No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Saturday, December 10, 2016

உலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 4

சில ஆண்டுகளுக்கு முன் சந்திக்க நேர்ந்த ஒரு ஐரோப்பியப் பேராசிரியர், அவர் இந்திய சுதந்திரத்திற்குப் பின்னான தென்னிந்திய அரசியல் பொருளாதார வரலாற்றைக் குறித்து ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்து ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளதாகக் கூறினார்.

உலகில் எங்கோ ஒரு கோடியில் இருப்பவர் மற்றொரு கோடியில் நடக்கும் விஷயங்களைக் குறித்து இவ்வளவு சிரத்தையாகக் கூர்ந்து கவனிக்கிறாரே என்று ஒரு கணம் வியப்பாக இருந்தாலும், இவ்வகையான ஆராய்ச்சிகளைப் பின்னணியில் இருந்து ஊக்குவிப்பவர்களின் நோக்கங்கள் ஊகித்தறிய முடியாததல்ல.

பலவிதமான அரசியலெல்லாம் செய்து கொண்டு, குடிமக்களை எல்லாம் தங்கள் பகடைக்காய்கள் போல் உருட்டிக் கொண்டு பற்பல வங்கிகளின் உதவியுடன் அவர்களைத் தங்களுடைய பொருளாதாரக் கட்டுப்பாட்டுக்குள் ஒட்டுமொத்தமாக எப்படியாவது கொண்டு வந்தே தீருவது என்று முனைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் உலகின் அனைத்து அரசாங்கங்களின் நோக்கத்திற்கும் மறைமுகமாக ஆப்பு வைத்துக் கொண்டிருக்கும் ஸ்விஸ் வங்கிகளுக்குப் பெரும் ஆதரவாக ஸ்விட்ஸர்லாந்து அரசாங்கமும், தலைமுறை தலைமுறையாகத் தாங்களும் எந்த வம்புக்கும் போகாமல், எந்த வம்புக்கும் கொஞ்சமும் இடமும் கொடுக்காமல், அதே சமயத்தில் ஸ்விஸ் வங்கிகள் விஷயத்தில் சத்தம் போடாமல் ஏனைய அனைத்து அரசாங்கங்களையும் ஒருவகையில் வம்பிழுத்துக் கொண்டிருப்பதை நன்கு உணர்ந்து, ஆனால் என்ன செய்வதென்று மிகச் சரியாகப் புரியாமல் குழம்பி இவ்வுலகின் பல அரசாங்கங்களும் பற்களை நறநற வென்று கடித்துக் கொண்டு, கைகளைப் பிசைந்து கொண்டு, கடுகடுவென இருக்கின்றன.    

அதே சமயத்தில் என்னதான் அரசாங்க அமைப்புகளாக இருந்தாலும் அதில் பல்வேறுபட்ட அரசியல் கட்சிகள், கொள்கைகள், வியாபாரங்கள், நிறுவனங்கள் இதிலெல்லாம் தொடர்புள்ளவர்கள் தனி மனிதர்கள்தான் எனும் நிலையில், பலரின் வண்ட வாளங்களைப் பற்றியும், தனிப்பட்ட முறையில், ஸ்விஸ் வங்கிகள் நன்கு அறிந்துதான் வைத்திருக்கின்றன என்று பரவலாக நிலவும் கருத்தினாலும், நிஜமாகவே ஒரு சரியான விவகாரத்தை வைத்துக் கொண்டு, ஸ்விஸ் வங்கிகளை ரொம்பவும் நெருங்கித் தோண்டினாலும், எந்தப் புற்றில் எந்தப் பாம்பு கிளம்புமோ, எதை உரசினால் எந்த பூதம் கிளம்புமோ அதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படுமோ என்றெல்லாம் அஞ்சித் தயங்கிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளைக் கொண்ட தேசங்களும் இவ்வுலகில் இருக்கின்றன.  

ஸ்விட்ஸர்லாந்து தேசமானது, ஐரோப்பிய யூனியன் எனும் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டும் அதில் கூட உறுப்பினர் ஆகாமல், எந்த அமைப்போடும் சேராமல் காலம் காலமாகப் பிடிவாதமாக இருந்தாலும் சமீப காலங்களில், ஸ்விஸ் வங்கிகளின் மீதான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய யூனியன்களின் நெருக்கடிகள் மிகவும் அதிகரித்த சூழல்களிலும், ஐரோப்பாவில் பல தேசங்களிலும் தங்கள் குடிமக்கள் தங்களுக்கு கொடுக்க வேண்டிய வரிகளை ஏமாற்றி விட்டு, அந்தப் பணத்தை ஸ்விஸ் வங்கிகளில் போட்டுக் கொள்கிறார்கள் எனும் பரவலான புகார்கள் எழுவதை ஒட்டியும் தங்கள் நிலைப்பாடுகளிலிருந்து இறங்கி வரவேண்டியதானது.

ஒரு சந்தர்ப்பத்தில் தங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து ’ஹோல்டிங் டாக்ஸ்’  அதாவது வைப்புத் தொகைக்கு இருப்பு வரி வசூல் செய்து ஐரோபிய யூனியனின் வரி வசூல் நிலுவைத் தொகையை ஈடுகட்டியது. ஆனால் அந்த சந்தர்ப்பத்திலும் வாடிக்கையாளர்களில் ஒருவரின் பெயரைக் கூட வெளியிடவில்லை.  

உலகில் பிரபலமான ஒரு பயங்கரவாத இயக்கத்தின் ஸ்விஸ் வங்கிக் கணக்கிற்கான உறுதியான சான்றுகள் கிடைத்தவுடனேயே புலனாய்வுத் துறையினருடன் ஸ்விஸ் வங்கிகள் அனைத்தும் ஒத்துழைத்து அதில் தொடர்புள்ள கணக்குகளையெல்லாம் முடக்கினார்கள். இந்த நடவடிக்கையில் பல மேற்கத்திய நாடுகளின் பாராட்டையும் ஸ்விஸ் வங்கிகள் பெற்றன.

இன்னொரு பக்கம் உலகிலேயே மிகப் பெரிய வங்கிகளுள் ஒன்றென மிகப் பிரபலமான ஒரு ஸ்விஸ் வங்கியின் ஒரு ஊழியர் ஒரு நாள் மாலை வழக்கம்போலவே வங்கியை விட்டு வெளியே வந்தவர், வீட்டுக்குப் போகாமல், உடனடியாக ஒரு விமானத்தைப் பிடித்து, நேராக அமெரிக்காவிற்குச் சென்று அந்த வங்கி புரியும் பல்வேறு தகிடுதத்தங்களையும் அம்பலப்படுத்தி பற்பல விவரங்களையும் தகுந்த ஆதாரங்களுடன் கொடுத்தார். 

பல அமெரிக்கர்கள் தங்கள் தேசத்தில் வரி ஏய்ப்பின் மூலமாக ஸ்விஸ் வங்கிகளில் பெருமளவு சொத்து சேர்த்ததையும், அதற்கு அவ்வங்கி உடந்தையாக இருந்ததையும், அமெரிக்க அரசாங்கத்திற்கு பல பில்லியன் டாலர்கள் வரி இழப்பு ஆனதையும் இவ்விஷயம் வெளிக் கொணர்ந்தது.
          
’எதடா வாய்ப்புக் கிடைக்கும்’, என்று ஆலாய்ப் பறந்து கொண்டிருந்தவர்களுக்கு லட்டு மாதிரி இந்த விஷயம் கையில் கிடைத்தவுடன், அமெரிக்க அரசு ஏதோ ஒரு அமைப்பின் மூலமாக அந்த ஊழியருக்கு ஒரு பெரும் தொகையைப் பரிசாகக் கொடுத்துவிட்டு, விஷயத்தை ஒரே பிடியாகப் பிடித்துக் கொண்டு அந்த வங்கியை உண்டு இல்லை என உலுக்கலானது. 

அந்த ஊழியரின் மேலதிகாரியின் மேல் வழக்கு தொடர்ந்தது. சம்பந்தப்பட்ட ஸ்விஸ் வங்கியோ, வங்கிக்கும் தகிடு தத்தங்களுக்கும் சம்பந்தமேயில்லை என்பதுபோல் அந்த அதிகாரியை வங்கியை விட்டு வெளியேற்றியது. விவகாரம் மேலும் சிக்கலாகவே வழக்கைப் பொறுத்தவரை அந்த அதிகாரியை மாட்டிவிட்டு, தான் ஒரு பெரும் பணத்தை அபராதமாகக் கட்டிவிட்டு ஒரு வழியாக சிக்கலைத் தீர்த்துக் கொண்டது.  

இந்த வழக்கை ஒட்டிய அமெரிக்க நீதி இலாகா வெளியிட்ட அறிக்கையில் இந்த அபராதத்தைத் தவிர, இந்த விவகாரத்தை ஒட்டிய அனைத்து கணக்கு விவரங்களையும் அந்த வங்கி கொடுக்க இசைந்ததாகக் கூறப்பட்டது. கொடுத்ததா இல்லையா என்று தெரியாது.
   
அந்த வங்கியைப் பொறுத்தவரை சிக்கல் தீர்ந்தது போல் இருந்தாலும் அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் இதை மேலும் மேலும் கிளறலாயின. கணக்கு விவரங்களைக் கொடுக்கவேண்டும் என ஸ்விஸ் வங்கிகளின் மீதான நிர்ப்பந்தங்களும் அதிகரிக்கலாயின. 
       
இதையெல்லாம் ஒட்டி கணக்கு விவரங்களின் தகவல்களைத் தொடர்புகொள்ள மட்டும், ஸ்விஸ் ஐக்கிய வங்கிக் கமிஷன் எனும் அமைப்பு சமீப காலங்களில் ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் சில நிபந்தனைகளைப் போட்டது. அந்த நிபந்தனைகளுக்கு எழுத்துப் பூர்வமாக ஒப்புக் கொண்டு ஒப்பந்தம் போட்டால்தான் ஒத்துழைக்க முடியும் என்றது. 

வேறு வழிகள் எதுவும் புரியாத நிலையில், அரசாங்கங்களும் எப்படியாவது கணக்கு விவரங்கள் ஏதோ ஒரு வகையில் கிடைத்தால் போதும், நிபந்தனைகளுக்கெல்லாம் ஒப்புக் கொள்கிறோம், என்று உடனடியாகக் கையெழுத்துப்போட பேனாவின் மூடிகளைத் திறந்து கொண்டார்கள்.  

கொடுக்கப்படும் கணக்கு விவரங்கள், சம்பந்தப்பட்ட வங்கியின் அல்லது அதிகார பூர்வமான இடைப்பட்ட நிதி நிறுவனத்தின் நேரடி மேற்பார்வையில் குறிப்பிட்ட விவகாரத்திற்கு மட்டுமே மிக ரகசியமாகக் கையாளப்பட வேண்டுமே அன்றி, வேறு எந்த வகையிலும் எந்த தனிப்பட்ட நோக்கத்திற்காகவும் உபயோகித்துக் கொள்ளக் கூடாது. முக்கியமாக வருமான வரி இலாகாவுக்கு இந்த விவரங்களைக் கொடுக்கக் கூடாது.

எந்த அமைப்பு இந்த விவரங்களைக் கோருகிறதோ அந்த, முறைப்படி அங்கீகரிக்கப்பட்ட அமைப்பானது, இத்தகைய விவரங்களின் ரகசியத் தன்மையைக் காப்பதற்கு அதிகார பூர்வமாகவும் தனிப்பட்ட முறையிலும் முழுப் பொறுப்பாகும்.                                  

ஸ்விஸ் ஐக்கிய வங்கிக் கமிஷனுடன் முன்கூட்டியே ஒப்பந்தம் போடாமலும், இதைக் குறித்ததான சர்வதேச ஒப்பந்தப்படி சர்வதேச அமைப்புகளின் முறையான அதிகார பூர்வ அனுமதி இல்லாமலும், இவ்வாறு விவரங்களைக் கோரும் அதிகார பூர்வ அமைப்பானது தன்னைத்தவிர வேறு எந்த ஒரு அதிகார பூர்வமான அமைப்புடனோ, அல்லது இதை மேற்பார்வையிடும் அமைப்புடனோ அல்லது எந்தவொரு பொது ஸ்தாபனத்துடனோ  இவ்விவரங்களைப் பகிர்ந்து கொள்ளக் கூடாது.

பல அரசாங்கங்கள், ‘இது வீண் வேலை’ என்று ஸ்விஸ் மூட்டையைத் தூக்கி மீண்டும் பரண்மேல் போடலானார்கள். ஸ்விஸ் வங்கிகளோடு சம்பந்தம் வைத்திருக்கும் அரசியல்வாதிகள் கணக்கே கேட்க மாட்டர்கள். அவ்வாறன்றி முனைந்து கணக்கு கேட்பவர்கள் முதலில் ஒப்பந்தங்கள் போட்டால்தான் விவரம் கிடைக்கும். அவ்விவரங்களைப் பகிரங்கப் படுத்தினால்தான் ஏதாவது அரசியல் ஆதாயம் கிடைக்கும். அல்லது பிற இலாகாக்களோடு பகிர்ந்து கொண்டு ஏதாவது விசாரணையில் இறங்கினால்தான் குற்றம் ஏதாவது நடந்ததா இல்லையா என்றே கண்டு பிடிக்க முடியும். 

இந்நிலையில் ஒப்பந்தம் போடுவது மட்டுமல்ல விவரங்களை வைத்துக் கொண்டும் என்னதான் செய்வதென்றே பலருக்கும் புரியவில்லை. அதுவும் பல கோரிக்கைகளைப் பொறுத்தவரை பெயரும் பிறந்த தேதியும் தவிர வேறு எந்த விவரமும் கொடுக்க மாட்டோம் என்றும் ஸ்விஸ் வங்கிகள் கூறிவிட்டன.

ஆனால் அமெரிக்க அரசாங்கம் தளரவில்லை. பல கட்டங்களில் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி மேலே கண்ட சங்கதிகளுடன் இன்னும் சில சங்கதிகளைச் சேர்த்து சமீபத்தில் ஒரு ஒப்பந்தம் போட்டிருக்கிறது.

அதன்படி ஒரு நபர் வரி மோசடி செய்திருக்கிறார் என்று தகுந்த சான்றுகளுடன் உறுதியான சந்தேகம் ஏற்பட்டால் அந்த நபரின் கணக்கு விவரங்களை ஸ்விஸ் வங்கிகள் பகிர்ந்து கொள்ள வேண்டும். 

அத்தகைய சந்தேகமானது, முதலாவதாக, அந்த நபரின் தொழிலில் பராமரிக்கப்படும் தஸ்தாவேஜுகளாகவோ, அல்லது கணக்கு புத்தகங்களாகவோ அல்லது வங்கிக் கணக்குகளாகவோ அல்லது இவை எல்லாமோ அல்லது இவையன்றி வேறு ஒன்றின் மூலமாகவோ இருக்கலாம். இரண்டாவதாக அந்த நபரே சுயமாகக் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் இருக்கலாம். மூன்றாவதாக அவருடன் தொடர்பு கொண்ட, அல்லது மிகமிக நம்பிக்கைக்குகந்த ஒரு மூன்றாம் நபரிடமிருந்து பெற்ற செய்திகள் மூலம் இருக்கலாம். நான்காவதாக சூழ்நிலை சாட்சியங்களின் மூலம் அமையலாம். 

இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ‘கிரெடிட் கார்டுகள்’ ’இன்டர்நெட்’ பரிமாற்றங்கள் முதலான அனைத்து வழிகள் மூலமும் அமெரிக்கப் புலனாய்வுத் துறையானது, ஏதாவது தடயம் கிடைக்காதா என்று, ஸ்விஸ் வங்கித் தொடர்புகளை வலை வீசித் தேடலானது. 

ஐரோப்பிய யூனியனும் தன் பங்குக்கு ஒரு ஒப்பந்தம் போட்டிருக்கிறது. அதன் படி 2018 ஆம் ஆண்டு முதல் ஸ்விஸ் வங்கிகள், வரி விஷயங்களில் ஐரோப்பிய நாடுகளைச் சார்ந்தவர்களின் கணக்குகளை மட்டும் பகிர்ந்து கொள்வது என்று பரஸ்பரம் ஒப்புக் கொண்டுள்ளன என்று கூறப்படுகிறது. ஷரத்துகள் எல்லாம் தெரியாது.

சீனா, ரஷ்யா, ஜப்பான் முதற்கொண்டு வேறு எந்த தேசமாவது ஏதாவது ஒப்பந்தம் போட்டிருக்கின்றனவா என்றெல்லாம் தெரியாது. ஸ்விஸ் வங்கிகள் இதுவரை எவ்வளவு பேரின் விவரங்களைக் கொடுத்திருக்கின்றன என்பது தெரியாது. மேலும் ஸ்விஸ் வங்கிகள், ஒப்பந்தங்களின்படி உண்மையாகவே விவரங்களைக் கொடுக்குமா என்பது தெரியாது. 

அவ்வாறு கொடுத்தாலும் உடனே சம்பந்தப்பட்ட தேசங்கள் அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்து தங்கள் தங்கள் தேசங்களுக்குக் கொண்டுவர முடியுமா என்பது தெரியாது.

முதலில் அப்படிப்பட்ட நபர்கள், தங்கள் பெயர்களை வங்கிகள் அரசாங்கங்களிடம் கொடுத்து, அரசாங்கங்கள் தங்களைக் குற்றவாளிகள் என நிரூபித்து அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்யும் வரை, தங்கள் பணத்தைத் தங்கள் கணக்கில் பத்திரமாக வைத்துக் கொண்டிருப்பார்களா அல்லது வேறு வங்கிகளுக்கு மாற்றம் செய்து விடுவார்களா என்பது தெரியாது. 

ஸ்விஸ் வங்கிக் கூட்டமைப்பு ஒவ்வொரு ஒப்பந்தத்திலும், எங்கள் ‘பாராளுமன்றத்தின் ஒப்புதல் இருந்தால்’ எனும் வார்த்தைகளை சேர்த்துக் கொள்கிறது என்றும் கூறப்படுகிறது.

இதற்கெல்லாம் ஸ்விட்ஸர்லாந்து பாராளுமன்றமும், ‘விவரங்களைக் கொடுப்பது கிரிமினல் குற்றம்’ என இதற்கு முன் போட்ட சட்டப்படி என்ன செய்யும் என்பது தெரியாது.

இந்தநிலையில் ஸ்விஸ் வங்கிகளின் பெயரெல்லாம் மிகவும் கெட்டுப் போனதாலும், வாடிக்கையாளர்களின் ரகசியங்களை யெல்லாம் முன்போல் காப்பாற்ற மாட்டார்கள் எனும் சந்தேகம் ஏற்பட்டும், ஒருவேளை அதில் பணம் போட்ட அத்தனை பேரும், ‘இந்தக்கணம் எங்கள் பணத்தையெல்லாம் திருப்பிக் கொடுத்தால்தான் ஆயிற்று’ என்று ஒரே சமயத்தில் போய்க் கேட்டால் ஸ்விஸ் வங்கிகளால் நாற்பது சதவீதம்தான் திருப்பிக்கொடுக்க முடியும்.

இதேபோல் அமெரிக்காவிலிருக்கும் ஏதோ ஒரு வங்கியில் கேட்டால், பத்து சதவீதம்தான் திருப்பிக் கொடுக்க முடியும். நம்மூர் வங்கியில் கேட்டால் ஐந்து சதவீதம் தான் திருப்பிக் கொடுக்க முடியும். அதுகூட எந்த வடிவத்தில் கொடுப்பார்கள் என்றெல்லாம் யாருக்கும் தெரியாது. அந்த வங்கிகளுக்கே தெரியாது. 

அவர்களுக்கு சாதாரண நடைமுறைகள்தான் தெரியும். அன்றாட வழக்கப்படி, ஏதோ அரசாங்கமும், ரிஸர்வ் வங்கியும் நோட்டு அச்சடித்துக் கொடுத்தால், தேசமே என்று பொதுமக்களிடம் சொத்துக்களை எழுதி வாங்கிக் கொண்டு, கடன் கொடுத்து விட்டு, வீட்டுக்குப் போய் திருவாசகம் படித்துவிட்டு, இரவில் தோசை சாப்பிட்டு விட்டு படுத்துக் கொள்வார்கள். 

அவர்களிடம் போய் உலகப் பொருளாதாரம், பின்ன வங்கி முறை, உலக வங்கிகள் எல்லாம் சொத்துக்களை எழுதி வாங்கிக் கொண்டு அச்சடித்த வெற்றுக் காகிதங்களைத் தான் கொடுக்கின்றன என்றெல்லாம் ஏதேதோ சொன்னால் திருதிரு என்று விழிப்பார்கள்.     

ஸ்விஸ் வங்கிகளில் பணம் போட்ட கனவான்களெல்லாம் அந்தப் பணத்தை சிங்கப்பூர் போன்ற வரியில்லா தேசங்களுக்கு மாற்றி கொண்டு வெளிநாட்டு முதலீடுகள் எனும் பெயரில் சர்வ சுதந்திரமாக எந்த வளரும் நாடுகளிலும் முதலீடு செய்யும் நடைமுறைகளும் இல்லாமல் இல்லை. தேசபக்தி, நாட்டுப் பற்றெல்லாம் சாதாரண மக்களுக்குத்தான்.

‘இந்த தேசத்திற்கு நான் சொந்தம், அந்த தேசத்திற்கு அவர் சொந்தம்’ என்றெல்லாம் கூறலாம். பணம் படைத்த பெரு முதலாளிகளுக்கெல்லாம் தேசமாவது பக்தியாவது, ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ தான். இவ்வுலகின் தேசங்களெல்லாம் அவர்களுக்குத்தான் சொந்தம்.       

ஸ்விட்ஸர்லாந்து தேசத்தைப் போலவே பனாமா, சிங்கப்பூர், அங்குவில்லா, பஹாமாஸ் போன்ற வேறு சில தேசங்களில் இருக்கும் சில வங்கிகளும் பல அரசாங்கங்களின் நல்லாசிகளுடனும், ஆதரவுடனும் இதேபோல் ரகசிய கணக்குகளை வைத்துக் கொள்ளுங்கள் என வாடிக்கையாளர்களை வரவேற்று சமீப காலங்களில் ஸ்விஸ் வங்கிகளுக்குப் போட்டியாக செயல்பட ஆரம்பித்துள்ளன. 

ஆனால் ஸ்விஸ் வங்கிகள் அளவுக்கு இவைகளிடம் கட்டுக் கோப்பான சட்டமெல்லாம் இருப்பதுபோல் தெரியவில்லை.

இதன் இறுதிப்பகுதி தொடரும்
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)