தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் இருப்பதைப் போலவே, ஒவ்வொரு மனிதனுக்கும் தன் வாழ்க்கையின் தேவைகளைப் பெறுவதற்கு உரிமையுண்டு. ஆனால், ஒவ்வொரு உரிமையும் அதனோடு இணைந்த கடமையைச் செய்வதனால் மட்டுமே, தாமாக வந்து சேரும் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
உரிமைகளைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்த எந்த மக்களும் முன்னேறியதில்லை. கடமைகளில் கருத்தாய் இருந்தவர்களே மேன்மையை அடைந்திருக்கிறார்கள். ஏனெனில், தம் கடமையை உணர்ந்து அதனை இயல்பாக செய்பவர்கள், இயல்பாகவே உரிமைகளைப் பெற்று விடுகிறார்கள்.
உரிமையைப்பற்றி கவலைப்படாமல் கடமையைச் செய்பவருக்கு, உரிமைகள் தானே கிடைக்க, உரிமைப்பற்றியே எண்ணியவர் அதனை முற்றிலுமாக இழந்து விடுகிறார். ஆகையால், நாம் எல்லோரும் நம் கடமைகளைச் சரியாக நிறைவேற்றினால், உரிமைகளைப் பெறப் பாடுபட வேண்டியதே இல்லை.
நாம் நம் கடமைகளைச் செய்யாமல் உரிமைகளைத்தேடி அலைகையில், அவைகள் நம் கையில் சிக்காமல் நம்மை ஏமாற்றி விட்டுப் போய்விடுகின்றன. அவைகளை நாம் ஒடிப்பிடிக்க முயற்சித்தால், அவைகள் நமக்கு (பய, பற, மறை, மற)ந்தும் விடுகின்றன.
நம்மைநாமே அல்லது தன்னைத்தானே அடக்கியாள விரும்பும் நமக்கு, நமது உரிமைகள் குறித்து தெரிந்திருக்க வேண்டியதில்லை. ஆனால், நம் கடமைகள் குறித்து அவசியம் அறிந்துகொண்டு அதனை நிறைவேற்றுவதன் விளைவாக, நமக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் அனைத்தும் நம்மிடம் தானாகவே வந்தடையும்.
இப்படி நம்மிடம் தானாகவே வந்தடையும் உரிமைகளே உண்மையானவை. இவைகளை மட்டுமே நாம் ஆண்டு அனுபவிக்க முடியும். மற்ற உரிமைகள் எல்லாம், ஏதோவொரு வகையில் சுரண்டிப் பெறப்பட்ட உரிமைகளே என்பதால், அனுபவிக்க இயலாத அளவிற்கு இம்சை இருக்கவே செய்யும்.
நாம் எந்த உரிமையையும் (கே, கெ)ட்டு பெற்றிட கூடாது. நம் கடமையைச் செய்வதன் மூலம், நமக்கு வேண்டியதை நாமே நல்லதாய் எடுத்துக் கொள்ள முடியும். கடமையைச் செய்வதனால் கிடைக்கும் சக்தி, சத்தியாகிரக வழியில் கிடைக்கப் பெற்ற சக்தியாதலால், இச்சக்திக்கு நிகர் வேறெதுவும் இல்லை.
நாம் நம் கடமையைச் செய்வதற்கு எந்த தடையும் இல்லை; எல்லா உரிமையும் இருக்கிறது. இதற்காகவே நாம் வாழ்கிறோம்; சாகவும் தயாராய் இருக்கிறோம் என்றால், அதிலேயே நியாயமான நமது எல்லா உரிமைகளும் அடங்கி விடுவதால், அவ்வுரிமைகள் நம்மிடம் தானாகவே தஞ்சமடைந்து விடுகின்றன.
ஆகையால், நாம் ஒவ்வொருவரும் உரிமைகளை வற்புறுத்தாமல், தத்தமது கடமைகளை மட்டும் செய்தோமானால், நமது உரிமைகள் நம்மிடம் தாமாகவே தஞ்சமடைவதோடு, சுய ஒழுக்கமும், கட்டுப்பாடும் நம் கூடவே குடியிருந்து நிச்சயம் நம்மை காக்கும்.
இதுவரையில் நாம் எல்லோரும், நம் குடும்ப நலனுக்காகவே பாடுபட்டு வருகிறோம். இனி நம்நோக்கை இன்னும் விரிவாக்கிக் கொண்டு, நாட்டு மக்கள் அனைவரின் நலனையும் அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதுவே, மக்களாட்சியில் நம் கடமைகள் குறித்து நான், உங்களுக்கு கூற விரும்பும் நல்லுரை.
ஆதாரம்: ஜனநாயகம் - உண்மையும், போலியும் என்கிற நூலின், ஜனநாயகத்தில் உரிமைகளும், கடமைகளும் பகுதியில் இருந்து, கருத்து மாறாமல் தேவைக்கு ஏற்ப சுருக்கியும், விவரித்தும் ஒருங்கிணைத்து தொகுத்தவர், சட்டக்கடமையாளர் வாரண்ட் பாலா.
தமிழ் வெளியீடு: காந்திய இலக்கியச் சங்கம், மதுரை - 625020.
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment