இந்தக் காணொளியில் நாட்டில் நல்லதை சொல்வதற்கு ஆட்கள் மிகமிக குறைவு. அவர்களை *இனங்கண்டு* ஆதரிக்க வேண்டும் என்பதை வெவ்வேறு விதமாக சொல்லி இருக்கிறார், எம். ஆர். ராதா! தவறாமல் பாருங்கள்!!
ஒரு நூலுக்கு யார் மதிப்புரை எழுதி இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அந்நூலை வாங்கிப்படிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் ஆபத்து நிறைந்துள்ளது.
அனைவருக்கும் சட்டக்கல்வி என்ற திட்டத்தை கடமையாக கைக்கொண்ட எனது சிந்தனையோ பொது மற்றும் பொதுவுடைமைச் சிந்தனை! ஆகையால், அனைத்து விதமான கொள்கைகளைக் கொண்ட அச்சு ஊடகங்களின் மதிப்புரைக்காக நூல்களை அனுப்பி வைத்து, அவர்களின் மதிப்புரையை அடுத்த பதிப்பில் ஏற்றி விடுவோம்.
ஒரு நூலை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்து நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம் நூலில், ‘‘நுண்ணறிவு இல்லாத நூல்கள்’’ என்றத் தலைப்பில் எழுதியுள்ளேன்.
சரி, நம்ம விசயத்துக்கு வருவோம்!
இந்த வகையில், நம் பொதுவுடமை நூல்கள் குறித்து பல்வேறு வகையான கொள்கைகளை கொண்ட இதழ்களும் வழங்கிய மதிப்புரைகளில் வெகுசிலவற்றை, நீங்கள் ஏன் இந்நூல்களைப் படிக்க வேண்டும் என்பதை உங்களுக்கு உணர்த்துவதற்காக பதிவிடுவதில் மகிழ்கின்றோம்! நீங்களும் நிச்சயமாக வியப்பீர்கள்!!
நூல்: கடமையைச் செய்! பலன் கிடைக்கும்.
மதிப்புரை: தினமணி நாளிதழ் 19-01-2015
சாதாரண மனிதர்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சட்ட அறிவூட்டும் நூல்களை எழுதியுள்ள நூலாசிரியரின் மற்றுமொரு படைப்பு இந்நூல்.
‘‘சேவை என்பதும் கடமை என்பதும் ஒன்றே என்று பலரும் கருதுகிறார்கள். இதற்கு ஏற்ப காசு வாங்காமல் செய்வது சேவை. காசு வாங்கினால் வேலை என்கிறார்கள். இது தவறு. இரண்டுமே ஊழியம்தான். சேவை என்கிற ஊழியத்திற்கான கூலி அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. ஆனால் கடமை என்பது காசு உட்பட எதையும் எதிர்பாராதது’’ என்று விளக்குகிறார்.
‘‘நாம் நம் கடமையைச் செய்தால், நம்மைப் பின் தொடரும் நிழல்போல, கடமையின் விளைவான நமது உரிமைகளும், தானே நம்மைப் பின்தொடரும்’’ என்கிறார் நூலாசிரியர்.
‘‘இமயமலையே ஆனாலும், நாம் அதன் மீது உ(ய)ரிய வழிமுறைப் படி ஏறிவிட்டால், அம்மலையும் நம் காலுக்குக் கீழ்தான் என்பது போல...’’ என்பது போன்று நூலாசிரியர் கூறும் உதாரணங்கள் நம்மைக் கவர்ந்திழுக்கின்றன.
தன்னார்வ அமைப்புகள் சிலவற்றைப் பற்றி அவர் கூறும் கருத்துகள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.
‘‘கோடீஸ்வரன் என்ற பெயரைக் கொண்டவர் பிச்சையெடுக்காத குறையாகவும், ஆரோக்கியம் என்பவர் ஆரோக்கியமில்லாமல் எதிர் மறையாக வாழ்ந்து கொண்டிருப்பதைப் போல, தன்னார்வ அமைப்புகள் வைத்திருக்கும் பெயர்களுக்கு எதிராகவே, அதன் செயல்பாடுகள் இருக்கும்’’
சமூக அக்கறையுடன் வெளிப்பட்டுள்ள வித்தியாசமான சிந்தனைகளின் தொகுப்பு இந்நூல்.
நூல்: கடமையைச் செய்! பலன் கிடைக்கும்.
மதிப்புரை: தினத்தந்தி நாளிதழ் 28-01-2015
நம் கடமையை ஏற்பதே நமக்கான அங்கீகாரம், அதிகாரம் என்பதை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள நூலாகும். நமது தலையாயக் கடமைகள், கடமையாளர்கள் ஒரு சிறப்பு ஆய்வு, வாசகக் கடமையாளர்களின் மெய்யறிவும், பொய்யறிவும், தன்னார்வ அமைப்புகளின் கடமையும், மடமையும் ஆகிய அத்தியாயங்களில் பல்வேறு கருத்துகள் இடம் பெற்றுள்ளன.
நூல்: நீதியைத்தேடி... குற்ற விசாரணைகள்
மதிப்புரை: வடக்கு வாசல் மாதயிதழ் பிப்ரவரி 2007
“உண்மை”யைப் பற்றிய பின் நவீனத்துவவாதிகளின் கருத்துக்கள் எவ்வளவு அபத்தமாக இருந்த போதிலும் அவை சரியாக இருக்கக் கூடிய இடம் உண்டெண்றால் அது நீதிமன்றங்கள்தான்.
அரசியல், நிர்வாகம், காவல்துறை என அனைத்து துறைகளுமே சீரழிந்து இருக்கிறது. உருப்படியாக இருப்பது நீதித்துறை மட்டுமே என்ற ஒரு கருத்து பரவலாக இருக்கிறது. இது மிகத்தவறான ஒரு கருத்து. இதைச் சொல்வதற்கு தைரியம் வேண்டும். வாரண்ட் பாலா அவர்களுக்கு இந்த துணிச்சல் இருக்கிறது.
நீதிமன்றங்களில் ஒரு விசயம் உண்மை என தீர்மானிக்கப்படுவது பல்வேறு விசயங்களைப் பொருத்தது. வாதி, பிரதிவாதிகளின் பண பலம், அதன் சாட்சிகளை விலைக்கு வாங்கும் அவர்களது சக்தி, அவர்கள் வைக்கும் வக்கீல்களின் திறமை, நிர்வாகத்திலும் காவல் துறையிலும் அவர்களுக்கு உள்ள செல்வாக்கு என பல விசயங் களைப் பொருத்தது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக நீதிபதிகளின் ஆளுமையையும் பொறுத்தது. வி. ஆர். கிருஷ்ணய்யர் போன்ற ஒரு அசாதாரணமான நீதிபதியையும், மற்ற சாதாரண நீதிபதிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இது விளங்கும்.
இந்தியாவில் நீதிபதிகளும், நீதிமன்றங்களும் விமர்சனத்திற்கு உள்ளாவதில்லை. இதற்குக் காரணம் நீதிமன்றங்களிடம் இருக்கும் “நீதிமன்ற அவமதிப்பு” என்னும் மிகப்பெரும் சட்ட ஆயுதம். இச்சட்டம் போகவேண்டிய ஒன்று என வி. ஆர். கிருஷ்ணய்யர் போன்ற சட்ட மேதைகள் பல வருடங்களாக வாதிட்டு வருகின்றனர்.
பொதுவாக காவல்துறை எப்படி நடந்து கொள்கிறது, விசாரணை க்கு ஒருவரை அழைத்துச் செல்லும் போதும், கைது செய்யும் போதும் அவ்வாறு விசாரணைக்கு அழைத்து செல்லப் படுபவரின் (இழுத்து செல்லப்படுகின்றவர் என சொல்ல வேண்டும்) கைது செய்யப்பட்ட வரின் உரிமைகள் என்ன என தெரிந்து கொள்ள விரும்புகிறவர் களுக்கு இப்புத்தகம் மிக உதவியாக இருக்கும்.
நீதியைத்தேடி... என்கிற இப்புத்தகத்தில் நீதித்துறையில் நிலவும் சீர்கேடுகள் பற்றியும், அதற்கான காரணங்கள் பற்றியும் வாரண்ட் பாலா அவர்கள் தனது சொந்த அனுபவத்தின் அடிப்படையில் ஆராய்ந்துள்ளார்.
“நன்றாக படித்தவர்கள் எல்லாம் மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், பொறியியல் என பல்வேறு துறைகளுக்குச் சென்று விடுகின்றனர். தகுதி குறைவானவர்களே சட்டப்படிப்பை தேர்ந்தெடுக் கின்றனர்” என்கிற ஆசிரியரின் கூற்றும் உண்மையென்றாலும், நீதித் துறையில் நிலவும் பல முக்கியமான பிரச்சனைகளுக்கான முக்கிய காரணமாக இதைக்கூற முடியாது.
இப்புத்தகம் பெரும்பாலும் பேச்சு வழக்கில் எழுதப்பட்டுள்ளது. படிக்கின்றவருக்கு ஆசிரியர் தன்னுடன் பேசிக்கொண்டிருப்பதைப் போன்ற ஒரு எண்ணத்தை உருவாக்குகிறது. ஒவ்வொருவரும் ஏன் சட்டம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும், அப்படி தெரிந்து கொண்டால் எப்படி தங்களுக்காகத் தாங்களே வாதாடலாம் என்பதைப் பற்றியும் இப்புத்தகம் எளிமையாக விளக்குகிறது.
புகார் கொடுத்தவரே புலனாய்வு நடத்தும் வாய்ப்பை பெற முடியும் என்பதும், விசாரணைக்கு செல்வதற்கு போக்குவரத்து செலவிற்கு பணமில்லை என்றால் அதைக்கூட கேட்டுப்பெற முடியும் என்பதும் சட்டம் தெரியாதவர்களுக்கும் நிச்சயம் புதிய விசயங்கள் தான்.
சாதாரண மக்கள் நீதிமன்றங்களில் எதிர்கொள்ளும் மற்றொரு முக்கிய பிரச்சினை வக்கீல்களும், நீதிபதிகளும் ஆங்கிலத்திலேயே பேசிக் கொள்வார்கள் (எப்படிப்பட்ட ஆங்கிலம் என்பது வேறு விசயம்). இதுபோன்ற சந்தர்பங்களில் விசாரணையை எதிர்கொள்கிறவர் வக்கீலையும், நீதிபதியையும் தமிழில் பேசும்படி கேட்டுக் கொள்ள முடியும். அவர்களும் பேசியாக வேண்டும்.
“ஆங்கிலத்தை அரைகுறையாக தெரிந்து வைத்துக்கொண்டு வக்கீல் கள் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுடன் சேர்ந்து நீதிபதிகளும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்”, என்கிற ஆசிரியரின் கூற்று எராளமான வக்கீல் நண்பர்களைக் கொண்டவன் என்கிற முறையிலும், அடிக்கடி நீதிமன்றங்களுக்கு போகிறவன் (நண்பர்களை சந்திக்க) என்கிற வகையிலும் நன்கறிவேன்.
“இதுவரை எந்த நீதிபதிக்காவது சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளதா? என்றால் இல்லை. இதற்கு காரணம் அவர்களின் தேசதுரோக ஜாதிப்பற்றுதான். தண்டனை கொடுக்க வேண்டிய வரும் நீதிபதி என்பதால் தான்”, என்று ஆசிரியர் தடாலடியாக எழுதினாலும் இதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதி மன்ற நீதிபதிகள் யாராவது குற்றம் செய்து அது நிரூபிக்கப்பட்டால் கூட அவரை நாடாளுமன்றத்தில் இம்பீச்மெண்ட் கொண்டு வருவதன் மூலம் மட்டுமே பதவியை விட்டு நீக்க முடியும்.
இந்தியாவில் நீதிபதிகள் நியமனம் (உயர்நீதிமன்றம், உச்சநீதி மன்றங்களுக்கான) என்பது ஒரு ஏமாற்று என்றும், ஜனநாயக கோட்பாடுகளுக்கே எதிரானது என்றும், இந்தியாவின் புகழ் பெற்ற சட்ட வல்லுனர்களுள் ஒருவரான ஏ. ஜி. நூராணி கூறுகிறார்.
ஒரு நாட்டின் நீதித்துறையில் அரசியல் சாசன சட்டம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் நீதிபதிகள். ஏனெனில் அரசியல் சாசன சட்டத்திற்கு அவர்கள் அளிக்கும் விளக்கம்தான் இறுதியானது. “There is no guarantee of justice expect the personality of the judge” என்ற போலந்து நாட்டின் சட்ட மேதையான Stanislaw Ehrlich கூறினார்.
ஆங்கிலத்தில் சட்ட புத்தகங்களை வாசிக்க வாய்ப்பில்லாதவர் களுக்கு இந்த புத்தகம் மிகவும் உதவியாகவும் குற்றவியல் சட்டத்தின் அடிப்படைகளை தெரிந்து கொள்ள விரும்புகிறவர் களுக்கு இப்புத்தகம் ஒரு எளிமையான அறிமுகத்தை தருகிறது.
மதிப்புரை: உண்மை மாதம் இருமுறை இதழ் ஏப்ரல் 1 - 15, 2007
தமிழ்நாட்டில் சட்ட நூல்கள் பல தமிழில் வெளியிடப்பட்டிருந் தாலும், அவைகள் சாதாரணமாக எவருக்கும் புரிவதில்லை. இவைகளை புரிந்து கொள்ளும் விதத்தில் முடிந்த அளவு நடைமுறை பேச்சு வழக்கில் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர் வாரண்ட் பாலா.
இந்நூலில் சட்டம் தெரிந்துகொள்ள வேண்டியதன் அவசியம் என்ன? நமக்குநாமே வாதாடுவதற்கான உரிமை எதன் அடிப்படை யில்? இப்படி வாதாடுவதால் ஏற்படும் தீமையில்லாத பயன்கள் என்னென்ன? ஒரு வழக்கை எப்படி கொண்டு சென்று திறமையாக நடத்துவது? ஒருவேளை நம்மீது வழக்கு நடவடிக்கை என வந்தால், எப்படி திறமையாக எதிர்கொள்வது? என்பன போன்றவற்றை சாதாரண மக்களும் எளிமையாக புரிந்து கொள்ளும் விதத்தில் விளக்கி உள்ளார்.
இந்நூலின் தலைப்பே நீதியைத்தேடி... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம்! குற்ற விசாரணைகள் என்பதுதான். இதை மய்யக் கருத்தாக வைத்துதான் உங்க வழக்குல நீங்க வக்காலத்து போடனுமா? ‘சட்டம் கட்டாயம் தெரிஞ்சிக்கணும்’, ‘நீதிமன்றம் எப்படி இருக்கும்?’, ‘விசாரணை நீதிமன்றமும், மேல் முறையீட்டு நீதிமன்றமும்’, ‘அதிகபட்ச தண்டனை விதிக்கும் அதிகாரம் எவ்வளவு?’, காவல்துறைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்’, ‘காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்வது எப்படி?’ என 71 அத்தியாயங்களாகப் பிரித்து எளிமையான வகையில் விளக்கி யுள்ளார், ஆசிரியர்.
உங்கள் வழக்கில் நீங்களே வாதாடுவது என்பது இந்திய அரசமைப்பு உங்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். அடிப்படை உரிமை என்பது, எதையும் யாரிடமும் கேட்காமல் நமக்குநாமே எடுத்துக் கொள்வதாகும்.
உதாரணத்திற்கு உங்கள் அப்பா, அம்மாவோடு பேச வேண்டும் எனக் கருதுகிறீர்கள் அல்லது இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என நினைக்கிறீர்கள். உங்கள் எண்ணப்படி அப்பா, அம்மாவோடு பேசுகிறீர்கள் அல்லது இந்நூலைப் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள். இப்படிச் செய்வதற்கு முன்பாக யாரிடமாவது அனுமதி கேட்கிறீர்களா? இல்லைதானே! இதான் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை என்பது.
‘‘நீதிமன்றத்தில் முன் அனுமதியோடு ஆஜராகி வாதிடும் ஒவ்வொரு நபரும் வக்கீல்தான். முன் அனுமதி என்பதை வேறு ஒருவருக்காக நீங்கள் ஆஜராகும் போதுதான் வாங்க வேண்டும். நமக்குநாமே வாதாடும் போது தேவையில்லை. ஏன் என்றால், நமக்கு நாமே வாதாடுவது என்பது இந்திய சாசன கோட்பாடு 19(1)(அ) இன்படி, பேச்சு உரிமை, எழுத்து உரிமை, கருத்து உரிமை என்பதன் கீழான அடிப்படை உரிமை’’ என்று நம்முடைய வழக்கில் நாமே வாதாடுவதற்கு உள்ள உரிமையை குறிப்பிடுகிறார்.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு மனுக்களின் மாதிரி படிவங்கள், அரசு அதிகாரிகளிடம் விளக்கம் கோரும் அறிவிப்பு, நினைவூட்டு மாதிரி படிவங்கள், நீதிமன்றங்களில் நகல் கோரும் மனுக்களின் மாதிரி படிவங்கள், பொதுநல வழக்கு மனு மாதிரி போன்ற கூடுதல் விபரங்களையும் இறுதிப் பக்கங்களில் அமைத்துள்ளார்.
ஆசிரியருடைய முயற்சி மிகவும் பயனுள்ள முயற்சி. இதற்காக ஆசிரியரைப் பாராட்டுவதுடன் மேலும் சட்ட விழிப்புணர்வு குறித்த புத்தகங்களை எழுத வேண்டும் என்கிற விருப்பத்தையும் தெரிவிக்கிறோம்.
இந்நூல் வெளிவர மத்திய சட்ட அமைச்சகம் உட்பட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ சட்ட ஆர்வலர்கள் நிதி உதவி செய்தமை முக்கியமாக குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.
நூல்: நீதியைத்தேடி... பிணை (ஜாமீன்) எடுப்பது எப்படி?
மதிப்புரை: தினமணி நாளிதழ் 04-10-2007
அனைவருக்கும் சட்டக்கல்வி அவசியம் என்ற அடைப்படையில் எல்லோருக்கும் புரியும்படியாக எழுதப்பட்ட நூல்.
ஒருவரை கைது செய்ய என்னென்ன முறைகள் பின்பற்றப்பட வேண்டும்? சாமானிய மனிதரும் நீதிமன்றத்தில் வாதாட முடியுமா? ஜாமீன் என்றால் என்ன? யாரையெல்லாம் ஜாமீனில் எடுக்கலாம்? யாரை எடுக்கக்கூடாது? என்று பலருக்கும் தெரியாத அடிப்படையான சட்ட விவரங்கள் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளன. பயனுள்ளநூல்.
நூல்: நீதியைத்தேடி... பிணை (ஜாமீன்) எடுப்பது எப்படி?
மதிப்புரை: மனித உரிமை கங்காணி மாதயிதழ் ஜனவரி 2008
2010 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சட்டக்கல்வி என்ற கொள்கை யோடு, சட்டத்தைப்பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்லும் ஒரு முயற்சி, இந்த நூல்.
நாட்டில் நடக்கும் அத்தனை செயல்களும் சட்டத்திற்கு உட்பட்டே நடக்கின்றன. எனவே சட்டத்தை தெரிந்து கொள்ள வேண்டும். அவரவர் பிரச்சனையை அவரவரே சரியாகச் சொல்ல முடியும். சம்பந்தப்பட்டவரே வழக்கில் வாதாட முடியும் என்று கூறுகிறது நூல். இந்த நூலைப் பொதுவுடமையாக அனுமதி இன்றி யாரும் வெளியிட்டுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
சட்டம், நீதிமன்ற விசாரணை, உரிமையியல் வழக்கில் கைது, குற்றவியல் வழக்கில் கைது, கைதிகள் தானே வாதாடுவது, பிணையில் வெளிவருவது என சாமானிய - சாதாரணமாகப் படித்தவர்களும் சட்டத்தைப் புரிந்து கொள்ளும் விதத்தில் 96 தலைப்புகளில் அளித்து உள்ளார், நூலாசிரியர் வாரண்ட் பாலா. பயன்மிக்க நூல்.
நூல்: நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம்
மதிப்புரை: தீக்கதிர் நாளிதழ் 07-12-2008
நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் என்கிற அறைகூவலுடன் ‘‘சட்ட அறிவுக்களஞ்சியமாக’’ இந்நூலை பட்டறிவுடன் படைத்து உள்ளார், வாரண்ட் பாலா. மத்திய சட்ட அமைச்சகமே நிதி உதவி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ்நாடு, பாண்டிச்சேரி நூலகங்கள் சிறைச்சாலைகள் என எங்கும் இலவசமாக வழங்கிட சட்ட அமைச்சகம் நிதி உதவி செய்துள்ளது.
‘‘நமக்காக நாம்தான் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டுமே யன்றி பிறரை நம்பிப் பயனில்லை’’ என்ற அனுபவ வெளிச்சத்தில், சாதாரண சட்ட நடைமுறைகளை எளிய தமிழில், உரிய விளக்கங் களோடு சொல்லும் இந்நூலை எல்லோரும் வாங்கிப் படிப்பதும், பாதுகாப்பதும் அவசியம்.
நூல்: நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம்
மதிப்புரை: துக்ளக் வார இதழ் 04-02-2009
இந்நூலாசிரியரின் நீதியைத்தேடி... வரிசையில் ஏற்கெனவே ‘குற்ற விசாரணைகள்’, ‘பிணை எடுப்பது எப்படி?’ என சட்டம் குறித்த இரண்டு நூல்கள் வெளியாகி, பொதுமக்கள் பலரின் வரவேற்பைப் பெற்றன.
தவிர, பொதுமக்கள் சட்ட விழிப்புணர்வைப் பெற, இதுபோன்ற தனியார் முயற்சிகளை, மத்திய சட்ட அமைச்சகமும் நிதியுதவி செய்து ஊக்குவிக்கிறது. அந்த வகையில், ‘சட்ட அறிவுக் களஞ்சியம்’ என்ற இந்த மூன்றாவது நூலையும் ஆசிரியர் எழுதியுள்ளார்.
இதில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் கோர்ட் நடவடிக்கைகள் பற்றி, அனுபவ ரீதியாக பாமரர்களுக்கும் புரியும் வண்ணம் கூறப் பட்டுள்ளன.
சட்டங்கள் எப்படி இயற்றப்படுகின்றன? சட்டத்தில் ஓட்டை என்பது என்ன? வழக்கறிஞர்களின் கடமைகள் என்னென்ன? குறுக்கு விசாரணை. சாட்சியங்களை சேகரிப்பது எப்படி? இப்படி சுமார் 155 தலைப்புகளில் கட்டுரை வடிவில் சட்ட அறிவுக்களஞ்சியம் தொகுக்கப் பட்டுள்ளது.
மக்களுக்குப் பயனுள்ள நூல்களில் இதுவும் ஒன்று.
நன்றி அறிவித்தல்!
சமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கென வெளியிடப்பட்ட இப்பொதுவுடைமை நூல்கள் குறித்து, அக்கறையோடு மதிப்புரைகளை வழங்கிய, இனியும் வழங்க இருக்கிற அச்சு ஊடகம் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
0 comments:
Post a Comment