எனக்கு அவ்வப்போது வரும் மின்னஞ்சல்களில் உங்களது கருத்துக்களை, எங்களுடைய இதழிலோ, வலைப்பக்கத்திலோ அல்லது வேறு வகையிலோ நாங்கள் பதிவிடலாமா என்று அனுமதி கேட்பதை பெரும்பான்மையினர் வாடிக்கையாகவே வைத்துள்ளனர்.
இந்த வகையில் நேற்றுவந்த மடலிது...
ஒவ்வொரு முறையும் இவர்கள் ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லியே அலுத்துப்போய் விட்டது. இனி யார் அப்படி கேட்டு மின்னஞ்சல் செய்தாலும், அவர்களுக்கு இப்பதிவை சமர்ப்பிப்பது என்கிற நோக்கிலேயே இப்பதிவு.
முதலில் நானொரு சட்ட ஆராய்ச்சியாளன். சட்டத்தின் பலனை மக்களுக்கு விழிப்பறிவுணர்வாக ஊட்டுபவன்.
சட்டம் என்பது சமுதாயத்தின் பொதுச்சொத்தேயன்றி, என்பாட்டன் சொத்தன்று. எவரது பாட்டன்சொத்தும் அன்று என்பதை நீங்கள் நன்றாக புரிந்து கொள்ளவேண்டும். ஆதலால், நான் சட்டந்தொடர்பாக எதை எழுதினாலும் அது பொதுவுடைமையேயன்றி, எனது தனியுரிமை கிடையாது.
இதனை 2004 ஆம் ஆண்டு எழுதிய முதல் நூலிலும், அதன் பிறகு எழுதப்பட்ட ஒவ்வொரு நூலிலும், இதழிலும் தெளிவுபடுத்தி உள்ளேன். ஆனால், பத்து வருடங்களை கடந்து விட்டப்பின்னும்கூட, தேவையேயில்லாமல் அனுமதி கேட்டே அலுப்படையச் செய்து விட்டீர்கள்.
எனவே, நேற்று அனுப்பிய கடிதமே இறுதியாக இருக்கட்டும்.
சட்டத்திற்கே, சட்டத்திற்கு புறம்பாக தனியுரிமை கொண்டாடி, பொய்யர்கள் புகுத்திவிட்ட, இதுபோன்ற வெற்றுச்சடங்கு அனுமதி சம்பிரதாயங்களில் இருந்து முதலில் வெளியே வாருங்கள்.
இன்றைய உலகமய-மாக்கள், தாராளமய-மாக்கள், தனியார்மய-மாக்களால், மக்களுக்கு பொதுவுடைமை கோட்பாடு என்றால் என்னவென்பதே மறந்து விட்டதுபோல தெரிகிறது.
மேலும், சட்டம் மாத்திரமல்லாமல் நான் எழுதும் எல்லா கருத்துக்களும் பொதுவுடைமையே என்பதால், எந்த கேள்வியும் இல்லாமல் விரும்பிய வகையில் பரப்பலாம். இப்படி சிலர் செய்து கொண்டுதாம் இருக்கின்றனர்.
உதாரணத்திற்கு மதுரையில் இருந்து வெளிவரும் தெலுங்கர் கீதம் மற்றும் உயிரோசை மாத இதழ்களைச் சொல்லலாம். இதுபோலவே, அக்கு ஹீலர் உமர் பரூக் உள்ளிட்ட அன்பர்கள், நான் எழுதிய மக்களை மதிமயக்கும் ரத்ததானம் என்கிற கட்டுரையை, துண்டறிகையாக வெளியிட்டே பரப்பி வருகிறார்கள்.
நேற்று வெளியிட்ட வாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்! கட்டுரையை கூட, அல்லா பகேஷ் என்கிற அன்பர் இருமாதங்களுக்குமுன் கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே எழுதி வெளியிட்டேன். வசதிவாய்ப்பு உள்ளவர்கள் இதைகூட துண்டறிக்கையாக வெளியிட்டு, வாகன ஓட்டிகளிடமும், போக்குவரத்து காவலர்களிடம் வினியோகித்து தவறுகளை குறைக்கலாமே!
வசதி இருந்தால், எனது நூல்களை நீங்கள் விரும்பும் வெளியீட்டாளர் பெயரில் வெளியிட்டும் விற்றுக் கொள்ளுங்கள். இதனால், எனக்கோ அல்லது வேறுயாருக்கோ கூட ஐந்து பைசாகூட பங்கு தரவேண்டாம். ஆனால், இதற்காக நிதிப்பங்களிப்பு இல்லாத மற்ற பங்களிப்பை செய்துதரவும் தயாராய் இருக்கிறேன்.
ஆனால், எக்காரணம் கொண்டும் கருத்துக்களை கூட்டியும், குறைத்தும் அல்லது வேறு எதுசெய்தும் வெளியிட அனுமதியில்லை. இப்படிச் செய்யவும், பங்குதொகை தரவும் ஓரிரு பதிப்பகங்கள் முன்வந்தன. ஆனால், கருத்தே முக்கியம் என்பதால் மறுத்து விட்டேன்.
எனவே, சட்டம் மற்றும் சமூக நலன் சார்ந்து விழிப்பறிவுணர்வை ஊட்டி, பொதுவுடைமை கோட்பாட்டை நிலைநிறுத்த ஆர்வலர்களை அன்புடன் வரவேற்கிறேன்.
குறிப்பு: நீங்கள் வெளியிடும் பதிவு, எப்பதிவிலிருந்து எடுக்கப்பட்டது என்பதை, வாசகர்களின் வசதிக்காக மறக்காமல் குறிப்பிடுங்கள். இப்படிப்பட்ட பகிர்தலுக்கு அடியில் வழக்கம்போல், நன்றி வாரண்ட் பாலா என்று குறிப்பிடுவதை கட்டாயம் தவிருங்கள்.
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment