நான் யாருக்கும் சட்ட ஆலோசனை சொல்லமாட்டேன். அதாவது எனக்கு தெரிந்த ஆலோசனைகளை நூல்களில் சொல்லி இருக்கேன். ஆகையால், நூலில் சொல்லியுள்ள ஆலோசனை விளக்கத்தில் புரியாதவை எதுவும் இருந்தால், அதுகுறித்து சந்தேகம் கேட்கலாம் என்பதும்..,
அந்நூலை எழுதியவன் என்ற வகையில், சந்தேகங்களை தெளிவு படுத்த வேண்டியது என் கடமை என்பதே, என் நிபந்தனை!
ஆனால், இப்படி யாரும் சந்தேகம் கேட்டதில்லை. கேட்கவும் வாய்ப்பில்லாத அளவிற்கு எளிய புழங்கு தமிழில் எழுதி உள்ளேன். இதனை பத்திரிகைகள் பல வரவேற்று மதிப்புரையில் எழுதி உள்ளன.
இப்புழங்கு தமிழும் தெரியாததால், முதல் முறையாக வாசகர் இஸ்மாயில் சிங் என்பவர் இன்று மின்னஞ்சல் மூலம் சந்தேகம் கேட்டுள்ளார்.
இதுவும் கூட, தானொரு ஆங்கில அடிமை எனவும், ஆகையால் தமிழில் தகராறு என்பதையும் ஒப்புக்கொண்டே கேட்டுள்ளார். ஆகையால், சொல்கிறேன்.
இதற்கெல்லாம் அந்தந்த இடத்திலேயே அல்லது வேறு எங்காவது ஓரிடத்தில் விளக்கம் சொல்லி இருப்பேன் அல்லது அந்த இடத்திற்கு என்ன பொருள் வரும் என யோசித்தால், எளிதில் கண்டு பிடித்து விடலாம். நானும் இப்படித்தான் உட்பொருளை அல்லது அதன் கருப்பொருளை பிடிப்பேன்.
இதைத்தான் உங்களுக்கும் ஆலோசனையாக சொல்கிறேன் என்பதோடு இப்படி பிடிக்க ஆரம்பித்து படிக்க ஆரம்பித்தால்தான், புரியாத எதுவுங்கூட எளிதில் புரியும். பின் அதில் உங்களின் சிந்தனை, நீங்களே வியக்கும் அளவிற்கு இருக்கும்.
இதுதவிர, உலாப்பேசி, விழிப்பறிவுணர்வு, மாற்றுத்திறனாளி, திருநங்கை போன்ற சில வாங்கியங்களை நானே உருவாக்கியும் பயன்படுத்தியும் வருகிறேன். இவையுங்கூட, உள்ளார்ந்த பொருளுடன் புரியும் விதத்திலேயே இருக்கும்.
சரி, வாசகர் இஸ்மாயில் சிங் கேட்டுள்ள வாக்கியங்களுக்கான பதில் இதுதான்!
பற்றுகை = பிடி, பிடித்தல், சட்டத்தில் ஜப்தி
உறுதிமொழி பத்திரம் = நாமே ஒப்பமிடும் அவிடாவிட்
கடப்பாடு ஆவணம் = சட்டப்படி நம்மை கட்டுப்படுத்தும் ஒப்பந்த ஆவணம். இது அமலில் உள்ள சட்ட விதிகளுக்கு எதிராக இருந்தால் செல்லாது.
மோதல் சாவுகள் = காவலூழியர்களுக்கும் ரவுடிகளுக்கும் இடையே நடக்கும் சண்டையில், காவலூழியர்களால் நடத்தப்படும் கொலை. ஆனால், அவர்களோ தற்காப்புக்காக செய்யப்பட கொலை என்பார்கள்.
உண்மையில், இது முற்றிலும் திட்டமிட்டு அறங்கேற்றப்படும் கொலை என்பதை பல்வேறு விதங்களில் ஆராய்ந்துதான் பிணை (ஜாமீன்) எடுப்பது எப்படி நூலில் எழுதி உள்ளேன்.
இதன் பிறகுதான், இக்கொலையை செய்வதற்கென பிரத்தியே கமாக காவலூழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவது தெரிந்தது. அவர்கள் அப்படியொரு பிரம்மிக்கும் தோற்றத்தில் இருக்கிறார்கள். இந்த விசயம் காவலூழியத்தில் உள்ள காவலர்களுக்கே தெரியாது.
மேலும், இதுபோன்ற சம்பவங்களை அரங்கேற்றும் போது அது மக்களின் நடமாட்டம் இல்லாத (ரவுடிகள் பதுங்கும்) பகுதியாக பார்த்துக் கொள்வார்கள் அல்லது அருகில் மக்கள் வசிப்பவர்களாக இருந்தால், அவர்களை வீட்டுக்குள் இருக்கச் சொல்லி விட்டு, சுட்டுத்தள்ளும் காரியத்தை அரங்கேற்றி விடுவார்கள்.
ஆனால், அரிவாளால் ரவுடி தாக்கியதால், சுட்டேன் என பெரும்பாலும் கையில் சும்மாவே ஒரு கட்டைப்போட்டுக் கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் காவலூழியர் வேறு; உண்மையில் சுட்டுத் தள்ளியவர் வேறாக இருப்பார்கள்.
இதனால், தன்னை யார் சுட்டது என்பதை செத்தவனா வந்து சொல்ல முடியும்?
மக்களுக்கு ரவுடிகளின் மீது உள்ள அச்சத்தை, காவலூழியர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொ(ல், ள்)கிறார்கள்.
இதனை அரசுக்கும் ஆதாரமில்லாத செய்தியாக தெரிவித்து விடுவார்கள். அரசின் சம்மதம் இருந்தால்தான் செய்யமுடியும். இல்லாமல் செய்து விட்டால், அரசே கொலை வழக்கை பதிந்து, சம்பந்தப்பட்ட காவலூழியரை கைது செய்து விடும்.
இதனை என்கவுண்டர் என்கிறார்கள். ஆனால், சட்ட விதிகளில் இப்படியொரு வார்த்தை இல்லை. இதைத்தான் தமிழில் மோதல் சாவுகள் சரியா என கேள்வி எழுப்பி உள்ளேன்.
இதில், நாம் பார்க்கும் தொப்பை காவலூழியர்களா, இவ்வளவு தூரம் ரவுடிகளை குறிபார்த்து சுடுகிறார்கள் என்ற சந்தேகம் எனக்கு இருக்கத்தான் செய்தது.
ஆனால், என்னுடைய கெட்ட பழக்கமே, உறுதியாக தெரிந்த ஒன்றை எழுதுவதுதானே!
குறிப்பு:
1. இவ்வாக்கியங்கள் எந்த நூலில், எந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆகையால், பொதுவான விளக்கத்தை கொடுத்து உள்ளேன். சில இடங்களுக்கு இது மாறுபடலாம் அல்லது வேறு வார்த்தையில் சொல்லி இருப்பேன்.
2. இப்படி, ஆக்கப்பூர்வமான சந்தேகங்களை கேட்கும்போது, நானும் ஆக்கப்பூர்வமான அப்டேட் தகவலை சொல்ல முடியும்.
3. ஆலோசனை கேட்டு எரிச்சல் ஊட்டினால், எரிந்து விழுவதை தவிர வேறு வழியில்லை. இனி யார் ஆலோசனை கேட்டாலும், அவர்களை எச்சரிக்கவே இப்பதிவு.
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment