நாட்டில் நடக்கும் ஒவ்வொரு பிரச்சினைக்கும் வெவ்வேறான காரணத்தை, அப்பிரச்சினையை சந்திப்பவர்கள் சொல்வார்கள். ஆனால், அவைகள் அனைத்திற்கும் ஒரே பிரதாண காரணம் பணமும், இதனை பிரதானமாக எ(ண்ணு, ன்னு)ம் நம் எண்ணமுமே!
ஆம்! ஒவ்வொரு பிரச்சினையிலும், ஏதோ ஒரு வகையில் ஒளிந்திருக்கும் பணம் ஒழிக்கப்பட வேண்டும் என்கிற அளவிற்கு பணம் என்கிற பேய் இன்று உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. எல்லாமே பணம்தான் என்கிற நிலையில் உலகம் உழன்று கொண்டிருப்பதால்தான், கோடான கோடி ஊழல்கள் கூட சர்வ சாதாரணமாகி விட்டன.
ஊழல் என்றால், அரசியல்வாதிகள்தான், அதிகாரிகள்தான் செய்கிறார்கள் என்பதில்லை. தனி மனிதரும் கூட தனக்கு தெரிந்த வகைகளில் எல்லாம் செய்கிறார்கள். அந்த அளவிற்கு பணம், நற்குணம் கொண்ட தனி மனிதரைக் கூட விட்டு வைக்காமல், மிருகங்களாக்கி விட்டது.
இன்றைய உலகில் பலவிதமான பொருள்கள் மட்டுமல்லாமல் அன்பு, பாசம், மனிதத்தன்மை போன்ற எல்லாவற்றுக்கும் விலை வைக்கும் அளவுக்கு பணம் சர்வவல்லமை பெற்று, அதன் ஆதிக்கம் சமுதாயத்தின் எல்லா தட்டுகளிலும் நீக்கமற நிறைந்துள்ளது.
சரி, இப்படிப்பட்ட பணத்திற்கு யார் மதிப்பு கொடுத்தது? பணம் என்றால் என்ன? எந்த ஒரு உயிரினத்திற்கும் தேவைப்படாத பணம் மனிதனுக்கு மாத்திரம் தேவைப்பட்டதன் உள்நோக்கம் என்ன? என்பன போன்ற விபரங்கள் எவருக்கும் விளங்குவதில்லை.
அதெப்படிங்க பணமில்லாமல் வாழ முடியும் என கேட்பவராக இருந்தால், இது குறித்த கொள்கை விளக்கதளத்திற்கு செல்லலாம். இத்தளத்தில் ஆங்கில மொழியில் வெளியிடப்பட்டுள்ள நூலை படிக்கலாம்.
உண்மையில் பணம் என்பது வெற்றுக் காகிதமே!
ஆனாலும், அதற்கு மதிப்பு கொடுப்பதும் நாமே!!
இதனால் ஏற்பட்டுள்ள அதிர்ச்சியான மாற்றங்களை எல்லாம் நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல, மக்களின் ஆழ்ந்த சிந்தனைக்கு உ(ய)ரிய விஷயமாக, மிக யதார்த்தமான வகையில் எடுத்துச் சொல்லும் வகையில் விரைவில் வெளி வந்துள்ளது, இரண்டு மணி, இரண்டு நிமிட நேர திரைப்படம் 500 & 5 (ஐநூறும் & ஐந்தும்)
பணம் என்னும் வெற்றுக் கலர் காகிதமானது 5 ரூபாய் 10 ரூபாய் கூட பெரிய விஷயமாக இருக்கும் அடித்தட்டு மக்களில் இருந்து 500 ரூபாய் 1000 ரூபாயையே சர்வ சாதாரணமான விஷயமாகப் பார்க்கும் மேல்தட்டு மக்கள் வரை எப்படியெல்லாம் பலரது கைகளில் ஒவ்வொரு நாளும் புகுந்து பல வகைகளில் புழங்குகிறது என்பதே இப்படத்தின் சாரம்.
எவ்வளவு பணம் படைத்த மனிதராக இருந்தாலும், மூச்சு நின்று விட்டால் பிணமே!
இத்தகைய சூழ்நிலையில் மனிதகுலம் உண்மையில் மதிப்பு கொடுக்க வேண்டிய ‘அன்பானது’ தன் செல்வாக்கை இழந்துள்ளதோடு மட்டுமல்லாமல், தன் உண்மையான அர்த்தத்தையும் இழந்து, இப்பணத்தின் ஆதிக்கத்தின் முன் உதட்டளவு வார்த்தையாகி அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய்க்கொண்டிருக்கிறது என்பதே இன்றைய உலகின் யதார்த்த நிலை.
மொத்தத்தில் பணத்தால் மட்டுமே மனிதகுலம் சீர்கெட்டு கிடக்கிறது என்பதை பறைச்சாற்றும் விதமாக,
காந்தி தாத்தா போட்டோ போட்டு அச்சடிச்சி உட்டாங்க...
அழகழகா பொம்ம போட்டு ஜோடிச்சித்தான் வச்சாங்க...
விதம் விதமா நம்பரெல்லாம் வக்கணையா போட்டாங்க...
மொத்தத்துல சைபர் என்னும் நெஜத்த மறச்சி புட்டாங்க...
கட்டு கட்டா காகிதத்த அச்சடிச்சி வீசுறான்...
வயிறு காய உழைக்கிறவன் அதுக்கு மதிப்பு கொடுக்கிறான்...
அச்சடிச்சவன் ஆளறான். உழைக்கிறவன் வாடுறான்...
குரங்கு கையில் அப்பம் தந்த பூனைப் போல ஏங்குறான்...
நீயும் நானும் அச்சடிச்சா கள்ளபணம்...
ரிசர்வ் பேங்கும், அரசும் சேர்ந்தடிச்சா நல்ல பணம்...
பித்தலாட்டம் மர்மமான கலர் காதிதம்...
உலகத்த தன் பிடியில் வச்ச வெத்து காகிதம்...
என்கிற பஞ்ச் வசனங்கள் ஆங்காங்கே பாடல்களாக இடம் பெற்றுள்ளன.
பொதுவாக திரைப்படத்தின் கதாநாயகனாகவும், வில்லனாகவும் பெரும்பாலும் ஆண்களே பங்கேற்பார்கள். அரிதிலும் அரிதாக பெண்கள் பங்கேற்பார்கள். ஆனால், இப்படத்தில், ‘‘ஐந்நூறு ரூபாய் பணமே கதாநாயகனும், வில்லனும்’’. இதனால், பாதிக்கப்படுவது மக்களின் நீதி முதல் மீதி வரையென அனைத்தும் என்பதை வலியுறுத்தி...
பணமே இல்லாத அன்பு மயமான ஒரு உலகத்தை குறித்த ஒரு சிந்தனையை விதைக்கும் நோக்கில், இன்றைய நடைமுறை சினிமாக்களின் அம்சங்களான வன்முறை, ரொமான்ஸ், யதார்த்தம், இருட்டு உலகின் போக்கு, சமுதாய புரட்சி சிந்தனை இவைகள் எதுவும் இல்லாமலும், ஸ்டூடியோ சம்பிரதாயங்கள் எனும் எல்லைகளைத் தாண்டியும் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் திரையிலும், திரைக்குப் பின்னாலும் பங்களித்தவர்கள் அனைவருமே காசுக்காக அல்லாமல் நட்புக்காகவும், அன்புக்காகவும் தங்கள் உழைப்பை பங்களிப்பாக கொடுத்துள்ளார்கள்.
ஆம், இப்படத்திற்கு வித்திட்டுள்ள நால்வர் கூட்டணி சமூக அக்கரையில் நாட்டம் உள்ளவர்கள் என்பதால், அமெரிக்காவில் தாங்கள் பார்த்து வந்த வேலை வாய்ப்புகளை எல்லாம் விட்டுவிட்டு, நம் நாட்டுக்கு திரும்பியவர்கள் என்பதும், இப்படத்தில் நடித்துள்ளவர்கள் யாரும் பிரபலங்கள் இல்லாத இவர்களின் உற்றார், உறவினர் நண்பர்கள் மற்றும் நம் நீதியைத்தேடி... வாசகர்கள் என்பதும் மிகவும் குறிப்பிடத்தக்கது.
ஆனாலும், இதர செலவுகள் கைமீறிப் போய், எதையும் அடமானம் வைக்காமல் கடனும் வாங்கியாகி விட்டது.
மனித குலத்திற்கு பணம் தேவையற்றது என்பதை இந்திய பணத்தை வைத்து, தமிழில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை அமெரிக்கா, லண்டன் போன்ற நாடுகளில் கூட, திரையரங்கு உரிமையாளர்கள் வெளியிட தயாராகி விட்டார்கள். அண்டை மாநிலங்களான புதுச்சேரி மற்றும் கர்நாடகத்தின் பெங்களூர், மைசூர் போன்ற இடங்களில் கூட வெளியிட ஏற்பாடு ஆகி விட்டது.
ஆனால், நம் தமிழ்நாட்டில் .................
எப்படி சொன்னால் உங்களுக்கு புரியும் என்கிற வழிமுறையில் எடுக்கப்பட்ட படத்தை, எப்படி உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பது என்பது குறித்த கடமையை உங்களிடமே கேட்கிறோம். இதனை கேட்டுப் பார்த்து விட்டு, உங்களுக்கு தெரிந்த வழிமுறைகளை இம்மின்னஞ்சல்களில் சொல்லுங்களேன்.
மின்னஞ்சல் <acchorfilms@gmail.com>, <rmourthy@gmail.com>, <warrantbalaw@gmail.com>
குறிப்பு: தியேட்டரில் வெளியிட முடியாத காரணத்தால், இறுதியாக 30-04-2016 அன்று யூடியூபில் இல் வெளியிட்டு விட்டார்கள்.
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment