No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Thursday, December 8, 2016

உலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 3
இந்நிலையில், பரவலான கடும் ஏழ்மை, பஞ்சம், வறட்சி, விவசாயத்தில் பெரும் நிச்சயமில்லாத் தன்மைகள், அதிகரித்து வரும் சுற்றுச் சூழல் கேடுகள், நிலத்தடி நீரும் ஆறுகளும் வறண்டும், சாக்கடையாகியும் போதல், இயற்கை பெருமளவில் பாதிக்கப் படுதல், உணவு தானியத் தட்டுப்பாடு, மின்சாரத் தட்டுப்பாடு, கல்வி, வேலை, சிறு தொழில்கள் போன்ற அனைத்திலும் நிலவும் பல்வேறு முரண்பாடுகள், மேலும் சிக்கல்கள், வங்கிகள், பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கங்கள் போன்ற பல்வேறு அடிப்படையான பிரச்சினைகளையும் ஒரு மூலைக்குத் தள்ளிவிட்டு, இந்தியாவின் தற்போதைய தலையாய பிரச்சனை போன்று ஸ்விஸ் வங்கிகளில் இருக்கும் இந்தியப் பணத்தைக் கொண்டுவருவதைக் குறித்துதான் பரவலாக விவாதிக்கப் படுகிறது. இந்நிலையில் அவ்வாறான சட்டபூர்வ நடவடிக்கை களைக் குறித்தும் சுருக்கமாகப் பார்ப்போம்.

கடிகாரங்கள், மருந்துப் பொருட்கள், ரசாயனப் பொருட்கள், இசைக் கருவிகள் முதலான பல்வேறு தொழில்களிலும் ஸ்விட்ஸர்லாந்து மக்கள் முன்னணியில் இருக்கும் நிலைகளில், உலகில் பல வளர்ந்த நாடுகளின் பட்டியலிலும், மக்கள் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் நாடுகளின் பட்டியலிலும் அவ்வரசாங்கம் முன்னணியில் இருக்கிறது. 

அதைச் சுற்றியிருக்கும் அனைத்து ஐரோப்பிய தேசங்களிலும் எத்தனைக் களேபரங்கள் நடந்தாலும், எதிலும் தலையிடாமல், யாரிடமும் வம்புக்குப் போகாமல் தன் நடுநிலைக் கொள்கைகளில் மிக உறுதியாக இருக்கும் போக்கினால் உலகின் அனைத்து அரசாங்கங்களும் அந்தக் கொள்கைக்கும், அத்தேசத்திற்கும் மிகுந்த மரியாதையும், கௌரவமும் கொடுக்கலாயின. 

போர்வெறி பிடித்த நாஜிக்கள் கூட ஸ்விஸ் வங்கிகளைத்தான் சீண்டிக் கொண்டிருந்தார்களே தவிர ஸ்விட்ஸர்லாந்து அரசாங்கத்தை எந்தத் தொந்தரவும் செய்யவில்லை. 

உலகிலேயே ஸ்விட்ஸர்லாந்து தேசத்தில்தான் ராணுவ செலவுகளைக் காட்டிலும் மக்கள் நலனுக்கு முதலிடம் கொடுக்கும் நடைமுறை இருக்கிறது. சொந்தமாக அணுகுண்டு தயார் செய்து கொள்ள வேண்டும் எனும் கோரிக்கை எழுந்தவுடன் அதை நன்கு பரிசீலித்து, அணு ஆயுதத்திற்கு செய்யும் வீண் செலவுகளை விட மக்களுக்கென ஆக்கபூர்வமாக அத்தொகையை செலவிடுவதுதான் சரி என்று அணு ஆயுதம் செய்ய வேண்டும் எனும் தீர்மானத்தையே நிராகரித்தது. 

கல்வி, முறையான அறிவியல் ஆராய்ச்சி, தத்துவ ஆராய்ச்சி, தொழில் நுட்ப ஊக்குவிப்பு, உற்பத்தி ஊக்குவிப்பு, விவசாயம், மருத்துவ வசதிகள், சுற்றுலா, பொழுதுபோக்கு, விளையாட்டு, பலவகையான சமூக நலத்திட்டங்கள் போன்ற பல்வேறு அம்சங்களிலும் மிக நிறைவாகவும், திட்டமிட்டும் செலவு செய்து தன் குடிமக்களின் நலன்களில் முழு அக்கறை கொள்வது மட்டுமின்றி பல்வேறு அண்டை நாடுகளுக்கும் பலவகையான உதவிகளை ஸ்விட்ஸர்லாந்து தொடர்ந்து செய்து வருகிறது. 

இரண்டாம் உலகப் போருக்குப்பின் சிதிலமான ஜெர்மனியை சீரமைப்பதற்காகப் போடப்பட்ட ‘மார்ஷல் திட்ட’த்திலும் ஸ்விட்ஸர்லாந்து அரசாங்கம் முக்கிய பங்காற்றியது. 

நன்கு சீரமைக்கப்பட்ட, முறையான நேரடி ஜனநாயகம் நடைமுறையில் இருக்கும் ஸ்விட்ஸர்லாந்து தேசத்தில் அரசாங்கம் எந்த ஒரு சட்டம் போட்டாலும் அதை அனைத்து மக்களும் முழுமையாக அங்கீகரிக்க வேண்டும் எனும் நடைமுறையும் இருக்கிறது. அரசாங்கம் ஒரு சட்டம் போட்டால் பொது மக்கள் மூன்று நான்கு மாதத்திற்குள், ஐம்பதாயிரம் பேரிடம் கையெழுத்து வாங்கி, அந்த சட்டத்தைக் குறை கூறலாம். உடனே அந்த சட்டம் பொது மக்களிடம் பொது வாக்கெடுப்புக்காக வைக்கப்படும். 

மக்களில் பெருவாரியானவர்கள் ஆதரவாக ஓட்டு போட்டால் மட்டுமே அந்த சட்டம் அமலுக்கு வரும் இல்லையெனில் உடனடியாக நிராகரிக்கப்படும். இவ்வகையில் அத்தேசத்தில் பெரும் பாலானோருக்கு தங்கள் தேசத்து சட்டங்கள் மட்டுமின்றி உலகில் பல்வேறு தேசங்களின் பொதுவான சட்டங்களைப் பற்றியும் புரிதல் உண்டு. 

எல்லாவற்றுக்கும் மேலாக, நமது ரிஸர்வ் வங்கியைப் போன்ற, ஸ்விட்ஸர்லாந்தின் தேசிய மத்திய வங்கியானது தேசிய வங்கிக் கமிஷனின் மேற்பார்வையுடன், ‘கேன்ட்டான்’ எனப்படும் மாநிலங்களாலும், பொதுமக்களாலும் நிர்வகிக்கப்படுகிறதே அன்றி மத்திய அரசாங்கம் தலையிடுவது கிடையாது. 

உலகிலேயே ஸ்விட்ஸர்லாந்து தேசத்தில்தான் அரசாங்கம் மக்களிடமிருந்து பெறும் வரியின் விகிதம் மிக மிகக் குறைவு. அதே போன்று உலகிலேயே ஸ்விஸ் வங்கிகளில்தான் ‘ஃபிராக்ஷனல் பாங்க்கிங்’ எனப்படும் பின்ன வங்கி விகிதாசாரம், அதாவது பரிவர்த்தனைக்கான வங்கிகளின் கையிருப்புத் தொகை மிக மிக அதிகம்.                 

ஒவ்வொரு தனிமனிதனின் தனிப்பட்ட விவகாரங்களும் அவர்களின் தனிப்பட்ட ஜனநாயக உரிமை என்பதை உலகில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் ஸ்விட்ஸர்லாந்து அரசாங்கம், உலகெங்கும் அரசாங்கங்களிடையே, ஸ்விஸ் வங்கிகளின் நோக்கத்தைக் கடுமையாக எதிர்த்து கடும் விமர்சனங்கள் பெருகி, -‘உலகக் கொள்ளையர்களுக்கெல்லாம் ஸ்விட்ஸர்லாந்து ஒரு குகை போன்று இருக்கிறது’- என்றெல்லாம் நிர்ப்பந்தங்கள் அதிகரிக்கவே, தன் ஜனநாயக வழக்கப்படி, ‘வங்கிகள் வாடிக்கையாளர்களின் ரகசியத்தைப் பாதுகாப்பது’ எனும் வங்கிச் சட்டத்தையும், ‘பொது மக்கள் ஆதரித்தால் சட்டம் தொடரும், இல்லையெனில் தள்ளுபடியாகும்’ எனத் தீர்மானம் இயற்றி, பொது மக்களிடையே பொது வாக்கெடுப்புக்காக முன்வைத்தது. 

ஸ்விஸ் வங்கிகள் மட்டுமல்லாது, அதன் பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாது, உலகமே பரபரப்புடன், கைவிரல் நகங்களைக் கடித்துக் கொண்டு, அந்த வாக்கெடுப்பைக் கவனித்தன. வாக்கெடுப்பின் இறுதியில், ‘ஸ்விஸ் வங்கிகள் ரகசியங்களைப் பாதுகாப்பது சரியானதே’ என்று பொது மக்கள் ஏகோபித்துப் பெருவாரியான வாக்களிக்கவே ஸ்விட்ஸர்லாந்து அரசாங்கமும் அந்தச் சட்டத்தைக் கைவிடும் உத்தேசத்தைக் கைவிட்டது.

பெருவாரியான அரசாங்கங்களின் அதிகாரிகளும் ஸ்விஸ் வங்கிகளிடமிருந்து தங்களுக்கு தேவைப்படும் கணக்கு விவரங்களைக் கொண்டு வந்தே தீருவது என்று, ஒருவருக்கொருவர் மணிக்கட்டில் கங்கணம் கட்டி விட்டுக்கொண்டு, ஸ்விட்ஸர் லாந்திற்கு விரையும் இன்றைய நிலைகளில் அதை ஒட்டிய சட்டங்களைப் பற்றியும் கொஞ்சம் பார்க்க வேண்டியதாகிறது.    

ஒவ்வொரு அரசாங்கத்தின் வேறுபட்ட சட்ட திட்டங்களுக்கு உட்படாத, அவ்வாறான அரசாங்கங்களைப் பொறுத்தவரை சட்ட விரோதமான பணங்களும், வரிகளை ஏமாற்றிய பணங்களும் தங்கள் வங்கிகளில் குவிய ஆரம்பிக்கும் என்பதை முன்பேயே உணர்ந்த ஸ்விஸ் வங்கிகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, தனித்தனியாக இயங்கும் வங்கிகளெல்லாம் சேர்ந்து ஸ்விஸ் வங்கிகளின் கூட்டமைப்பாகச் செயல்பட ஆரம்பித்தன. 

அவ்வாறான கூட்டமைப்பின் மூலம் வங்கிகள், வாடிக்கையாளர்கள், அவர்களின் விவரங்கள் தொடர்பான சட்ட திட்டங்களை வரையறை செய்து கொண்டன.

‘ட்ரக் ட்ராஃபிக்கிங்’ எனப்படும் போதைப் பொருள் கடத்தல், ‘ஆர்கனைஸ்டு கிரைம்’ எனப்படும் திட்டமிட்டு, நிர்வகிக்கப்படும் கிரிமினல் குற்றங்கள் (பெரும்பாலும் சினிமாக்களில் காட்டுவது போல் நிரந்தரமாக அடியாட்களையெல்லாம் வைத்துக் கொண்டு, ஆள்கடத்துவது, பயமுறுத்திப் பணம் பறிப்பது, பாதுகாப்புக் கொடுப்பதாகச் சொல்லிப் பணம் பிடுங்குவது, ‘பிளாக் மெய்ல்’ செய்து தீய காரியங்கள் நிறைவேற்றிக் கொள்வது போன்றவை) ‘இன்ஸைடர் டிரேடிங்’ எனப்படும் ‘உள்குத்து அடிப்பது’ (ஒரு பொது நிறுவனத்தின் உள் ரகசியங்களைத் தெரிந்து கொண்டு அந்த விவரங்களின் மூலம் அதன் பங்குகளின் சந்தைப் போக்கைக் கணித்து சுய லாபத்துக்காக வர்த்தகம் செய்வது; இது அந்தப் பங்குகளோடு சம்பந்தப்பட்ட பொதுமக்களைப் பெருமளவில் ஏமாற்றும் செயலாகும்) ஆகிய காரியங்கள் ஸ்விஸ் வங்கிகளைப் பொறுத்தவரை பெரும் கிரிமினல் குற்றங்கள். இந்தக் காரியங்களில் ஈடுபட்டவர்களை ஸ்விஸ் வங்கிகள் ஒருபோதும் வாடிக்கையாளர்களாகக் கொள்ளாது.  

பணம் போட்டுப் புதிதாகக் கணக்குத் தொடங்கும் எவரும் தங்களுக்கு அந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்பதைத் தகுந்த ஆதாரங்களுடன் கொடுக்க வேண்டும்.

யாருடைய கணக்கு விவரங்களையும் யார் நிர்ப்பந்த்தித்தாலும், அது ஸ்விட்ஸர்லாந்து அரசாங்கமேயானாலும் கூட, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் அதிகாரபூர்வ ஒப்புதல் இல்லாமல் தரப்பட மாட்டாது. 

இதன்படி எந்தவொரு ஸ்விஸ் வங்கி நிர்வாகமோ, அல்லது அதன் எந்தவொரு ஊழியரோ, அல்லது அந்த வங்கியோடு தொடர்புடைய எந்தவொரு வழக்காளரோ, அல்லது தணிக்கை யாளரோ, அல்லது அவர் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஊழியர்களோ, யாராயினும், எந்தவொரு கணக்குடன் தொடர்புடைய வாடிக்கையாளரின் அதிகார பூர்வ ஒப்புதல் இன்றி அவரின் ரகசிய விவரங்களை வெளியிடுவது என்பது கிரிமினல் குற்றமாகும். 

வாரிசு, விவாகரத்து, ஆகிய சிவில் வழக்குகளுக்குத் தேவைப்பட்டாலும்; ஒருவர் திவாலாகிப் போனால் அவர் கடன்களை வசூல் செய்யும் நோக்கத்திலும்; ஆகிய சில குறிப்பிட்ட வழக்கு விவகாரங்களில் மட்டும் விவகாரங்களின் தன்மையைப் பரிசீலித்துக் கணக்குகளைப் பார்வையிட அனுமதிக்கப்படும்.

அதே சமயத்தில் ஒரு வாடிக்கையாளர் கிரிமினல் குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டால் உடனடியாக அவரது கணக்கு விவரங்களானது அதைக் கோரும் தகுந்த அதிகார பூர்வமான நபர்களிடம் மட்டுமே ஒப்படைக்கப்படும்.

இதைக் கேட்டு உடனே சந்தோஷமான ஏனைய அரசாங்கங்களின் முன்னால், கூடவே மூன்று சங்கதிகளையும் ஸ்விஸ் வங்கிகளின் கூட்டமைப்பு போட்டது. 

முதலாவதாக ‘ப்ரொபோர்ஷனாலிடி’ எனப்படும் ‘குற்றத்தின் தீவிர அம்சம்’ என்பதின் மூலம் தங்களிடம் ஒத்துழைப்பு கோரிய அதிகார பூர்வ நிறுவனங்களுக்கு, தாங்கள் அளிக்கும் ஒத்துழைப்பானது, அந்தக் கிரிமினல் குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்துதான் அமையும்.          

இரண்டாவதாக, ‘ஸ்பெஷாலிடி’ எனும் சிறப்புத்தன்மை அம்சத்தின் மூலம், தரப்படும் அந்த விவரங்களை அந்தக் குறிப்பிட்டக் கிரிமினல் நடைமுறைகளுக்கு மட்டும்தான் பயன் படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தக் கூடாது.

மூன்றாவதாக, ஏதாவது ஒரு ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒரு வெளிநாட்டு வாடிக்கையாளர், ஒரு கிரிமினல் குற்றவாளி என, அவர் சார்ந்த தேசத்தின் நீதிமன்றங்களில் நிரூபணம் ஆனால் மட்டும் போதாது. ஸ்விட்ஸர்லாந்து தேசத்தின் நீதிமன்றத்திலும் நிரூபணமாக வேண்டும். 

இவ்வாறாக ‘ட்யூவல் கிரிமினாலிடி’ எனப்படும், ‘குற்றத்தின் இரட்டை நிரூபண அம்சம்’ திருப்திகரமாக இருந்தால்தான் விவரங்கள் கொடுக்கப்படும். ஆகையால், விவரங்கள் கோரிய அரசாங்கங்களெல்லாம் திகைத்துப் போயின.

இதன் இன்னொரு பொருள் என்னவென்றால், பெரும்பாலான வழக்குகளில், ஒருவரின் ஸ்விஸ் வங்கிக் கணக்கு பற்றிய அதிகார பூர்வமான விவரங்கள் கிடைத்தால்தான் அவர் குற்றவாளி என நிரூபிக்க முடியும். ஆனால், அவர் குற்றவாளி என நிரூபிக்கப் பட்டால்தான் அவரது ஸ்விஸ் வங்கி கணக்கு பற்றிய அதிகார பூர்வமான விவரங்கள் கிடைக்கும்.

வங்கிக் கணக்கு விவரங்கள் கோரி ஸ்விஸ் வங்கிகளை அணுகிய அதிகாரிகளுக்கெல்லாம், இது ஒரு விக்கிரமாதித்தன் வேதாளம் போன்ற புதிர் என்பதும், கணக்கு விவரங்களைப் பொறுத்தவரை தாங்கள் ஒரு முட்டுச் சந்தில் நிற்கிறோம் என்பதும் புரிவதற்கே கொஞ்ச காலம் பிடித்தது.

மேலும், இதற்கெல்லாம் முதல் படியாக, யார்யாருக்கு ஸ்விஸ் வங்கிக் கணக்கு இருக்கிறது, என்று உறுதியாகத் தெரிந்தாக வேண்டும். அதற்கு முதலில் கண்களைக் கட்டிக்கொண்டு காட்டில் தேடியாக வேண்டும். அதாவது ஸ்விஸ் வங்கிகள் விவரங்கள் கொடுக்கவில்லை என்றால் யார் கணக்கு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே தெரியாது. 

ஆனால் கணக்கு வைத்திருப்பவர் இன்னார் என்று தெரிந்து கொண்டு அவர் கிரிமினல் குற்றவாளி என்று சான்றுகள் சேகரித்தால்தான் ஸ்விஸ் வங்கியின் ஒத்துழைப்பு கிடைக்கும்.   

மிச்ச தேசங்களெல்லாம் ஆயாசமாகி ரொம்பவும் தளர்ந்து போனாலும், அமெரிக்க அரசாங்கம் விடுவதாக இல்லை. அதன் புலனாய்வு இலாகா, அமெரிக்காவில் வரி ஏய்ப்பு செய்துவிட்டு ஸ்விஸ் வங்கிகளில் பணம் போட்ட நபர்களைக் குறித்ததான ஒரு பட்டியலைக் கையில் வைத்துக் கொண்டு, இவர்களைப் பற்றியதான விசாரணையில், ஸ்விஸ் வங்கிகள் ஒத்துழைப்புக் கொடுத்தால்தான் ஆயிற்று, என்று பலமாகப் பிடிவாதம் பிடித்தது. ‘இந்தப் பட்டியல் எவ்வாறு கிடைத்தது?’ எனும் ஸ்விஸ் வங்கிகளின் கேள்விக்கோ பதிலளிக்க முடியாமல் திரு திரு வென்று விழித்தது.

‘திருட்டுத்தனமாக எங்களிடம் இருந்து எடுக்கப்பட்ட விவரங்களுக்கெல்லாம் நாங்கள் எப்படி பொறுப்பெடுத்துக் கொண்டு ஒத்துழைக்க இயலும்?’ என்று ஸ்விஸ் வங்கிகள் கேட்கலாயின.

‘விவரங்களை, இவர்களாகவும் கொடுக்க மாட்டர்கள், குறுக்கு வழியில் எப்படியாவது அதைப் பெற்றாலும் ஒப்புக்கொள்ள மாட்டர்கள், வேறு என்னதான் செய்வது’ என்று உலகின் பல்வேறு புலனாய்வு அதிகாரிகளும் தலையைப் பிய்த்துக் கொள்ளலானார்கள்.              

புதுக் கணக்கு தொடங்கும் நபர்களுக்கு ஸ்விஸ் வங்கிகள் என்னதான் கட்டுப்பாடுகள் விதித்தாலும், நடைமுறையில் இதையெல்லாம் சுற்றி தாண்டி வங்கிக் கணக்கு எப்படி தொடங்குவது என்று பல கணக்கு வழக்கு நிறுவனங்களும் சொல்லிக் கொடுக்கலாயின. 

நம்மூர் அரசியல்வாதிகள் தேர்தல்களின் போது தேர்தல் கமிஷனிடம் சொத்துக் கணக்கு காட்டுவது போல் குன்ஸாக ஏதேதோ காகிதங்கள் தயார் செய்து ‘அப்போஸ்டில்’ எனும் முத்திரை அடித்து (நம்மூர் ’நோட்டரி பப்ளிக்’ போன்று தமாஷானது) கணக்குகள் தொடங்கிக் கொள்வது என்பது பரவலானது.

ஸ்விஸ் வங்கிகளும் லேசுப்பட்டவை அல்ல. நூற்றாண்டுகள் கணக்கில் வங்கி நிர்வாகம் செய்து, வழிவழியாக நடைமுறைகளும், நுணுக்கங்களும் சீரமைத்துக் கொண்டே வந்து, மிகுந்த அனுபவசாலிகளைக் கொண்டு, லட்சக் கணக்கானவர்களை வேலைக்கு அமர்த்தி, பெரும் கட்டுக்கோப்புடன் நிர்வாகம் செய்பவர்களுக்கு, தங்களிடம் வரும் நபர்களை ஆழம் பார்த்துத் தரம் பிரிப்பதிலும் நல்ல அனுபவம் இல்லாமல் இல்லை. 

மேலும் உலகில் எந்தக் கோடியில் இருக்கும் எந்தவொரு தேசத்தைப் பற்றியும், அரசியல் பொருளாதார, அமைதி, குழப்ப, நெருக்கடி நிலைகள் பற்றியெல்லாம் அன்றாட விஷயங்கள் வரைக்கும் விரல் நுனியில் தகவல்கள் வைத்துக் கொண்டிருக்கும் பற்பல வல்லுனர்களைத் தங்கள் சம்பளப் பட்டியலில் வைத்திருக்கும் ஸ்விஸ் வங்கிகள் தங்களிடம் வரும் நபர்களைக் குறித்தும் அவர்களின் பின்னணிகள் குறித்ததான சங்கதிகளையெல்லாம் ஒரு நொடியில் அறிந்து கொண்டுவிட முடியும். 

தங்களுக்குப் பின்னாளில் எதுவும் குடைச்சல்கள் இருக்காது என்று உறுதியானால்தான் உள்ளே விடுவார்கள். இம்மியளவு சந்தேகம் ஏற்பட்டால் கூட வாசல் வரை வந்து, ‘மிக்க நன்றி, மீண்டும் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் சந்திக்கலாம்’ என்று வழியனுப்பி வைத்து விட்டுத்தான் மறுகாரியம் பார்ப்பார்கள். 

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)