நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Sunday, December 4, 2016

உலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2
வங்கிகளுக்கும், சுற்றுலாவுக்கும் உலகப் புகழ் பெற்ற ஸ்விட்ஸர்லாந்து தேசமும் சுமார் நானூறு ஆண்டுகளாக, தானும் எந்த யுத்தமும் செய்யாமலும், எந்தப்போரிலும் கலந்து கொள்ளாமலும், இன்றுவரை முற்றிலும் சமாதான தேசமாகவே தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. 

உலகில் ஏறக்குறைய எல்லா தேசங்களும் சேர்ந்து அணிகட்டி அதிபயங்கரமாக வெட்டி மடிந்து கொண்ட முதலாம், இரண்டாம் உலக யுத்தங்களில் கூட ஸ்விட்ஸர்லாந்து நடுநிலையை வகித்ததேயன்றி, போர்க்களங்களை எட்டிக் கூடப் பார்க்கவில்லை. 

உலகில் எந்தக் கோடியில் இருப்பவரும், பற்பல நெருக்கடிக் காலங்களிலும் கூட, ஸ்விஸ் வங்கிகளை நம்பிப் பணம் போட்டதற்கு இதுவும் ஒரு காரணம். 

மேலும் பல ஆண்டுகளாக ஸ்விட்ஸர்லாந்தின் கரன்ஸியான ‘ஸ்விஸ் ஃபிரான்க்’ கின் மதிப்பு துளியும் குறையாமல் நிலையாக இருப்பதும் ஸ்விஸ் வங்கிகளின் மீதான நம்பிக்கை கூடுவதற்கு முக்கிய காரணமானது.            

முதலில் சாதாரண மக்களிலிருந்து பெரும் தனவந்தர்களும், வர்த்தகர்களும் கணக்குகள் தொடங்கிப் பெரும் ஆதரவுடன் வளர்ச்சியுற்று, ரகசிய கணக்கு முறை என்பது முதலில் ஆச்சரியமாக இருந்தாலும், பல பெரிய மனிதர்களுக்கும் பல வகைகளில் சௌகரியமாக இருக்கவே, பெரும் அரசர்களும், பல்வேறு தேசங்களின் அரசு அதிகாரிகளும், பிரமுகர்களும் தொடர்ந்து பணப் பரிவர்த்தனைகள் செய்வதன் மூலம் பெருத்த லாபம் சம்பாதித்து, பெரும் வளர்ச்சியுற்ற ஸ்விஸ் வங்கிகளின் வாடிக்கையாளர்களின் தன்மைகள் பிரான்ஸ் புரட்சிக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாக மாறலானது. 

முதலாவதாக பிரான்ஸில் மன்னர் ஆட்சியை அடியோடு கவிழ்த்து ஆரம்பித்த புரட்சியானது, சுமார் ஐம்பது ஆண்டுகளிலேயே, சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஐரோப்பிய தேசங்களில் பரவலாகி, புரட்சிகளாகவும், உள்நாட்டுப் போர்களாகவும், பெரும் கலகங்களாகவும் வெடித்து, அரசியல் ஸ்திரத்தன்மை யெல்லாம் அடிப்படையில் வெகுவாக ஆட்டம் கண்ட நிலைகளில், ஒவ்வொரு தேசத்திலும் பல்வேறுபட்ட பொருளாதார நிலைகளில் இருந்தவர்களுக்கெல்லாம் ஸ்விஸ் வங்கிகள், பெரும் பாதுகாப்பான சரணாலயமாக அமைந்தன. 

உலகில் பொதுவுடமைக் கொள்கைகள் பரவலாகி உழைப்பாளர் களெல்லாம் ஒன்று சேர்ந்து சுரண்டல், அடக்குமுறை அரசாங்கங்களுக்கு எதிராக கிளர்ச்சிகளும் புரட்சிகளும் புரிய ஆரம்பித்ததெல்லாம் இந்தக் காலக் கட்டங்களில்தான்.

ஒரு தேசத்தில் ஆட்சி பறிபோய் வேறு தேசத்தில் அடைக் கலமான அரசியல்வாதிகள், சில ஆண்டுகள் கழித்துப் புது உத்வேகத்துடன் மீண்டும் தம் தேசத்திற்கு வந்து ஆட்சியைக் கைப்பற்றியதெல்லாம் அவர்கள் தங்கள் பணத்தைப் பாதுகாப்பாக ஸ்விஸ் வங்கிகளில் சேமித்துக் கொண்டதால் தான். 

பல தேசங்களில் புரட்சிக்காரர்கள் மக்களிடமிருந்து சிறுகச் சிறுக ரகசியமாகப் பொருள் சேர்த்து திடீரென கலகம் செய்து பல கொடுங்கோலர்கள், சர்வாதிகாரிகளின் ஆட்சிகளைக் கவிழ்த்து, மக்களாட்சியை நிறுவியதும், பற்பல தேசங்களில் ஏகாதிபத்திய அரசுகளுக்கெதிராகத் துணிவுடன் போராடி சுதந்திரம் பெற்று குடியரசுகளை நிறுவியதெல்லாம் பெரும்பாலும் ஸ்விஸ் வங்கிகளின் புண்ணியத்தினால்தான். 

இவ்வாறான வரலாற்று நிகழ்வுகளால் ஸ்விஸ் வங்கிகளின், வாடிக்கையாளர்களின் ரகசியத்தைப் பாதுகாப்பது, எனும் நோக்கமானது மேலும் மேலும் உறுதிப்படலானது. 

ஆனால் இத்தனை அமர்க்களங்களிடையேயும் ஸ்விஸ் வங்கிகள் பெரும் லாபத்தையும் பார்க்கத் தவறவில்லை.

அதே காலகட்டங்களில் ஒட்டுமொத்தமாக அரசாங்கங்கள் எனும் அமைப்புகளுக்கே எதிரான கருத்துக்களும் தோன்றி மக்களிடையே வலுப்பெறலாயின. ‘அனார்க்கிஸம்’ எனப்படும் இத்தகைய கண்ணோட்டத்தை வலியுறுத்தியவர்கள், அரசாங்கம் எனும் ஓர் அமைப்பின் அடிப்படைத் தன்மையே சாமானிய மக்களை ஆட்டு மந்தைகள் மாட்டு மந்தைகள் போலாக்கி, அவர்களை நசுக்கிக்கொண்டு, ஓயாமல் அவர்களை சுரண்டிகொண்டிருக்குமே ஒழிய, எந்தவொரு அரசாங்கமும் உண்மையில் மக்கள் நலனுக்காக ஒன்றுமே செய்யாது என்றார்கள். 

‘சொத்து என்றாலே அது திருட்டுதான்’ என்று கூறிய அவர்கள், அதே சமயத்தில் மக்களெல்லாம் பாடுபட்டு சேமித்த சொத்துக்களை எல்லாம், அரசாங்கங்கள் பல்வேறு பாசாங்குக் காரணங்களைக் காட்டிக் கபளீகரம் செய்யும் போக்குகளுக்கு, தனி மனித சொத்துரிமை எனும் சுதந்திரம்தான், எதிரான சக்தியாக விளங்கி, பொது மக்களின் நலன்களுக்கான சமனிலையைக் கொண்டுவரும் என்றும் கூறினார்கள். 

தனிமனித சுதந்திரத்தைப் பேணிக்காப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு கிடுகிடுவென வளர்ச்சியுற்ற அமெரிக்காவிலும் மேலும் பல மேற்கத்திய தேசங்களிலும் இக்கருத்துகள் பெருமளவில் வரவேற்பைப் பெற்றதும் ஸ்விஸ் வங்கிகளின் நோக்கத்திற்கு மேலும் வலு சேர்த்தது. 

ஸ்விட்ஸர்லாந்து அரசாங்கமும் தன்னுடைய குடியுரிமைச் சட்டங்களின் மூலமும், தொழிலாளர் சட்டங்களின் மூலமும் ஸ்விஸ் வங்கிகளின் நோக்கத்திற்கு முழு ஆதரவும் அளிக்கலானது. எந்த வகையிலும் எந்தவொரு தனிமனிதரின் தனிப்பட்ட விவகாரங்களில் தலையிடுவதில்லை என்பது ஸ்விட்ஸர்லாந்து அரசின் முக்கியக் கொள்கையானது. 

ஸ்விட்ஸர்லாந்து சட்டங்களைப் பொறுத்தவரை ஒரு மனிதன் தன் வருமானத்தை மறைத்து வரிகளிலிருந்து ஒளிந்து கொள்வது என்பது கிரிமினல் குற்றமாகாது. தகுந்த அபராதம் கட்டினால் போதும். ஆனால் திட்டமிட்டு வரி மோசடி செய்வது என்பதுதான் குற்றமாகும். 

முதல் உலகப் போருக்குப் பிற்பட்ட காலகட்டங்களில் உலகப் பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியுற்று உலகப் பொருளாதாரம் களேபரமான சூழ்நிலையில் பற்பல தேசங்களிலிருந்தும் ஸ்விஸ் வங்கிகளின் நோக்கத்திற்கெதிரான நிர்ப்பந்தங்கள் பெருகிய நிலைகளில், அப்போதைய ஃபிரெஞ்சு அரசு, பாரிஸ் நகரிலிருந்த ஒரு ஸ்விஸ் வங்கியின் கிளையை அதிரடியாக ‘ரெய்டு’ செய்தும், சில ஊழியர்களைக் கைது செய்தும், பற்பல தஸ்தாவேஜுகளைக் கைப்பற்றியது. 

இதில் பற்பல ஊழல் சமாச்சாரங்கள் வெளிப்பட்டதாகக் கூறி மேலும் பற்பல வங்கிகளும் ரெய்டு செய்யப்பட்டன. 

இதனையொட்டி ஸ்விட்ஸர்லாந்து அரசாங்கம் தன்னுடைய 1934 ஆம் ஆண்டு வங்கிகள் வரையறுப்பு சட்டத்தின் மூலமாக ஓர் அதிரடி சட்டம் இயற்றி ஸ்விஸ் வங்கிகளின் வாடிக்கையாளர்களின் ரகசியங்களைப் பாதுகாக்கும் நோக்கத்தை முறைப்படி சட்டமாக்கியது. 

இதன்படி எந்தவொரு ஸ்விஸ் வங்கியாவது, தன் வாடிக்கை யாளரின் ஒப்புதல் இன்றி அவரின் ரகசிய விவரங்களை வெளியிடுவது என்பது கிரிமினல் குற்றமாகும். 

எந்தவொரு வாடிக்கையாளரும், அவர் அனுமதியின்றி, ஒரு வங்கி அவர் கணக்குகளை வெளியிட்டால், அந்த வங்கியின் மீது ஸ்விட்ஸர்லாந்து நீதிமன்றங்களிலேயே வழக்கு தொடர்ந்து நஷ்ட ஈடு கோரமுடியும். இது ஸ்விஸ் வங்கிகளின் நோக்கத்திற்கு மேலும் ஒரு உறுதியான கவசம் போலானது.

இரண்டாம் உலகப் போருக்கு சற்றே முந்தைய காலகட்டங்களில் ஜெர்மனியின் நாஜிக்களின் தொடர்ந்த, முரட்டுத்தனமான, கடும் நிர்ப்பந்தங்களுக்குக் கூட ஸ்விஸ் வங்கிகள் சற்றும் வளைந்து கொடுக்கவில்லை. 

சலித்து, வெறுத்து, ஆவேசமான சர்வாதிகார நாஜிக்கள், ஜெர்மானியர் எவராவது ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்துக் கொண்டிருந்தால் அது முதன்மை தண்டனைக்குரிய குற்றமாகும் என்று ஒரு சட்டமியற்றி, அதன் படி தங்கள் கொள்கைகளுக்கு ஒத்து வராதவர்களையும், தங்களுக்கு வேண்டாத பல பிரமுகர்களையும், ஸ்விஸ் வங்கிக் காரணம் காட்டியே சுட்டுக் கொன்று போட்டார்கள். 

அதேசமயத்தில் அந்த நாஜிக்களே தாங்கள் பெருமளவில் யூதர்களைக் கொன்று குவித்து அவர்களிடமிருந்து கொள்ளையடித்த செல்வத்தையெல்லாம் ஸ்விஸ் வங்கிகளில் பதுக்கிக் கொண்ட சங்கதியும், மேலும் யூதர்களே ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்து அவர்கள் இறந்து போனதால் செயலற்றுப் போன கணக்குகளும், ஜெர்மனியின் வீழ்ச்சிக்குப்பின் உலகில் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி, அதனால் ஸ்விஸ் வங்கிகளும் பெரும் சங்கடங்களுக்கு ஆளாயின. ஒரு ஸ்விஸ் வங்கிக் கிளையின் காவலாளர், ’இறந்து போனவர்களின் தஸ்தா வேஜுகளையெல்லாம் அந்த வங்கி எரித்து அழித்தது’ என்று கூறிய சாட்சியமானது, சர்ச்சைகளை மேலும் பெரிதாக்கியது. 

ஸ்விஸ் அரசாங்கம் ஒரு கமிஷனை அமைத்து அத்தனை கணக்குகளையும் ஒவ்வொன்றாகத் தேடிப்பிடித்து, பின்னாளில் கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கணக்குகளுக்குரிய வாரிசு தாரர்களையெல்லாம் தேடிப்பிடித்தும், பற்பல சேவை மற்றும் அகதிகள் முகாம்களுக்கு உதவிகள் புரிந்தும் ஒரு வகையாக அக்கணக்குகளை நேர் செய்தார்கள்.  

இரண்டாம் உலகப் போருக்குப்பின் உலகில் ஒருபக்கம் பல்வேறு தேசங்களும் ஏகாதிபத்தியங்களின் பிடியிலிருந்து விடுபட்டு ஆங்காங்கு மக்களாட்சிகள் மலர ஆரம்பிக்கும் போது இன்னொரு பக்கம் அரசியல் நிலைகள் அனைத்தும் அடிப்படையில் மாற்றம் கொள்ளலாயின. எதிரெதிர் சித்தாந்த ரீதியாகவும் எதிரெதிர் அரசியல் பொருளாதார நடைமுறை ரீதியாகவும் உலகம் இரண்டாகப் பிளவுபட்டது. 

ஒரு பக்கம் முதலாளித்துவம், தனிமனித சுதந்திரம், சுதந்திரமான வர்த்தகம் ஆகியவற்றை வலியுறுத்தும் அமெரிக்காவுக்குப் பின்னால் பல தேசங்களும், இன்னொரு பக்கம் சோஷலிஸம், மனிதர்களின் கூட்டுமுயற்சி, கட்டுக்கோப்பான வர்த்தகம் ஆகியவற்றை வலியுறுத்தும் ரஷ்ய சோவியத் யூனியனுக்குப் பின்னால் பலதேசங்களும் அணிகட்டிக் கொண்டு தங்கள் தங்கள் அரசியல் அமைப்புகளை தங்கள் தங்கள் கொள்கைகளுக்கு ஏற்றவாறு வடிவமைத்துக் கொள்ளலாயின.

பெர்லின் நகரில் ஒரு பெரிய சுவரைக் கட்டி சுவற்றுக்கு இந்தப் பக்கம் சோஷலிஸம், சுவற்றுக்கு அந்தப் பக்கம் முதலாளித்துவம் என்பதாக மேற்கண்ட விஷயத்தை ஒட்டி ஒரு உலகக் குறியீடும் அமைத்தன. 

இவ்விரண்டு எதிரெதிர் சித்தாத்தங்களைக் கொண்ட தேசங்களிலும், கொள்கை வேறுபாடுகள் இருப்பினும், நடைமுறையில், அரசுகளின் பல்வேறுவிதமான கெடுபிடிகளும், சாமானிய மக்களால் முழுவதுமாக நியாயப்படுத்திக் கொள்ள முடியாத அரசாங்க நடவடிக்கைகளும், ஜீரணித்துக் கொள்ள முடியாத அடாவடிகளும் பெருகவே, அரசுகளின் நடைமுறை களுக்கும் கொள்கை களுக்கும் எதிரான மனோபாவம் கொண்ட மக்களும் பெருகலாயினர். 

இதனுள் எவ்வளவோ சூட்சுமமான கருத்துகளும், நடைமுறை வெளிப்பாடுகளும் பொதிந்திருந்தாலும், பொதுவாகச் சொன்னால் முதலாளித்துவ தேசங்களில் பொதுவுடைமைக் கருத்துக்களைக் கொண்டவர்களும், சோஷலிஸ தேசங்களில் தனிமனித சுதந்திரத்தையும், சுதந்திர வர்த்தகத்தையும் வலியுறுத்துபவர்களும் பல்வேறு வகைகளில் பெருகலாயினர். அவர்களெல்லாம் தங்கள் தங்கள் அரசாங்கங்களின் சட்டங்களையெல்லாம் பெரிதாக மதிக்கவில்லை என்பதுடன் சட்டங்களை எதிர்ப்பவர்களும் பலரும் இருந்தார்கள். 

இதை ஒட்டி பல்வேறு அமைப்புகளும், பல்வேறு அரசியல் இயக்கங்களும் தோன்றலாயின. பல்வேறு பிரமுகர்களும் இவ்வியக்கங்களுக்கெல்லாம் ஆதரவு கொடுத்தும் பல சந்தர்ப்பங்களில் தங்களை இணைத்தும் கொண்டனர். பெரும்பாலும் அவ்வப்போதான அரசுகளுக்கெதிரான இவ்வியக்கங்களெல்லாம் தாங்கள் இயங்குவதற்கும், பற்பல வெளிதேசங்களில் தங்கள் நட்பையும் ஆதரவையும் பலப்படுத்திப் பெருக்கிக் கொள்வதற்கும் தேவையான பணப் புழக்கத்திற்கு எல்லாம் ஸ்விஸ் வங்கிகளையே நம்பியிருந்தனர்.

இதுவரை பார்த்தது ஒரு புறம். இதன் மறு புறமாக, இரண்டாம் உலகப் போருக்கு முன்னால் பலவகையான நூதன ஆயுதங்கள் அனைத்து வல்லரசுகளாலும் வேறுபாடின்றிப் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டன. பெருவாரியான மக்களின் உழைப்பாலும், -பெண்கள் கூடப் பெருமளவில் ஆயுதத் தொழிற்சாலைகளில் பணிபுரிந்தனர்-

மக்களின் பல்வேறு வகையான கடும் உழைப்பைக் கொண்டு சம்பாதித்த பெருமளவு பணத்தை செலவு செய்தும், மக்களின் பெரும் ஆக்க சக்திகளைக் கொண்டும் ஏராளமான ஆயுதங்கள் உற்பத்தி செய்து குவித்து, அத்தனையையும், தீபாவளிக்கு பட்டாசு கொளுத்துவது போல், உலகெங்கிலும் கொளுத்தித் தீர்த்தார்கள். 

தீபாவளிப் பட்டாசு கொளுத்தினால் ஏதோ அங்கொன்றும் இங்கொன்றும்தான் விபத்துகள் நிகழும். ஆனால் இவ்வரசாங்கங்கள் போரின் போது கொளுத்திப் போட்ட பட்டாசுகளில் கோடிக்கணக்கானவர்கள் மாண்டு போய், உலகில் ஐந்தில் இரண்டு பங்கு எளிய அப்பாவி மக்கள் நிர்க்கதியாகிப் போனார்கள். 

இந்தப் போரின் போது அமைதி காத்த ஸ்விட்ஸர்லாந்து அரசாங்கத்தின், ஸ்விஸ் வங்கிகள் மட்டுமே போர்க்காலங்களில் உலகின் பலவகையான பணப் பரிவர்த்தனைக்கும் பயன்பாடாக இருந்தது.  

இரண்டாம் உலகப் போருக்குப்பின்னால் ஒன்றையொன்று எதிர்த்துக் கொண்ட பெரும் ஏகாதிபத்திய அரசுகளெல்லாம் மொத்தமாகப் போண்டியாகிப் போனாலும், ஆயுதத் தொழிற் சாலைகள் எல்லாம் ஏகத்துக்கு லாபம் சம்பாதித்துக் கொழுத்துப் போயிருந்தார்கள். 

போரெல்லாம் முடிந்து போனாலும் அந்த ஆயுதத் தொழிற் சாலைகளில் பெரும்பாலானோர் முனைப்பாகத் தங்கள் உற்பத்தியைப் பெருக்கிக் கொண்டே போனார்கள். எதிரெதிர்க் கொள்கை வல்லரசுகளும் பெருமளவில் ஆயுதங்களை உற்பத்தி செய்து குவித்தார்கள். 

இந்த ஆயுதங்களை விற்க சந்தை தேவைப்பட்டது. அப்போதுதான் சுதந்திரப் போராட்டம், புரட்சியெல்லாம் செய்து விடுதலை பெற்று குடியரசுகள் ஆகி ஏதேதோ சட்ட திட்டங்களெல்லாம் போட்டுக் கொண்டு, மெது மெதுவாக கைகளை ஊன்றி எழுந்து நின்று இயங்க ஆரம்பித்த தேசங்களெல்லாம் ராணுவத்தைப் பலப்படுத்துகிறோம் எனும் நோக்கில், ஏழை எளிய ஜனங்களை எல்லாம் குறித்துப் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், பட்ஜெட்டில் பெரும்பங்கை ஒதுக்கி பெருமளவில் ஆயுதங்கள் வாங்க ஆரம்பித்தன. 

இதற்குத் தோதாக அண்டை அயல் தேசங்களிலெல்லாம் ஒருத்தரை ஒருத்தர் சீண்டி விட்டுக் கொண்டும், கொம்புகளை சீவி விட்டுக்கொண்டும், பல தேசங்களின் ஆட்சிகளைக் கலகக் காரர்களைக் கொண்டு கவிழ்ப்பதும், பொம்மை அரசுகளை நிறுவுவதுமான புண்ணிய காரியங்களையெல்லாம் வல்லரசுகள் வெகு சிரத்தையாகச் செய்து கொண்டிருந்தன. 

அவ்வாறான ஒவ்வொரு புண்ணிய காரியத்தின் போதும் ஆயுத விற்பனை கன ஜோராக நடக்கலானது. இவ்வாறான ஆயுத பேரங்களிலெல்லாம் அதிக அளவில் கமிஷன் எனும் பெயரில் பெரும் பணம் பரிவர்த்தனையாக ஆரம்பித்தது. 

பெரும்பாலான வளரும் தேசங்களின் ராணுவ மந்திரிகளிலிருந்து, காரியதரிசிகள், பெரிய ராணுவ அதிகாரிகள் வரை ஊழலில் திளைக்க ஆரம்பித்தனர். ஆயுதங்களை வைத்துக் கொண்டு போரெல்லாம் செய்யப் படையெடுத்தார்களோ இல்லையோ, அத்தனை பேரும் நேராக ஸ்விஸ் வங்கிகளுக்குத்தான் படையெடுத்தார்கள். பல்வேறு அரசாங்கங்களே ஸ்விஸ் வங்கிகளைத்தான் உபயோகித்துக் கொண்டன. 

இன்றளவும் பல ராணுவங்களும் ஊழலில் அழுகி நாற்றமெடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன என்பதை பரவலான செய்திச் சர்ச்சைகளிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.

இதனிடையில் ஒருபக்கம் சோஷலிஸ அரசாங்கங்கள் எல்லாம் கொள்கை அடிப்படையில் கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போய், கொஞ்சம் கொஞ்சமாக முதலாளித்துவத்தை ஸ்வீகரிக்க ஆரம்பித்து, ஜனநாயகம் என்றாலே முதலாளித்துவம்தான் என்று ஆகியது. 

பெர்லின் நகரின் சுவரும் பொது மக்களால் உடைத்துத் தகர்க்கப்பட்டு, சோஷலிஸமும், முதலாளித்துவமும் ஒன்றை ஒன்று ஆரத் தழுவிக் கொண்டன. 

முதலாளித்துவமும் சர்வதேச வர்த்தகங்களும் பெருகப் பெருக, ‘முதலாளித்துவ அமைப்பின் மூலம் உற்பத்தி பெருகப் பெருக கூடவே பல்வகையான குற்றங்களையும் உற்பத்தி செய்யும்’ என்று பொதுவுடைமைக் கொள்கைவாதிகள் முன்பே கணித்தது போல், சுரங்க, தனிம, கனிம தொழில்களிலிருந்து ஆரம்பித்து, நகரங்கள் நிர்மாணங்கள் முதலான இயற்கை வளங்களைக் கபளீகரம் செய்யும், மற்றும் மக்களைச் சுரண்டும் அத்தனைத் தொழில்களிலும் ஒவ்வொரு தேசத்திலும் வேறுபாடின்றி ஊழல் புகுந்து விளையாட ஆரம்பித்தது. உலகெங்கிலும் பலவகையான குற்றக், கிரிமினல் காரியங்களும் ஊற்றுப் போல் பெருகலாயின. 

நூதனத் தொழில் நுட்பங்கள் வளர வளர, கிரிமினல் காரியங்களும் நூதன வடிவங்கள் கொள்ளலாயின. ஸ்விஸ் வங்கிகளின் வாடிக்கையாளர்களும் பெருகலாயினர். ஸ்விஸ் வங்கிகளின் நிறமும் மாறலானது. 

உலக சந்தையின் நோக்கில் திட்டமிட்ட ஆட்சி மாற்றங்களும், ஆட்சிக்கவிழ்ப்புகளும், பலவிதமான நூதனப் பொருளாதாரக் கொள்ளைகளும், பயங்கரவாத ஆயுதக் கலாச்சாரங்களும் பெருகப் பெருக ஸ்விஸ் வங்கிகளும் நாற்றமெடுக்கலாயின.

சமீப காலங்களில் தாராள மயமாக்கலும், உலக மயமாக்கலும் பரவலான நிலைகளில், வளரும் நாடுகளனைத்தும் நகர வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு போன்றவைகளுக்காக வேண்டி சர்வதேச மூலதனங்களைப் பெறவும், உலக வங்கி, ஐ.எம்.எஃப். போன்ற நிறுவனங்களில் கடன் பெறவும் முயற்சிக்கும் போது ’உங்கள் ஊரில் ஊழலை முதலில் ஒழியுங்கள், அப்போதுதான் நாங்கள் முதல் போடுவோம் அல்லது கடன் கொடுப்போம்’ என்று ‘கண்டீஷன்’ போடும் நிலைகளில் உள்நாட்டு ஊழல், வெளிநாட்டு ஊழல் என்றெல்லாம் பரவலாகப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். 

இந்நாளில் ஸூரிக்கிலும், ஜெனிவாவிலுமாக நிறுவப்பட்டிருக்கும் சுமார் நூற்றைம்பதுக்கும் மேலான ஸ்விஸ் வங்கிகளில் ஏதோவொரு வகையில் கணக்கு வைத்துக் கொண்டிருக்கும் கனவான்கள் இல்லாத தேசம் ஒன்றுகூட இவ்வுலகில் இல்லை என்பதே பொதுவான கணிப்பு. 

அரசியல்வாதிகளிலிருந்து, அரசாங்க அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், பெரும் தொழில் முதலாளிகள், பொது நிறுவன அதிபர்கள், சினிமாக்காரர்கள், விளையாட்டு வீரர்கள், என எத்தனை யெத்தனையோ பேர் ஸ்விஸ் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். (இதெல்லாம் கேள்விப்படுவதுதானே தவிர உண்மையில் யார்யார் கணக்கு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது). 

ஊழல் பணம், வரி ஏய்ப்புப் பணம் போடுபவர்கள் மட்டுமில்லாமல், நேர்மையாகவே சம்பாதித்த பணத்தைப் போடுபவர்களும் இருக்கிறார்கள். பெரும் தனவந்தர்கள் மட்டுமன்றி எவ்வளவோ சாதாரண மக்களும் ஸ்விஸ் வங்கிகளின் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். ‘ஆஃப் ஷோர் ஃபண்ட்ஸ்’ எனப்படும் வெளிநாட்டு நிதிப் புழக்கத்தில் உலகின் மொத்த நிதியில் மூன்றில் ஒரு பங்கு ஸ்விஸ் வங்கிகளில்தான் புழங்கிக் கொண்டிருக்கின்றன. 

கடந்த நூறு ஆண்டுகளாகவே ஒவ்வொரு தேசத்திலும் அரசியல்வாதிகள், தேர்தல்களின் போது மட்டும் ஸ்விஸ் வங்கி விவகாரத்தைப் பரண் மேலிருந்து எடுத்து தூசு தட்டி, தங்கள் தொண்டை கிழியக் கத்து கத்து என்று கத்திவிட்டு, மக்களெல்லாம் ஆவென்று வாய்பிளந்து கேட்டுவிட்டு உடனடியாக அவர்களுக்கு ஓட்டு போட்டு, பதவிக்கு வந்தவுடன், உடனடியாக அதை மூட்டை கட்டி மீண்டும் பரண்மேல் போட்டுவிட்டு, அடுத்த தேர்தல்வரை சத்தம் கித்தம் போடாமல் பத்திரமாக வைத்துக் கொண்டிருப்பது என்பது உலகளாவிய வழக்கம்தான். 

பாவம் இந்தியாவுக்குத்தான் புதுசு! 

ஒரு பத்து இருபது வருடங்களாகத்தான் இதைப் பற்றிப் பேசுகிறார்கள். நூறாண்டுகளுக்கும் முன்பாக ’பிரிட்டிஷ்’ காலத்திலிருந்தே இந்தியர்களுக்கும் ஸ்விஸ் வங்கிக்குமான உறவு பலமானது என்று தாத்தா, பாட்டி சொல்லிக் கேட்டதுண்டு.

அடிக்கடி ஸ்விட்ஸர்லாந்துக்குப் போய் போய் வந்து கொண்டிருக்கும் ஒரு நண்பர் ஒருமுறை, ‘ஸூரிக்’ நகரிலிருக்கும் ஒரு வங்கிக்கு இந்தியாவில் எங்குமே ஒரே ஒரு கிளை கூடக் கிடையாது. 

ஆனால் அந்த ஊர் வங்கியில் இந்தியாவுக்கென்றே ஒரு பிரத்தியேக சாளரம் அமைக்கப் பெற்று சுமார் எழுபது பேர் அனுதினமும் பரபரப்பாக வேலை செய்யுமளவுக்கு இருக்கிற தென்றால், எத்தனை இந்திய வாடிக்கையாளர்கள் அந்த வங்கிக்கு இருப்பார்கள்?’ என்று கேட்டார்.


பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Follow by Email

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)