அச்சுத்தொழில் என்பது, அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. ஆனால், இந்த அச்சுத் தொழிலை மிகச்சரியான முறையில் செய்வதற்கு சாதாரண ஆப்செட்டிலிருந்து பெரிய நிறுவனங்கள் வரை இல்லை என்பதுதான் உண்மை. மிகப்பெரிய அச்சு நிறுவனங்களில், கொள்ளையடிப்பவர்கள்தான் அச்சிட முடியும்.
தன் தொழிலைதக்க வைத்துக் கொள்வதில் மிகுந்த தன் முனைப்பை காட்டும் தனியார்களே இப்படியென்றால், பெ(ரு, று)ங்கூலிக்கு மாரடிக்கும் அரசு ஊழியர்கள் பணியாற்றும் அரசு அச்சகங்கள் எப்படி இருக்கும் என்பதற்கு, கறுப்புப்பண ஒழிப்பில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த 2000 ரூபாய் செய்தியே தகுந்த ஆதாரம்.
பணம் என்பது கோடாணு கோடியில் அச்சடிக்கப்படும் சிறுத்துண்டு காகிதம். அவ்வளவையும் சோதிக்க முடியுமா... ஆகையால் ஒன்றிரண்டு இப்படி குறைபாடு உடையதாகத்தான் இருக்கும் என்பதை, பொதுவாக நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
இதனை எழுதிக் கொண்டிருந்த நேரத்தில், புதிதாக அச்சடிக்கப்பட்ட 500 ரூபாய்களில், அச்சுப் பிழைகள் அதிகம் இருப்பதாக ரிசர்வ் வங்கியே ஒப்புக் கொண்டுள்ளது.
ஆனால், இதுகுறித்த அறிவுவறுமைவாதிகள், இவ்விவகாரத்தை ரிசர்வ் வங்கிக் கவர்னரும், பிரதமரும், குடியரசுத் தலைவரும் அச்சுப் பணி செய்தது போல, மிகவும் பெரிதாக விவாதிப்பார்கள். இப்படி விவாதிப்பவர்கள், தாங்கள் செய்யும் தொழிலை எந்த அளவிற்கு நேர்த்தியாக செய்வார்கள் என்பதும், அவரவர்களுக்கே தெரியும்.
மேலும், இந்த புதிய 2000 ரூபாய் நோட்டு இரகசியமாக அச்சடிக்கப்பட்டு, அதிரடியாக களத்தில் இறக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக பொறுமையாக அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்ட ரூபாய் நோட்டுக்களில், இப்படியொரு பிரச்சினை வந்ததாக எனக்குத் தெரியவில்லை.
ஆனால், முன்பிருந்த 100 ரூபாய் நோட்டை அச்சுப் பிசகாமல் கள்ள நோட்டாக அச்சிட்டு, இப்போது புழக்கத்தில் உள்ள நூறு ரூபாய் நோட்டுக்கள் இந்தியா முழுவதும் மாறுவதற்கு காரணமாக இருந்த தமிழனும் உண்டு.
நூல்களை சரியான முறையில் அச்சிட்டு வெளிக் கொண்டு வருவதிலேயே, பல்வேறு பிரச்சினைகள் வரும் என்பதை, நம் நீதியைத்தேடி... உள்ளிட்ட நூல்களை அச்சிடுபவன் என்ற வகையில், நான் நன்கு அறிவேன்.
ஆமாம், இதுவரை நானெழுதி அச்சடித்துள்ள ஏழு நூல்களில் ஒரு நூலைக் கூட, நான் நினைத்தபடி எந்தக் குறையும் இல்லாமல் அச்சடித்து, நூலாகக் கொண்டுவர முடியவில்லை. எல்லாமே ஏதோவொரு விதத்தில் குறைப் பிரசவந்தான்.
ஆமாம், ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் அவனது எழுத்துக்கள் வெளிவருவது, ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்க்கும், தகப்பனும் எவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுக்குமோ, அப்படியொரு மற்றற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
ஆனாலிது, கருவாக உருவாகும் குழந்தை, வெளிவர பத்து மாதங்கள் ஆவதுபோல, ஒரு நூலை எழுத குறைந்தது, ஒரு வருடம் எடுத்துக் கொள்ளும் என்னைப் போன்றோருக்குத்தான் பொருந்துமே ஒழிய, இணையத்தில் வெளியாகி உள்ள தகவல்களை எல்லாம் திருடி நூலாக தொகுத்து, பணம் சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு ஒருபோதும் பொருந்தாது. ஆகையால், சந்தோசம் இராது.
ஆமாம், குழந்தையைப் பெற்றவளிடம் இருந்து, அக்குழந்தையை திருடி வந்தவள், எப்போது மாட்டுவோமோ என்ற மன சஞ்சலத்தில்தானே எப்போதும் சந்தோசமின்றி இருப்பாள்?
அப்படித்தான் எழுத்துத் திருடர்களும் சந்தோசம் இல்லாமல், ஆரம்ப காலத்தில் மன சஞ்சலத்தில் இருப்பார்கள். ஆனால், போகப்போக பழகிவிடும்.
இப்படிப்பட்ட திருட்டு எழுத்தாளர்களுக்கு அந்த நூலில் என்னென்ன சங்கதிகள் இருக்கிறன என்பதே தெரியாது. மேலும் அது பலரின் (எழு, கரு)த்துக்கள் என்பதால், வார்த்தை மற்றும் கருத்துப் பிரயோகங்கள் ஒரே (மாதிரி, நடை)யாக இருக்காது.
பத்து வருடத்துக்கு முன்பெல்லாம், ஒரு நூலை வெளியிட விரும்புபவர்கள், பிற நூல்களில் இருந்து திருட, அச்சங்கதி தொடர்பான பல்வேறு நூல்களை வாங்கி, ஒவ்வொரு நூலிலும் குறிப்பிட்ட சில பகுதிகளை தேர்வு செய்து, தட்டச்சுக்கு கொடுத்து, பின் அதை நூலாக உருவாக்கி அச்சிட்டு விடுவார்கள்.
இதனை எளிதாக எப்படி இனங்காண்பது என்பதுபற்றி நுண்ணறிவு இல்லாத நூல்கள் என்ற தலைப்பில், நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம் நூலில் எழுதி உள்ளேன்.
ஆனால், தற்போது இப்படிப் பல நூல்களை வாங்க வேண்டியதோ, தட்டச்சு செய்ய வேண்டியதோ கூட இல்லை. தேவையானவற்றை இணையத்தில் இருந்து எளிதாக எடுத்து நூலாக வடிவமைத்து, பத்து நாட்களுக்குள் நூலாகவே அச்சடித்து விடலாம்.
உண்மையாக குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்க்கு, குழந்தைக்கு குறைபாடு எதுவும் இருந்தால், சந்தோசம் குறைவது போலதான், ஓரிரு ஆண்டுகளாக இரவும், பகலும் கஷ்டப்பட்டு எழுதிய நூல்கள் சிறு சிறு குறைபாடோடு வெளிவரும் போது, என்னைப் போன்ற எழுத்தாளர்களும் வருத்தப்படுவார்கள். இது நூலுக்கு மட்டுந்தான் என்றில்லை.
அவரவர்களின் நிலையைப் பொறுத்து, சாதாரண நாலுவரி கவிதை வெளி வருவதில் இருந்து, கட்டுரையாக, இதழாக, நூலாக வெளி வருவது வரை ஒவ்வொருவருக்கும் இன்பத்தில் துன்பமாகத்தான் இருக்கும்.
நான் அச்சிட்ட நூல்களிலேயே மிகவும் மோசமாக இருக்கக்கூடியது நீதியைத்தேடி... பிணை (ஜாமீன்) எடுப்பது எப்படி? நூல்தான் என்பதை வாசகர்களாகிய நீங்கள் அறிந்திருக்கலாம்.
காரணம், இந்நூலை காவல் நிலையங்களுக்கும், சிறைக் கைதிகளுக்கும் இலவசப் பிரதியாக வழங்க வேண்டுமென்கிற ஆர்வத்தில், ஓர் அறக்கட்டளை நிர்வாகி நன்கொடை தருவதாக உறுதி அளித்திருந்ததன் பேரில் பத்தாயிரம் பிரதிகளுக்கு திட்டமிட்டேன்.
ஆனால், வாக்குறுதி அளித்த அந்த அறமில்லாத அறக்கட்டளை நிர்வாகி உரிய நேரத்தில் நன்கொடையை கொடுக்கத் தவறிய காரணத்தாலும், ஒரு குடிகார பைண்டரிடம் அந்நூல்களை கொடுத்து மாட்டிக் கொண்டதாலும் அந்நூலின் தரம் (மோ, நா)சமாகி விட்டது.
பத்தாண்டுகளுக்கு முன்பு, என்னிடம் கூடுதலாக குறைந்தது இருபதாயிரம் இருந்திருந்தால், அந்த நூல் ஓரளவிற்காவது தரமாய் இருந்திருக்கும். பத்தாண்டுகள் கடந்தப் பின்னுங்கூட, என் மனதை இன்றும் உறுத்திக் கொண்டிருக்கிறது.
நன்றாக அச்சிட்டப்பட்டுள்ளது என நினைத்து நூல்களில் குறை இருப்பது தெரியாமல், சில வாசகர்களுக்கு அனுப்பி இருக்கிறோம். அவ்வாசகர்கள் படிக்கும்போது கண்டு பிடித்து தெரிவித்தப்பின், மாற்று நூலை அனுப்பி இருக்கிறோம். இப்படி, ஒரு நூலை நல்ல முறையில் வெளிக்கொண்டு வருவதில் அவ்வளவு சிரமங்கள் இருக்கின்றன.
நூலை எழுதுவதோடு மட்டுமல்லாமல், நானே வடிவமைப்பு செய்தும், அச்சிடவும் நானே நேரடியாக களப்பணியில் இறங்கியே இவ்வளவு, சிக்கல்களை சந்திக்க வேண்டி உள்ளது என்றால், கூலிக்கு மாரடிப்பவர்களை வைத்து செய்தால் எப்படி இருக்குமென யோசித்துக் கொள்ளுங்கள்.
ஆகையால், நூல்களை அச்சிடுவோருக்கு உதவியான வழிகாட்டு தல்கள் மற்றும் அச்சகங்களைப் பற்றிய விழிப்பறிவுணர்வு நூலொன்றையே எழுதலாம். இதில், யாருக்காவது வழிகாட்டுதல் தேவைப்பட்டால் என்னை அனுகலாம்.
ஏனெனில் அச்சகமே வைத்தில்லாமல், நூல்களை அச்சிட்டுத் தருவதாக கூறி, வெளியூரில் இருந்து வரும் நபர்களை ஏமாற்றும் புரோக்கர்கள் கூட்டம் சிவகாசி பேரூந்து நிலையத்தில் மிகமிக அதிகம்.
அச்சுத்தொழில் என்றாலே, பலருக்கும் நினைவுக்கு வருவது சிவகாசிதான். இப்படித்தான் நாங்களும் சிவகாசியில் முதலில் ஏமாந்தோம். இதுபற்றி ‘‘மநு வரையுங்கலை!’’ நூலில் எழுதி உள்ளேன்.
இங்கு ஏமாற்றப்படுவோரில் கேரளா வாசிகள் உள்ளிட்டவர்களே அதிகம் என்பது, தமிழ்நாட்டிற்கான அவமான அடையாளம். ஆகையால், எதுவொன்றையும் சிவகாசியில் அச்சிட செல்வோர் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நூல்களுக்கே இப்படி என்றால், சிறிய அளவிலான ரூபாய் நோட்டுக்களில் அச்சுப் பிரச்சினைகள் அதிகமாகத்தான் இருக்கும். அதனை வங்கிகள்தான் மாற்றிக் கொடுக்க வேண்டும்.
ஆனால், அரசின் கறுப்புப்பண ஒழிப்புக்கு, வங்கிகளின் கறுப்புப்பண பெருச்சாலிகளும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே, மேற்கண்ட பத்திரிகை செய்தியில் சொல்லி உள்ளபடி எல்லாம் தவறாக நடக்கிறார்கள்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடும், வங்கிப் பெருச்சாலிகள் யாரென்பதை செய்தி ஊடகங்கள் பகிரங்கப்படுத்த வேண்டும். அவ்போதுதான், அவ்வூழியர்களின் மீது நடவடிக்கை சாத்தியம்.
இப்படி பிரச்சினைக்கு தீர்வுக்காண முயலாமல், பிரச்சினையை மட்டும் செய்தியாக வெளியிட்டால், குப்பைக்கு நிகரான காகிதப் பக்கங்கள்தான் பத்திரிகையில் நிரம்பும். இது கழுதைக்குத்தான் தீணியாகுமே தவிர, (கதை, படி)ப்பவர்களுக்கு ஆகாது. அவ்வளவே!
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment