ஆய்வு செய்தல் என்றாலே பல்கலைக் கழகத்தில் ஆய்வியல் துறையை தேர்ந்தெடுத்து ஆய்வு செய்வதுதான் எனப் பலரும் நம்பிக்கொண்டு இருக்கின்றனர். இது முழுக்க முழுக்க உண்மையல்ல. ஆய்வியல் துறையைத் தேர்ந்தெடுத்து ஆய்வு செய்பவர்கள் எல்லாம் ஏதோ ஒன்றை ஆய்வு செய்கிறார்கள் என்பது மட்டும் தான் உண்மை. ஆனால், அவர்கள் எதை ஆய்வு செய்கிறார்கள் என்பது தான் கேள்வியே?
அறிவு இரண்டு வகைப்படும். ஒன்று படிப்பறிவு, மற்றொன்று பட்டறிவு. பல்கலைக் கழகத்தில் ஆய்வியல் துறையில் ஆய்வு செய்பவர்கள் எல்லாம் படிப்பறிவை கொண்டவர்களே! இவர்கள் ஆய்வியல் துறையில் எதை ஆய்வு செய்கிறார்கள்?
"யாரோ ஒருவர், எதைப்பற்றியோ கண்டு பிடித்த கண்டுபிடிப்பை எடுத்துக் கொண்டு, எப்படி அவர் அந்தக் கண்டுபிடிப்பைக் கண்டு பிடித்தார்? என்பதைத் தான் ஆய்வு செய்கிறார்களே ஒழிய, இவர்களாக எதையும் புதியதாக ஆய்வு செய்து கண்டு பிடிக்கவில்லை''.
இது எப்படி ஆய்வு செய்வதாகும்? இதற்குப் பெயர் ஆய்வு செய்வது அல்ல. ஒருவரைப் பார்த்து காப்பி அடிக்காமல் பலரைப் பார்த்து காப்பி அடிப்பதே என்றுதான் கூற வேண்டும். இதுதான் இன்று சட்டத்துறையிலும், சட்டக் கல்லூரிகளிலும், வக்கீல்களிடமும், வக்கீலாய் இருந்து நீதிபதிகளான எல்லா நீதிபதிகளிடமும், நீதித்துறையிலும் நடந்து வருகிறது.
இவைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு சட்டத்தை பல்கலைக் கழகத்தில் படிக்காமல், சட்டத்தைப் பற்றி இதற்கு முன்பாக யார் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதை எல்லாம் காப்பி அடிக்காமல், "உண்மையில் சட்டம் என்றால் என்ன? அதன் நோக்கம் என்னவாக இருக்கிறது? என்னவாக இருக்க முடியும்? என்பது முதல் சட்டம் தொடர்பான பல்வேறு சங்கதிகளை பட்டறிவோடு இக்களஞ்சியத்தில் விளக்கி உள்ளேன்''
படிப்பறிவைக் கொண்டு பட்டறிவை வெல்ல முயல்வது பேதமை. ஆனால். பட்டறிவைக் கொண்டிருந்தால், அதன் அடக்கமாகவே படிப்பறிவு அமைந்து விடும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமிருக்காது.
ஆம்! நான்கு மீட்டர் நீளம் கொண்ட ஒரு கம்பியை மிகச் சரியாக ஒரு மீட்டர் நீளம் கொண்ட கம்பிகளாக துண்டு செய்தால் எத்தனை துண்டுகள் கிடைக்கும் என படிப்பறிவு கொண்டவரையும், பட்டறிவு கொண்டவரையும் கேட்டால். படிப்பறிவு கொண்டவர் 4*ஐ 1 ஆல் வகுத்து கிடைக்கும் ஈவு ஆன 4*ஐ மனதில் கொண்டு நான்கு துண்டுகள் கிடைக்கும் என பதில் அளிப்பார்.
அதே, பட்டறிவு கொண்டவரை கேட்டால் மூன்றுதான் கிடைக்கும் என்பார். என்னதான் இருந்தாலும் படிச்சவன் படிச்சவன்தான். எப்படி கரெக்ட்டா டக்குன்னு சொல்லி விட்டான் பாரு என்று உங்களுக்குத் தோன்றும். ஆனால், என்னதான் படிக்கவில்லை என்றாலும், இந்த சிறு கணக்கு கூடவா தெரியாது. இவனெல்லாம் வாழ்க்கையில் எங்கே உருப்படுவது? என்று கண்டகண்ட வார்த்தைகளால் அர்ச்சனை வேறு செய்வீர்கள்.
ஆனால், உண்மை என்ன? நான்கு மீட்டர் நீளம் உள்ள ஒரு கம்பியை ஒரு மீட்டர் அளவுள்ள கம்பித் துண்டுகளாக வெட்டுவதற்கு குறைந்தபட்சம் ஹக்சா பிளோடவது தேவை. அதன் தடிமன் சுமார் 1.5 மில்லி மீட்டருக்கு கீழ் கிடையாது என்பதால் அவ்வாறே கணக்கில் எடுத்துக் கொள்வோம்.
துண்டு செய்யும் போது ஏற்படும் உராய்வின் காரணமாக ஏற்படும் தேய்மானம் குறைந்தது. 0.5 மில்லிமீட்டர் என எடுத்துக் கொண்டாலும் கூட மொத்தத்தில் ஒரு துண்டுக்கு 2 மில்லி மீட்டர் அளவு யாராலும் தவிர்க்க முடியாத, உருத்தெரியாத, சேதாரம் ஆகி விடுகிறது.
ஆக மொத்தம் மூன்று துண்டுகள் செய்வதால் 6 மில்லி மீட்டர் அளவு தவிர்க்க இயலாத சேதாரம் ஆகி விட்ட நிலையில், நான்காவது இரும்புத்துண்டு மிகச் சரியாக ஒரு மீட்டர் இருக்க வாய்ப்பு இல்லாமல் குறைந்தது. சுமார் 6 மில்லி மீட்டர் குறைந்து இருக்கும் என்பதுதானே எதார்த்தமான உண்மை!
இந்த மாதிரியான எதார்த்தமான உண்மைகளைத் தான் எவ்வித குழப்பத்துக்கும் இடமில்லாமல், இச்சட்ட அறிவுக் களஞ்சியத்தில் தெளிவுபடுத்தி இருக்கிறேன். ஆராய்ச்சிக்கு எல்லையே கிடையாது என்பார்கள். “மாறாது” என்ற வார்த்தையைத் தவிர மற்றவை எல்லாம் காலச் சூழ்நிலைக்கு தக்கவாறு மாற்றத்துக்கு உரியது என்பதால் தான், ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் மாறி மாறி எதையாவது சொல்லிக் கொண்டே வருகிறார்கள்.
என்னைப் பொருத்தவரை ஆராய்ச்சியாளர்களை இரண்டு வகையாக பார்க்கிறேன். ஒன்று விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள், மற்றொன்று மெய்ஞான ஆராய்ச்சியாளர்கள். விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் படிப்பறிவை மட்டுமே கொண்டவர்கள்.
அதாவது நாம் ஏற்கனவே கம்பியை துண்டு செய்வதில் பார்த்தது போல, அவர்கள் படித்தை மட்டும் வைத்து தீர்வு சொல்பவர்கள். இப்படிப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் தீர்வு அவராலேயோ அல்லது மற்றவர்களாலேயோ பின்னர் மறுக்கப்படும். அந்த மறுப்பும் ஏற்கப்படும் என்ற ஒரே காரணத்தால் தான் படிப்பறிவு கொண்ட ஆராய்ச்சியாளர்கள் பலர் இன்றும்நாட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.
ஆனால், “மெய்ஞான ஆராய்ச்சியாளர்கள் சொன்ன கருத்து யாராலும், எந்த காலத்திலும் மறுக்க முடியாததாக, நாடு, இனம், மொழி, பிராந்தியம் என எல்லாவற்றையும் கடந்து அனைவரும் ஏற்கத்தக்க ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது”. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக திருக்குறளைச் சொல்லலாம்.
இது போல்தான் எனது இந்த சட்ட ஆராய்ச்சியும் என்பதை இங்கு தெரிவிப்பதில் எனக்கு தன்னடக்கமும் இல்லை. மாறாக, பெருமையும் இல்லை. ஏனெனில் இதில் தன்னடக்கத்திற்கோ, பெருமைக்கோ ஒன்றுமே இல்லை.
ஏனெனில், எதார்த்தத்தை சொல்வதே எனது கடமை! இந்நூலில், “நமது இந்திய நாட்டை வழி நடத்தும் இந்திய சாசனமாம் இந்திய அரசமைப்பு முதல், நாட்டின் முதுகெலும்பான கிராம நிர்வாகம் வரையிலான பல்வேறு சங்கதிகளை அவரவர்களின் சட்டக் கடமைகளோடு” சற்று விரிவாகவே தொகுத்துள்ளேன்.
உலகிலேயே நம் நாட்டில்தான் சட்டங்கள் மிக அதிகமாக உள்ளதாக சொல்லுவார்கள். அப்படி இருந்தும் கூட பிரச்சனைகள் குறையாததற்கு காரணம், சட்ட அறியாமையே! என்பதால், உங்களின் அன்றாட பிரச்சினைகளான லஞ்சம், வரதட்சனை, பொய் வழக்கு, நுகர்வோர் வழக்கு, தொழிலாளர் வழக்கு, பாலியல் வழக்கு, பாகப்பிரிவினை என்பன போன்ற பல்வேறு மிக முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு என்று சொல்லப்போனால் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தனிப்புத்தகமே எழுதலாம்.
ஆனால், அவைகள் இக்களஞ்சியத்தில் சாத்தியம் இல்லை என்பதால், அனுபவப்பூர்வமாக அதே நேரம் மிக மிக சுருக்கமாக, மிக மிக எளிதாக புரியும்படி சொல்லி உள்ளேன். எல்லோருக்கும் ஏதாவது ஒரு கெட்ட பழக்கம் இருக்கும். அது என்னிடமும் உண்டு.
ஆம்! உங்களுக்கு நான் என்ன சொல்ல நினைக்கிறேனோ அதை அதிக பட்சமாக, முதலில் நான் நடைமுறைப்படுத்தி விட்டுத்தான் சொல்லுவேன்.
அந்த வகையில் எனது அனுபவங்களை இக்களஞ்சியத்தில் பகிர்ந்துள்ளதற்கு காரணம், என்னால் சாதிக்க முடிந்த போது, உங்களால் ஏன் முடியாது என்று நம்பிக்கை ஊட்டுவதற்காகத் தானே தவிர, “சுய தம்பட்டத்திற்காக அல்ல”.
அந்த வகையில் எனது அனுபவங்களை இக்களஞ்சியத்தில் பகிர்ந்துள்ளதற்கு காரணம், என்னால் சாதிக்க முடிந்த போது, உங்களால் ஏன் முடியாது என்று நம்பிக்கை ஊட்டுவதற்காகத் தானே தவிர, “சுய தம்பட்டத்திற்காக அல்ல”.
முக்கிய குறிப்பு:
இந்நூல் திருத்தங்கள் ஏதுமின்றி ஆனால், இந்நூலில் சொல்லப்பட்டு பின் நடைமுறைக்கு வந்துள்ள முக்கியச் சங்கதிகளைச் சேர்த்து மூன்றாவது பதிப்பாக வெளிவந்துள்ளது.
இந்நூல் திருத்தங்கள் ஏதுமின்றி ஆனால், இந்நூலில் சொல்லப்பட்டு பின் நடைமுறைக்கு வந்துள்ள முக்கியச் சங்கதிகளைச் சேர்த்து மூன்றாவது பதிப்பாக வெளிவந்துள்ளது.
இந்த ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டுள்ளபடி, நம் வாசக சகோதரி ஒருத்தி என்னைப் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற அனுமதி கேட்டபோது, மறுத்து விட்டேன்.
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment