No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Friday, January 31, 2014

வாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்!மத்திய அரசால், நாடு முழுவதற்குமான ஒரு சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று விட்டால், அந்த சட்டமானது இந்தியா முழுவதும் பரவலாக அமல்படுத்தப்பட்டுள்ளதாகவே கருத வேண்டும். அதாவது அச்சட்டத்தின்படி, இந்திய குடிமக்கள் நடந்து கொள்ள வேண்டும்.

அப்படி நடக்காத குடிமக்களை அதற்கென நியமிக்கப்பட்டுள்ள பிரத்தியோக அரசு ஊழியர்கள், அச்சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள வழிவகைகளை கையாண்டு சட்டத்தை அமல்படுத்துவதில் அதிகப்படியான முனைப்பை காட்ட வேண்டும்.

அப்படி முனைப்பு காட்டாமல் அல்லது கண்டும் காணாமல் இருந்த காரணத்தால், ‘‘குற்றம் எதுவும் நிகழ்ந்தால் அக்குற்றத்திற்கு என்ன தண்டனையோ, அதில் பாதி தண்டனையை அந்த அரசு ஊழியருக்கும் விதிக்க வேண்டுமென இந்திய தண்டனைச் சட்டம் 1860 இன் பிரிவு 119 அறிவுறுத்துகிறது’’.

ஆனாலும், குற்றம் நிகழ்வதற்கு அடிப்படை காரணமாக இருக்கிற அரசு ஊழியர்கள் எவரும் தண்டிக்கப்படுவதில்லை. காரணம், இதுபற்றி கேள்வி எழுப்ப வேண்டிய மக்களிடம் இருக்கும் சட்ட விழிப்பறிவுணர்வு இன்மையே! கடமையுணர்வு இன்மையே!!

பொதுமக்களுக்கு தேவையான ஊழியங்களை செய்வதற்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் நியமிக்கப்படும், அரசு ஊழியர்கள் மற்றும் பொது ஊழியர்கள் தங்களின் சட்டப்படியான கடமைகளை செவ்வனே செய்து விட்டால், நாட்டில் எவருக்குமே பிரச்சினை இருக்காது.

ஆனால், தங்களுக்கு என்னென்ன சட்டக்கடமைகள் இருக்கின்றன என்பது அவ்வூழியர்களுக்கு தெரிவதில்லை என்பது ஒருபுறமிருக்க, தனக்காக ஊழியம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு இருக்கும் கொஞ்ச, நஞ்ச சட்ட விழிப்பறிவுணர்வு கூட, அவர்களை வேலை வாக்க வேண்டிய முதலாளிகளான மக்களுக்கு இருப்பதில்லை. அதனாலேயே, அவர்கள் நம்மை ஏய்த்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாமும், அவர்கள் சொல்வதே, செய்வதே சரி என அவர்களின் நடைமுறையை, சட்டம் என்றே நம்பிக் கொண்டு இருக்கிறோம். நடைமுறை என்பது, ஒருவர் தனக்கு ஏற்றபடி தன்னிச்சையாக சட்ட விரோதமாக செயல்படுவதாகுமே தவிர, சட்டமல்ல.

அதனால், அந்நடைமுறைக்கு நாம் எவ்விதத்திலும் கடமைப்பட்டவர்கள் அல்ல. ஏனெனில், சட்டக் கடமை என்பது முற்றிலும் வேறு. அதற்குதான் நாம் கட்டுப்பட வேண்டும்.

சுருக்கமாக சொல்லப் போனால், மக்களுக்கு போதிய சட்ட விழிப்பணிவுணர்வு வந்து விட்டால், யாருமே அரசு ஊழியத்துக்கும், அரசை ஆளும் ஊழியத்திற்கும் வரமாட்டார்கள். இதற்கு பதிலாக பிச்சை எடுத்து பிழைத்துக் கொள்ளலாம் என்பார்கள்.

ஆனாலும், இப்படியொரு நிலை, அரசு ஊழியத்திற்கு வந்து விட்ட, அதில் சொகுசாக வாழ்ந்து விட்ட, தங்களுக்கு வந்து விடக்கூடாது என்பதற்காகவேதாம், அரசை ஆள்பவர்களும், அதன் ஊழியர்களும் சட்டக் கல்வியை அடிப்படை கல்வியில் கொண்டுவர மறுக்கிறார்கள்.

இந்த முறையானது நம்மை அடிமையாக வைத்திருக்க நினைத்த ஆங்கிலேயர்களின் நியாயமற்ற கொள்ளை முறை என்பதாலும், இதற்கு நீதிபதிகளும் உடந்தையாக இருப்பதாலும் தாம், நீதிபதிகள் கொள்ளை கூட்டத்தின் தளபதிகள் என்று நீதியைத்தேடி... சாட்சியங்களை சேகரிப்பது எப்படி என்கிற ஐந்தாவது நூலில் குறிப்பிட்டு உள்ளேன்.

இதனை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிபதிகளும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, அவர்களுக்கும் கொடுத்துள்ளோம்.

பொதுவாக, எந்த காவல்துறையாக இருந்தாலும், அக்காவல்துறையின் கடமை, குற்றம் நடைபெறும் முன்பாகவே அதனை தடுத்து நிறுத்துவதுதானே தவிர மாறாக, குற்றம் நடந்தப்பின் நடவடிக்கை என்ற பெயரில் சமுதாயத்தை சீர்கேடு செய்து, தங்களின் பொருளாதாரத்தை சீர்த்தூக்கிக் கொள்வது அன்று.

ஆனால், இப்பொருளாதார சீர்கேட்டு கடைமையைத்தான் காவல்துறையைச் சேர்ந்த ஊழியர்கள் ஆற்றிக்கொண்டு இருக்கிறார்கள். ‘கடமை’ என்பது உயர்தரமான செயலை குறிக்கும் சொல். ‘கடைமை’ என்பது கீழ்தரமான செயலை குறிக்கும்.

ஆம்! சட்ட அறியாமையால் வாகன ஓட்டிகள் செய்கிற குற்றங்களே பரவாயில்லை என்கிற அளவில், சட்ட அறிவோடு போக்குவரத்து காவல்துறை ஊழியர்களால் புரியப்படும் குற்றங்களே மிக, மிக அதிகம்.

இவர்களின் அடிப்படை நோக்கம், வாகன ஓட்டிகளை குற்றம் புரிய வைத்து அல்லது குற்றம் புரிந்ததாக மாயையை உருவாக்கி பணம் பறிப்பதே!

ஓர் குறிப்பிட்ட இடம் ஒரு வழிப்பாதை என்பது, அவ்வழியாக தொடர்ந்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாக இருக்கும். அவ்வழியாக புதிதாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இது குறித்து, போக்குவரத்து காவல்துறை நிர்ணயிக்கப்பட்ட குறிப்பிட்ட அளவில் வைத்திருக்கும் அறிவிப்பு பலகையை விட, பல நூறு மடங்கிலான தனியார் விளம்பர அறிவிப்பு பலகைகள் வானக ஓட்டிகளின் கண்களை ஆக்கிரமித்து விடவே, அவ்வாகன ஓட்டி, அவ்வொருவழிப் பாதையில் போய் விடுகிறார்.

உடனே, ஒருவழிப்பாதையின் உள்ளே ஒளிந்து நிற்கும் போக்குவரத்து காவலர், திருடர்களை வலைவீசி பிடித்தது போல, அந்த அப்பாவி வாகன ஓட்டியை பாய்ந்து பிடித்து, வழக்கு பதிவு செய்வேன் என பீலா விட்டு பணத்தை கறந்து விடுகிறார்.

ஆனால், உண்மையில் இவரின் கடமை என்ன?

ஒரு வழிப்பாதை எந்த இடத்தில் ஆரம்பிக்கிறதோ, அந்த இடத்தில் தனது காவல்பணியை செய்து, தவறாக நுழைய முயல்வோருக்கு தக்க வழி காட்டுவதும், அதையும் மீறி சென்றால் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி, இனி சட்டத்தை மீறக்கூடாது என்கிற வகையில் படம் கற்ப்பிப்பதுதான்.

இதேபோல, பிரதாண சாலைகளில் தனது சிறிய அளவிலான சொகுசு கார்களை போக்குவரத்துக்கு சிறிது இடைஞ்சல் தரும் வகையில் அல்லது தராத வகையில் (அதுவும்  அருகில் போதுமான பார்க்கிங் வசதி இல்லாத போது) நிறுத்தி விடுச் சென்றால் கூட, அச்சொகுசு கார்களின் உரிமையாளர்கள், தங்களுக்கான கப்பத்தை கட்டாமல் எடுத்துச் சென்று விட முடியாத வண்ணம், அதற்காகவே பிரத்தியோகமாக தயாரித்து வைத்துள்ள கருவியைக் கொண்டு பூட்டுவதோடு, அவ்வாகனத்தை கண்காணிக்கும் விதமாக, முன்பாகவோ அல்லது பின்பாகவோ தங்களது பெரிய அளவிலான தங்களது கனரக வாகனத்தை நிறுத்தி வைத்து, உண்மையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவது போன்ற கேலிக்கூத்தான செயல்களில் போக்குவரத்து காவல் ஊழியர்கள் ஈடுபடுவது ஊரறிந்த ஒன்றுதான்.

இவைகள் குற்றத்தை தடுக்கும் பொறுப்பில் உள்ள தாங்கள் பொறுப்பின்றி குற்றங்களை புரிந்து விட்டு, பாவம் ஒரு பக்கம் பழியொரு பக்கம் என்பது போல, ஏமாளிகள் மீது குற்றம் சுமத்தி பணம் பறிக்கும் செயல் என்றால், குற்றம் புரிந்தது போன்ற மாயையை ஏற்படுத்தி பணத்தையும் பறிக்கிறார்கள். எப்படி தெரியுமா?

பொதுவாக, வாகன ஓட்டிகள் தனக்கான ஓட்டுனர் உரிமம் உட்பட, வாகனத்துக்கான ஆவணங்கள் அனைத்தையும் (பை, கை)யிலேயே வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என நினைக்கிறார்கள். இது தவறு. இந்த ஆவணங்களை வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ அல்லது வேறு பாதுகாப்பான இடத்திலோ கூட வைத்திருக்கலாம்.

ஒருவேளை, வாகனச் சோதனையின் போது இந்த ஆவணங்கள் இல்லையென்றால், சம்பந்தப்பட அந்த ஆவணங்களை, குறைந்தது பதினைந்து நாள் கால அளவில் எப்போது வேண்டுமானாலும் சரி பார்ப்பதற்காக, தனது மேல்நிலை ஊழியரிடம் காண்பிக்க கோரி சட்டப்பூர்வ அறிவிப்பைதான் தர முடியுமே தவிர, உடனே அபராதம் விதிக்க முடியாது.  

இவ்வறிவிப்பின்படி, அதில் குறிப்பிட்ட அக்காலத்திற்குள் நமக்கு நேரம் இருக்கும் போது காண்பித்து விட்டால், அந்த அறிவிப்பை ரத்து செய்து கொள்வார்கள். அப்படி காண்பிக்கா விட்டால் மட்டுமே நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும். வழக்கு தொடுத்தாலும் கூட, வழக்கில் காண்பித்துக் கொள்ளலாம். இதனால், ஒன்றும் குடிமுழுகி போய்விடாது.

இதெல்லாம், ஏதோ என் கற்பனையென்று நினைத்து விடாதீர்கள். சந்தேகம் இருந்தால், கீழேயுள்ள போக்குவரத்து காவலூழியர்கள் வழங்கிய அறிவிப்பை இருபுறமும் நன்றாகப் படித்துப் பாருங்கள். குறிப்பாக, நான் கட்டமிட்டு காட்டியுள்ள பகுதியைப் படியுங்கள்.  

அதேபோல, ஓரு வாகனமானது திருடப்பட்டுள்ளது அல்லது ஒரு குற்றத்தை புரிந்து விட்டு தப்பிப்பதற்காக அவ்வாகனம் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான அடிப்படை முகாந்திரம் இல்லாமல், சாவியை எடுப்பதோ, ஆவண பரிசோதனைக்கு தேவையான சுமார் பதினைந்து நிமிட கால அளவிற்கு மேல் எந்தவொரு வாகனத்தையும் நிறுத்தி வைக்கவோ அல்லது பறிமுதல் செய்யவோ முடியாது.
ஒருவேளை பறிமுதல் செய்வதாக இருந்தால், அப்படி பறிமுதல் செய்ததற்கான காரண காரியத்தோடு கூடிய ஒப்புதலை, காவல் ஊழியர்கள் அவ்வாகனத்தை ஒட்டி வந்தவருக்கு உடனடியாக வழங்க வேண்டும்.

ஆஹா! என்ன அருமையான யோசனைகள். இப்படியெல்லாம் சட்ட விதிகள் இருக்க கூடாதா என ஏங்காதீர்கள். நான் மேலே சொன்னவை யாவும் யோசனைகள் அல்ல. உண்மையில், இது தான் சட்ட விதிகளின் அறிவுறுத்தல்.

நான் சொல்வதில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால்,  போக்குவரத்து காவலர்கள் தரும் காவல்துறை அறிவிப்பின் இரண்டு பக்கங்களையும் படித்து பாருங்கள். எனது கூற்றின் உண்மை நன்றாகவே விளங்கும்.

இதோ உங்களுக்காக அப்பக்கங்கள்...


இது தலைக்கவசம் அணியாததற்கான அபராதத்தை நீதிமன்றத்தில் செலுத்துவதாக கூறி பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இதன்படி அபராதத்தை காவலூழியர்களும், நிதிபதிகளும் கேட்கவில்லை. இவர் கட்டவுமில்லை. 

பலே பாண்டியா... பலே! 
ஏன் தெரியுமா?

நீதிமன்றத்துக்கு செல்வதெல்லாம் பெரிய வேலையென நீங்கள் எப்படி நினைக்கிறீர்களோ, அப்படித்தான் காவலூழியர்களும், அரசூழியர்கள் உள்ளிட்ட பலரும் பயப்படுவார்கள். ஆனால், இது அதிகபட்சமாக அபராதம் என்றப் பெயரில் வழிபறி செய்யும் வழக்குகளுக்கு மட்டுமே பொருந்தும்.   

இப்படி கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு நொந்து அலைந்த கதையாக, கையில் தரும் காகிதத்தைக் கூட படித்துப் பார்க்காமலும், இது போன்ற சட்ட விசயங்களை தெரிந்து வைத்துக் கொள்ளாமலும் உரிமைகளை இழக்கிறோம்.

ஆமாம், அது இல்லை, இது இல்லையென காவலூழியர்கள் அபராதம் கேட்கும்போது, முதலில் நீங்கள் எனக்கு கொடுக்க இருக்கும் அறிவிப்பில், உங்களுக்கு சொல்லப்பட்டுள்ள அறிவுறுத்தலை படிக்கவும் என அறிவுறுத்துங்கள்.

ஒருவேளை பின்பக்கத்தில் கட்டமிட்டு காட்டியுள்ள செய்திக்கு மாறாக வேறு தகவல் அச்சிடப்பட்டு இருந்தாலோ அல்லது அச்செய்தியே இல்லாமல் இருந்தாலோ, அது பொய்யான அறிவிப்பு என்பதை புரிந்து கொண்டு, இது நீங்களே அச்சிட்டதா என சம்பந்தப்பட்ட காவலூழியர்களை கேட்டால் மிரண்டு விடுவார்கள். 

இதற்காக இவ்விரு பக்கங்களையும் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.  வேறு ஏதாவது ஏடாகூடமாக செய்தால், அங்கிருந்தப் படியே 100 க்கு தொடர்பு கொண்டு, சம்பவ இடத்தை குறிப்பிட்டு, ‘‘இங்கு காவலூழியருக்கான சீருடையில் இருக்கும் நபர், எவ்வளவு சட்ட விதிகளை எடுத்துச் சொன்னாலும் சட்டத்துக்குப் புறம்பாக நடக்கிறார். எனவே, போலியான நபராக இருப்பாரோ என சந்தேகிக்கிறேன்’’ என புகார் சொன்னால் போதும்.

அதற்குப் பிறகு அங்கு வாகன சோதனையே நடக்காது. ஆம், வாகன ஓட்டிகளிடம் வழிபறி செய்து வசூலித்தது போதுமென மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு கிளம்பி விடுவார்கள் என்பதை, நானே பலமுறை செய்து காட்டியதும், கண்டதும் உண்டு.

அப்படியானால், வாகன சோதனைகளின் அடிப்படை நோக்கந்தான் என்ன... குற்றங்களைத் தடுப்பதா என்றால் இல்லை. குற்றங்களை செய்யவிட்டு, அதனை காரணங்காட்டி வழிபறி செய்வதே!

சரி, எதற்காக வழிபறி செய்கிறார்கள் என்றால், அவர்களுக்கு அரசால் கொடுக்கப்படும் தெண்டக் கூலியைப் போல, பலமடங்கு தொகையை மக்களிடம் வழிபறி செய்தாவது கொடுக்க வேண்டுமன்பது, அவ்வடிமை ஊழியர்களுக்கான எழுதப்படாத சட்டமாம்!

ஆனால், சட்டம் என்பது நமது நல்வாழ்விற்கு வழி காட்டுவதுதானே தவிர, துன்பப்படுத்துவதற்கு அன்று என்பதற்கு ஓரிரு சட்ட விதிகளைப் பற்றி பார்ப்போம். 
குற்ற விசாரணை முறை விதிகள் 1973 இன் விதி 424 இன்படி, சட்டப்படியான விசாரணைக்கு பின் நீதிமன்றத்தால் அபராதம் மட்டுமே தண்டனையாக விதிக்கப்படும் போது, அதைச் செலுத்தவும் கூட, அறுபது நாள் கால அவகாசமும், முன்று தவனைகளும் இருக்கிறது.

இம்மூன்று தவனைகளில் முதல் தவனையை சரியாக முப்பது நாட்களுக்குள் விதிக்கப்பட்ட அபராதத்தில் சரி பாதியையும், மீதி பாதி தொகையை எப்படி வேண்டுமானாலும் இரு தவனைகளில் செலுத்தலாம். 
இப்படி செலுத்தாது போனால் மட்டுமே, சிறையில் அடைக்க முடியும். இப்படி அடைத்தப் பின்னுங்கூட, அபராதத்தை கட்டி விட்டு வெளியே வரலாம்.  
இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 69 இன்படி, இதிலும் சிறப்பு என்றால், ரூ 500 அபராதத்துக்கு ஐந்து நாள் சிறைவாசம் என வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாள் சிறையில் இருந்து விட்டால், ரூ 400 ஐக் கட்டினால் போதும் என சட்டம் நியாயமாகவே இருக்கிறது.  
இவை பேரூந்தில் பயணச்சீட்டில்லாமல் பயணம் செய்யும் பயணிகள் உட்பட எந்தவொரு குற்ற நடவடிக்கையின் பேரில் அபராதம் விதிக்கப் பட்டாலும் பொருந்தும். ஆனால், மக்களின் ஊழியப் புறம் போக்குகளுக்கு இதெல்லாம் தெரிவது இல்லை. 
மோட்டார் வாகனச் சட்டப்பிரிவு 178 இன்படி, பயணச்சீட்டில்லாமல் பயணம் செய்வது குற்றம் என பேரூந்தில் அறிவிப்பு செய்யப்பட்டிருக்கும். 
இதில், 178(1), 178(2) என இரண்டு  உட்பிரிவுகள், முன்னிருக்க வேண்டியது பின்னுக்கும், பின்னிருக்க வேண்டியது முன்னுக்கும் என உள்ளன.  
ஆமாம், உண்மையில் நடத்துனர்களின் ஊழியம் பயணிகளை எண்ணிப்பார்த்து பயணச் சீட்டை வாங்குவதே. பயணிகளுக்கு இந்தப் பொறுப்பு இருந்தாலும், பயணிகள் விவரிக்க இயலாத பல்வேறு சூழ்நிலைகளில் பயணிப்பவர்கள். ஆகையால், பயணச்சீட்டைப் பெற தவறி விடலாம். 
எனவே, பயணியிடம் பயணச்சீட்டை கேட்டு வழங்காத நடத்துனருக்கே பிரிவு 178(1) இன்கீழ் முதலில் அபராதம் விதிக்கப்பட வேண்டும். பின்னரே 178(2) இன்கீழ் பயணிக்கு விதிக்கப்பட வேண்டும். இதற்கான வகையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும். 
ஆனால், இந்திய வரலாற்றில் நடத்துனருக்கு அபராதம் விதிக்கப்பட்டதே கிடையாது என்பதற்கு நமது மடத்தனம்தானே காரணம்.

இந்நிலையில், சட்ட முறையான விசாரணை இல்லாமல் எந்த நபரின் உயிரையோ அல்லது உரிமையையோ பறிக்க கூடாது என்ற இந்திய அரசமைப்பு கோட்பாடு 21 க்கு முற்றிலும் எதிராக, தாங்களே நீதிபதிகள் என்பன போன்ற மாயையை ஏற்படுத்தி, போக்குவரத்து காவல்துறை உடனடியாக பணத்தை பறிக்கிறது என்றால், நடமாடும் நீதிமன்ற நீதிபதிகளும் கூட போக்குவரத்து காவல்துறைப் போன்றே திட்டமிட்டு பணத்தை பறிக்கிறார்கள்.

இதையே நாம் மற்றவர்களிடம் செய்தால், வழிபறிக் கொள்ளை என வழக்கு பதிவு செய்யும் இக்கூட்டு களவானி கொள்ளையர்கள், எந்தெந்த நாட்களில், எங்கு பணம் பறிப்பது, இதற்கு எந்த நிதிபதி பொறுப்பேற்பது என்று போடுகின்ற திட்டத்தை ஒவ்வொரு மாவட்ட மற்றும் மாநகர தலைமை குற்றவியல் நடுவர்களின் அறிவிப்பு பலகையில் ஒருவாரம் முன்பாகவே ஒட்டப்பட்டிருக்கும்.

நீதியைத்தேடி... வாசகர் ஒருவர் தலைக்கவசம் அணியவில்லை என்று நடமாடும் நிதிபதி ரூ.100 ஐ அபராதமாக விதித்து உடனே கட்டு, இல்லையென்றால் சிறையில் அடைத்து விடுவேன் என மிரட்ட என்ன செய்வது என்று என்னிடம் உலாப்பேசியில் ஆலோசனை கேட்டார்.

இதை அறிந்த போக்குவரத்து காவலர், ‘உன்னை மாதிரி எத்தன பேர பாத்திருக்கோம்...’ என இல்லாத பீலாக்களை எல்லாம் அவிழ்த்து விட்டது எனக்கும் கேட்டது.

நானோ, நேராக நிதிபதியிடம் சென்று குற்ற விசாரணை முறை விதி 424 ஐ படித்து விட்டு, ‘பின் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்க சொல்லுங்கள்’ என ஆலோசனை சொன்னேன்.

அதை சொல்லுவதற்காக நடமாடும் நிதிமன்றத்துக்கு சென்ற போது, ‘அவரிடம் பீலா விட்டுக் கொண்டிருந்த காவலர் எங்கே போகிறாய் என கேட்க, நான் சொன்ன ஆலோசனையை அப்படியே சொல்லி நிதிபதியிடம் சொல்லப் போகிறேன்’ என வாசகர் சொன்னதும், ‘என்ன திடீர்னு சட்டமெல்லாம் பேசுற; நீ கிளம்பு, உனக்கு விதித்த அபராதத்தை நான் கட்டிக் கொள்கிறேன்’ என வாசகருக்கு கும்பிடு போட்டு வழியனுப்பி வைத்து விட்டார்.   

சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தற்போது  தலைக்கவசம் அணியாத, இருசக்கர வாகனம் ஓட்டுநர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் எனவும், மேலும் தொடர்ந்தால், ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவ்வப்போது தனது அறிக்கை மூலம் அச்சுருத்தி வருகிறது.

தனது இச்செயலுக்கு கடந்தாண்டுகளில், தலைக்கவசம் அணியாததால் இறந்தவர்கள் என்ற இரு புள்ளி விபரங்களை முன் மொழிந்துள்ளது. ஆனால், அதனை நாம் வழிமொழிய இயலாது. ஏன்?

உண்மையில், வாகனம் ஓட்டும் ஒவ்வொரு நபரும் அல்லது சவாரி செய்யும் ஒவ்வொரு நபரும் (அதாவது பின்னால் அமர்ந்து செல்பவரும்) தலைக்கவசம் அறிய வேண்டியது அவசியம் என மோட்டார் வாகனச் சட்டம் 1988 இன் பிரிவு 129 வாகன ஓட்டிகளுக்கும், அதில் பயணம் செய்பவருக்கும் அறிவுறுத்துகிறது.

பல்வேறு இருசக்கர வாகன விபத்துக்களில், அவ்வாகனத்தை ஓட்டியவர்கள் எவ்வித சிறு காயமும் இல்லாமல் தப்பித்து விடுவதும், பின்னால் அமர்ந்து சென்றவரே அமரர் ஆனதும், இங்கு கவணம் செலுத்தப்பட வேண்டிய ஒன்றாகும். இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு பல்வேறு சூழ்நிலைகள் இருந்தாலும், ஒரு சில நிகழ்வுகளில் ஓட்டுனர் விழிப்பறிவுணர்வோடு வாகனத்தை ஓட்டும் போது, சமயோசித்தமாக செயல்பட்டு தப்பித்து விடுகிறார். இதில், தடை ஏற்படும் போது தப்பிக்க முடியாமல் போய் விடுகிறது.

வாகனத்தை ஓட்டுபவருக்கு இருக்கும் இருக்கும் பொறுப்புணர்வு, பின்னால் அமர்ந்து செல்பவருக்கு இருக்க வேண்டிய அவசியமில்லாத நிலையில், ஓட்டுனர் தப்பித்தாலும் கூட, பின்னால் அமர்ந்து சென்றவர் அமராகி விடுகிறார் என்பதை கருத்தில் கொண்டே, இவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுருத்தப்பட்டுள்ளது.

இச்சட்டமானது 1988 முதல் அமலில் இருந்தாலும் கூட, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்குத் தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் அ(வ்வ)ப்போதும், தலைக்கவசம் அணிவது கெடு பிடியாக்கப்பட்டு பின் வழக்கம் போலவே (தேவையான வசூல் அல்லது வழக்குப்பதிவு முடிந்த பின்) கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப்போய், பின் தேவைப்படும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் உயிர்தெழுவது வாடிக்கையும், வேடிக்கையும் ஆகி விட்டது.

தலைக்கவசத்தால், தலையில் அடிப்பட்டு ஏற்படும் உயிரிழப்பு தடுக்கப்படுகிறது என்றாலும் கூட, உடலின் மற்ற பகுதிகளில் ஏற்படும் ஊனத்தோடு நடைப்பிணமாக உற்றார், உறவினர், நண்பர்கள் என பலருக்கும் பாரமாய் உயிர்வாழ்வதை விட, உயிர் விடுவதையே விரும்புகிறோம் என்பது அப்படி பாதிக்கப்பட்டு, சொல்லெனா துயரத்திலும், அனைவரிடம் இருந்து தூரத்திலும் நடைபிணமாய் வாழ்ந்து வருபவர்களின் ஆதங்கமாகும்.

தலைகவசம் அணிந்து வாகனம் ஓட்டும் போது தங்களுக்கு ஏற்படும் பல்வேறு வகையான இன்னல்கள், இடர்பாடுகள் குறித்தும் எடுத்துரைத்து, தலைக்கவசம் அணிய வேண்டும் என கட்டாயப்படுத்துவது எங்களின் அடிப்படை உரிமையை பறிப்பதாகவே உள்ளது எனவும், எனவே தலைக்கவசம் அணிவதும் வாகன ஓட்டிகளின் விருப்பத்தைப் பொறுத்தது என்கிற அளவில் உத்தரவிட கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இத்தள்ளுபடிக்கு அடிப்படை காரணம், மத்திய அரசு இயற்றியுள்ள மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக எவ்விதமான உத்தரவையும் பிறப்பிக்க உயர்நீதிமன்றத்துக்கு போதிய சட்ட அதிகாரம் இல்லாததுதான். ஆனால், இது குறித்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய இயலும் என்றாலும் கூட, அப்படிச் செய்ததாக தெரியவில்லை. பாதிக்கப்பட்டு நடை பிணமாக உள்ளவர்களுக்கு உச்சநீதிமன்றம் செல்லது சாத்தியமானதும் அல்ல.

இது போன்ற தர்க்கத்துக்கு உரிய சட்ட சங்கதிகளில், சம்பந்தப்பட்ட இரு சக்கர வாகன ஓட்டிகளிடமே கருத்து கேட்டு, கருத்தொற்றுமை அடிப்படையில் சட்டத்தை செயல்படுத்துவது அல்லது தேவையானபடி திருத்துவது அல்லது நீக்குவது போன்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைக்கு அரசு வித்திட வேண்டும்.

இதைவிட சிறப்பானதாக, வாகன ஓட்டுனர் தலைக்கவசம் அணியாததால் விபத்தில் சிக்கி தலையில் அடிபட்டு ஊனமுற்றாலோ அல்லது உயிரிழந்தாலோ மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே விபத்து காப்பீட்டு நஷ்ட ஈட்டை கோர முடியும் என்று, அரசு ஓர் அறிவிப்பின் மூலம் தலைக்கவசம் அணிவதும், அணியாததும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது என்று இது தொடர்பான அனைத்து சச்சரவுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம்.

வாகன விபத்துக்களுக்கு வாகன ஓட்டிகளின் அவசர வேகம் மட்டுமே காரணமல்ல. தங்களின் விலை மதிப்பில்லாத உயிரை மாய்த்துக் கொள்ள அல்லது உடலுறுப்புகளை சிதைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் எவருமே வாகனம் ஓட்டுவதில்லை.

ஆனாலும் விபத்தில் சிக்குகிறார்கள் என்றால், அடிப்படை காரணம், அரசின் மது விற்பனையே. மகிழ்ச்சியில் ஆரம்பித்து துன்பத்தில் முடிவதுதான், ‘மது’ என்ற மதுவின் உள்ளர்த்தம் அவ்விரு எழுத்துக்களிலேயே பொதிந்துள்ளது பலருக்கும் தெரிவதில்லை.

இன்ப, துன்ப நிகழ்வு எதுவாக இருந்தாலும், மது விருந்து என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகி விட்டது. இப்படி விருந்தில் மது அருந்தியவர்கள் அல்லது வீட்டிற்கு தெரியாமல் அல்லது வீட்டில் வைத்து மனுவை அருந்தும் சூழ்நிலை இல்லாதவர்கள், தங்களின் இஷ்டம் போல் மதுவை குடித்து விட்டு, அதன் மயக்கத்தில் வீட்டிற்கோ அல்லது வேறு இடத்திற்கோ வாகனத்தை ஓட்டிச் செல்லும் போதுதான், பெரும்பாலான விபத்துக்கள் நிகழ்கிறது என்றால்,  இவ்விபத்துக்களில், மது அருந்தும் பழக்கமில்லாத பலரும் கூட, பலிகடா ஆக வேண்டிய பரிதாபமும், ஒவ்வொரு நிமிடமும் நடந்தேறிக் கொண்டுதான் இருக்கிறது.

ஆம்! ஒரு வாகன ஓட்டி சட்ட விதிகளுக்கு உட்பட்டு, என்னதான் முறையாக வாகனம் ஓட்ட தெரிந்தவராக இருந்தாலும், எதிரே வருபவரோ அல்லது இவரை கடந்து செல்பவரோ தவறாக வந்தால் அல்லது கடந்தால், அதனால் ஏற்படும் விபத்தில் சிக்குவது சம்பந்தப்பட்ட இருவாகன ஓட்டிகளும்தானே தவிர, தவறாக வந்தவர் மட்டுமே அல்ல.

விபத்துக்குறிய அடுத்த காரணங்களாக, சீர்கேடான சாலைகள், வாகன தணிக்கை மற்றும் இதர காரணங்களுக்காக, சாலைகளின் நடுவே திடீர் திடீரென முளைக்கும் காவல் துறையின் முறையற்ற தடுப்புகள், வேகத்தடைகள், சாலைகளில் பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்டு, முறையாக மூடப்படாத அதல, பாதாள குழிகள் என அடிப்படையான காரணங்கள் பல இருக்கும் போது அவைகளை களைய முனைப்பு எதையும் காட்டாமல் தலைக்கவசத்தின் மீது மட்டும் கண் வைத்திருப்பது போக்குவரத்து காவல்துறையின் கண்ணியமிக்க செயலாக தெரியவில்லை.

மாறாக, அரசின் காலியாக உள்ள கஜானாவில், தங்களின் பங்கை நிரப்பி, புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசிடம் நற்பெயரையும், பதவி உயர்வுகளை உயர்த்திக் கொள்ள நினைப்பவர்களின் அறிக்கையே இது என எண்ணத் தோன்றுகிறது.

மேலும், தொடர்ந்து தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால், ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது முழுக்க முழுக்க சட்டத்தை தவறாக பயன்படுத்தும் நோக்கத்தைக் கொண்டது.

மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 184 இன்படி, அபாயகரமான விதத்தில் வாகனத்தை ஓட்டி, பிறரின் உயிருக்கு ஊறு விளைவித்த குற்றத்துக்காக, அச்சட்டத்தின் பிரிவு 21-இன்படி, நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் காலத்தில் தற்காலிகமாக ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவோ அல்லது விசாரணையின் முடிவில் தண்டிக்கப்பட்டால் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ உரிமத்தை ரத்து செய்ய நீதிபதிக்கு மட்டுமே அதிகாரமிருக்கிறது.

ஒரே காவல்துறை தலைவரின் தலைமையின் கீழ்தான், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகர மற்றும் மாவட்ட போக்குவரத்து காவல்துறையும் உள்ளபோது, சென்னை போன்ற ஒரு சில இடங்களில் மட்டும் இதுபோன்ற சட்ட நடவடிக்கையை எப்படி நாம் நியாயப்படுத்தி வழிமொழிய முடியும்?

இந்த கட்டுரையைப் பின்பற்றி சட்ட சாதனைப் புரிந்தவர்களின் அனுபவங்களையும் படியுங்கள்.

வாகன ஓட்டிகளான வாசகர்களின் சாதனை அனுபவங்கள் - 1

பிற்சேர்க்கை நாள்: 08-03-2018

சட்டக் கேடு! சாபக்கேடு!!


இந்தப் படத்தில் உள்ள தகவலை தொகுத்தது, நம் வாசகர் என சொல்ல வெட்கப்படுகிறேன். படித்துப் பாருங்கள்; உங்களுக்கே உண்மை புரியும்!
ஆமாம், சட்டத்துக்கு புறம்பானதை எல்லாம் சட்டமென முட்டாள் தனமாக சொல்லிக் கொடுப்பது, ‘‘சட்ட கேடையம் அல்ல; சட்டக் கேடு! சாபக்கேடு!!
சட்டஞ் சொல்லிக் கொடுக்குறேன்னு, சட்டத்துக்கு புறம்பானதை சொல்லிக் கொடுக்கும் முட்டாள்கள் எல்லாம், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஒரு கூட்டமாக திரிகிறது.பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

13 comments:

 1. Good. I am Ahamed Ibrahim from CUMBUM Theni dt. I am reader of your books. I appreciate your service to the Nation. Long live.
  Thanking You.

  ReplyDelete
 2. Dear Mr. Balaw,

  Its with great honour & amp; respect for your service that you have given an insight to laws and rights for an Indian Citizen. I wish you keep this service with gods blessings.

  I would appreciate if you could clarify me on some points which i'm concerned about.
  1) Do police have the right to stop a vehicle and demanding the documents for checking purpose? If so on what scenario they can stop a vehicle and how we know that its true?
  2) Does the law protect a citizen from his freedom of movement on the public road without being stopped and question and demanding identification documents him if he is not involved or committed any crime?

  ReplyDelete
 3. வணக்கம் வினோத். பொதுவாக இதுபோன்ற சட்ட விழிப்பறிவுணர்வு கட்டுரைகளை எழுதும்போது, எதிர்க் கேள்விகள் எதுவும் எழாத வண்ணமே எழுதுவேன். இந்த வகையில் தங்களது கேள்விகளுக்கான பதில்கள் கட்டுரையிலேயே உள்ளது. நன்றாக புரியும் வரை படிப்பது நல்லது.

  //சட்ட அறியாமையால் வாகன ஓட்டிகள் செய்கிற குற்றங்களே பரவாயில்லை என்கிற அளவில், சட்ட அறிவோடு போக்குவரத்து காவல்துறை ஊழியர்களால் புரியப்படும் குற்றங்களே மிக, மிக அதிகம்.

  இவர்களின் அடிப்படை நோக்கம், வாகன ஓட்டிகளை குற்றம் புரிய வைத்து அல்லது குற்றம் புரிந்ததாக மாயையை உருவாக்கி பணம் பறிப்பதே!//

  //ஓரு வாகனமானது திருடப்பட்டுள்ளது அல்லது ஒரு குற்றத்தை புரிந்து விட்டு தப்பிப்பதற்காக அவ்வாகனம் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான அடிப்படை முகாந்திரம் இல்லாமல், சாவியை எடுப்பதோ, ஆவண பரிசோதனைக்கு தேவையான சுமார் பதினைந்து நிமிட கால அளவிற்கு மேல் எந்தவொரு வாகனத்தையும் நிறுத்தி வைக்கவோ அல்லது பறிமுதல் செய்யவோ முடியாது.//

  ReplyDelete
 4. super message

  ReplyDelete
 5. Very good information but pls post in simple words and smaller version.keep it simple then even layman can also understand easily.

  ReplyDelete
  Replies
  1. புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், இப்படி விரிவாகத்தான் சொல்ல இயலும்.

   Delete
 6. Recently court has scrapped some advocated who argued on helmet case

  ReplyDelete
 7. அருமையான விளக்கம்
  நன்றி
  தங்கள் சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. sir, it is very nice and valuable to read your informations, please continue your duty to our community to make it atleast better than past

  ReplyDelete
 9. இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றமா? அனைவரும் கட்டாயம் இன்சூரன்ஸ் பண்ணவேண்டுமா?

  ReplyDelete
 10. தெளிவான பதிவு. மிக்க நன்றி.

  ReplyDelete
 11. Thanks for creating awareness... Thats the need of the hour..

  ReplyDelete
 12. சிறந்த பதிவு.. நன்றி ஐயா...ஏதேனும் ஆலோசனை தேவைப்பட்டால் தங்களை எப்படி தொடர்பு கொள்வது...

  ReplyDelete

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

 • 1. இந்திய சாசனம் 1950
 • 2. நீதிமன்ற சாசனம் 1872
 • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
 • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
 • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)