வடக்கு வாசல் நாள்: பிப்ரவரி - 2007
“உண்மை”யைப் பற்றிய பின் நவீனத்துவவாதிகளின் கருத்துக்கள் எவ்வளவு அபத்தமாக இருந்த போதிலும் அவை சரியாக இருக்கக் கூடிய இடம் உண்டெண்றால் அது நீதிமன்றங்கள்தான்.
நீதிமன்றங்களில் ஒரு விசயம் உண்மை என தீர்மானிக்கப்படுவது பல்வேறு விசயங்களைப் பொருத்தது. வாதி, பிரதிவாதிகளின் பணபலம், அதன் சாட்சிகளை விலைக்கு வாங்கும் அவர்களது சக்தி, அவர்கள் வைக்கும் வக்கீல்களின் திறமை, நிர்வாகத்திலும் காவல் துறையிலும் அவர்களுக்கு உள்ள செல்வாக்கு என பல விசயங்களைப் பொருத்தது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக நீதிபதிகளின் ஆளுமையையும் பொறுத்தது.
வி. ஆர். கிருஷ்ணய்யர் போன்ற ஒரு அசாதாரணமான நீதிபதியையும், மற்ற சாதாரண நீதிபதிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இது விளங்கும்.
அரசியல், நிர்வாகம், காவல்துறை என அனைத்து துறைகளுமே சீரழிந்து இருக்கிறது. உருப்படியாக இருப்பது நீதித்துறை மட்டுமே என்ற ஒரு கருத்து பரவலாக இருக்கிறது. இது மிகத்தவறான ஒரு கருத்து. இதைச் சொல்வதற்கு தைரியம் வேண்டும். வாரண்ட் பாலா அவர்களுக்கு இந்த துணிச்சல் இருக்கிறது.
இந்தியாவில் நீதிபதிகளும், நீதிமன்றங்களும் விமர்சனத்திற்கு உள்ளாவதில்லை. இதற்குக் காரணம் நீதிமன்றங்களிடம் இருக்கும் “நீதிமன்ற அவமதிப்பு” என்னும் மிகப்பெரும் சட்ட ஆயுதம். இச்சட்டம் போக வேண்டிய ஒன்று என வி. ஆர். கிருஷ்ணய்யர் போன்ற சட்ட மேதைகள் பல வருடங்களாக வாதிட்டு வருகின்றனர்.
நீதியைத்தேடி... என்கிற இப்புத்தகத்தில் நீதித்துறையில் நிலவும் சீர்கேடுகள் பற்றியும், அதற்கான காரணங்கள் பற்றியும் வாரண்ட் பாலா அவர்கள் தனது சொந்த அனுபவத்தின் அடிப்படையில் ஆராய்ந்துள்ளார். “நன்றாக படித்தவர்கள் எல்லாம் மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், பொறியியல் என பல்வேறு துறைகளுக்குச் சென்று விடுகின்றனர். தகுதி குறைவானவர்களே சட்டப்படிப்பை தேர்ந்தெடுக்கின்றனர்” என்கிற ஆசிரியரின் கூற்றும் உண்மையென்றாலும், நீதித்துறையில் நிலவும் பல முக்கியமான பிரச்சனைகளுக்கான முக்கிய காரணமாக இதைக்கூற முடியாது.
இப்புத்தகம் பெரும்பாலும் பேச்சு வழக்கில் எழுதப்பட்டுள்ளது. படிக்கின்றவருக்கு ஆசிரியர் தன்னுடன் பேசிக்கொண்டிருப்பதைப் போன்ற ஒரு எண்ணத்தை உருவாக்குகிறது. ஒவ்வொருவரும் ஏன் சட்டம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும், அப்படி தெரிந்து கொண்டால் எப்படி தங்களுக்காகத் தாங்களே வாதாடலாம் என்பதைப் பற்றியும் இப்புத்தகம் எளிமையாக விளக்குகிறது.
பொதுவாக காவல்துறை எப்படி நடந்து கொள்கிறது, விசாரணைக்கு ஒருவரை அழைத்துச் செல்லும் போதும், கைது செய்யும் போதும் அவ்வாறு விசாரணைக்கு அழைத்து செல்லப்படுபவரின் (இழுத்து செல்லப்படுகின்றவர் என சொல்ல வேண்டும்) கைது செய்யப்பட்டவரின் உரிமைகள் என்ன என தெரிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு இப்புத்தகம் மிக உதவியாக இருக்கும்.
புகார் கொடுத்தவரே புலனாய்வு நடத்தும் வாய்ப்பை பெற முடியும் என்பதும், விசாரணைக்கு செல்வதற்கு போக்குவரத்து செலவிற்கு பணமில்லை என்றால் அதைக்கூட கேட்டுப்பெற முடியும் என்பதும் சட்டம் தெரியாதவர்களுக்கும் நிச்சயம் புதிய விசயங்கள் தான்.
சாதாரண மக்கள் நீதிமன்றங்களில் எதிர்கொள்ளும் மற்றொரு முக்கிய பிரச்சினை வக்கீல்களும், நீதிபதிகளும் ஆங்கிலத்திலேயே பேசிக் கொள்வார்கள் (எப்படிப்பட்ட ஆங்கிலம் என்பது வேறு விசயம்). இதுபோன்ற சந்தர்பங்களில் விசாரணையை எதிர்கொள்கிறவர் வக்கீலையும், நீதிபதியையும் தமிழில் பேசும்படி கேட்டுக்கொள்ள முடியும். அவர்களும் பேசியாக வேண்டும்.
“ஆங்கிலத்தை அரைகுறையாக தெரிந்து வைத்து கொண்டு வக்கீல்கள் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுடன் சேர்ந்து நீதிபதிகளும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்”, என்கிற ஆசிரியரின் கூற்று எராளமான வக்கீல் நண்பர்களை கொண்டவன் என்கிற முறையிலும், அடிக்கடி நீதிமன்றங்களுக்கு போகிறவன் (நண்பர்களை சந்திக்க) என்கிற வகையிலும் நன்கறிவேன்.
“இதுவரை எந்த நீதிபதிக்காவது சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளதா?” என்றால் இல்லை. இதற்கு காரணம் அவர்களின் தேச துரோக ஜாதிப்பற்றுதான். தண்டனை கொடுக்க வேண்டியவரும் நீதிபதி என்பதால்தான்”, என்று ஆசிரியர் தடாலடியாக எழுதினாலும் இதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் யாராவது குற்றம் செய்து அது நிரூபிக்கப்பட்டால் கூட அவரை நாடாளுமன்றத்தில் இம்பீச்மெண்ட் கொண்டு வருவதன் மூலம் மட்டுமே பதவியை விட்டு நீக்க முடியும்.
இந்தியாவில் நீதிபதிகள் நியமனம் (உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களுக்கான) என்பது ஒரு ஏமாற்று என்றும், ஜனநாயக கோட்பாடுகளுக்கே எதிரானது என்றும், இந்தியாவின் புகழ் பெற்ற சட்ட வல்லுனர்களுள் ஒருவரான ஏ. ஜி. நூராணி கூறுகிறார்.
ஒரு நாட்டின் நீதித்துறையில் அரசியல் சாசன சட்டம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் நீதிபதிகள். ஏனெனில் அரசியல் சாசன சட்டத்திற்கு அவர்கள் அளிக்கும் விளக்கம்தான் இறுதியானது. “There is no guarantee of justice expect the personality of the judge” என்ற போலந்து நாட்டின் சட்ட மேதையான Stanislaw Ehrlich கூறினார்.
ஆங்கிலத்தில் சட்ட புத்தகங்களை வாசிக்க வாய்ப்பில்லாதவர்களுக்கு இந்த புத்தகம் மிகவும் உதவியாகவும் குற்றவியல் சட்டத்தின் அடிப்படைகளை தெரிந்து கொள்ள விரும்புகிறவர்களு இப்புத்தகம் ஒரு எளிமையான அறிமுகத்தை தருகிறது. இப்புத்தகத்திலிருக்கும் வாக்கிய பிழைகளை தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
க.திருநாவுக்கரசு
குறிப்பு: இவர்கள் உட்பட வேறுசில இதழ்களும் சுட்டிக்காட்டியதற்கு ஏற்ப, அடுத்த பதிப்பில் எழுத்துப்பிழைகள் சரிசெய்யப்பட்டு விட்டன.
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment