தன் கண்ணுக்கு தெரியும் ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்ட அரசூழியர்களே அகற்றலாம். ஆனால், அவர்களே அதற்கு லஞ்சத்தைப் பெற்றுக்கொண்டு உடந்தையாக இருப்பதால் அகற்றமாட்டார்கள்.
மேலும் லஞ்சம் பெற நம்மிடம் எழுத்து மூலமாக புகார் கேட்பார்கள். புகார் கொடுத்தால், போட்டுக்கொடுத்து விடுவார்கள்.
இதற்கு பதிலாக, அந்த ஆக்கிரமிப்பு இடத்திற்கு உரிய இடம் யார் பெயரில் பதிவாகி இருக்கிறது, அங்கு கட்டிடம் கட்டுவது யார், அதற்கு யார் அனுமதி அளித்தது போன்ற விபரங்களை கேட்டால் அகற்றி விடுவார்கள்.
ஓசூர் ஏரியில், துணைஆட்சியர் அலுவலகம் எதிரிலேயே ஆக்கிரமித்து கோயில் கட்டினார்கள். கோவில் இருந்தால் இடிக்கமாட்டார்கள் என்கிற நம்பிக்கையில் ஆக்கிரமிப்பாளர்கள் தங்களது ஆன்மிக தளங்களை முதலில் நிறுவுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அவ்விடம் குறித்த விபரத்தை துணைஆட்சியரிடம் நேரடியாகவே கேட்டோம்.
நம் சட்ட விழிப்பறிவுணர்வில், தாராள நம்பிக்கை கொண்டவர் என்பதால், ஒருநாள் அதிகாலையில் காவல்துறை பாதுகாப்புடன் இடித்து தள்ளிவிட்டார்.
இப்படி ஏதும் நடக்கலாம் என்று முன்னெச்சரிக்கையாக ஆக்கிரமிப்பாளர் தடையுத்தரவை வாங்கி வைத்திருந்திருந்ததால், அத்துணையாட்சியர் மீது உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை கொண்டு வந்தார். இச்செய்தி இதழ்களில் எல்லாம் பல் இளித்தன.
இந்திய அரசமைப்பு கோட்பாடு 226(3)(அ) இன்கீழ், அதுதொடர்பான ஆவணங்களை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு கொடுக்காமல், உயர்நீதிமன்றம் தடையுத்தரவு வழங்ககூடாது. அப்படி வழங்கினால் சட்டப்படி செல்லாது.
ஏனெனில், சொந்த இடத்திற்கு எந்த முட்டாளும் தடையுத்தரவு கேட்கமாட்டான். ஆக்கிரமிப்பு செய்யும் அல்லது உரிமையில்லாத இடத்திற்குதாம் வாங்குவான் என்பதால்தாம் இக்கட்டுப்பாடு.
ஆனால், நம் கொள்ளைக்கூட்டத்தின் தளபதிகளான முட்டா நிதிபதிகளுக்கு கொடுக்கவேண்டிய துட்டைகொடுத்து விட்டால், ஆவணங்களை கொடுக்காமலேயே, தடையுத்தரவை பிறப்பித்து விடுவார்களே!
இதனை செய்துமுடிக்கும் திறன்கொண்ட பொய்யரைத்தானே, நிதிபதிகளுக்கான இடைத்தரகராக ஆக்கிரமிப்பாளர்கள் தேர்ந்தெடுப்பார்கள்!!
இதையெல்லாம் அறியாத சட்ட ஆராய்ச்சியாளனா நான்...
துணைஆட்சியருக்கு நீதிமன்ற அவமதிப்பு விளக்கம்கோரும் அறிவிப்பனுப்பிய நிதிபதிக்கு, முதலில் நீங்கள் இதுக்கெல்லாம் விளக்கம் சொல்லுங்கள் என்கிற எனது அறிவிப்பை உயர்நீதிமன்றத்தில் நேரடியாகவே சார்பு செய்து, ஒப்புதலைப் பெற்று, அவ்வொப்புதலுடன் துணைஆட்சியருக்கு சார்பு செய்தேன். அவரும் ஒப்புதலை தந்தார். நம் அறிவிப்பை பலமுறை படித்து மகிழ்ந்தார்.
நாம் வலியுறுத்தும் சட்ட விழிப்பறிவுணர்வின் அவசியத்தை உணர்ந்து, சட்டத்தையும் படிக்க ஆரம்பித்து விட்டார். அத்தோடு அவர்மீதான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையும் கைவிடப்பட்டது.
இவரொரு கால்நடை மருத்துவர் என்பதால், துணை ஆட்சியராக இருந்தபோதே, கால்நடைகளுக்கு வைத்தியம் பார்த்த மனிதாபிமானி. இவரது பெயரைச் சொன்னால், உங்களுக்கு புரியாது.
இவர் தன்மகள் கோபிகாவை படிக்க வைக்க மேற்கொண்ட நம்பிக்கையூட்டும் செயலைச் சொன்னால் எளிமையாக புரிந்துவிடும்.
ஆமாம், நம்மால் ஏழைக்குழந்தைகளும் தரமான கல்வி பெறமுடியும் என்பதற்காக, 2011 ஆம் ஆண்டில், ஈரோடு மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, தன்மகளை அரசுப்பள்ளியில் சேர்த்த திரு.ஆனந்தகுமாரே இவர்!
சபாஷ்… இதோ ஒரு முன்னுதாரண கலெக்டர்!
அரசு தொடக்கப்பள்ளியில் மகளைச் சேர்த்து சத்துணவும் சாப்பிட வைத்த கலெக்டர்!
இன்றைக்கு கூலித் தொழிலாளி தொடங்கி குபேரன் வரை தங்கள் பிள்ளைகள் கான்வென்ட் எனப்படும் தனியார் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிக்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
மேடைதோறும் தமிழ் வழிக் கல்வி, அரசுப் பள்ளிகளின் முக்கியத்துவம் பற்றி வாய்கிழியப் பேசும் அரசியல் தலைவர்களோ, தங்கள் மகள் மகன் பேரன் பேத்திகளை ரகசியமாக தனியார் பள்ளிகளில் ஆங்கிலக் கல்வி படிக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் முதல் முறையாக ஒரு மாவட்ட கலெக்டர், தனியார் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த தன் குழந்தையை, அரசு தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேர்த்ததோடு, மற்ற குழந்தைகள் சாப்பிடும் அதே சத்துணவை தன் குழந்தைக்கும் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் பெயர் டாக்டர் ஆனந்தகுமார் ஐஏஎஸ். ஈரோடு மாவட்ட கலெக்டர். இவர் மனைவி ஸ்ரீவித்யா, தர்மபுரி அரசு மருத்துவமனையில் டாக்டராகப் பணியாற்றுகிறார்.
இவர்களுக்கு இரு மகள்கள். அதில் மூத்த மகள் கோபிகா கடந்த ஆண்டு தர்மபுரியில் ஒரு தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்தார். அப்போது ஆனந்தகுமார் தர்மபுரி கலெக்டராக இருந்தார். அதிமுக ஆட்சி வந்ததும், அவர் ஈரோடு கலெக்டராக மாற்றப்பட்டார்.
கோடை விடுமுறைக்குப் பின் நேற்று பள்ளிகள் தொடங்கியதும், தன் மூத்த மகளை ஈரோடு குமலன்குட்டை பகுதியில் உள்ள அரசு ஊராட்சிப் பள்ளிக்கு அழைத்துவந்தார். உடன் அவர் மனைவி டாக்டர் ஸ்ரீவித்யாவும் வந்தார்.
பள்ளிக்கூடத்தை நோக்கி மாவட்ட கலெக்டரே வருவதைப் பார்த்து ஆடிப்போன தலைமை ஆசிரியை, மற்ற ஆசிரியைகள், பெற்றோர்கள் திடீர் சோதனைக்காக அவர் வந்திருக்கலாம் என்று கருதி, பரபரப்புடன் அவரை வரவேற்றனர்.
அப்போதுதான் அவருடன் கலெக்டரின் மனைவி, மகளும் வந்திருப்பதைப் பார்த்தனர். தன் மகளை அந்தப் பள்ளியில் சேர்ப்பதற்காக வந்திருப்பதாக கலெக்டர் கூறியதும், அதை நம்ப முடியாமல் அவர்கள் திகைத்துப்போனார்கள்.
பின்னர் சுதாரித்துக்கொண்ட தலைமை ஆசிரியை ராணியும், அங்கு சோதனைக்காக வந்திருந்த தொடக்க கல்வி அதிகாரி அருள்மொழியும் கலெக்டரை தலைமை ஆசிரியரின் அறைக்கு அழைத்துச் சென்று, தலைமை ஆசிரியரின் இருக்கையில் அமரச் சொன்னதற்கு மறுத்த கலெக்டர், புதிய மாணவிகளை சேர்ப்பதற்காக வந்த பெற்றோர் அமர்ந்திருந்த பெஞ்சிலேயே அமர்ந்து கொண்டார்.
சீருடை-மதிய உணவு தருவீர்களா…
பிறகு தனது மகள் கோபிகாவை 2-ம் வகுப்பில் தமிழ் வழி கல்வியில் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தலைமை ஆசிரியையிடம் வழங்கினார். முறைப்படி 2-ம் வகுப்பில் சேர்க்கப்பட்டதும், கலெக்டர் அனந்தகுமார் கோபிகாவைமற்ற மாணவர்-மாணவிகளுடன் வகுப்பில் அமரவைத்தார்.
தனது மகளுக்கும் மற்ற மாணவர்களைப் போல் பள்ளியில் சத்துணவு மற்றும் சீருடை வழங்குவீர்களா? என்று கேட்டபோது, தலைமை ஆசிரியருக்கு பேச நா எழவில்லை. நிச்சயம் வழங்கப்படும் என்று அவர் பின்னர் உறுதியளித்தார்.
அத்தோடு, அந்தப் பள்ளியின் புரவலர் திட்டத்தில் கலெக்டரும், அவருடைய மனைவியும் தங்களை இணைத்துக்கொண்டனர். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இது சொந்த விஷயம்…
மகளை அரசு பள்ளிக்கூடத்தில் சேர்த்துள்ளது குறித்து கலெக்டர் அனந்தகுமாரிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘இது என்னுடைய தனிப்பட்ட விஷயம்’ என்று அவர் பதில் அளித்துள்ளார். பின்னர் அவரை என்வழி சார்பில் தொடர்பு கொண்டு வாழ்த்தினோம். “என்மகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பது முன்பே எடுத்தமுடிவு. மற்ற பள்ளிகள் குறித்து நான் எதுவும் கூற விரும்பவில்லை. இது எங்கள் தனிப்பட்ட விருப்பம்”, என்றார் நம்மிடம்.
கலெக்டர் அனந்தகுமாரின் சொந்த ஊர் கோவை மாவட்டம் பல்லடம் வதம்பசேரி. இவர் கால்நடைத்துறையில் ஆராய்ச்சி (பிஎச்டி) பட்டம் பெற்றவர். 2003-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வு பெற்ற அவர், கடந்த ஆண்டு தர்மபுரி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.
அந்த மாவட்ட மக்களால் மிகவும் பாராட்டப்பட்ட ஆட்சியர் இவர். பழங்குடி மக்கள் விழிப்புணர்வுக்காக பல்வேறு நடவடிக்கைகளை பெரிய விளம்பரமின்றி மேற்கொண்டவர். அதிமுக அரசு அமைந்ததும் ஈரோடு மாவட்ட கலெக்டராக அனந்தகுமார் நியமிக்கப்பட்டார்.
அனந்தகுமார் தன் மகளை அரசுப் பள்ளியில் சேர்த்தது விளம்பரத்துக்காகவோ, தன்னை வித்தியாசமானவன் என்று காட்டிக் கொள்ளவோ அல்ல. கலெக்டர் மகள் படிக்கும் அந்தப் பள்ளியில் இனி ஆசிரியர்கள் பாடம் சொல்லித் தருவது எப்படி இருக்கும் என்பதையும், சத்துணவின் தரம் எந்த அளவு இருக்கும் என்பதையும் சற்றே யோசித்துப் பாருங்கள்.
அரசுப் பணியாளர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்பது பல காலமாக சொல்லப்பட்டு வரும் விஷயம். வேலை விஷயத்தில் மட்டும் அரசுப் பணிதான் வேண்டும் என பிடிவாதம் காட்டும் இவர்கள், கல்விக்கு லட்சக்கணக்கில் தனியாருக்கு கொட்டிக் கொடுக்கத் துடிக்கின்றனர். அரசுப் பள்ளிகள் பக்கம் ஒதுங்குவதே இல்லை.
உயர்பதவியிலுள்ளவர்கள் தங்கள் பிள்ளைகளை இப்படி அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதன் மூலம், அவற்றின் தரத்தை, ஒழுக்கத்தை உயர்த்த முடியும். பள்ளியின் நடவடிக்கைகளை, ஆசிரியர்களை கண்காணிக்கும் காவலர்களாக உயர்பதவியில் இருக்கும் ஒவ்வொருவரும் மாற இது வழிவகுக்கும்.
ஆனந்தகுமார் ஆரம்பித்து வைத்துள்ள இந்த ஆரோக்கியமான போக்கு தொடருமா?
இனிவரும் நாட்களில், ‘அரசுப் பள்ளிகளில் இடமில்லை… ஏதாவது தனியார் பள்ளிகளைப் போய் பாருங்கள்!’ என்று கூறும் நிலை வருமா?
வெளிவர இருக்கிற கடமையைச் செய்! பலன் கிடைக்கும் நூலின், வாசகர்களின் (மெ, பொ)ய்யறிவு பகுதியிலிருந்து...
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment