தற்காப்பும், தனது கைக்கே காப்பும்!

தற்காப்பு கொலை(கள்)! சகாயம் யாருக்கு? என்ற முற்பதிவின் தொடர்ச்சி இது.

தற்காப்பு என்கிற பெயரில் இதுபோன்ற கொலைகள் தொடர்ந்தால், குறைந்தபட்சம் நூற்றுக்கு எழுபத்தைந்து கணவன்களையாவது, மனைவிமார்கள் கொலை செய்யவும், பின் ஆணின் துணையில்லாமலும் வாழவும் வேண்டியிருக்கும். இது இருபாலினத்தவருக்குமே நிச்சயமாக சாத்தியமில்லை என்பதால் ஏதோ ஒரு உறவு முறையில், எதிர்பால் இனத்தவரை நாடத்தானே வேண்டும்.

ஆம்! ஆணின் பாதுகாப்பில் பெண்ணும், பெண்ணின் அரவனைப்பில் ஆணும் வாழ வேண்டும் என்பது தானே இயற்கையின் திட்டமிட்ட படைப்பு.

ஆனால், பெண்னை பாதுகாக்க வேண்டியவன், தான் குடிக்கும் மதுவால் அவளுக்கு பயங்கரவாதியாகவும், ஆணுக்கு அரவணைப்பாக இருக்க வேண்டிய பெண், அவனை ஆத்திரத்தில் கொல்லும் கொலைகாரியாகவும் ஆக நேர்ந்தால், திருமணம் வாழ்வின் தீர்வுதான் என்ன?

இந்த அளவிற்கு ஆட்சியாளர்கள், அதிலும் குறிப்பாக மகாத்மாவை தேசத்தின் தந்தை என ஏற்றுக் கொண்டவர்கள், அவரது பிறந்த நாளில் மட்டும், மதுக்கடைகளை மூடி வைத்தும், மற்ற நாட்களில் எல்லாம் திறந்து வைத்தும், ஆண்களின் ஆன்மாக்களை மகிழ்ச்சி என்னும் மது கடலில் ஆழ்த்தியும், மாதுக்களை சோகத்தில் ஆழ்த்தியும் வருகின்றனர்.

இதற்கு பெயர்தான், மாபெரும் இந்தியக் ‘குடி’யரசோ!

ஆமா, தெரியாமல்தான் கேட்கிறேன்! மது விற்பனை செய்யப்படாத அக்டோபர் 2 ஆம் தேதி மட்டும்தாம், மகாத்மா காந்தி இந்தியக் குடியரசின் தந்தையா? அப்படியானால், மற்ற நாட்களில் யார்? இப்போது கூடுதலாக ஒரு சில நாட்களை அவ்வப்போது சேர்த்துக் கொள்கிறார்கள்.

மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று மதுவுக்கு அடிமையாகாத ஆண்கள்தாம் அதிகபட்சமாக களத்தில் இறங்கி போராடி வருகின்றனர். தற்போது வைகோ நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

தங்களை பாதிக்கும் சொத்து, வேலை வாய்ப்பு, வரதட்சினை போன்றவைகளில், தங்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் பெண்கள், தங்களையும், சமூகத்தையும் பெரிதும் பாதிக்கும் இம்மது விடயத்தை மட்டும், பெரும்பாலும் கண்டும் காணாமல் இருப்பதற்கு காரணம், நன்மைகள் பல இருப்பதாலா என்று எழுகின்ற கேள்விக்கு, உண்மையும் இருக்கிறது என்ற அதிர்ச்சி தகவலே கிடைக்கிறது.  

ஆம்! இதுபற்றி திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில், மத்திய சமூக நலத்துறை நிதியுதவியுடன் சக்தி மது போதை சிகிச்சை மையத்தை நடத்தி சமூக கடமையாளர் முனைவர் அறிவழகன் கூறும் போது, ‘பெண்கள் தாங்கள் செய்யும் பற்பல தவறுகளை மறைப்பதற்கும், கண்டும் காணாமல் இருப்பதற்கும் கணவன்களை அல்லது குடிகார கணவன்களை ஊக்கப் படுத்துகிறார்கள்’ என்று கூறும் இவர், இச்சிறந்த சேவைக்காக இந்த ஆண்டுக்கான தமிழக அரசின் முதல் விருதையும் பெற்றுள்ளார்.

நாமும், பற்பல குடும்பங்களில் மனைவியே, கணவனுக்கு மதுவை ஊத்தி தருவது, தேவையான சிற்றுண்டிகளை தயார் செய்து தருவது, சம்பாதிக்கும் மகனை வீட்டிலேயே மது குடிக்க அம்மாவே அனுமதிப்பது போன்ற நிகழ்வுகளை பார்த்துள்ளோம்தானே?

மது அருந்தும் பற்பல பார்களில் சைடிஸ் எனப்படும் ஆம்லெட், சுண்டல், ஊறுகாய், மற்ற இதர மசாலா அசைவ உணவுகளை தயார் செய்து விற்பவர்களில் பெண்களும் இருக்கிறார்களே! தன் கணவன் குடிக்க கூடாது என இப்பெண்கள் நினைத்தால், அடுத்தவளின் கணவன் குடிப்பதற்கு தேவையான உதவிகளை செய்து பிழைப்பார்களா என்பதையெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

தற்போது தமிழகத்தை ஆட்சி செய்யும் முதல்வர் ஜெயலலிதாவும் ஒரு பெண்ணாக, மதுவால் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து அறிந்திருக்கும் போதும், மது விலக்கை அமல்படுத்த கோரி நடைபயணம் மேற்கொண்டுள்ள அண்ணன் வைகோ அவர்களை, 19-02-2013 அன்று தானே வலிய சென்று நடுரோட்டில் சந்தித்து உறவாடி உள்ள செய்தி அனைத்து ஊடகங்களிலும் புகைப்படத்துடன் வெளியாகி உள்ள நிலையில்,

தங்கை முதல்வர் மது விலக்கைப்பற்றி, அண்ணன் வைகோவிடம் வாய் திறக்காததும், பெண்களும் மது விலக்கு குறித்து அவரிடம் வலியுறுத்தாததும், மது ஒழிக்கப்படும் வரை தொடர் போராட்டங்களை புரியாமல் மௌனம் காப்பது ஏன் என்பதும் புரிகிறதுதானே! ஆதாயம் இல்லாமல் யாராவது, யாருக்காவது ஆதரவு தருவார்களா?

வேறு எந்த மொழியிலும் இல்லாத சிறப்புகள், செம்மொழியாம் நம் தமிழ் மொழிக்கு இருக்கிறது. இதில், தெரிந்தோ தெரியாமலோ, ‘‘மது’’ தன் பெயரிலேயே அதற்கான தன்னிலை விளக்கத்தையும் கொண்டுள்ளது.

ஆம்! ம = மகிழ்ச்சி; து = துன்பம்.

மொத்தத்தில் மகிழ்ச்சியில் ஆரம்பித்து, துன்பத்தில் முடிவதுதாம் ‘மது’. இதனை மற்ற மொழியாளர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், இதனை தமிழ்க் ‘குடி மக்களே’ அறிந்திருக்கவில்லை என்பது எவ்வளவு பெரிய பேதமை.

Author: neethiyaithedi

சட்ட ஆராய்ச்சியாளர்.

1 thought on “தற்காப்பும், தனது கைக்கே காப்பும்!”

  1. ம = மகிழ்ச்சி; து = துன்பம். முதலில் மகிழ்ச்சி கடைசியில் துன்பம். அருமை!

Leave a Reply