No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

இச்சட்டப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்


1. சட்டக் கல்வியை பயிற்றுவித்தல்


நம் நாட்டில் யார் பெரிய ஆள் என்ற ஒரு கேள்வியை எழுப்பினால் போதும். உங்களின் மன நிலைக்கு தக்கவாறு, ரவுடி, பொறுக்கி, போலீஸ், விஏஓ, தாசில்தார், கலெக்டர், ஆளுநர், அரசியல்வாதி, வக்கீல், நீதிபதி, குடியரசுத் தலைவர் என பலரையும் சொல்வீர்கள்.

ஆனால், இவர்களில் யாருக்கு யார் கட்டுப்படுகிறார்களோ இல்லியோ; அனைவரும் ஒன்றுக்கு கட்டுப்பட்டவர்கள் என்றால், அது சட்டத்துக்கு மட்டும்தான்.

ஆம்! நாம் கருவாக உருவாவது முதல் கல்லறைக்கு செல்லும் வரை, நம்மை நல்வழியில் நடக்க வைத்து பாதுகாக்கிறது. கல்லறைக்குச் சென்றப் பின்னும் கூட, நமது சொத்துக்களை வாரிசுரிமைச் சட்டப்படி வாரிசுகளுக்கு வழங்கிப் பாதுகாக்கிறது. இதன் ஊடே, நமது வாழ்க்கையில் எதைச் செய்வதானாலும், அவைகளுக்கு உரிய சட்டத்தை பயன்படுத்தியே, உரிமையைப் பெற வேண்டியிருக்கிறது.

இப்படி, நமது நல்வாழ்வும், வாழ்க்கையும் சட்டத்தால் பின்னி பிணைக்கப்பட்டிருக்கும் போது, அதற்குறிய சட்டக்கல்வியை பயிற்றுவிக்காமல், ஆங்கிலேய அடிமை அரசைப் போல, உலகின் மிகப் பெரிய குடியரசான நமது இந்திய அரசும், அடிப்படைக் கல்வியில், சட்டக் கல்வியை ஆரம்பத்திலிருந்தே கொண்டு வராதது, அரசின் துரதிருஷ்டவசமான செயல் என்றுதாம் சொல்ல வேண்டும்.

மக்களாகிய நாம்தான் அரசாங்கத்தையே உருவாக்குகின்றோம் என்கிற நிலையில், நமது நல்வாழ்விற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்யாத போது, அதற்கு மேலும் அரசாங்கத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பது மக்களின் கடமையல்ல. மாறாக, மாக்களின் கடைமையே!

ஒரு நற்செயல் மிக்க கடமையை, இன்னார்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நியாய உணர்வின்பால் ஈர்க்கப்பட்டதாலேயே, இச்சட்டக் கல்வியை பயிற்றுவிக்கும் பொறுப்பை, இந்திய சாசனக் கோட்பாடு 51அ-இன் கீழ், கடமையாக நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம்.


2. சட்ட வழியில் நடத்தல்


நாட்டில் நிலவும் அனைத்து பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணமே, சட்டத்தைக் கையாளும் நமது ஊழியர்கள் ஆன, அரசாங்கத்தில் அல்லது அரசாங்கத்தின் அதிகாரத்தில் அல்லது நமது நல விருப்பத்திற்கு கூலிக்கு அல்லது மதிப்பு ஊதியத்திற்கு வேலை பார்ப்பவர்கள் எல்லாம், சட்டத்தை அதன் நோக்கத்திற்கு மாறாக, தன் நோக்கத்திற்காக தவறாக கையாள்வதே என்றால், உங்களுக்கு சற்று சந்தேகமாக கூட இருக்கலாம்.

ஆனால், இதுதான் உண்மை என்பதை நீங்கள் எப்போது அடிப்படையான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெறுகிறீர்களோ அப்போதே உணர முடியும் என்பதால், இதனை ஊட்டி உணர வைப்பதும், தவறாது உங்களை சட்ட வழியில் நடக்க வைப்பதுமே எங்களின் தலையாய கடமை.


3. பிரச்சினைகளை தவிர்த்தல்


நீங்கள் சட்ட வழி தவறாது நடப்பதன் மூலம், உங்களை பிரச்சினைகள் எவ்விதத்திலும் நெறுங்காத வண்ணம் பார்த்துக் கொள்ள முடியும். அப்படியே எவராவது, பிரச்சினை செய்ய வேண்டும் என்ற நோக்கோடு நடந்து கொண்டால், அவர்களுக்கும் சரியானதொரு சட்ட வழியை, நாங்கள் உங்களுக்கு எடுத்துச் சொல்வது போலவே, நீங்களே எடுத்துச் சொல்லி, அவர்களையும் அதன் வழி நடக்க வைக்க முடியும்.

ஒருவேளை அவர்கள், உங்களின் நியாயமான சட்ட வழி காட்டுதலை ஏற்காத போது, அதனால் உண்டாகும் பிரச்சினைகள் உங்களை நெருங்காமல், உங்களது சட்ட விழிப்பறிவுணர்வு மூலம் நொறுக்கித்தானே ஆக வேண்டும். அதற்காக, நீங்களே வாதாட வேண்டும்.


4. சுய வழக்காடுதல்


வாதாடுவதற்கென்றே வக்கீல்கள் இருக்கும் போது, உங்களையே ஏன் வாதாட சொல்கிறோம்?

உங்களுக்கு ஒரு பிரச்சினை வருகிறது என்றால், யாரால் வரும்? நிச்சயமாக உங்களை விட அதிகாரம், பலம், பணம், விழிப்பறிவுணர்வு என ஏதாவதொரு விதத்தில் உயர் நிலையில் உள்ளவர்களால்தான் வருமேயன்றி, கீழ் நிலையில் உள்ளோர்களால் வருவது அரிதிலும் அரிதே.

இந்நிலையில், வழக்குக்குச் செல்வதன் அல்லது அதனை எதிர்கொள்வதன் முக்கிய நோக்கமே, தனது வாழ்வாதார உரிமையை அல்லது பொருளாதாரத்தை நிலை நிறுத்திக் கொள்ள முயல்வது அல்லது சட்டத்துக்கு புறம்பாக நம்மை சீண்டியோரை சட்டப்படியான தண்டனைக்கு உள்ளாக்குவது அல்லது நாம் செய்யாத குற்றச்சாற்றுக்கான தண்டனையில் இருந்து தற்காத்துக் கொள்வதேயாகும் என்கிற நிலையில், நீங்களே வாதாடுவதால் உங்களுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன? வக்கீல்களை வைத்து வாதாடுவதால் உங்களுக்கு வரும் தீமைகள் என்னென்ன என்பதை தெ(ரி)(ளி)ந்து கொள்ளுங்கள்.


நீங்கள்

வக்கீல்
1. உங்க பிரச்சினையை உங்களைத் தவிர வேறு யாராலும் மிகச்சரியாக சொல்ல முடியாது.ஆனால், உங்களின் எப்படிப்பட்ட வக்கீலும் கூட, உங்களைக் கேட்டுக் கேட்டுத்தான் சொல்ல முடியும்.
2. சட்ட விழிப்பறிவுணர்வோடு நியாயத்திற்காக வாதாடும் உங்களை, எதிர்தரப்பினர் லஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கவோ, அதிகார பலத்தை அல்லது ஆள் பலத்தைக் கொண்டு மிரட்ட யோசிப்பார்கள். செய்தாலும் அதையும் சந்திக்கத் துணிவீர்கள்.ஆனால், அரைகுறை சட்ட அறிவோடு, பணத்துக்காகவே வாதாடும் உங்க வக்கீலை உங்களின் எதிர்மனுதாரர்கள் மிக எளிதாக விலைக்கு வாங்க, மிரட்ட முடியும். எச்சரிக்கை!
3. உங்களது வழக்கு தொடர்பான மிக முக்கிய ஆதார ஆவணங்களை, உங்களிடமிருந்து எதிர்த்தரப்பினர் அவ்வளவு எளிதில் கைப்பற்றி அழித்து விட முடியாது.ஆனால், உங்களது எதிர்தரப்பினர், உங்களது வக்கீலிடமிருந்து, உங்களது வழக்கு தொடர்பான மிக முக்கிய ஆதார ஆவணங்களை கைப்பற்றி, அழித்து, உங்களுக்கு மிக எளிதாக அநீதியை இழைக்க முடியும். எச்சரிக்கை!
4. உங்க வழக்குக்கு நீங்களே முதலாளி என்பதால், மிகுந்த பொறுப்புணர்வோடும், கடமை உணர்வோடும், மிகுந்த எச்சரிக்கையோடும் வழக்கை நடத்துவீர்கள்.ஆனால், வக்கீல் வாதாடுவது கூலிக்கு மாரடிக்கும் பொய் மற்றும் இடைத்தரகு என்பதால் உங்களின் அளவிற்கு பொறுப்புணர்வு இருக்காது. எச்சரிக்கை!
5. உங்க வழக்குக்கு நீங்களே முதலாளி என்பதால், நீங்களே வாதாடுவதை நீதிபதி உட்பட யாராலும் சட்டப்படி தடுக்க முடியாது என்பதோடு, உங்களின் நியாய உணர்வை புரிந்து கொண்டு, நீதிபதி கூட தவறு செய்யப் பயப்படுவார்.ஆனால், வக்கீல்கள் உங்களின் கூலிக்கான வேலைக்காரர்களே! மேலும், ஒவ்வொரு வழக்கிலும் வக்கீல்களின் வக்காலத்தை ஏற்று, அவ்வழக்கில் வாதாட அனுமதிப்பது நீதிபதியின் சட்டப்படியான அதிகாரம் என்பதால், நீதிபதியின் தவறை வக்கீல்களால் தட்டிக் கேட்க முடியாது.
6. ஒருவேளை தப்பித்தவறி, அப்படியே நீதிபதி தவறு செய்தாலும், அவரையும் கூட சட்டப்படியே கேள்விகளை எழுப்ப தேவையான பற்பல மனுக்களை, பற்பல கோணங்களில் தாக்கல் செய்து, உங்களது நியாயத்தை தக்க வைத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து, எனது நூல்களில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளதால், மிக மிக எளிதாக நியாயத்தைப் பெறலாம்.ஆனால், வக்கீல்களோ, (அ)நீதி(பதி)யைத் தட்டிக் கேட்டால், அடுத்தடுத்த வழக்குகளில் வாதாட அனுமதிக்க மாட்டார் என்று பயந்தும், தங்களின் தொழிலில் தொடர்ந்து, பணம் கொழிக்க வேண்டும் என்பதற்காகவே, பல்வேறு திருட்டுத்தனங்களை கையாண்டு நம்பிக்கையோடு நாடிப் போகும் உங்களை நடுச் சந்தியில் விட்டு விடுவார்கள்; காலா காலத்திற்கும் சாகடிப்பார்கள்.
7. நீங்களே வாதாடும் போது பிரச்சினையில் இருந்து விரைவில் வெளிவர நியாயமான முறையில் முயல்வீர்கள். இதற்காக உங்களின் தவறைக்கூட தைரியமாக ஒப்புக்கொள்வீர்கள்.ஆனால், வக்கீல்களோ, தனது வருமானத்திற்காக, உண்மையை மறைத்து, தேவையற்ற பொய்களைக் கூறி மேன்மேலும், பல பிரச்சினைகளை உருவாக்கி விடுவார்கள்.
8. நீங்களே வாதாடி, உங்களுக்கான நீதியை நிலை நாட்ட அதிகபட்ச உண்மையும், அடிப்படையான ஐந்து சட்டங்களைக் குறித்த சட்ட அறிவும், கொஞ்சம் தைரியமும் இருந்தால் போதும்.ஆனால், வக்கீல்கள் வாதாடுவதோ அதிகபட்ச பொய்யிலும், இடைத்தரகிலும், ஐந்தாறு சட்ட பிரிவுகளின் அறிவிலும்தாம் என்பதை ஒருபோதும் மறவாதீர்கள். இதில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால், இந்நூலில் சொல்லியுள்ள மிக முக்கியமான ஐந்தாறு சட்டப் பிரிவுகளுக்கான விளக்கங்களை வக்கீல்களிடம் கேட்டுப் பாருங்கள், உங்களுக்கே புரியும்! கூடவே, நீங்களே நீதிமன்றத்தில் வாதாட ஆரம்பித்ததும், நீதிபதிகளுக்கும் கூட தெரியவில்லை என்பதும் புரியும்!!
9. நீங்களே வாதாடும் போது, உங்களது சொந்த செலவு மற்றும் மிக குறைந்தபட்ச நீதிமன்றக் கட்டணத்தை தவிர, சட்டத்துக்கு புறம்பான நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான வக்கீல் கட்டணம் உட்பட எந்த கட்டணமும் கிடையாது.ஆனால், வக்கீலோ, தனது வதத்திற்கான கட்டணம், வக்காலத்து தாக்கலுக்கான கட்டணம், மனு தட்டச்சு கட்டணம், நீதிமன்றத்துக்கான கட்டணம், நீதிமன்ற மா(மா)க்களுக்கு லஞ்சம் என அடிக்கடி பெருமளவில் பணத்தை கறந்து கொண்டே இருப்பார்கள்.
10. நீங்களே வாதாடுவது கொள்கை ரீதியானது என்பதால் தவறாது நீதிமன்ற விசாரணையில் பங்கேற்று சட்டப்படி வாய்தா வாங்காமலும், எதிர்த்தரப்பினரை வாங்க விடாமலும், நீதிபதியை கொடுக்க விடாமலும் வழக்கை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து நடத்தி உங்களுக்கான நீதியை விரைவில் பெறலாம்.ஆனால், வக்கீல் வாதாடுவது தொழில் ரீதியானது என்பதால், அடிக்கடி பணம், மது, மாது என அவ்வக்கீல்களது ஆசைக்கு ஏற்ப கவனிப்பவர்களைத் தவிர, மற்றவர்களுக்கெல்லாம் வருட கணக்கில் வாய்தாதான். ஒருவேளை நீங்கள் பெண்ணாக இருந்து, உங்களின் வக்கீல் ஆணாக இருந்தால், அவரின் காம ஆசைகளுக்கு கூட இணங்க வேண்டியிருக்கும். எச்சரிக்கை!
11. உங்களது (அ)நியாயத்திற்கான சாதாக, பாதகங்கள் உங்களது கைவசமே என்பதால், வக்கீல்கள் உட்பட யாரும் துணிந்தும், தொடர்ந்தும் தவறு செய்யப் பயப்படுவார்கள். அப்படியே செய்தாலும், இருக்கிற சட்ட விழிப்பறிவுணர்வைக் கொண்டு (சிந்) (சந்) (சாதி)க்கலாம்.ஆனால், உங்களின் சாதக, பாதகங்கள் வக்கீல்களுக்கு தெரிந்து விடுவதால், தெ(ரி)(ளி)ந்தும், துணிந்தும், தொடர்ந்தும் தவறு செய்வார்கள். இதில் நியாயம் கேட்க வேறு வக்கீலைத்தான் நாட வேண்டியிருக்கும். வக்கீல்கள் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தாம். மறவாதீர்.

உங்களின் பிரச்சினையை எப்படி உங்களைத் தவிர, வேறு யாராலும் மிகச் சரியாக சொல்ல முடியாதோ, அதுபோலவே எதிர்தரப்பினரின் பிரச்சினையை அவரைத் தவிர வேறு யாரும் மிகச் சரியாக சொல்ல முடியாது என்கிற அதே அடிப்படை தத்துவத்தின் அடிப்படையில், உங்களைப் போலவே அவரும் நேரடியாக வாதாட வேண்டும் என சட்டப்படியே கோரவும், எதிர்தரப்பில் வக்கீல் ஆஜராவதை ஆட்சேபிக்கவும் முடியும். இப்படி ஆட்சேபனை செய்ய சட்டத்தில் வழிவகை உள்ளது.

இத்தளத்தின் முகப்பில் வக்கீல்கள் மற்றும் நீதிபதிகள் குறித்து தேசத்தந்தை மகாத்மாவின் கருத்துக்களை படித்தீர்கள் அல்லவா? அதற்கு மாற்று வழியாகத்தான், நமக்கு நாமே வாதாடும் இத்திட்டத்தையும், இதற்கான அடிப்படை நோக்கத்தையும் உங்களுக்கு முன்மொழிகிறோம். இதனை பலதரப்பட்ட ஊடகங்களும் எப்படியெல்லாம் வழிமொழிந்துள்ளன என்பதை மதிப்புரை பகுதியில் பாருங்கள்.


5. நீங்களும் சட்டக்கல்வியை பரப்புதல்


சாத்வீக வழியில் போராட, சட்டமே சரியான ஆயுதம். ஆதலால், இச்சட்ட விழிப்பறிவுணர்வுச் செய்தியை உங்களின் உற்றார், உறவினர், நண்பர்கள் என அனைவருக்கும் சொல்லுங்கள். குறைந்தது நீங்கள் இருவருக்கு சொல்ல, அந்த இருவரும் தலா இருவருக்கு சொல்ல, அந்த நாள்வரும் தலா இருவருக்கு சொல்ல... எனச் சென்றாலே, நியாயம்தான் சட்டம் என்கிற இச்சட்டச் செய்தியும், நியாயமும் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஓராண்டிற்குள் எட்டி விடும்.


6. நாங்கள் பொறுப்பேற்க இயலாது.


நாங்கள், உங்களின் பிரச்சினைக்காக உங்களையேத்தான் சுயமாக வாதாடச் சொல்கிறோம். அதற்கு தேவையான அடிப்படையான சட்ட விபரங்களை கற்பிக்கிறோம். எக்காரணம் கொண்டும், எப்பணத்திற்காகவும் நாங்கள், உங்களுக்காக ஒருபோதும் வாதாட மாட்டோம். அதேபோல, வக்கீல்கள் எவரையும் உங்களுக்காக வாதாட முன்மொழிய மாட்டோம்.

எனெனில், எங்களைப் பொருத்தவரை வக்கீல் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! இது நாங்களாகவே அல்லது நீங்களாகவே இருந்தாலும் அப்படித்தான்.

கடந்த காலங்களில் தனக்குத்தானே வாதாடி, தங்களின் நியாயத்தை தக்க வைத்துக் கொண்ட வாசகர்கள் குறித்த செய்திகளை நூல்களில், இதழ்களில் வெளியிட்டுள்ளோம்.

அதன் பேரில், அவ்வாசகர்களை உங்களைப் போன்ற ஒரு சிலர் உதவிக்காக தொடர்பு கொண்ட போது, அவர்கள் எனது (வாரண்ட் பாலாவின்) கொள்கைகளைப் பின்பற்றி, சட்ட விழிப்பறிவுணர்வை தனி நபராகவும், இயக்கமாகவும் ஏற்படுத்துகிறோம்; உங்களது பிரச்சினையை தீர்த்து தருகிறோம் என்று கூறி, வக்கீல்களைப் போலவே, ஆயிரக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றிய விபரம், அவ்வாசகர்களால் அப்பிரச்சினையை தீர்க்க முடியாமல் போன ஒரே காரணத்தால் எங்களது கவணத்திற்கு வந்தது.

தனக்கு உரிமையில்லாத பிரச்சினைக்குறிய இடங்களை எங்களுக்கு விற்றது போல், மாற்றி எழுதிக் கொடுங்கள் என்று எழுதி வாங்கியும், அதற்காக அவ்வூர் மக்களிடம், நீதியைத்தேடி... வாசகர்கள் சிலர் தர்ம அடியும் வாங்கி உள்ளார்கள்.

இதற்கெல்லாம் மேலாக 2011 - 2012 ஆம் ஆண்டில், ‘‘வரம் கொடுத்தவன் தலையில் கை வைத்தால் என்ன விபரீதம் நடக்கும்’’ என்பதை மறந்த கோவை, வடவள்ளியைச் சேர்ந்த மாரிமுத்து என்கிற நீதியைத்தேடி... வாசகர், எங்களுக்கு (கேர் சொசைட்டிக்கு) எதிராக கோவை நுகர்வோர் குறைதீர்மன்றத்தில் வழக்கு தொடுக்க, நமது கொள்கைகளை, சட்டத்துக்கு புறம்பாக நசுக்க நினைத்த தலைவர் (நீதிபதி), நமது சட்டப்பூர்வமான கருத்துக்கள் எதையும் கருத்தில் கொள்ளாமல் பத்தாயிரம் நஷ்ட ஈடு விதித்தார்.

அந்த வழக்கு விபரங்களோடு, இந்திய நீதிமன்றங்களின் அவல நிலைகளை அதிரடியாக சுட்டிக்காட்டி குடியரசுத் தலைவருக்கு சான்று நகல் கோரி அறிவிப்பு அனுப்பியதை அடுத்து ( குடியரசுத் தலைவர் ரப்பர் ஸ்டாம்பா?) நடந்த பற்பல நடவடிக்கைகளால், விதிக்கப்பட்ட பத்தாயிரம் நஷ்ட ஈட்டை வசூல் செய்வதற்கான  மாரிமுத்துவின் நிறைவேற்றுகை மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

மேலும், எதற்கெடுத்தாலும் வழக்கு போடுவதையே பிழைப்பாக செய்து கொண்டிருந்த மாரிமுத்து, அந்நுகர்வோர் குறைதீர்மன்றத்தில் தொடுத்திருந்த சொந்த வழக்குகள் சுமார் ஒன்பது உட்பட, வக்கீல்களைப் போலவே, கூலிக்காக மற்றவர்களின் பிரதிநிதியாக வாதாடிய பதினெட்டு வழக்குகளும், என மொத்தம் இருபத்தியேழு வழக்குகளும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் முழுமையான விசாரணை இல்லாமலே தள்ளுபடி செய்யப்பட்டதோடு, நாங்களே தட்டிக்கேட்க முடியாத அளவிற்கு அம்மன்றத்திலேயே தர்ம அடியும் கொடுக்கப்பட்டது.மாரிமுத்துவின் தவறான நடவடிக்கையால், பாதிக்கப்பட்டது அவர் மட்டுமல்ல. அவரை நம்பி வழக்கை ஒப்படைத்த பதினெட்டு பேரின் நீதியும்தாம்! என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே, உங்களின் உச்சபட்ச நியாயம் பாதிக்கப்படும் போது மட்டுமே சட்டத்தை பயன்படுத்தி நிவாரணம் பெற முயலுங்கள் எனவும், உங்களைத் தவிர, நீங்கள் வேறு யாரையும் நம்பி உங்களது வழக்கை ஒப்படைக்க வேண்டாம் என்று எச்சரிக்கிறோம்.

இந்த எச்சரிக்கையையும் மீறி நீங்கள் நீதியைத்தேடி... வாசகர்கள் யாரிடமாவது ஏமாந்தால், அதற்கு நாங்கள் எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டோம் என்பதோடு, அதனை மீட்டுத்தரவோ அல்லது வேறு எவ்விதத்திலுமோ உங்களுக்கு உதவ மாட்டோம்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)