நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Saturday, October 22, 2016

உதவுபவர்களுக்கு உபத்திரம் செய்யக்கூடாது!


உதவி செய்பவர்களுக்கு துன்பத்தைக் கொடுத்தால், அவர்களது உதவியை நிறுத்திக் கொள்வார்கள் என்ற வகையில், உதவி செய்வோருக்கு பல வழிகளில் துன்பத்தைக் கொடுப்பார்கள். இதில் முன்னிலை வகிப்பது காவலூழியர்களே என்பது, நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை.

இவர்கள் பதிவு செய்யும் வழக்குக்களில், வெகுசிலர் சட்ட நடவடிக்கையை எதிர்த்து பலமாக போராடுவார்கள் என்று தெரிந்தால், அவர்களைப் பணிய வைக்கவென்றே அவருக்கு துணையாக உள்ள, போராட்டக் குணமில்லாத ஓரிருவரையும், அவ்வழக்கில் (சே, கோ)ர்த்து விடுவார்கள்.

இப்படி கோர்க்கப்பட்டவர்களை சட்ட நடவடிக்கையில் அல்லது வழக்கில் இருந்து சட்டப்படி வெளியேற்றுவது எப்படி என்று தெரியாததால், போராட்ட குணம் உள்ளவர்களும் சட்ட நடவடிக்கையில் சமரசம் ஆகிவிடுவர் அல்லது அடங்கிப் போய்விடுவர். 

குற்றவியல் சட்ட நடவடிக்கைகளில் தேவையில்லாமல் கோர்க்கப்பட்டவர்களை, சட்டப்படி எப்படி கழற்றிவிட முடியும் என்பதை, வளர்த்து விட்டதற்கு, வளர்ப்புத் தாய்க்கும் தண்டனை! என்ற இந்தக் கட்டுரையில் படித்துணரலாம். 

விபத்தில் அல்லது குற்றச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட எத்தனையோ பேருக்கு நானும் உதவியிருக்க அதனால், எனக்கு சட்டப்படியான உபத்திரங்கள் எதுவும் வந்ததில்லை. அப்படி வரும் நிலை இருந்தாலுங்கூட, சட்டப்படி சந்தித்து விடலாம். ஆனால், இதுபற்றி போதிய விழிப்பறிவுணர்வு சமுதாயத்தில் வெகு குறைவாகக்கூட இல்லை.  

இந்த இடத்தில் பொருத்தமான ஒரு சம்பவத்தையும் சொல்ல வேண்டும். சில வருடங்களுக்கு முன் கோவையில் இருந்து குற்றாலத்திற்கு அரசு விரைவுப் பேருந்தின் பிற்பகுதியில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தோம். இப்பேருந்து ஓட்டுநருக்கும், கார் ஓட்டுநர் ஒருவருக்கும் முந்திச் செல்வதில் தகராறு ஏற்பட்டுள்ளது. 

பேருந்துக்கு முன் தன் காரை நிறுத்திய, அக்காரில் வந்தவர்கள், ஓட்டுனரையும் நடத்துனரையும் வைத்திருந்த ஆயுதங்களால் கடுமையாக தாக்கிவிட்டனர். 

எனக்குப் பின் இருக்கையில் இருந்த வாசக சகோதரி, நல்ல தூக்கத்தில் இருந்த என்னிடம், ‘‘அண்ணா ஏதோ பிரச்சினை நடக்கிறது; போய் பாருங்கள்’’ என்று குரல் கொடுக்கவே சென்று பார்த்தால், இருவருக்கும் ஆங்காங்கே இரத்தம் வழிந்தோடிக் கொண்டிருந்தது. 

அதே சமயத்தில் காரின் பின்புறம் ஒருவர் அமர, அக்கார் மின்னல் வேகத்தில் பறந்து சென்றுவிட்டது. அதாவது, அமர்ந்த நபரையோ அல்லது அக்காரின் பதிவு எண்ணையோ, அதன் வண்ணத்தையோ கூட நான் அறிய முடியவில்லை. 

இருவரும் காப்பாற்றுங்கள் என வலியால் துடிக்க, நாங்கள் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதும், அருகில் எங்கு மருத்துவமனை இருக்கிறது என்பதுங்கூட எனக்குத் தெரியவில்லை.

இத்தனைக்கும், பேருந்துக்கு பக்கத்திலேயே நடுத்தர வயதுடைய கணவன் மனைவி இருவரும் எதுவுமே நடக்காததுபோல பேசிக் கொண்டு இருந்தவர்களிடம், இது எந்த இடம், மருத்துவமனை எங்குள்ளது என கேட்டதற்கு தெரியாது என்று சொல்லிவிட்டனர். 

சரி, சற்று தூரத்தில் சென்று கேட்கலாம் என்று, பின் பக்கமாகச் சென்று விசாரித்துக் கொண்டிருந்தபோது, வலியால் துடித்த ஓட்டுநர், மருத்துவமனையை தேடி பேருந்தை எடுத்துச் சென்றுவிட, சில நிமிடங்கள் கழித்து அவ்வழி வந்த ஆட்டோவில் ஏறி பேருந்தை துரத்திச்சென்று பிடிக்கும்படியும், ஆட்டோவுக்கு கட்டணம் செலுத்தும்படியும் ஆயிற்று. 

நல்லவேளையாக சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்திலேயே பேருந்து நின்றது. ஆகவே, இதுபோன்ற சமயங்களில் முன்பக்கம் சென்றே விசாரிக்க வேண்டும் என்பது பாலபாடமானது.  

ஆட்டோக்காரரிடம் விசாரித்த போதுதான், அது மதுரையின் புறநகர் பகுதி என்பதும் தெரிந்தது. அத்தனியார் மருத்துவமனை ஊழியர்கள் வெளியில் வைத்தே, முதலுதவி மட்டும் செய்தார்கள். 

சகப் பயணிகளிடம் 108 க்கு சொன்னீர்களா என்று கேட்க, இல்லை என்றார்கள். முன்பாக தூங்கிக்கொண்டிருந்த நான் எழுந்து வந்து பார்த்தபோது, ‘‘முன் இருக்கையில் அமர்ந்திருந்த இப்பயணிகள் அனைவருமே கொட்டக்கொட்ட விழித்துக் கொண்டு, அவ்விருவருக்கும் இரத்தம் சொட்டச்சொட்ட பார்த்துக் கொண்டு தான் இருந்தார்கள். என் முயற்சிக்கு கூட உதவியாக வரவில்லை’’ என்ற உண்மையை பொருத்தமாக இவ்விடத்தில் சொல்ல வேண்டும். 

இதன்மூலம், இதுபோன்ற சமயங்களில் மக்கள் எவ்வளவு மனிதாபி மானத்தோடும், விழிப்பறிவுணர்வோடு இருக்கிறார்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். 

உடனே, நான் 108 க்கு போன் செய்தால், என்ன நடந்தது, ஏது நடந்தது, எந்த இடத்திற்கு ஆம்புலண்ஸை அனுப்பனும் என்று கேட்க, தெரிந்ததைச் சொன்னேன். 

இதுபோன்ற குற்றச் சம்பவங்களை, இவர்கள் உலவுத்துறைக்கு தகவல் சொல்வார்கள். ஆகையால், குற்றவாளிகள் மீது நடவடிக்கை உறுதி. நீங்கள் குற்றத் தகவலை நேரடியாகவும் செல்ல உலவுத்துறையின் தொலைபேசி எண் 044 - 23452323, 24, 25 ஆகும். 

இந்த உலவுத்துறையைப் பற்றி, அரிய முடியாத பல்வேறு சங்கதிகளை நீதியைத்தேடி... நூல்களில் சொல்லி உள்ளேன். இதிலும் குறிப்பாக, குற்ற விசாரணைகள் மற்றும் சாட்சியங்களைச் சேகரிப்பது எப்படி ஆகிய நூல்கள்.
    
ஆகையால், ஆம்புலண்ஸ் வருவதற்கு முன்பாகவே, சென்னை உலவுத்துறையில் இருந்து என்னை உலாப்பேசியில் அழைத்தார்கள். இந்த எண்ணை நான் ஏற்கெனவே பதிந்து வைத்திருந்ததால், அழைப்பது யாரென்பதை புரிந்துக் கொண்டு, தெரிந்த தகவல்களை தைரியமாகச் சொன்னேன்.

நாகர் கோவிலைச் சேர்ந்த, இவ்விருவரையும் ஆம்புலண்ஸில் ஏற்றி விட்ட பிறகு, அவ்வழி வந்த விரைவுப் பேருந்தில் நின்று கொண்டே பயணம் ஆனோம். 

இவர்களது உறவினர்களும், மதுரை கிளை மேலாளரும் அழைத்து நன்றி சொன்னார்கள். மேலாளர் சாட்சியாக வரும்படி கேட்டுக்கொண்டார். நான் ஏற்கெனவே சொன்னபடி, ‘‘தெரிந்ததை மட்டுந்தான் சொல்லுவேன்’’ என்றதும் வேறு வழியின்றி, என்னை சாட்சியாக அழைப்பதில் பயனில்லை என நினைத்து அழைக்க வில்லை. 

அன்று நான் உடுத்தியிருந்த வெள்ளைநிற வேட்டி பயணற்றுப் போனது, ஆட்டோக்கு கொடுத்த நூறு, தூக்கங்கெட்டு நின்று கொண்டே பயணித்தது என பொறுத்துக்கொள்ள முடிந்த துன்பத்தை அனுபவித்தேன். என்னோடு பயணித்த மௌன ஆசாமிகளுக்கு இதில் எதுவுமில்லை. அவ்வளவுதான்!

சட்ட ஆராய்ச்சியில் களமிறங்கிய காலத்தில், விபத்தில் சிக்கிய வர்களுக்கு உதவ ஏன் பொதுமக்கள் அவ்வளவு சீக்கிரம் முன்வரவில்லை என்று ஆராய்ந்து, ஓர் உண்மையை உணர்ந்தேன்.  

அதாவது, விபத்து நடந்த இடத்திற்கு காவலூழியர்கள் வரும்வரை, பொதுமக்கள் எதையாவது செய்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் வந்தார்களோ, இல்லியோ ஒவ்வொருவராக கழல ஆரம்பித்து விடுவார்கள். 

இதற்கு அடிப்படை காரணம், அங்கு வரும் காவலூழியர்கள், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதை விட, அவ்விபத்துக்கான காரணத்தையும், அதற்கான தடயங்கள், சாட்சிகளை சேகரிப்பதிலேயே குறியாக இருப்பார்கள். 

ஆகையால், சம்பவ இடத்துக்கு வந்ததும், அவர்களது பாணியில் பயமுறுத்தும்  ஓர் நோட்டத்தை இட்டு, அதில் அதீத அக்கறையோடு உதவிக் கொண்டு இருப்பவர்கள் யாரென்று பார்த்து கேள்விமேல் கேள்விகேட்க ஆரம்பித்து விடுவார்கள். 

இன்றுங்கூட, இந்நோட்டப் பார்வை நடந்துக்கொண்டுதான் இருக்கிறது என்பதை, இனி நீங்களே பார்த்தாலும் உணருவீர்கள். இதற்கு பயந்துதான் மற்றவர்கள், உதவாமல் வேடிக்கை பார்க்க ஆரம்பிக்கின்றனர். 

குற்ற விசாரணை முறை விதி 171 இன்படி, ‘‘உங்களுடைய அனுமதி இல்லாமல், நிதிபதியே கூட, உங்களை சாட்சியாக அழைக்க முடியாது’’ என்பதை, நீங்கள் புரிந்து கொண்டால், இப்படி நோட்டப் பார்வையிடும் காவலூழியர்களைக் கண்டு பயந்து, உதவி செய்வதில் இருந்து கழலாமல், உதவியை தாராளமாகத் தொடருவீர்கள்.

இதற்கெல்லாம், சட்ட விழிப்பறிவுணர்வு மிகமிக அவசியம் என்பதை உணர்ந்து, அதனை உங்களுக்கு ஏற்படுத்த நாங்கள் அருட்பெறும் முயற்சியை மேற்கொண்டுள்ளோம்.  

இதுபற்றி உச்சநீதிமன்றம், பல வருடங்களுக்கு முன்பாக அறிவுறுத்தலை விடுத்திருந்துங்கூட, இதுகுறித்து அரசின் முறையான அறிவிப்பு தற்போதுதான் வெளியாகி உள்ளது என்பது, நிச்சயமாக அரசின் அலட்சியமும் அவலமும்தான்! 

அரசே இப்படியிருக்கும்போது, அவ்வரசின் அடிமைகளாக இருக்கக்கூடிய காவலூழியர்கள் மட்டும் எப்படி இருப்பார்கள்? 

சட்ட விதிகளில் இல்லாத சங்கதிகள் தொடர்பாக, உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும்போது, இந்திய சாசனக்கோட்பாடு 142 இன்படி, இந்த உத்தரவை உடனே சட்ட விதிகளாக இயற்ற வேண்டுமென அரசுக்கு உத்தரவிட வேண்டும். ஆனால், நிதிபதிகள் அப்படி சொல்வதில்லை. ஆகையால், அரசுகள் இப்படி தங்களது இஷ்டம்போல மிகவும் தாமதமாக செயல்படுகின்றன.     

இன்றைக்கு வளர்ந்துள்ள மொபைல் புரட்சியின் காரணமாக, விபத்து அல்லது குற்றக்காட்சிகளை வண்ணப் படமாக்கி சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி விடுகின்றனர். இதனால் நன்மை தீமை என இரண்டும் உண்டு. 

நன்மையென்றால், அடுத்தநாள் ஊடகங்களின் வாயிலாகத்தான் தெரியும் என்ற நிலைமாறி, சமூக வலைத்தளங்களில் பரவும் வண்ணப்படச் செய்திகளையே ஊடகங்கள் பயன்படுத்த ஆரம்பித்து விட்டன.  பாதிக்கப்பட்டவர்களுக்கு பண உதவியும் கிடைக்கிறது. 

தீமையென்றால், கற்பனையில் கதையெழுதம் திறன் கொண்வர்கள், பயமுறுத்தும் கதையை எழுதி பதிவிடுகின்றனர் என்பதும், இதனை அப்படியே உண்மையென நம்பி ஆயிரக்கணக்கானோர் பின்னூட்டம் இடுவதையுங்கூட நான் நன்கறிவேன். இப்படிச் செய்வதில், முகநூல் பதிவர்களுக்கு ஓர் அற்ப சந்தோசம். 

சட்ட விழிப்பறிவுணர்வோடு, சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி, பற்பல நற்காரியங்களைச் செய்ய முடியும் என்பதுபற்றி கட்டுரை ஒன்றை விரைவில் பதிவிட முயற்சிக்கிறேன்.

*********************

சமூகம் சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற வேண்டுமென விரும்பினால், இதுகுறித்த தங்களின் கருத்தைச் சொல்லி, உங்களது சமூக வலைத்தளங்களில் பகிருங்கள் 
      
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

நூல்களின் முகப்பு

நியாயந்தான் சட்டம்

Translate

Follow by Email

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு உலாப்பேசி எண்கள் 09842909190 மற்றும் 09842399880 ஆகும்.

இப்படி, நன்கொடை செலுத்தி வாங்கிய நூல்களால் பயனில்லை என்று கருதும் பட்சத்தில், அப்படியே திருப்பி அனுப்பிவிட்டு, கொரியர் செலவுபோக மீதிப் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

எல்லாப் பதிகளும்!

பயின்றோர் (20-08-16)