எல்லா நிதிபதிகளும் ஓய்வு நாளன்று நடக்கும் பிரிவு உபச்சார விழாவில் தவறாது, நீதித்துறையில் சீர்த்திருத்தம் தேவை… நீதித்துறையில் நீதி கேள்விக்குறியாகி விட்டது… பொய்யர்கள் நீதிமன்றத்தை புறக்கணிக்க கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாற்றுகளை சொல்லிவிட்டு போகிறார்கள்.
இதையெல்லாம் அவர்கள் பணியில் இருக்கும்போதே சொல்லவோ, சீர்த்திருத்தம் செய்யவோ முடியாதுங்களா அய்யா என்று, ஒருவர் என் கருத்தை கேட்கிறார். கேட்பது முற்றிலும் நியாயமான கேள்விதான்!
பலபேருக்கு இந்தகேள்வி எழுந்தாலும், யாரிடம் போய் கேட்பது என்று புரியவில்லை. இப்படி கேட்டவர் கூட, என் பெயரை போடாதீர்கள் என்கிறார்.
2010 ஆம் ஆண்டில், வெளியான நீதியைத்தேடி… சாட்சியங்களைச் சேகரிப்பது எப்படி? நூலின் தொடக்க தலைப்பே, ‘நீதித்துறையில் தேவை சீர்த்திருத்தம்’என்பதுதான். இதில் சொல்லப்பட்ட கருத்துக்களும் இதுதான்.
‘‘எந்தவொரு துறையிலும் சீர்த்திருத்தம் தேவை என்பதை வலியுறுத்த, பலரும் தயாராக இருக்கிறார்கள். ஆனால், நீதித்துறை சீர்த்திருத்தம் பற்றி வாய்திறக்கவே பயப்படுகிறார்கள். எப்போதாவது ஏதாவதொரு அசம்பாவிதம் போல் பிரதமர் அல்லது சட்ட அமைச்சர் அல்லது ஓய்வு பெற்ற நீதிபதிகள் என வாய் திறந்தால் உண்டு. அதுவும், அத்தோடு சரி!
அதிலும், ‘‘ஒய்வு பெற்ற நீதிபதி தனது அதிகாரம் மிக்க பதவிக்காலத்தில் எதையும் செய்யாமல், ஓய்வு பெற்றப்பின், பல் பிடுங்கப்பட்ட பாம்பு போல சீறிக்கொண்டு இருப்பார்’’. அதிகாரம் பெற்றவர்களே, உள்ளவர்களே, வாய்திறக்க மறுத்தால் சாதாரண மக்கள் முதல் மற்றவர்கள் வரை, எப்படிக் குரல் கொடுப்பார்கள்?
நீதித்துறையில் சீர்த்திருத்தம் குறித்து மறைமுகக் கருத்துக் கணிப்பு நடத்தினால் (இப்போது நேரடிக் கருத்துக் கணிப்புக்கு கூட சிலர் தயார்) நீதித்துறைக்கு படுதோல்வியே மிஞ்சும் என்ற அவல நிலையில்தான், மக்கள் நீதிமன்றங்களை பார்க்கின்றனர். உலகின் மிகப்பெரிய குடியரசுக்கு ஏற்பட்டுள்ள இந்த அவலம், விரைவில் சீர்த்திருத்தம் செய்யப்பட வேண்டும்.
நம்மைப் பார்த்தால் எல்லோருக்குமே ஒரு பயம் வர வேண்டும் என, அதிகாரம் பெற்ற அனைவருமே ஆணவத்தில் இருக்க, ஆதிக்க ஆணவத்தில் இருப்பது நீதிபதிகளே.
‘‘நல்லவேளையா கடவுள் மாதிரி வந்து காப்பாத்துனீங்க!’’ இல்லேன்னா அவ்வளவுதான்…? என்பதை அடிக்கடி சாதாரணமாக மக்கள் சொல்லக் கேள்விப்பட்டிருப்பீங்க. யாரைப்பார்த்து இப்படி பக்தியோடும், அன்போடும் சொல்கிறார்கள் என்று பார்த்தால், சாதாரண மக்களாகத்தான் இருப்பார்கள். இதுக்கு உண்மையான அர்த்தம் என்ன? ‘‘கடவுளே செய்யாத செயலை, நீங்க செய்து காப்பாத்துனீங்க’’ என்பதுதானே!
இதுபோல, மக்கள் எந்த நீதிபதியைப் பார்த்தாவது சொல்லியிருப் பார்களா? என்றால் நிச்சயமாக இல்லை. அந்த அளவிற்கு நீதிமன்றம் என்றாலே, மக்களுக்குப் பீதியும், பேதியும்தான் ஏற்படுகிறது.
ஒருவேளை, அப்படியே சொல்லியிருந்தாலும் கூட, அது அதிகாரத்திற்கு பயந்துதான் இருக்குமே தவிர, உண்மையானதாக ஒருக்காலும் இருக்காது. இருக்கவும் முடியாது. மேலும், அதிகாரம் உள்ளவர்களை, எவ்வளவுக்குக் எவ்வளவு புகழ்கிறார்களோ, அதை விடப் பன்மடங்கு மேலாக பின்னால் இகழ்வார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும்தானே!?’’
இதில், வேற்றுமையில் ஒற்றுமை என்னவென்றால், அந்த வருடந்தான், நானும் பத்து வருட சட்ட ஆராய்ச்சியை நிறைவு செய்து வெளியேறினேன்.
இதையெல்லாம் செய்யமுடியும் என நம்பியிருந்தால், நான் சட்ட ஆராய்ச்சியை ஆரம்பிக்காமல், எப்போதோ நீதித்துறைக்குள்ளே போயிருப்பேனே?!
இதுக்கெல்லாம் ஆசைப்பட்டு, எதுக்கு உள்ளேபோயி அடிமையாய் இருப்பானேன், என்றுதான் போகாமல், நிதிபதிகள் குறித்த விழிப்பறிவுணர்வை ஏற்படுத்துகிறேன்.
பொதுவாக அடிமைகளுக்கு விடுதலை நிச்சயமானதும்தான், அதுவரை தான் சந்தித்து வந்த கொடுமைகளை எல்லாம் வெளியில் சொல்வார்கள் இல்லியா? இதில் நிதிபதிகள் மட்டும் விதிவிலக்காகி விடமுடியுமா என்ன?
நிதிபதிகள் என்றைக்கு விடுதலையாகிறார்களோ, அன்றைக்குதானே அவர்களாலும் வாய்திறந்து பேசமுடியும்!
இதிலென்ன கருத்து சொல்லவேண்டியிருக்கு?
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment