முன்பெல்லாம், ஒருவர் மீதுள்ள வழக்குகள் குறித்து நாளிதழ்களில் வரும் விளம்பரங்களை, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அஞ்சலட்டை மூலம் தெரியப்படுத்துவேன். பின்பு நேரமின்மை காரணமாக விட்டு விட்டேன்.
தகவல் தொழில் நுட்பம் வளர்ந்துள்ள காரணத்தால், அப்படி வரும் நாளிதழ் விளம்பரங்களை, சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு கொண்டு சேர்ப்பது மிகவும் எளிதாக இருக்கும்.
ஆகையால், மேற்கண்ட தலைப்பில் முகநூலில் பிரத்தியேக குழு ஒன்றை உருவாக்கி உள்ளேன். இதற்கான அவசியம் குறித்து விரிவாக அறிய, உரிமையியல் வழக்குக்களிலும் அச்சப்பட வேண்டும் என்ற கட்டுரையைப் படிக்கவும்.
மற்றவர்களின் சட்ட உரிமையை நாம் காக்க முற்படும்போது, கூடவே நம் உரிமையும் காக்கப்படும் என நம்பிக்கையில், இக்குழுவில் இணைந்து கடமையைச் செய்ய விரும்பும் தன்னார்வலர்களை வரவேற்கிறேன்.
இக்குழுவில் செய்ய வேண்டி விவர குறிப்புகள் பின்வருமாறு!
இக்குழுவிற்கு தன்னார்வலர்களை வரவேற்கிறோம்.
மற்றவர்களின் சட்ட உரிமையை, நாம் காக்கும்போது, நம் உரிமையும் காப்பாற்றப்படும் என்பதை உணர்ந்து, இக்கடமையைச் செய்ய முன்வாருங்கள்.
உரிமையியல் சார்ந்த வழக்குக்கள் (சொத்து, தொழிலாளர், விவாகரத்து, நுகர்வோர் உள்ளிட்டவை) குறித்து காலை, மாலை என தினசரி நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியாவதைப் பார்த்திருப்பீர்கள்.
இவ்விளம்பரங்கள் பல சட்டத்துக்கு விரோதமான முறையில், மற்றவர்களின் உரிமையைப் பறிப்பதற்காகவும், கூட்டுக் கொள்ளை அடிப்பதற்காகவும், நிதிபதிகளின் ஒத்துழைப்போடு பொய்யர்களால் கொடுக்கப்படுகிறது என்பது எங்களது சட்ட ஆராய்ச்சியின் முடிவு.
இப்படி கொடுக்கப்படும் விளம்பரங்கள் குறித்து, அவ்விளம்பரத்தில் வரும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு, அவர்கள் மீதான வழக்கு விபரத்தை தெரிவித்து, அவரவர்களது சட்ட உரிமையை நிலைநாட்டிக் கொள்ள உதவுவதே இக்குழுவின் பிரதான நோக்கம்.
* ஆகையால், நாளிதழில் வெளியாகும் நீதிமன்ற வழக்கு விளம்பரங்களை மட்டுமே இக்குழுவில் பதிவு செய்யவேண்டும்.
** எக்காரணங் வேறு பதிவுகளை இடக்கூடாது. அப்படி மீறி பதிவிடுபவர்கள் குழுவில் இருந்து வெளியேற்றப்படு(வா, வீ)ர்கள்.
*** ஏதோவொரு விதத்தில் இக்குழுவில் இணைந்து கடமையாற்ற முடியும் என எண்ணுகிற ஆர்வலர்கள் மட்டும் இக்குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.
ஆர்வலர்கள் செய்ய வேண்டியவை!
1. நாளிதழ்களில் வரும் வழக்கு விளம்பரங்களை அப்படியே ஒளிப்படம் எடுத்து பதிவிட வேண்டும். தட்டச்சு செய்து பதிவிடுவதை தவிர்க்கவும்.
2. சம்பந்தப்பட்டவர்கள் தெளிவாக அறிந்துக் கொள்ள ஏதுவாக நாளிதழின் பெயர், தேதி, எந்த ஊர் பதிப்பு, விளம்பரம் வெளியான பக்கம் ஆகியவற்றை, ஒவ்வொரு விளம்பரத்திலும் கொடுக்க வேண்டும்.
இது விளம்பரத்துடன் இணைந்த படமாகவோ அல்லது தனியாகப் பதிவிடும் எழுத்தாகவோ இருக்கலாம்.
வழக்கு விசாரணைக்கு வரும் தேதியை தவறாமல் குறிப்பிட வேண்டும். இது, தகவல் தர நினைப்பவர்களுக்கு வசதியாய் இருக்கும்.
3. இந்நாளிதழ் விளம்பரத்தில் காணப்படும் பெறுநர் முகவரிக்கு அருகில் வசிக்கும் ஆர்வலர்கள், இதுகுறித்த தகவலை உரிய முகவரியில் சொல்லலாம்.
4. பெறுநர் முகவரியோ அல்லது வேறு எதுவும் தவறாக இருந்தால், அதுகுறித்து அப்பதிவில் பின்னூட்டமாக தெரிவித்தால், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கையை, நாங்கள் மேற்கொள்ள முடியும்.
5. நாம் அப்பெறுநர் வசிக்கும் பகுதியில் வசிப்பவர் இல்லை என்றாலுங்கூட, நமக்கு தெரிந்த நண்பர்கள் யாராவது, அப்பகுதியில் வசிப்பவராக இருக்கும் பட்சத்தில் அவர்களிடம் விவரத்தைச் சொல்லி தகவலைத்தர முயற்சிக்கலாம்.
6. கட்செவியில் (வாட்ஸ்அப்) உள்ள ஆர்வலர்கள், இதற்கென பிரத்தியேக குழுவை ஏற்படுத்தி பகிர்வதன் மூலம், தகவல் சொல்(ல, லி) உதவலாம்.
7. நேரம் இருப்பவர்கள் இதுபற்றி அஞ்சல் அட்டை ஒன்றை, விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு எழுதிப் போட்டு உதவலாம். இதற்கான அஞ்சல் அட்டையை அல்லது அதற்கான செலவை ஏற்க நாங்கள் தயாராய் உள்ளோம்.
8. சம்பந்தப்பட்ட நபருக்கு அக்கடிதம் சேராதபோது, உங்களுக்கே திருப்பி அனுப்புவதற்காக, உங்களின் முகவரியை அஞ்சலட்டையில் பின்பக்க இடது புறத்தில் சிறப்பாக தெரியும்படி எழுத வேண்டும் அல்லது முத்திரையாகப் பதிக்க வேண்டும்.
அஞ்சலட்டையின் இருபுறமும் இருக்க வேண்டிய முக்கிய சங்கதிகள்.
அன்புடையீர் வணக்கம்.
தங்களின் மீது (அசல் வழக்கு எண் 1/2016 ) ஆனது, (சார்பு) நீதிமன்றம், (ஓசூரில்) உள்ளதாகவும், அதில் தாங்கள் (27-11-2016) அன்று முன்னிலையாக வேண்டும் என்ற நீதிமன்ற அறிவிப்பு, இன்று (10-10-2016) அன்றைய (சென்னை தினமலர்) பதிப்பில் வெளியாகி உள்ளது.
இதனை சரிபார்த்து, தங்களது சட்ட உரிமையை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும் என்கிற நல்லெண்ணத்தோடு இந்த தகவலை அனுப்பி உள்ளேன். இதற்கு உதவிகள் ஏதுவும் தேவைப்பட்டால், என்னை 09842909190 என்ற உலாப்பேசி எண்ணில் அழைக்கவும்.
குறிப்பு: அடைப்புக்குள் உள்ள சங்கதிகளை, விளம்பரத்தின்படி எழுத வேண்டும்.
இதில் ஒரு அஞ்சலட்டைக்கு 50 பைசா செலவு செய்யவேண்டும். இதனை பாதியாகக் குறைக்கவும் வழி இருக்கிறது.
ஆமாம், அஞ்சல் அட்டையில் மேகதூத் என்ற ஒருவகை அஞ்சலட்டையும் அஞ்சலகங்களில் கிடைக்கிறது. இதன் விலை பாதியாக கிடைக்க காரணம், பின்பக்க இடது புறத்தில் ஏதாவது விளம்பரங்கள் இடம் பெற்றிருக்கும்.
ஆகையால், பின்னால் எழுத வேண்டிய நம் முகவரியை முன்புறத்தில் தெளிவாக தெரியும் வண்ணம் இடம் ஒதுக்கி எழுதலாம். முகவரியை முத்திரையாக (ரப்பர் ஸ்டாம்ப்) தயார் செய்து பதிப்பது சிறந்தது.
இந்த அஞ்சலட்டைகளை நீங்கள் 50 அல்லது 100 ரூபாய்க்கு மொத்தமாக கேட்டால், அந்த அஞ்சலகத்தில் இல்லை என்றாலுங்கூட, தருவித்து தருவார்கள். இப்படி உங்களுக்கு தேவையான அஞ்லட்டை உள்ளிட்ட அனைத்தையும் வாங்க எங்கோ உள்ள அஞ்சலகத்துக்குத்தான் நேரடியாக போக வேண்டும் என்பதில்லை.
ஆமாம், உங்களது பகுதிக்கு வரும் அஞ்சல் பட்டுவாடா ஊழியரிடமே கிடைக்கும். ஆனால், இவர்களிடம் பொதுவாக யாரும் வாங்குவதில்லை என்பதால், அவர்கள் கொண்டு வருவதில்லை. நீங்கள் கேட்டால் கொண்டு வந்து கொடுக்க வேண்டியது அவர்களது ஊழியப்பொறுப்பு.
ஆனால், இது விரைவு அஞ்சலை பட்டுவாடா செய்ய வரும் பிரத்தியேக ஊழியருக்குப் பொருந்தாது. சாதாரண அஞ்சல்களைப் பட்டுவாடா செய்யும் ஊழியர்களுக்கே பொருந்தும் என்பது மிகவும் முக்கியம்.
இப்படியே, நீங்கள் எழுதிய கடிதங்களை அஞ்சல் செய்ய எங்கோ உள்ள அஞ்சலகங்களுக்கு செல்லாமல், இவர்களிடமே கொடுத்து விடலாம். அப்படி கொடுப்பதை பெற்றுக்கொண்டு அஞ்சல் செய்ய வேண்டியதும் இவர்களது பொறுப்பு.
இதில் உங்களுக்கு குறைகள் ஏதாவது இருந்தாலோ அல்லது தெளிவுபெற வேண்டி இருந்தாலோ சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள தலைமை அஞ்சலகத்தில் தொலை பேசியிலேயே கேட்டு தெளிவைப் பெறலாம்.
இப்படிப்பட்ட சுருக்கமான தகவல்கூட, பெறுபவர்களை குழப்பி விடக்கூடும், பொய்யர்களை அணுகக்கூடும். ஆகையால், நம் சட்ட விழிப்பறிவுணர்வு விவரங்களுடன் 40 பக்க அளவில் விரிவானதொரு அச்சுப் பதிப்பை அச்சடித்து அனுப்பலாமா என யோசித்தால், இதற்கான செலவுகள் பலமடங்கு கூடிவிடும்.
ஆர்வலர்களோ அல்லது தகவலைப் பெற்றவர்களோ, இச்செலவை ஏற்க முன்வந்தால் சோதனை முயற்சியாக முயற்சித்துப் பார்க்கலாம்.
இக்குழுவிற்கென தனியாக தந்திச் செய்திப் பகிர்வு (டெலிகிராம் மெசேஜ்) ஏற்படுத்தப்பட்டு உள்ளது. விரும்பம் உள்ளவர்கள் கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள்.
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment