள்வார்!
பேடியைக் கண்ட பீஷ்மரும் ஆவார்!
அண்டமும் கோழி அண்ட மாய்விடும்,
உருட்டும் புரட்டும் ஒழிந்து போய்விடும்,
அண்ணன் எதற்கும் அஞ்ச வேண்டாம்
எதுவந் தாலும் யானிருக் கின்றேன்!
என்னை,
அண்ணன் நன்றாய் அறிய மாட்டீர்,
இந்து லாவில் எழுத்துக்கள் இத்தனை,
மகம்மது லாவில் வரிகள் இத்தனை,
என்று சொல்ல எனக்குத் தெரியும்!
தி.பி. கோ.வைத் திருப்பித் திருப்பிப் 
பாரா இரவும் பகலும் இல்லை,
சுருக்கி உம்மிடம் சொன்னால் போதுமே!
சட்ட மெனக்குத் தலைகீழாய்த் தெரியும்!
நடைபடி யெல்லாம் நன்றாய்த் தெரியும்;
இரண்டு கையால் எழுதத் தெரியும்; 
அரைநிமி சத்தில் அநியா யங்கள்
ஐம்பத்தைக் கோர்ட்டில் ஆக்கத் தெரியும்,
பட்டிகை எழுதப் பாரம் போடக்
கெட்டி கெட்டி என்ற பேர்கேட்ட
ஏட்டுக் குமஸ்தன் யானே யாவேன். ---
ஆதாரம்: மருமக்கள் வழி மான்மியம் (வெளியீடு பாரி நிலையம், பிராட்வே, சென்னை -108) என்ற நூலின் கோடேறிக் குடிமுடித்த படலம் என்ற பகுதியில் இருந்து தேவைக்கு ஏற்ப ஒருங்கிணைத்தும், சுருக்கியும் தொகுத்தவர், சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா. 

வக்கீல் என்றப் பெயரில் கொள்ளையர்கள் 

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி

இந்திய விடுதலைக்கு வித்திட்டவர்களில் ஒருவரான கப்பலோட்டிய தமிழன், ‘‘வக்கீலாய் நின்று வழிபறியே செய்யும் திக்கிலார்’’ என்று அவரது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.
இதனை நமது சட்டப்படியான விளக்கப் பாணியில் சொல்லவேண்டு மானால், ‘வக்கீல்கள் என்றப் பெயரில் வழிபறி செய்யும் வக்கற்ற கொள்ளையர்கள்’ என்று சொல்லலாம். 
மேலும், ‘‘வழக்கு நடந்த வரலாறு’’ என்ற தலைப்பிலான பாடலில்,
‘‘வாதி கவர்ன்மென்டார் வழக்கை விசாரித்தோர்
வாதியின் காலுதிர் மயிரினும் தாழ்ந்தோர்
நியாயமாக் கேட்குதல், நியாயமாய் எழுதுதல்
தயாளமாய் சிட்சித்தல், தர்மமாக் காத்தல் 
எங்ஙனம் காணலாம் இக்கலி யுகத்தில்?
இங்கனம் விசாரித்தோர் இருந்ததும் அன்றி,
இருதிறக் கட்சியியும், இருதிறச் சான்றும் 
பெருதிறப் பொய்களைப் பேசின. ஏனெனின்
முற்கால நீதி முறையெலாம் நீங்கத் 
தற்காலம் வந்துள்ள சட்டங்கள் பொய்களை
உரைத்திடத் தூண்டும் உதவியே தந்துள
உரைத்திடப் பொய்களை உன்னினேன் என்னெனின்,
தீயன வற்றைச் செப்பலும் தீதென
ஆயும் அறிவினர் அறைந்திவன் நின்றனர்’’ 

என்றே எழுதியுள்ளார். இதில், ஓர் ஆராய்ச்சியாளன் என்பவன், தனது ஆராய்ச்சி முடிவு, இன்னாருடைய கருத்துக்கு எதிராக இருக்கிறதே என்று அச்சங்கொள்ளாமல், துணிந்தும் பகிரங்கமாகவும் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்கு இணங்க, 
‘‘தற்காலம் வந்துள்ள சட்டங்கள் பொய்களை
உரைத்திடத் தூண்டும் உதவியே தந்துள’’ 

என்ற வ.உ.சி அவர்களின் இந்த இரண்டு அடிகளை மட்டும் தவறென மறுக்கிறேன். ஏனெனில், தற்காலத்தில் உள்ள எந்த சட்டமும் பொய்யை அனுமதிக்கவில்லை. மாறாக, பொய்ச் சான்றை அளித்தால், தண்டனை என்கிறது.

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 

தன்னுடைய புதுப்புது சிந்தனைகள் என்ற நூலில் சொல்லி இருப்பது!


மேலும், இதன் தொடர்ச்சியாக அவசியம் படிக்க, நீதிபதிக்கு ஒரே இலக்கணம், மாயுரம் வேதநாயகம் பிள்ளை!

இவரைப்பற்றிய சிறு அறிமுகம்!

இவர் சத்தியவான் காந்திக்கு சுமார் நாற்பது வயது மூத்தவர். ஆமாம், காந்தி பிறந்தது 02-10-1869 என்றால் இவர் பிறந்ததோ 11-10-1826. இறப்பு காந்தி பிறந்த இருபதாவது வருடமான 21-07-1889.

இப்போது இந்தியாவில் அமலிலுள்ள சட்டங்களில் மிகவும் பழமையானது என்றால், இந்திய தண்டனைச் சட்டம் 1860 தான். ஆனால், இந்த சட்டத்துக்கே 34 வருடங்கள் இவர் மூத்தவர் என்றால், பார்த்துக் கொள்ளுங்கள். 

5 comments:

 1. கோர்ட்டில் வழக்கு நடத்தும் முறை பற்றிய நூல் தேவை ஐயா?

  ReplyDelete
  Replies
  1. நல்லது. 9842909190 என்ற உலாப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

   Delete
 2. உண்மை விளம்பி யாரேயாயினும் இக்கட்டுரையை கருத்துரையை ஏற்பர்

  ReplyDelete
 3. உண்மையின் உரை கல்......

  ReplyDelete
 4. வக்கீல்களின் செயல்களை உறக்க சொல்லியுள்ளார்கள்👌👌👌👌👌

  ReplyDelete

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

 • 1. இந்திய சாசனம் 1950
 • 2. நீதிமன்ற சாசனம் 1872
 • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
 • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
 • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)