No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Thursday, December 15, 2016

உலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - முடிவு


உலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 4

ஜூலியன் அஸ்ஸான்ஜ் எனும் பெயர் கொண்ட ஒருவர் ஒருநாள் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு ஈரம் சொட்டச் சொட்ட நேராகக் கோவிலுக்குப் போனார். அங்கிருந்த அகோர வீரபத்ர மஹாகாளியின் திருவுருவத்தின் முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். 

‘இவ்வுலகில் அனைத்து அரசாங்கங்களும் பல்வேறு வகைகளில் பொது ஜனங்களை ஏமாற்றிக் கொண்டு, புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டு, மோசடிகள் செய்து கொண்டு தாங்கள் பெரிய யோக்கியர்கள் மாதிரி வெளியில் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அத்தனை புளுகு, மோசடிகளையும் தேடிப்பிடித்து அவர்களின் முகமூடிகளை உரித்து உண்மைகளைப் பொதுமக்களுக்குக் காட்டுவேன். இந்தப் பணியில் எனக்கு யாரும் துணை வந்தாலும், வராவிட்டாலும் தனியாகவே இந்தப் பூவுலகில் என் வாழ்நாள் உள்ளவரை இதைச் செய்வேன்’ என்று காளிமாதாவின் முன்பாக வலது கையை நீட்டி வீர சபதம் எடுத்துக் கொண்டார். 

அவர் இதைச் சொல்லும்போது ஜகன்மாதாவின் கண்கள் அவரை ஆசீர்வதிப்பது போல் ஒருமுறை திறந்தன. ஆனால் அவர் அதைக் கவனிக்கவில்லை. அவர் கோவிலிலிருந்து வெளியே வரும் போது சூரியன் உதயமாகிக் கொண்டிருந்தது. அவர் சூரியனையும் கவனிக்கவில்லை. ஆனால் சூரிய பகவான் தன் அருட்பார்வையோடு அவரைக் கவனிக்கத் தவறவில்லை. விடு விடு வென்று நேர்ப் பார்வையோடு நடந்து கொண்டிருந்த அவர் மேனியின் மீது சூரிய பகவானின் பொற்கிரணங்கள் மிகுந்த வாஞ்சையுடன் தழுவலாயின. அவரின் ஈர உடலை வெது வெதுப்பாக்கின. இந்தப் பாலகன் இனி சூரியனையே பார்க்க முடியாதபடி ஆக்கி விடுவார்களே என்பதை சூரிய பகவானே உணர்ந்து வருந்தியது போலிருந்தது.

அவர் தான் சபதம் எடுத்த நன்னாளிலிருந்து இன்றுவரை ராப்பகல் பார்க்காமல் விடா முயற்சியுடன் உலகக் கணினி களில் கொட்டிக் குவித்திருக்கும் அத்தனை குப்பைகளையும் கிளறிக் கிளறி, பற்பல தகவல்களை சேகரித்து காலை, மதியம், மாலை, இரவு என்று வேளைக்கு ஒன்றாகப் பற்பல அதிர்ச்சித் தகவல்களை உலகெங்கும் கொடுத்து, உலகின் பற்பல அரசியல்வாதிகள், அதிகாரிகளின் ராத்தூக்கத்தைக் கெடுக்கலானார். 

அவர் எப்படியோ பெரும் முயற்சி செய்து ஒரு ஸ்விஸ் வங்கி ஊழியரின் தயவை சம்பாதித்துக் கொண்டார். எத்தனையோ அரசாங்கங்கள் எவ்வளவோ முயன்றும் அடைய முடியாத, பல பேருடைய ஸ்விஸ் வங்கி விவரங்களை அவர் ஒரே நாளில் பகிரங்கமாக்கினார். மக்கள் தாங்கள் அன்றாடம் தொலைக் காட்சிகளில் காணும், ‘ஈ’ யென்று புன்னகைத்துக் கொண்டே பற்பல பொருட்கள் விற்கும், பிரபலங்களின் பெயர்களெல்லாம் அந்தப் பட்டியலில் இருப்பதைக் கண்டு திகைப்பில் மூச்சடைத்து ஆவென்று வாயைப் பிளந்தார்கள்.

ஆனால் அந்தத் தகவல்களை வைத்துக் கொண்டு எந்த அரசாங்கமும் ஏதேனும் செய்ததா இல்லையா என்றெல்லாம் யாருக்கும் தெரியாது.          

‘இந்த அரசாங்கங்களெல்லாம் ஆங்காங்கு தங்களுக்கு ஏற்றாற்போல் வங்கிகளும் சட்டங்களும் விதவிதமாக வைத்துக் கொண்டு ஸ்விஸ் வங்கிகளை மட்டும் ஓயாமல் நெருக்கிக் கொண்டிருப்பது என்ன நியாயம், எந்த ஊரில் ஊழல் இல்லை, எந்த வங்கியில் ஊழல் இல்லை’ என்று காரமாகக் கேட்பவர்கள் இவ்வுலகில் இருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் ‘ஏதோ இந்த அரசாங்கங்களெல்லாம் மிகவும் யோக்கியக்காரர்கள் போலவும் மக்களிடம் எப்பொதும் உண்மையே பேசுகிறவர்கள் போலவும், மக்களை எந்த சந்தர்ப்பத்திலும் கொஞ்சம் கூட ஏமாற்றாதவர்கள் போலவும், ’மக்களெல்லாம் எங்களை ஏமாற்றுகிறார்கள், மக்களெல்லாம் எங்களை ஏமாற்றுகிறார்கள்’, என்று உலகெங்கும் ஒவ்வொரு நாளும் கூவிக் கூவிக் குறை சொல்வது என்ன நியாயம், மக்கள் இவர்களை மதிக்கவில்லை என்று ஒப்பாரி வைக்கிறார்களே, இவர்கள் மக்களுக்கு என்ன மதிப்பு கொடுத்துக் கிழித்து விட்டார்களாம்’ என்று கோபமாகக் கேட்பவர்களும் இவ்வுலகில் இருக்கிறார்கள்.

மற்றொரு பக்கம் அரசாங்கங்களின் பல்வேறு நடவடிக்கைகளில் சிக்கி நசுங்கி, ‘உண்மையில் ஊழல் செய்பவர்களைப் பிடிப்பதற்குத் துப்பில்லாமல், தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் சாதாரண மக்களைப் போய் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறர்களே’ என்று விசனப் படும் அப்பாவிகளும் இருக்கிறார்கள்.

இவ்வுலகில் வல்லரசுகளால் ஆக்கிரமிக்கப்படும் பொருளாதார ஏகாதிபத்தியத்திற்கும், முதலாளித்துவ அமைப்பின் அடிப்படையில் உள்ள பல்வேறு குளறுபடிகளுக்கும், சர்வதேச பொருளாதாரத்தில் இருக்கும் பற்பல முரண்பாடுகளுக்கும், பெரு வர்த்தக சூதாட்டங்களுக்கும், ஜனநாயக, சோஷலிஸ, கம்யூனிஸ, மன்னராட்சி, சர்வாதிகார ஆட்சிகள் என்று பலவிதங்களில் ஆட்சிகள் புரிந்து கொண்டிருக்கும் அத்தனை அரசாங்கங்களின் மனசாட்சிக்கும், அதே சமயத்தில் ஒவ்வொரு தேசத்தின் பணக்காரர்களின் மனசாட்சிகளுக்கும், எளிமையான ஒரு ஒற்றை வரி சட்டத்தின் மூலம், அமைதியாக ஒரு மாபெரும் சவாலை முன்வைத்து விட்டு, இவ்வுலகில் தம் போக்கில் இயங்கிக் கொண்டிருக்கும் ஸ்விஸ் வங்கிகள் கொழுத்த லாபமும் ஈட்டிக் கொண்டிருக்கின்றன.

இதற்கிடையில் கடந்த வருடம் ஸ்விட்ஸர்லாந்து தேசத்தின் பொருளாதார அமைச்சரான ஜோஹன் அம்மான் என்பவர் இந்தியாவுக்கு விஜயம் செய்தார். நம் அரசாங்க அதிகாரிகள் எல்லாம், அவருக்கு ஷோடஸ உபசாரங்கள் எல்லாம் செய்துவிட்டு, அவர் ஓய்வாக அமர்ந்து கொண்டு வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டிருக்கும் சமயமாகப் பார்த்து அவரிடம், ‘எங்கள் ஊரில் சிலர் ஊழலெல்லாம் செய்துவிட்டு உங்கள் ஊர் வங்கியில் பணத்தைப் போட்டிருக்கிறார்கள்...’ என்று இழுத்தார்கள். 

அவரும் ‘அடடா, ஊழல் செய்துவிட்டார்களா, ரொம்ப தப்பாச்சே, ச்சூ ச்சூ’ என்று வருத்தப்படவே மிகுந்த தைரியம் கொண்டு, ‘தாங்கள் பெரிய மனது பண்ணி அந்த வங்கி கணக்கு விவரங்களெல்லாம் எங்களுக்குக் கொஞ்சம் கொடுத்தால் நன்றாயிருக்கும்’ என்று மிக்க பணிவுடன் விண்ணப்பித்துக் கொண்டார்கள். அவரும், ‘ஆஹா, அதற்கென்ன கொடுத்துவிட்டால் போச்சு, நான் ஊருக்குப் போனவுடன் முதல் காரியமாக எங்கள் பாராளுமன்றத்திடம் இதைக் குறித்து பேசுகிறேன், என்ன, கொஞ்சம் சட்டத்தை மாற்ற வேண்டியிருக்கும் அவ்வளவுதான்’ என்றார்.

‘விஷயம் இவ்வளவு சுலபமாக முடிந்துவிட்டதே’ என்று சந்தோஷத்தில் திக்கு முக்காடிப்போன அதிகாரிகள் அவரிடம் மேலும், ‘தயவு செய்து தாங்கள் இப்போது சொன்னதை அப்படியே கொஞ்சம் எங்கள் ஊர் பத்திரிக்கைக் காரர்களிடமும் சொல்ல வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்கள். அவரும், ‘அதற்கென்ன, பேஷாக சொல்லிவிடுகிறேன், கூப்பிடுங்கள் பத்திரிக்கைக் காரர்களை’ என்றார். ஆங்கிலத்திலான அந்தப் பத்திரிக்கை செய்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

“Switzerland’s Economic Affairs Minister Johann Schneider Ammann during his India visit on May 15 said that the Swiss government was sensitive to the fact that the issue of black money was very important for India and needed to be resolved.
“Switzerland has decided to follow international standards, including those framed by OECD, in sharing information and providing assistance to foreign countries probing such cases, but we have to ask our Parliament to make changes in our laws,” he said”. 

நன்றி ‘தி ஹிந்து’

ஊருக்குப் போனவர் போனவர்தான்.

இந்நிலையில் இவ்விஷயத்தில் இந்தியாவைப் பொறுத்தவரை, ஒயாமல் இதைப்பற்றிப் பேசுவதைத் தவிர சொல்லிக் கொள்ளும் படியாக எந்த முன்னேற்றமும் ஏற்பட்ட மாதிரி இதுவரை தெரியவில்லை. ஒரு வேளை உலகிற்கே மிகுந்த அதிசயமாக எதாவது முன்னேற்றம் ஏற்பட்டு அதை வெளியில் சொல்லாமல் இருக்கிறார்களா என்பதும் தெரியவில்லை.

‘ஸ்விஸ் வங்கிகளிலிருப்பதாக நம்பப்படும் பணத்தை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வருவது’ எனும் இவ்விஷயத்தைப் பொறுத்தவரை செய்வதற்கு ஏதாவது இருக்கிறதா என்பதும் தெரியவில்லை. ஆனால் அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் கொடுக்கும் நெருக்கடிகளைப் பொறுத்து எதிர்காலத்தில் ஸ்விஸ் வங்கிகளின் நிலைப்பாடு எப்படியிருக்கும் என்பதும் தெரியவில்லை.

அதேசமயம் ஒருவேளை அமெரிக்க ஐரோப்பிய நிர்ப்பந்தங்களுக்கு ஸ்விஸ் வங்கிகள் வளைந்து கொடுக்கலாம். ‘கூடத்துக்கு விடிந்தால் தாழ்வாரத்துக்கும்தான் விடிய வேண்டும்’ என அப்படி ஒரு சந்தர்ப்பத்துக்காகக் காத்திருக்க வேண்டியதுதான்.

அதுவரை வழக்கம் போலவே தொலைக்காட்சிகளில் தொண்டை கிழியக் கார சாரமாக விவாதங்கள் பண்ணிக் கொண்டும், இதைப் போலவே கட்டுரைகளைப் பத்திரிகைகளில் எழுதிக் கொண்டும், குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக் கொள்ளலாம்.   

இவ்வுலகில் ஒரு ஜனநாயக தேசம். சாதுவான மக்கள். அங்கு ஒரு வங்கி. அது தன் வாடிக்கையாளர்கள் யார், அவர்கள் தன் வங்கியில் என்ன பணம் போட்டார்கள் என்ன பரிவர்த்தனை செய்கிறார்கள் என்பதை யாருக்கும் சொல்ல மாட்டோம் என்று கூறுகிறது. அவ்வாறு அது கூறுவதற்கு அந்த தேசத்தின் அரசாங்கம் சட்ட பூர்வமான அங்கீகாரம் அளித்திருக்கிறது. 

அந்த சட்டத்திற்கு அந்த தேசத்து ஜனங்களும் முழு மனதோடு ஒப்புதல் அளித்திருக்கிறார்கள். ஆதலால் அந்த வங்கியில் யார் பணம் போட்டார்கள் என்று அந்த வங்கி வெளியில் சொல்லப் போவதில்லை. அந்த வங்கியில் பணம் போட்டவர்களும் வெளியில் சொல்லப் போவதில்லை. இந்த வியூகத்தை எப்படிக் கடப்பது என்று இந்த உலகில் ஏனைய எந்த அரசாங்கத்திற்கும் இன்றுவரை புரியவில்லை. இவ்வளவுதான் விஷயம். 

பின் குறிப்பு:


இந்தக் கட்டுரையை எழுதி முடித்த மறுநாள் ஒரு வரலாற்று நிகழ்வு நிகழ்ந்துள்ளதாகப் பத்திரிகை செய்திகளின் வாயிலாக அறிகிறோம். நாம் மேலேகண்ட ஸ்விட்ஸர்லாந்து அரசாங்கத்தின் நிதியமைச்சருடன் இந்தியாவின் தற்போதைய பிரதம மந்திரியானவர் பேச்சு வார்த்தை நடத்தி அதன் பின்பு இந்திய அரசாங்கம் ஸ்விட்ஸர்லாந்து அரசாங்கத்துடன் ஒரு ஒப்பந்தம் போட்டிருப்பதாக அறிகிறோம்.

நம் பத்திரிகைகள் இந்த ஒப்பந்தத்தின்படி 2019 ஆம் ஆண்டிலிருந்து ஸ்விஸ் வங்கிகள் இந்தியாவின் சம்பத்தப்பட்ட அதிகாரபூர்வ நிறுவனங்களுடன் கணக்கு விவரங்களைப் பரிமாறிக்கொள்ளும் என்று தெரிவிக்கின்றன. 

அப்படிப்பட்ட கணக்கு விவரங்கள் பரிமற்றம் எனும் விஷயம், 2018 ஆம் ஆண்டிலிருந்து புதிதாகத் தொடங்கப் படும் கணக்கு விவரங்களை மட்டுமே குறிக்கும் என்றும், வாடிக்கையாளர்களின் ரகசியங்களைப் பாதுகாக்கும் ஸ்விஸ் வங்கியின் நோக்கத்தை இந்தியா மிகவும் மதிக்கிறது என்றும் சொல்லியிருக்கின்றன.

அதேசமயத்தில் ஸ்விட்ஸர்லாந்து பத்திரிக்கைகள் இவ்விஷயத்தை ஆமோதித்தாலும் கூடவே இன்னொரு செய்தியும் போட்டிருக்கின்றன. அதாவது இந்த ஒப்பந்தத்தைக் குறித்தான விஷயங்களைப் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக முன்வைத்து பாராளுமன்றத்தில் ஒப்புதலான பின்னும், மேலும் அதற்குரிய சட்ட மாற்றங்களையும் செய்த பின்புதான் இந்த ஒப்பந்தம் நடை முறைப்படும் என்று சொல்லியிருக்கின்றன.

மேற்கண்ட விஷயங்கள், ஸ்விஸ் வங்கியிலிருக்கும் இந்தியப் பணத்தைக் கொண்டு வருவதற்குரிய சாத்தியக் கூறுகளைக் குறித்து இக்கட்டுரை ஊகித்ததை சரியென்று ஆமோதிக்கின்றன.  

அதாவது 2018 இலிருந்து கணக்கு தொடங்குபவர்களைப் பற்றி மட்டும் தான் விவரங்களைப் பரிமாறிக் கொள்வது என ஓப்பந்தம் ஆனது போல் தெரிகிறதே தவிர, பழைய விவரங்களைக் குறித்து இனிமேல் இந்தியாவானது மூச்சுகூட விடாது என்று தெரிகிறது. 

இதன் மூலம் ஸ்விஸ் வங்கியிலிருக்கும் இந்தியப் பணத்தை மீட்டுக் கொண்டு வருவோம் எனும் வாக்குறுதியையும் இனி குழி தோண்டிப் புதைத்து விட வேண்டியதுதான் என்பதும் புரிகிறது. 

அதேபோல் ஸ்விட்ஸர்லாந்து அரசாங்கமானது தனது ஏனைய ஒப்பந்த வழக்கத்தைப் போலவே, பாரளுமன்ற ஒப்புதல் என்று மீண்டும் சொல்லியிருப்பது, அது எதிர்காலத்திலாவது கணக்குகளை ஏனைய அரசாங்கங்களுடன் பரிமாறிக் கொள்ளுமா என்பதில் எழும் ஒரு சந்தேகம் இன்னும் முழுதாகத் தீர்ந்தபாடில்லை.

ஆனாலும் எதிர்காலத்தைப் பொறுத்தவரை அது தன் பாரளுமன்ற ஒப்புதலை முறைப்படி பெற்றுக்கொண்டு ஒப்பந்தப்படி கணக்கு விவரங்களைப் பரிமாறிக் கொள்ளும் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

இது இந்தியாவின் வெற்றி எனப் பலரும் பேசிக் கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். ஆனால் இதை இந்தியாவின் வெற்றியாகக் கருத வாய்ப்பில்லை. இதற்குப் பின்னால் ஒரு சர்வதேச நிர்ப்பந்தம் இருப்பதாகக் கருதவே வாய்ப்புகள் இருக்கின்றன. அந்த நிர்ப்பந்தம் என்ன என்று பார்ப்போம்.

இதன் இன்னொரு புறம், இவ்வுலகில் ஸ்விஸ் வங்கிகளுக்குப் போட்டியாகப் பல்வேறு தேசங்களிலும் பல வங்கிகள் இதேபோல் ரகசியக் கணக்குகள் தொடங்க வழி வகைகள் செய்து கொடுத்துக் கொண்டிருக்கின்றன என்பதை இக்கட்டுரையில் பார்த்தோம். ஸ்விஸ் வங்கிகளாவது ஒரு கூட்டமைப்பாக செயல் பட்டுக் கொண்டு மேலும் ஒரு அரசாங்கத்தின் வெளிப்படையான ஆதரவுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் இது போலவே இருக்கும் ஏனைய வங்கிகள் அவ்வாறு கூட்டமைப்பாக செயல்படுவது போல் தெரியவில்லை. 

உலகில் ‘ஆஃப்ஷோர் ஃபண்ட்ஸ்’ என்றழைக்கப்படும் வெளிநாட்டுப் பணத்தில் மூன்றில் ஒரு பங்குதான் ஸ்விஸ் வங்கிகளில் புழங்குவதாக அறிகிறோம். இதன் இன்னொரு புறமாக பற்பல கார்ப்பொரேட் நிறுவனங்களும் மிஸ்பிரைஸிங்’ எனப்படும், ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு விலையைக் குறைத்துக் காட்டியும், இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விலையை அதிகரித்துக் காட்டியும், இங்கே நஷ்டக் கணக்கு காட்டி, வெளிநாடுகளிலேயே கள்ளப் பணத்தை உருவாக்கி அங்கேயே பற்பல வங்கிகளில் பரவலாகப் பதுக்குகின்றன என்றும் அறிகிறோம். 

இந்நிலையில் ஸ்விஸ் வங்கிகளிடம் ஒப்பந்தம் போட்டதைப் போலவே இவ்வுலகில் ரகசிய கணக்குகளை ஆதரிக்கும் மற்ற பல வங்கிகளுடனும் இந்தியா ஒப்பந்தம் போடுமா என்பதும் இன்னும் தெரியவில்லை. அவ்வாறு போட்டால் ஒவ்வொரு அரசாங்கத்துடனும் போடுமா அல்லது ஒவ்வொரு வங்கியுடனும் தனித்தனியாகப் போடுமா என்றும் தெரியவில்லை. அதற்கு அந்த வங்கிகளெல்லாம் ஒப்புக்கொள்ளுமா என்றும் தெரியவில்லை. அவ்வாறு ரகசியக் கணக்குகளை அடியோடு பகிரங்கமாக்காமல் ஊழல் எவ்வாறு அடியோடு ஒழிக்கப்படும் என்றும் தெரியவில்லை.    

மேலும் இந்த ஸ்விஸ் வங்கிகள் குறித்த ஒப்பந்தத்திற்கும், தற்காலத்தில் திடீரென இந்தியாவில் அமலுக்கு வந்திருக்கும் ‘டிமானடைஸேஷன்’ எனப்படும் ‘பண மதிப்பொழிப்பு’ எனும் நடவடிக்கைக்கும் அடிப்படையில் ஒரு தொடர்பு இருப்பதற்கும் காரணங்கள் உண்டு.

இந்நிலையில் ‘பண மதிப்பொழிப்பு’ எனும் விஷயத்தைப் பற்றி விரிவாக ‘செல்லாக் காசாகிப் போவார்களா இந்தியர்கள்?’ எனும் கட்டுரையில் காண்போம். அவ்வளவே! 

இக்கட்டுரைக்கு தொடர்புடைய இணையப் பக்கங்களின் இணைப்புக்கள் 


பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)