சரியான சட்ட அறிவைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபோன்ற குற்றச் செய்திகளை, செய்திகளாகப் படிக்காமல், ஏன் நடந்தது என சிந்திக்க வேண்டும். ஆனால், யாருமே சிந்திக்க தயாராக இல்லை போலும்!
ஆமாம், இந்த செய்தியோடு, வேறு எதையாவது தொடர்பு படுத்தி பார்க்க முடியுதா? என முகநூலில் சில நாட்களுக்கு முன்பு பதிவிட்டேன். ஆனால், ஏனோ யாருமே பதில் அளிக்கவில்லை. எப்படி சட்ட அறிவை வளர்த்துக் கொள்வார்கள் என்பது தெரியவில்லை.
அதாவது, ஆறு இலட்சம் மோசடி செய்தவர் மீது, சட்டப்படி முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைக்காமல், உயர்மட்ட காவலூழியர், கட்டப்பஞ்சாயத்து செய்து இருக்கிறார்.
இதுபோன்ற நிகழ்வுகளில், மோசடி செய்தவரின் பின் புலத்தில், உயர்மட்ட அரசூழியர்கள் யாரோ இருக்கிறார்கள் என்றும், இது அதிகபட்சம் காவலூழியர்களாகவே இருப்பார்கள் என்றுமே அனுமானிக்க வேண்டும்.
இதுபற்றி ‘‘
மநு வரையுங்கலை!’’ நூலில், கோடிக் கணக்கில் சுருட்டிய குற்றச் சம்பவத்தோடு ஒப்பிட்டு நிகழ்ந்தவற்றை சொல்லி உள்ளேன்.
அதாவது, இந்த கோடிக்கணக்கான மோசடி குற்றத்தை குற்றவியல் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை தண்டிக்காமல், உயர்நீதிமன்ற சமரச தீர்வு மையத்தில் வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்தார்கள். ஆகையால், இதன் பின்புலத்தில், கூட்டுக்களவாணி நிதிபதிகள் இருக்கிறார்கள் என்று அனுமானிக்க வேண்டும்.
மேலே கண்ட செய்தியில் உள்ள ஆறு இலட்சத்தை இழந்த பாதிக்கப்பட்டவர்கள் மோசடி நபரை கடத்திச் சென்று நம் வழிக்கு வர வைத்தால்தான் உண்டு என்று முடிவெடுக்க வைத்து, சட்டப்படி தடுக்க வேண்டிய ஊழியர்களாலேயே திட்டமிட்டு குற்றவாளிகள் ஆக்கப்பட்டு உள்ளனர்.
இப்படித்தான் பல குற்றவாளிகள், வெவ்வேறு காரணங்களின் அடிப்படையில் உருவாக்கப் படுகின்றனர். சரியான அடிப்படை சட்ட விழிப்பறிவுணர்வு இல்லாததால் மக்கள் தங்களின் பொருட்களை இழப்பதோடு மட்டுமல்லாமல், திட்டமிட்டு குற்றவாளிகளாகவும் ஆக்கப்பட்டு, சீரழிக்கப்படுகின்றனர்.
இந்த செய்தியோடு ஒப்பிட்டு பார்க்க சொன்னது என்னவென்றால், ‘‘சுகப் பிரசவத்துக்கு ஹீலர் பாஸ்கர் ஐந்தாயிரம் கேட்டதாக ஒருவர் சொன்னதற்கே, அவர் மீது மோசடி வழக்கு போட்ட, அதே காவல்துறை காவலூழியர்கள்தான், உண்மையிலேயே ஆறு இலட்சத்தை மோசடி செய்தற்கு வழக்கு போடாமல், பாதிக்கப்பட்டவர்களை கடத்தல் குற்றம் புரியத் தூண்டி, அவர்களையை குற்றவாளிகள் ஆக்கி விட்டனர்’’.
ஆமாம், வழக்கு போடக்கூடாத பாஸ்கர் மீது வழக்கு போட்டதுபோல, போட வேண்டியவர்கள் மீது போடாமல், போடக்கூடாதவர்கள் மீது போட காரணமாக காவலூழியர்கள் இருந்திருக்கிறார்கள்.
இதுபுரியாத முட்டாள்தான், ‘‘சட்டத்தில் ஆயிரத்தெட்டு ஓட்டை என்று தங்களின் அறிவில் உள்ள ஓட்டையை வெளிப்படுத்துவார்கள்’’.
மேற்கண்ட செய்தியில் உள்ள குற்றம் சாற்றப்பட்டவர்கள் இந்த வகையில், வழக்கை எதிர்க் கொண்டால் காவலூழியர்களின் கூட்டுக்களவாணித் தனத்தை வெளிக் கொண்டு வரமுடியும் என்பதோடு, குற்றம் புரிய தூண்டியதாக காவலூழியர்களையும் சேர்த்து தண்டனைக்கு ஆளாக்க முடியும்.
இப்படி செய்தால்தான் இதுபோன்ற காவலூழியர்களின் திட்டமிட்ட குற்றவாளிகளை உருவாக்கத்தையும் தடுக்க முடியும். இந்த செய்தியைப் படிக்கும் எனக்கு இதெல்லாம் புரியும் போது, இதுபோன்ற வழக்குகளை நடத்தும் குற்றம் சாற்றப்பட்டவர்களது தரப்பு பொய்யர்கள், அரசுத் தரப்பு பொய்யர்கள் மற்றும் விசாரணை செய்யும் நிதிபதிகளுக்கெல்லாம் தெரியாதா?
ஆனாலும், அவர்களும் கூட்டுக்களவாணிகள் தானே... ஆகையால், இதையெல்லாம் கேட்க மாட்டார்கள் என்பதால் தான், ‘‘குற்றவாளிகளை உருவாக்கும் கூட்டுக் களவாணிகள்!’’ என மிகப் பொருத்தமாக தலைப்பை கொடுத்து உள்ளேன்.
ஆமாம், இதுவரை இப்படி செய்யப்படவில்லை என்பதாலேயே இதுபோன்று, காவலூழியர்கள் உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதற்கு இந்த செய்தியே ஆதாரம்.
எனவே, இந்த வழக்கில் சிக்கி உள்ளவர்களை, உங்களில் யாருக்கேனும் தெரிந்திருதால், இதை எல்லாம் எடுத்துச் சொல்லுங்கள். விரும்பினால், தேடிச் சென்று கூட சொல்லி உதவுங்கள்.
ஆனால், சட்ட விரோத தொழில் செய்யும் பொய்யர்கள் தங்களின் வழக்கு வருமானத்துக்காக சட்டப்படி செய்ய வேண்டிய இதையெல்லாம் செய்யவே மாட்டார்கள்.
மொத்தத்தில், சட்டப்படி நடக்க வேண்டிய அரசூழியர்கள், காவலூழியர்கள், அரசுப் பொய்யர்கள், பொய்யர்கள் நிதிபதிகள் என எல்லோருமே கூட்டுக் களவாணிகள்தான்.
இவர்களை எல்லாம் சட்டப்படி சந்திக்க, ஒவ்வொருவருக்கும் அடிப்படை சட்ட விழிப்பறிவுணர்வு மிக அவசியம் என்பதோடு, அவரவர்களே வாதாடுவது மிகமிக அவசியம்.