‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’ நூலில், "கேர்லெஸ் சொசைட்டியில், கேர் சொசைட்டி" என்ற தலைப்பில் நம்ம கேர் சொசைட்டியைப் பற்றியும் எழுதியுள்ளேன் என்பதால், அதுபற்றிய விவரத்தை தவிர்க்கிறேன்.
கேர் சொசைட்டியில் உங்கள் எல்லோருக்கும் தெரிந்தது, வெகுசிலர்தான். இந்த வெகுசிலரில் அனைவரும் அறிந்த ஒரே நபராக, திரு. அய்யப்பன்தான் இருக்க முடியும்.
ஆமாம், மற்றவர்களை விட, இவர் ஒருவரே முழுமையாக, உங்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை மற்ற அங்கத்தினர்களே ஒப்புக் கொள்வார்கள்.
கேர் சொசைட்டி தவிர, அய்யப்பனுக்கு பல முகங்கள் உண்டு என்பதை, வாசகர்கள் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், நாங்கள் தொடர்பு கொண்டபோது, அழைப்பை எடுக்கவில்லை என்றே பலரும் எண்ணி இருப்பீர்கள்.
தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இவர், மற்ற தொழிலாளிகளைப் போல் ஓபி அடிப்பதில்லை. முடிந்த அளவிற்கு கடின உழைப்பாளி! இதிலும், கன்வேயர் சிஷ்டம் என்கிற இடத்தில், ஓய்வில்லாத வேலை
இதற்கிடையில்தான், உங்களது அழைப்பை ஏற்று பதில் சொல்லவேண்டும். நூல்களை வாங்குவதற்கான விவரங்களை கேட்டால், அதுகுறித்து தயார் நிலையில் வைத்துள்ள, குறுஞ்செய்தியை அனுப்பி விட்டு, அவர் வேலையை தொடர முடியும்.
இதற்கே இவருடன் வேலை பார்க்கும் ஊழியர்கள், இவரது பணியை சில நிமிடங்கள் கூடுதலாக ஏற்றுக்கொண்டு உதவி செய்ய வேண்டும்.
ஆனால், பெரும்பாலானோர் ஆலோசனை அது, இது, எது என கேட்பதால் வேலை நேரத்தில் அழைப்பை தவிர்த்து, ஓய்வு நேரத்தில் உங்களை தொடர்புக் கொள்கிறார். அதற்குள் பொறுமையிழந்து, பத்துப் பதினைந்து அழைப்புகளை தொடர்ந்து கொடுத்து கொடுந்தொந்தரவு செய்பவர்களும் உண்டு.
நம்மிடம் சாதாரணமாக யாராவது தர்மம் கேட்டால், வேண்டா வெறுப்பாக போ, போ என விரட்டியடிப்போம். கொஞ்சம் மனம் இறங்கினால், கையில் கிடைத்த ஒரு ரூவா, ரெண்டு ரூவா சில்லரைகளை, தொடாமல் தூக்கிப்போட்டு விட்டு நடையை கட்டுவோம்.
இவரிடம் யாராவது கையேந்தினால், அது யாராக இருந்தாலும், கையில் பணம் இருந்தால் சாப்பிடுறீங்களா என கேட்பார். சரி என்றால் குறைந்த நாலு இட்லியோ, பொங்கலோ, கிளறிய வகை சாதமோ என குறைந்தது முப்பது ரூபாய் செலவழித்து வாங்கிக் கொடுப்பார்.
ஒரு நாளைக்கு இப்படி மூன்று பேருக்காவது வாங்கிக் கொடுக்கனும் என்று தினம் நூறு ரூபாயை ஒதுக்குபவர். தற்போது, வீட்டிலிருந்தே கொண்டுச் சென்று கொடுக்கிறார்.
இவரைப் பார்த்து உங்களது அழைப்புகளை ஏற்பதில் ஒருவரான நடராஜனும், இப்படிச் செய்து வருகிறார். இவர் தன் வேலைகளை தானே செய்துக் கொள்ள முடியாத சூழ்நிலையில் உள்ள, எண்பது வயதுக்கும் மேற்பட்ட தாயாரை தனி ஆளாக பராமரித்து வருகிறார்.
தொழிற்சாலையின் மதிய உணவு இடைவெளியில், ‘வீட்டிற்கு வந்து அம்மாவுக்கு உணவை ஊட்டிச் செல்கிறார்’ என்றால் பரிந்துக் கொள்ளுங்கள். வாய்ப்பு கிடைக்கும் நேரத்தில், தொடு சிகிச்சையும் செய்து வருகிறார்.
கையேந்துவது குடிகாரர் போல் தெரிந்தால், தேனீர் சாப்பிடுறீங்களா என்று கேட்பார். மறுத்தால் குடித்திருக்கிறார் அல்லது குடிப்பார் என்று கணக்கு.
கையேந்தும் வேறு யாரையாவது தேனீர் குடிக்கிறீர்களா என்று கேட்டால், ‘சாப்பாடு வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு கையில் பணம் இல்லை’ என்று பொருள்.
தந்தை, தாய் இல்லாத அல்லது இருந்தும் படிக்க வைக்க முடியாத ஆண் குழந்தைகள் அறுபது பேரை, ஓசூரில் உள்ள இராமகிருஷ்ணா ஆசிரமத்தில் தங்க வைத்து படிக்க வைக்கிறார்கள்.
படிக்க வைப்பது என்னவோ அரசுப் பள்ளிதான் என்றாலுங்கூட, உணவு, உடை, இருப்பிடம் உள்பட மற்ற அத்தியாவசிய தேவைகளை கொடுத்து பாராமரிப்பது கஷ்டந்தானே?!
இவர்களுக்கு தேவையான அரிசி, துணி மணிகள், சோப்புகள், எண்ணெய்கள், சமையல் எரிவாயு உள்ளிட்ட அனைத்தையும், தொழிலாளிகளிடம் இருந்து சேகரித்து (வ, த)ருவதும் இவருடைய முக்கியப் பணி.
இதெல்லாம், விடுமுறை நாட்களிலும், தேவைப்பட்டால் தொழிற்சாலை வேலையை முடித்தப்பின் செய்யும் வேலைகள். இதற்கு இடையில்தான், உங்களுக்கான நூல்களை பார்சல் செய்வதும், அனுப்புவதும். இதனை தினமும் செய்ய முடியாது என்பதால், இரண்டு மூன்று பேருக்கு ஒரு நாளில் அனுப்ப திட்டமிடுவார்.
சிலர் நூலுக்கான பணத்தை செலுத்தி விட்டால், உடனே அனுப்பச் சொல்லி நச்சரித்து விடுவார்கள். இதற்கேற்றவாறு, இவர்களுக்கு அனுப்பும் நூல்கள்தான் எங்காவது சுத்தி ஏடாகூடமாகி விடும்.
இதற்கிடையில், நீங்கள் அனுப்பும் நன்கொடைகளுக்கு கணக்கெழுதி, இரசீது போட்டு, அதனை உங்களுக்கு அனுப்புவது உள்ளிட்ட விவரிக்க இயலாத பல வேலைகளையும் இவர்தான் செய்கிறார்.
இதையெல்லாம் வேண்டாம்; தொழிற்சாலை வேலை தவிர, வேறு ஒன்றை உங்களால் செய்ய முடியுமா என கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இவர் சேவைகளுக்கு செலவு செய்யும் தொகையையும், நேரத்தையும் மிச்சப்படுத்தி, பணமீட்ட உழைத்தால் எவ்வளவு சம்பாதிக்கலாம், சேமிக்கலாம், சொகுசாக வாழலாம் என்பதை யோசித்துப் பாருங்கள்.
இந்தப் பத்திரிகை செய்தியை படித்ததும், நினைவுக்கு வந்தது அய்யப்பன்தான். அதனால்தான், இவ்வளவையும் சொல்ல வேண்டிய தாயிற்று.
இவர் தொழிற்கல்வி பயின்ற காலத்தில், ஆசிரியராக இருந்தவருக்கு குழந்தை இல்லை. இவரது மனைவியும் ஆசிரியை. இவ்விருவருக்கும் கருத்தொற்றுமை ஏற்பட்டு, தங்களது சொந்த பந்தத்தில் இருந்து வேறு யாரையும் தத்தெடுக்கவில்லை. சொந்தங்களை கிட்டவுங்கூட சேர்த்துக் கொள்ளவில்லை.
இவரிடம் படித்த காலத்தில் இருந்தே, அவரது வீட்டிற்கு சென்று உதவி செய்வதை வாடிக்கையாக வைத்திருந்த அய்யப்பன், அவர்கள் இருவரும் இறக்கும் வரை தொடர்ந்தார்.
நம் நூல்களை அச்சிடுவதற்காக மதுரையில் இருந்தபோது, என்னையும் இந்த ஆசிரியர் வீட்டுக்கு அழைத்துச் சென்றிருந்தவர், என்னை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு, வீட்டை சுத்தம் செய்யும் பணியில் இறங்கி விட்டார். ஆனாலும், நானும் சிறிது உதவினேன்.
கடந்த ஆறேழு ஆண்டுகளுக்கு முன் முதலில், ஆசிரியை இறந்துவிட, அடுத்து ஆசிரியர் உயிர் போவதற்கு இரண்டு நாள் முன்பே, தகவல் அறிந்து அய்யப்பன் சென்று விட்டார். அப்போதுகூட, தங்களது பெயரில் உள்ள வீடு, நகை, பணம் ஆகியவற்றை என்ன செய்ய வேண்டுமென்று ஆசிரியர், இவரிடம் சொல்லாமலே, அதற்கான முன்னேற்பாடுகளை செய்யாமலேயே மூச்சை அடக்கிக் கொண்டார்.
இவரது இறுதிச் சடங்கு முடிந்ததும், கேள்வி கேட்பார் யாருமின்றி, உள்ளூர் ரவுடிகள் அனைத்து சொத்துக்களையும் அபகரித்துக் கொண்டனர்.
ஆதரவற்ற நிலையில் உள்ளோர், தன் தேவைக்கு அதிகமாக கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைத்திருப்பது, இப்பத்திரிகை செய்தியில் உள்ளது போன்று அவர்களுக்கு எல்லா விதத்திலும் உபத்திரவம் ஆகத்தான் இருக்குமே ஒழிய, எவ்விதத்திலும் உதவியாய் இருக்காது என்பதை புரிந்துகொண்டு..,
அச்சொத்துக்களை இல்லாத ஏழை எளிய மக்களுக்கோ அல்லது அய்யப்பனை போன்று கருனைத் தொண்டுள்ளம் கொண்டு ள்ளோருக்கு கொடுத்து விட்டால், அது பயனுள்ள வகையில் சமுதாயத்திற்குப் போய்ச்சேரும்.
குறிப்பு: கடந்த மாதத்தில் அய்யப்பனுடைய அப்பாவை சந்திக்க நேர்ந்தபோது, ஒருவேளை ஆசிரியர் தன்னிடம் எதையாவது தந்தால், அவர்களுடைய பெயரில் எதையாவது செய்ய வேண்டுமென, அய்யப்பன் திட்டமிட்டிருந்த செய்தி தெரிந்தது.
‘நடப்பதெல்லாம் நன்மைக்கே’ என்ற தத்துவத்தின் அடிப்படையில், அப்படி நடக்காமல் போனதும் நல்லதே. இல்லை யெனில், இவருக்கு இருக்கிற வேலையில், இதுவேறையா என்று நான் நிச்சயம் நொந்து போயிருப்பேன்.
இப்போது, எனது எண்ணமே உங்களது எண்ணமாக இருக்குமென நம்புகிறேன். இனி நீங்க எப்படி இருக்கனும் என்பதை, நீங்களே முடிவு செய்யுங்க. அவ்வளவே!
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
பின்தொடர்வோம்,
ReplyDeleteதிரு.அ(மெ)ய்யப்பன் அவர்களை.