ஆண்டுக் கணக்கில் அவ்வப்போது வெளியிட்ட 500, 1000 ரூபா நோட்டுகளை எல்லாம் ஒரே நேரத்தில் முடக்கி விட்டு, ஓரிரு நாட்களில் புதிய ரூபா நோட்டுக்களை வழங்குவது என்பது, எப்படிப்பட்ட வளர்ந்த நாடுகளிலுங்கூட இயலாத காரியமே!
ஆகையால், இதனை இந்தியாவில் எதிர்ப்பார்ப்பது அர்த்தமற்ற அபத்தமானது!!
ஏனெனில், இதற்கு அனைத்துத் தரப்பில் இருந்தும் ஆதரவில்லை. அரசியல் செய்ய இதுதான் சரியான தருனமென, அரசியல் வியாதிகளின் பினாமி தொல்லைக் காட்சிகள், தங்களின் ஆதாயத்திற்காக பெரிதுபடுத்தி செய்தி வெளியிடுகிறது.
ராகுல் கூட, சோத்துக்கு வழியில்லாமல் இரண்டாயிரம் ரூபாய்க்காக மக்களோடு மக்களாக என்றுகூறி வரிசையில் நின்று அரசியல் செய்தது, உலகின் உச்சகட்ட சிறுபிள்ளைதனம்.
உண்மையாக இருந்தால், தில்லியில் மளிகை கடை வைத்துள்ள நம் வாசகரிடம் சொல்லி, ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களைக் கூட கொடுக்கச் சொல்லி விடுவேன். ஏனெனில், வசதியா வாழ்ந்தவரு, வறுமையில் வாழ்வது கஷ்டம் ஆயிற்றே!
ஆகையால், ராகுலே நின்னுட்டார்; நாம நிக்கலேன்னா குத்தமாயிடும் என்றெண்ணி, இனி ஒவ்வொரு கட்சியை சார்ந்த அரசியல் வியாதிகளும் வரிசையில் நின்று அரசியல் செய்து சீன் போடுவார்கள் என எதிர்ப்பார்க்கலாம்.
அரசூழியர்களும், வங்கி ஊழியர்களும் எவ்வளவு வேகமாக வேலை செய்வார்கள் என்பதும், உலகறிந்த உண்மை என்பதோடு, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்காத வங்கி ஊழியர்கள் யாராவது இருக்க முடியுமா?
இவர்களிடமும் கருப்புப்பணம் இருக்குமாகையால், எவ்வளவு தூரம் அரசின் அதிரடி நடவடிக்கைக்கு அரசியலைத்தாண்டி ஒத்துழைப்பார்கள் என்பதையும் உறுதியாய் சொல்லுவதற்கு இல்லையே!
மேலும், மாற்றிக் கொடுப்பதற்கு எவ்வளவு ரூபாய் நோட்டுக்கள் தேவையோ, அவ்வளவையும் நிச்சயம் அச்சடித்திருக்க முடியாது. அப்படியே ஒருவேளை அச்சடித்து இருந்தாலுங்கூட, சில மாதங்களுக்கு முன்பு, இரயிலில் கொண்டு செல்லப்பட்ட செல்லாத பணத்தையே கொள்ளையடித்த சம்பவத்திற்கு மத்தியில், நாட்டின் எல்லாப் பகுதிக்கும் திருட்டு, வழிபறி, கொள்ளை ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பாக கொண்டு சேர்ப்பது என்பதும் இயலாத காரியமே என்பதை எல்லாம் மக்கள் உணர வேண்டும்.
கடந்த ஆண்டு சென்னை பெருவெள்ளத்தில் சிக்கி எந்த விதமான அடிப்படை வசதியும் இல்லாமல், குறைந்தது ஒரு வாரம் முதல் மாதக்கணக்கில் கஷ்டத்தை உணர்ந்த மக்களே, அப்படியொரு அசாதாரண சூழ்நிலையே இல்லாத இப்பொழுது ஓரிரு நாட்களைக்கூட பொருத்துக் கொள்ள மறுப்பது மடத்தனமே.
தாங்கள் எல்லாம் வறுமையில் வாடிக் கொண்டிருந்ததாக சொன்ன மக்கள் எல்லாம், தற்போது எங்களிடம் 500, 1000 த்தை தவிர, வேறு பணமோ சில்லரையோ, உணவுக்கு தேவையான உப்பு உள்ளிட்ட பொருட்கள் கூட, கையிருப்பில் இல்லை என்பதுபோல, பணத்தை மாற்ற படையெடுத்து நின்று, அனுபவிக்கும் கொடுமைக்கு அவர்கள்தான் பொறுப்பு.
இவர்களிடம் 500, 1000 ரூபாயாக இல்லாமல் இருக்கும் பணத்தை வைத்தும், பழக்கப்பட்ட கடைக்காரர்கள் உள்ளிட்ட பலரது ஒத்துழைப்புடன் தாராளமாக ஒரு வாரத்தை ஓட்டலாம். வீட்டிலும், கடையிலும் அவ்வளவு கையிருப்பு இருக்கிறது.
மேலும், தற்போது பல்வேறு வகையான அங்காடிகளிலும் ஏடிஎம் அட்டையை தேய்த்து, பொருட்களை வாங்கும் வசதி இருக்கிறது. இந்த தேய்க்கும் எந்திர வசதி இல்லை என்றாலுங்கூட, அவர்களது வங்கிக் கணக்கிற்கு பணப்பறிமாற்றம் செய்து பொருட்களை பெறமுடியும்.
இதனை சாதாரண கடையில் ஆரம்பித்து, மொத்த கொள்முதல் வரை மிக எளிமையாக செய்ய முடியும். இதற்கு ஒத்துழைக்க மறுத்தால், அவர்கள் கருப்புப்பணத்தில் புழங்குபவர்கள் என்றே அர்த்தம்.
ஆமாம், விவசாயி உள்ளிட்ட உற்பத்தியாளர்களுக்கும், அப்பொரு ளை நுகரும் மக்களுக்கும் நடுவில் உள்ள இடைத்தரகர்களே வியாபாரிகள் என்பதும் உலகறிந்த ஒன்றுதான்!
இப்படியே பல்வேறு அத்தியாவசிய சேவைகளையும் பெற இணையவழிப் பணப்பறிமாற்றம் முடியும். இப்படி யாருக்காவது, சிறிய அளவில் உதவலாம் என்ற அடிப்படையில், இதுபற்றியும் முகநூலில் பதிவிட்டேன்.
ஆனால், இதனை யாரும் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதோடு, பயன்படுத்துவது எப்படி என்றுகூட யாரும் கேட்க வில்லை. நாங்களாகவே தேடிச் சென்று, இவ்விவரம் தெரியாது விளக்கம் கேட்டிருந்த முகநூல் அன்பர் ஒருவருக்கு பதிவிட்டோம்.
இதுபற்றிய விழிப்பறிவுணர்வு குறுஞ்செய்தி தனியார் வங்கிகளிடம் இருந்து வந்துக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால், இந்த வழிமுறைகளை எல்லாம் தேர்ந்தெடுக்காமல் மக்கள், தங்களைத் தாங்களே மடையர்களாக ஆக்கிக் கொள்கிறார்கள்.
ஆமாம், நாமும் புதுநோட்டை வாங்கித்தடவி பார்த்துடனும் என்று, அடித்துப் பிடித்து வாங்கி, அதனை அர்ப்பத்தனமா போட்டோ புடிச்சி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பீற்றிக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தை வெளிப்படையாகவே பார்க்க முடிகிறது.
ஒரு நாளில் 2000, ஒரு வாரத்தில் 4000 மட்டுமே பணங் கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ள நிலையில், இப்படி பதிவிடுபவர்களின் கையில் குறைந்தது நாலைந்து 2000 ரூபாய் நோட்டுக்கள் எப்படி இருக்க முடியும்? இவர்களில் யாருக்கும் 500 ரூபாய் நோட்டே அல்லது வேறு சில்லரை பணமோ கொடுக்கப்பட வில்லையா?
2000 ரூபாயை அடுத்தவர்களிடம் வாங்கி போட்டோ எடுத்துப் போடுகிறார்களா... இப்படி போடுவதற்கு அவர்கள் கொடுப்பார்களா அல்லது இவர்கள் குடும்பத்தோடு சென்று ஆளாளுக்கு வாங்குகிறார்களா... வாங்க வேண்டிய அவசியம் என்ன... அப்படியே வாங்கினாலும், நீண்ட வரிசையில் நிற்பவர்களுக்கோ அல்லது நம் நாட்டிற்கு சுற்றுப்பணம் வந்த வெளிநாட்டு வாழ் மக்களுக்கோ கொடுத்து உதவ வேண்டியதுதானே?
சூழ்நிலைக்கு வெளிநாட்டில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு உள்ள சிரமத்தை போக்கத் தேவையான நடவடிக்கைகளை வங்கிகள் உடனே மேற்கொள்ள வேண்டாமா? அப்படி மேற்கொண்டால், இப்படிச் செய்தது தவறு என அரசுதான் குற்றஞ் சுமத்துமா?
500, 1000 க்கு குறைவான பணம் யாரிடமுமே இல்லை என்று சொல்லுகிற சூழ்நிலையில், புதிதாக பெற்ற 2000 ரூபாய் நோட்டோடு பல் இளிப்பவர்கள் எல்லாம் எங்கு சில்லரை வாங்குவார்கள்... எப்படி தங்களின் சில்லரை தேவைகளை பூர்த்தி செய்கிறார்கள் என்பதை எல்லாம் நாம் யோசிக்க வேண்டும்.
உண்மையில், வெளி நாட்டில் இருந்து இன்பச் சுற்றுலா வந்தவர்களுக்கு துன்பச் சுற்றுலாவாக மாறியிருக்கிறது என்பதையும், கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை வைத்திருந்தவர் களுக்கு, கசப்பான அனுபவமாகி இருக்கிறது என்பது மட்டுமே, நான் ஒப்புக்கொள்ளும் உண்மை!
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment