அண்மையில் குடும்ப நண்பனின் வீட்டு சுப நிகழ்வில் கலந்து கொள்ள நேர்ந்தது.
நிகழ்வில் கலந்து கொள்வோருக்கு தேவையான உணவுகளை சமைக்கும் நபரை நான் தேர்வு செய்து கொடுத்தேன். ஆனால், அவர்கள் அப்படியெல்லாம் சமைத்து தரமாட்டோம். இலை கணக்குதான் என்று சொல்லி விட்டார்கள்.
இதற்கு நண்பரின் குடும்பமும் ஒப்புக் கொண்டு, முன் பணமும் கொடுத்து விட்டு எனக்கு தகவல் சொன்னதால், என்னாலும் மாற்று ஏற்பாடு எதையும் சொல்ல முடிய வில்லை.
ஆமாம், சென்னை உள்ளிட்ட சில இடங்களில் இப்படியொரு இலை கணக்கு என்ற ஆபத்தான நிலையே இருக்கிறது.
ஏனெனில், மொத்தமாக சமைத்துக் கொடுப்பது என்றால், அவர்கள் பட்டியலிட்டு சொல்லும் பலசரக்கு பொருட்களை வாங்கிக் கொடுத்து விடுவோம்.
அவர்களும் தேவையான அளவிற்கு பயன்படுத்தி விடுவார்கள். மீதியை எடுத்துக் கொள்வோம். இப்படி செய்யும்போது, பல சரக்குகளும், உணவுகளும் மீதமாகுமே ஒழிய பற்றாக்குறை ஏற்படாது.
அவர்களும் தேவையான அளவிற்கு பயன்படுத்தி விடுவார்கள். மீதியை எடுத்துக் கொள்வோம். இப்படி செய்யும்போது, பல சரக்குகளும், உணவுகளும் மீதமாகுமே ஒழிய பற்றாக்குறை ஏற்படாது.
ஆனால், இலை கணக்கு என்பதில் எவ்வளவு பேருக்கு தேவையான பொருட்களை வாங்கினார்கள், எவ்வளவு பேருக்கு உணவு தயார் செய்தார்கள் என்பதையெல்லாம், நாம் கணக்கிட முடியாது.
சுருக்கமாக சொல்லப்போனால், சமைத்துக் கொடுத்தால் சம்பளம் மட்டுமே கிடைக்கும். இலை கணக்கு என்றால், செலவை சுருக்கி நல்ல லாபம் பார்க்கலாம் என்பதாலேயே, இம்முறையை வைத்திருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கு இல்லை. ஏனெனில், இதே துறையில் உள்ள நண்பர்களே இதனை சொல்கிறார்கள். எனவே, சமைத்துக் கொடுப்பதை தேர்ந்தெடுப்பதே நமக்கு நல்லது. அதற்கு முன்வராத ஆட்களை ஓரங்கட்டி விட்டு, வேறு ஊர்களில் இருந்து ஆட்களை ஏற்பாடு செய்து கொள்வதே நல்லது.
நண்பரின் வீட்டு நிகழ்விற்கு 100 பேருக்கு அழைப்பு விடுத்ததால், சிற்றுண்டியை கூடுதலாக 100 பேர் என 200 பேருக்கு சொல்லி இருந்தார்கள். ஒருவருக்கான சிற்றுண்டி செலவு 200 ரூபாய். ஆனால், சுமார் 200 முதல் 220 பேருக்கான சிற்றுண்டியை தயாரித்து விட்டதாக தயாரிப்பாளர்கள் சொல்லி விட்டார்கள்.
சுப நிகழ்வும் ஆரம்பமானது. எதிர்ப்பார்த்தபடியே அழைக்கப் பட்டு இருந்தவர்கள் குடும்பத்தோடு 100 முதல் 150 பேர் வரை கலந்து கொண்டார்கள்.
ஆனால், சிற்றுண்டி பரிமாறப்பட்டதும் கூட்டம் அதிகரித்தது. சுப நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்தான், உணவுக்கு வந்திருக்கிறார்கள் என எண்ணி பரிமாறி விட்டார்கள்.
நேரம் ஆக ஆக, அழைப்பை ஏற்று நிகழ்வில் கலந்துக் கொள்ள வந்தவர்கள் சிற்றுண்டிக்கு வர வர தயார் செய்திருந்த உணவில் ஒவ்வொன்றாக பற்றாக்குறை ஏற்பட்டு நிகழ்வுக்கு வந்தவர்கள் சுமார் 100 பேருக்கு இல்லாமல் போய் விட்டது.
சரி, இவர்களை மட்டும் தனியாக அழைத்து, சிறப்பு விருந்து ஒன்றை வைத்து விடலாம் என்றால், வெகுசிலரை தவிர உணவில்லாமல் போன பலரை, யார் யாரென்றே அடையாளங்கான முடியவில்லை.

சமையல் செய்தவர் வேறு, நண்பரது குடும்பத்திற்கு முதன் முதலாக நான் பரிந்துரை செய்த நபர். ஆகையால், அவருக்கும் சங்கடம். சிற்றுண்டியில் குறைபாடு எதுவும் வந்து விடக்கூடாது என்பதற்காக, காலையில் இருந்து, நானும் கூடவே இருந்தேன்.
ஆனாலுங்கூட, இதுபோன்ற நிலையும் ஏற்படலாம் என்பதை யோசிக்க வில்லை. ஆகையால், தேவையைப் பொறுத்து திடீர் உணவை செய்யவும் ஆயத்த நிலையில் எதையும் வைத்திருக்க வில்லை.
முதல் முறையாக சுப நிகழ்ச்சிகளை செய்வோர் இதையெல்லாம் யோசிக்க முடியாததுதான். ஆனால், சுப நிகழ்ச்சிகளுக்கு உணவை தயார் செய்வோர், நிச்சயம் இதையெல்லாம் சிந்தி(த்து இரு)க்க வேண்டும்.
பின்னரே, முன்பாக உண்ண வந்தவர்கள் எல்லாம் நிகழ்வில் கலந்துக் கொள்ள அழைக்கப் படாத அந்த ஏரியாவில் வசிக்கும், பன்றியைப் போல தின்னும் மாக்கள் என்பது புரிந்தது.
ஆமாம், நம்முடைய தவறான செயலால், சுப நிகழ்ச்சியை நடத்துபவர்களுக்கு எப்படியெல்லாம் வீண் சங்கடங்கள், பிரச்சினை வரும் என்று தெரியாத முட்டாள் மக்கள், பன்றி தின்பதைப் போல தனக்கு சோறு கிடைத்தால் போதும் என்றே நினைக்கிறார்கள்.
மேலும், அந்நிகழ்விடத்தில் கூலிக்கு மாரடிக்கும் வேலையை செய்யும் வேலைக் காரர்கள் தங்களது குடும்பம், நண்பர்கள் என அனைவருக்கும் தகவல் சொல்லி, சாப்பிட வரச் சொல்லி விடுகின்றனர்.
எனவே, உணவும், பணமும் வீணாகக் கூடாது என்றெண்ணி நபர்களை கணக்கிட்டு சுப நிகழ்ச்சியை செய்வோர், இப்படியெல்லாம் நடக்குமா என்பதை, நிகழ்வு நடைபெறும் இடத்தின் நிர்வாகிகளிடம் தெளிவாக கேட்டு தெரிந்து கொண்டு, அதற்கேற்ப அவ்விடத்தின் பிரதான வழியை தவிர, மற்ற வழிகளை மூடிவிட வேண்டும்.
ஏனெனில், திருட்டுத்தனமாக தின்னுவதற்கென்றே உள்ளே வர நினைப்பவர்கள் பிரதான வாயிலின் வழியாக, அவ்வளவு எளிதாக வரமாட்டார்கள்.
இதனைச் செய்ய நாங்கள் தவறி விட்டோம். இதனைச் செய்ய வேண்டுமென எண்ணி இருந்த நிகழ்விட நிர்வாகியும், உடல்நல சோர்வு காரணமாக மறந்து தூங்கி விட்டார்.
இது தவிர, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உணவுச்சாலையின் நுழைவு வாயிலில் நின்று, சாப்பிட போவது நம் உறவினர்கள் தானா, நண்பர்கள்தானா என்பதை கண்காணித்து உள்ளே விட வேண்டும். இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்களை அவர்களுக்கு தெரிவித்து விட்டால், சோதித்து அனுப்புவதை குறையாக கருத மாட்டார்கள்.
எந்த நிகழ்விற்கு சென்றாலும், அந்நிகழ்வைப்பற்றியோ அல்லது உணவைப்பற்றியோ குறை சொல்வது சிலருக்கு வாடிக்கையாக இருக்கும். இது இந்நிகழ்வில் இல்லை.
ஆமாம், உணவு வழங்க இயலாமல் போனதற்காக, வந்திருந்த விருந்தினர்களிடம் வருத்தம் தெரிவித்தபோது, சூழ்நிலையை அறிந்த அவர்கள் மிகவும் பெருந்தன்மையோடு, இது நம்ம வீட்டு நிகழ்வுங்க; அடுத்த நிகழ்வில் பார்த்துக்கலாம் கவலைப் படாதீர்கள் என்று ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லிச் சென்றதால், நாங்களும் நிம்மதி அடைந்தோம்.
எனவே, இதனை உங்களது நிகழ்வாக இருந்தாலும் சரி, நீங்கள் செல்லும் மற்றவர்களது நிகழ்வாக இருந்தாலும் சரி மறக்காமல் கடைப்பிடியுங்கள்! கடைப்பிடிக்கச் சொல்லுங்கள்!! என்பதற்காக, இந்த அனுபவ பதிவை பகிர்கிறேன்.
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment