No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Tuesday, October 8, 2013

கல்வி குறித்து மகாத்மா காந்தி
ஏழு மொழிகளில் காந்தியின் கையொப்பம்
எழுத்தறிவு என்பதே கல்வியின் சாதாரண பொருள். இது ஒரு கருவி மாத்திரமே. ஒரு கருவியை நல்வழியிலும் பயன்படுத்தலாம். தீய வழியிலும் உபயோகிக்கலாம். எழுத்தறிவும் அப்படியே ஆகலாம்.

கல்வியை பலர் தவறாக உபயோகிக்கிறார்கள் என்பதையும், மிகச் சிலரே நல்வழியில் உபயோகிக்கின்றனர் என்பதையும் நாம் தினமும் காண்கிறோம். இதனால், நன்மையை விட தீமையே அதிகம் செய்யப்பட்டிருக்கிறது.

கல்வியறிவு இல்லாத ஒரு விவசாயி யோக்கியமாக சம்பாதித்து பிழைக்கிறார். உலகத்தைப் பற்றிய சாதாரண ஞானமே அவருக்கு உண்டு. தன்னுடைய பெற்றோர்கள், தன் மனைவி, குழந்தைகள், கிராமத்தில் உள்ள மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது அவருக்கு நன்றாகவே தெரிகிறது. ஒழுக்க நியதிகளை அறிவதோடு அதனை அனுசரிக்கவும் செய்கிறார்.

ஆனால், தன் பெயரைக் கூட அவருக்கு எழுத தெரியாது. அவருக்கு எழுத்தறிவை அளித்து அவரது இன்பத்தை கொஞ்சமாவது அதிகரித்து விட முடியுமா என்றால் முடியாது. மாறாக, அவரது நிலை குறித்தும், குடிசை குறித்தும் அதிருப்தியைதான் ஏற்படுத்த முடியும். இதற்கு அவருக்கு எதற்கு கல்வி?

நாம் மேனாட்டு சிந்தனை வெள்ளத்தில் மிதப்பதால் எது அனுகூலம், எது பிரதிகூலம் என்பதை கூட சீர்தூக்கி பார்க்க முடியாத கல்வியை கற்கிறோம், கற்றுக் கொடுக்கிறோம்.

ஆகையால் ஆரம்பக்கல்வியும், மேல்படிப்பும் முக்கியமான காரியத்தை செய்வதற்கு வேண்டியதே இல்லை. இவை நம்மை மனிதர்கள் ஆக்குவதில்லை. நாம் நம் கடமையைச் செய்வதற்கு உதவியாக இல்லை.

நீங்களும் நானும் பொய்யானதொரு படிப்பின் தீமையில் சிக்கிக் கொண்டிருக்கிறோம். அத்தீமையில் இருந்து நான் விடுபட்டு விட்டதாக கூறிக் கொள்கிறேன். என்னுடைய அனுபவத்தின் பலனை உங்களுக்கு அளிக்க முயற்சி செய்வதோடு, இதற்காக இப்படிப்பின் ஊழலையும் உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறேன்.

கல்வியை நாம் பிரமாதப்படுத்தக் கூடாது என்று சொல்கிறேனே ஒழிய, எல்லா சந்தர்ப்பங்களிலும் கூடாது என்று சொல்லவில்லை. கல்வி காமதேனு அன்று. கல்வி விசயத்தில் கல்வி பயன் உள்ளதாய் இருக்கக்கூடும்.

நம் உணர்ச்சிகளை அடக்கி, நம் கோட்பாட்டையும் நாம் உறுதியான முறையில் அமைத்துக் கொண்டபின் கிடைக்கும் கல்வியை நாம் நன்றாக பயன்படுத்திக் கொள்ள முடியும். ஓர் ஆபரணத்தைப் போல், நம்மை அழகுபடுத்தவும் கூடும்.

ஆகையால், கல்வியை கட்டாயமாக்க வேண்டிய அவசியமில்லை.நமது பழங்கால பள்ளிக்கூட முறையே போதுமானது. ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்வதற்கே அதில் முதல் இடம்; அதுதான் (ஒழுக்கமே) ஆரம்பக் கல்வி. அந்த அடிப்படையின் மீது கட்டப்படும் கட்டிடம் நீடித்தும் இருக்கும்.


ஆங்கிலப் படிப்பை தேர்ந்தெடுப்பது, நம்மை அடிமைப்படுத்திக் கொள்வதாகும். படிப்புக்கு மெக்காலே போட்ட அடித்தளம் நம்மை அடிமைப்படுத்தி விட்டது. அவரது நோக்கம் எதுவாக இருந்தாலும், பலன் அடிமை என்பதே. சுய ஆட்சியைப் பற்றி சுய மொழியில் பேசாமல் அந்நிய மொழியில் பேச வேண்டியுள்ளது வருந்தத்தக்கதே.

ஐரோப்பியர்கள் வெறுத்துத் தள்ளிய முறைகளையே நாம் அனுசரிக்கிறோம். அவர்கள் உதறித்தள்ளி விட்ட முறைகளை எல்லாம் நாம், அறியாமையோடு பின்பற்றி வருகிறோம்.

ஐரோப்பாவின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மொழிகளின் மதிப்பை உயர்த்த அந்நாட்டு அறிஞர்கள் தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள். இங்கிலாந்தின் ஒரு சிறிய பகுதியே வேல்ஸ். வேல்ஸ்காரர்களிடையே வேல்ஸ் மொழியறிவை திரும்பவும் உயிர்ப்பிக்க பெரு முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. குழந்தைகள் வேல்ஸ் மொழியிலேயே பேசும்படி செய்வதற்கான இயக்கத்தில், லிபரல் கட்சியின் தலைவரும், பிரிட்டீஷின் பிரதம மந்திரியாக இருந்த ஸ்ரீ லாயிட் ஜார்ஜ் முக்கிய பங்கெடுத்துக் கொண்டார்.

ஆனால், நாம் ஒருவருக்கொருவர் தவறான ஆங்கிலத்தில் எழுதிக் கொள்கிறோம். நம் சிறந்த எண்ணங்கள் எல்லாம் ஆங்கிலத்திலேயே எடுத்துக் கூறப்படுகின்றன. நம் சிறந்த செய்திப் பத்திரிகைகள் ஆங்கிலத்திலேயே பிரசுரமாகின்றன. இதே நிலைமை நீண்ட காலத்திற்கு நீடிப்பதாயின், எதிர்காலம் நம்மை கண்டித்துச் சபிக்கும்.ஆங்கிலக் கல்வியை பெற்றதால், நாட்டை நாம் அடிமைப்படுத்தி விட்டோம். நயவஞ்சகம் கொடுமை ஆகியன அதிகரித்து விட்டன. ஆங்கிலம் அறிந்த இந்தியர் மக்களை ஏமாற்றி, மிரட்டுவதற்குத் தயங்குவதேயில்லை. இப்போது நாம் மக்களுக்கு ஏதாவது செய்து கொண்டு இருக்கிறோம் என்றால், அவர்களுக்குரிய கடனில், ஒரு சிறு பாகத்தை மாத்திரம் செலுத்தி வருகிறோம்.


நான் நீதிமன்றத்துக்கு போக வேண்டுமென்றால், அங்கே ஆங்கில மொழியையே உபயோகிக்க வேண்டும். நான் பாரிஸ்டர் ஆனதும், என் தாய்மொழியில் பேச முடிவதில்லை. நான் கூறுவதை என் மொழியிலேயே கூற முடியாமல், இன்னொருவருக்காக மொழி பெயர்க்க வேண்டும் என்பது வெட்கக் கேடானது. இது அடிமைதனத்திற்கான அடையாளம்.இதற்கு நான் ஆங்கிலத்தின் மீது எப்படி குற்றங்குறை கூற முடியும். ஆங்கிலம் அறிந்த இந்தியராகிய நாமே, நம்மை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறோம் என்பதால், நாட்டின் சாபம் நம்மீதுதான் விழுமேயன்றி, ஆங்கிலத்தின் மீதன்று.


நாகரீகம் என்ற நோயினால் நாம் அதிகமாக பாதிக்கப்பட்டு விட்டதால், ஆங்கிலப் படிப்பு இல்லாமல் நாம் முற்றிலும் இருந்து விடமுடியாது. அதுவரை ஆங்கில அறிவை பெற்றிருப்பவர்கள், ஆங்கில மக்களிடம் தொடர்பு கொள்வதற்கும், அவர்களது நாகரீகத்தைப் பற்றி அவர்கள் எவ்வளவு வெறுப்படைந்து இருக்கிறார்கள் என்பதை அறிவதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தங்களுடைய குழந்தைகளுக்கு, தங்களது தாய்மொழி மூலம் ஒழுக்கத்தைப் போதிக்க வேண்டும். மற்றோர் இந்திய மொழியையும் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். அவர்கள் வளர்ந்தப்பின் ஆங்கிலம் தேவை என விரும்பினால், கற்றுக் கொள்ளட்டும். ஆனால், தேவையில்லை என்பதே முடிவான நோக்கமாக இருக்கட்டும்.

ஆங்கிலத்தைக் கொண்டு பணம் சம்பாதிப்பது என்பதையும் விட்டு விட வேண்டும். குறிப்பிட்ட அளவிற்கு ஆங்கிலம் கற்க வேண்டியிருந்தால், அதில் கூட கற்றுக் கொள்ள வேண்டியது என்ன, வேண்டாதது என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஆங்கிலப் படிப்பையும், பட்டங்களையும் மதிப்பதை நாம் விட்டு விட்டாலே ஆளுவோர் விழித்துக் கொள்வார்கள்.

நம் எல்லா மொழிகளையும் விருத்தி செய்ய வேண்டும். சிறந்த ஆங்கிலப் புத்தகங்களை பல இந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்க வேண்டும். மந்திரங்களை கற்றுக் கொள்வதான நடிப்பை கைவிட்டு, ஒழுக்கம் சம்பந்தமான படிப்புக்கு முதலிடம் அளிக்க வேண்டும்.படித்த ஒவ்வொரு இந்தியரும், தம்தாய் மொழியுடன் இந்துவாக இருந்தால், சமஸ்கிருதத்தையும், இஸ்லாமியராக இருந்தால் அரபியையும், பார்ஸியானால் பாரசீகத்தையும், எல்லோருமே இந்தியையும் கற்க வேண்டும். சில இந்துக்கள் அரபு, பாரசீக மொழிகளை அறிய வேண்டும். சில இஸ்லாமியரும், பார்ஸியரும் சமஸ்கிருதத்தை படிக்க வேண்டும்.

வட நாட்டினரும், மேற்கு பிரதேசத்தவர் பலரும் தமிழ் கற்க வேண்டும். இந்தியா முழுமைக்கும் இந்தியே பொது மொழியாய் இருப்பதோடு, அதை இஷ்டம் போல் பாரசிக அல்லது நாகரி லிபியில் எழுத வேண்டும்.


இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் நெருங்கிய உறவு இருப்பதை முன்னிட்டு இவ்விரு லிபிகளையும் அறிந்திருப்பது அவசியம். இதை நாம் செய்ய முடிந்தால், ஆங்கிலத்தை சிறிது காலத்திலேயே விரட்டி விட முடியும். ஆங்கில அடிமைகளாகிய நமக்கு இவையெல்லாம் அவசியம்.நமது அடிமைத்தனத்தினால் நாடே ஆங்கிலத்திற்கு அடிமையாகி விட்டது. நாம் பெறும் சுதந்திரமே நாட்டின் சுதந்திரம்.


இந்தியா தெய்வத் தன்மையற்றதாக என்றுமே இராது. அசல் நாஸ்திகம் இந்நாட்டில் ஓங்காது. மதக்கல்வியைப் பற்றிச் சிந்திக்கும் போது எனக்குத் தலை சுற்றுகிறது.

நம் மத போதகர்கள், நயவஞ்சகர்களாகவும், சுய நலமிகளாகவும் இருக்கின்றனர் என்றே அவர்களை அணுக வேண்டியிருக்கிறது. முல்லாக்கள், தஸ்தூர்கள், பிராமணர்களின் கையிலிருக்கிறது விசை. இவர்களுக்கு நல்ல புத்தி இல்லாமல் போகுமானால், ஆங்கிலப் படிப்பினால் நாம் பெற்றிருக்கும் சக்தியை மதப்படிப்புக்காக நாம் உபயோகிக்க வேண்டும். இது அதிகக் கஷ்டமானதன்று.

சமுத்திரத்தின் ஒரு சிறு பகுதி மட்டுமே அசுத்தமாகி இருக்கிறது. அந்தச் சிறு பகுதிக்குள் இருப்பனவற்றை மாத்திரமே சுத்தப்படுத்த வேண்டியிருக்கிறது. இந்த ரகத்தை சேர்ந்த நாம் - நான் சொல்லுவது கோடிக்கணக்கானவர்களுக்குப் பொருந்தாது. ஆகையால் நம்மைக் கூட சுத்தப்படுத்திக் கொள்ளலாம்.பழமையாக இருந்த நிலையை இந்தியா அடையும்படி செய்வதற்கு நாமும் அதற்கு திரும்ப வேண்டும். நமக்குச் சொந்தமான நாகரீகத்தில் ஏற்றம், தாழ்வு, சீர்திருத்தங்கள், விளைவுகள் ஆகியன இயற்கையாகவே இருக்கும். ஆனால், ஒரு முயற்சி தேவை. அதுதான், மேல்நாட்டு நாகரிகத்தை துரத்துவது; மற்றவை எல்லாம் தொடர்ந்து தாமே வரும்.


* மகாத்மா காந்தி 1909 ஆம் ஆண்டு எழுதிய இந்தியத் தன்னாட்சி என்கிற நூலின் கல்வி என்கிற தலைப்பில் இருந்து கருத்து மாறாமல், தேவைக்கு ஏற்ப சுருக்கியும், ஒருங்கிணைத்தும் தொகுத்தவர் வாரண்ட் பாலா.
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Wednesday, October 2, 2013

இப்ப என்னா பண்ணுவ?


பரவலாக்கப்பட்ட அதிகார முறையை புரிந்து கொள்ளாமல், ‘நீ பெரியவனா, நான் பெரியவனா பார்த்துடலாம் ஒரு கை’ என மத்திய ஆட்சியாளர்களும், உச்சநீதிமன்ற நீதிபதிகளும் மீண்டும் மல்லுக்கு நிற்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இலவசங்களை அறிவித்து ஓட்டு கேட்க கூடாது, ஊழல்வாதிகள் அரசியலில் பங்கேற்க கூடாது என நான் தீர்ப்பு சொன்னா, அதை முறியடிக்க நீ அவசரச் சட்டம் போடுறியா?

இப்ப என்ன பண்ணுவன்னு பார்க்கிறேன் என்கிற வகையில்,"வேட்பாளரை நிராகரிக்கும் உரிமை வாக்காளர்களுக்கு உண்டு" என்று, இதுவரை யாருக்குமே தெரியாது இருந்த ரகசியத்தை தெரிவித்திருப்பது போல, ஒன்பது வருடமாக தீர்ப்புரைக்க தில் இல்லாமல் நிலுவையில் வைத்திருந்த வழக்கை உச்சநீதிமன்றத்தின் மூன்று அறிவாளிகள், தூசி தட்டி எடுத்து 51 பக்கத்தில் தீர்ப்பு எழுதி உள்ளனர்.

"49 ஓ" முதலில் எப்போது தெரியவந்தது... என்னென்ன நிலைகளை கடந்து வந்து இந்நிலையை எட்டியுள்ளது என்பதைப் பற்றி ஒவ்வொரும் நினைவு கூற வேண்டிய தருனம் இது.

இது என்னமோ குதிரைக்கு கொம்பு முளைத்தது போல எல்லோருக்கும் அதிசயமாகவே தெரிகிறது. நீங்கெல்லாம், ‘49 ஓ’ குரூப்பா என்பது போல வித்தியாசமாகவே பார்க்கிறார்கள். '49 ஓ' என்கிற வேட்பாளரை நிராகரிக்கும் உரிமை என்பது 1961 ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகளில் வந்ததுதாம். 

ஆம், வேட்பாளரை ஆதரித்து வாக்கு செலுத்தும் நாம், எச்சட்ட விதியின்படி அதனை செலுத்துகிறோம் என்பதை தெரிந்து கொள்வதற்கு பதிலா, தத்தமது தலை விதியின்படியே செலுத்துவதாக எண்ணுகிறோம். இந்த மானோபாவத்தால்தானோ என்னவோ, எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், வாக்களித்த மக்களுக்கு நல்ல வாழ்வளிக்க வக்கில்லாமல் மகாபாவமே செய்கிறது.

சரிங்க நீங்க சொல்றது போல, "சட்ட விதி தெரிந்தால் எல்லோரது தலைவிதியும் மாறி விடுமா என் கேட்டால், நிச்சயம் மாறும்". இதனை (நி, தீ)ர்மானிப்பதுதாம் சட்டத்தின் மதி.

எல்லா வேட்பாளர்களையும் நிராகரித்து வாக்களிப்பது ‘49ஓ’ என்றால், எதாவது ஒரு வேட்பாளரை ஆதரித்து வாக்கு செலுத்துவது, அதே தேர்தல் நடத்தை விதி ‘49எல்’. பார்வையற்றோர் அல்லது வேறு வகையில் வாக்கை செலுத்த இயலாதோருக்கு ‘49என்’. அதாவது, இவர்கள் தங்களின் வாக்கை பதிவு செய்வதற்காக 18 வயதுக்கு குறையாத ஒருவரை உதவிக்கு வைத்துக் கொள்ள முடியும். ‘49எம்’ இன்படி, வாக்குப்பதிவு ரகசியம். அவ்வளவே. 

இதை புரிந்து கொண்டால் ‘49ஓ’ வாக்கை வித்தியாசமான அல்லது வில்லங்கமான வாக்கவோ நினைக்க மாட்டீர்கள். எண்களோடு இருப்பது எல்லாமே ஆங்கில எழுத்துக்கள்.

நீங்க எல்லாம் கத்துகுட்டியாக ‘எல்’ போர்டு வைத்துக் கொண்டு மோட்டார் வாகனங்களை ஒட்டும்போது, நன்றாக ஓட்ட பழக்கப்பட்டவர்கள் உங்களை ஓவர்டேக் பண்றவங்க, நாமும் ஒருகாலத்தில் இப்படித்தானே இருந்தோம் என்பதை மறந்து விட்டு, கேவலமா பார்க்கிற மாதிரி, ‘ஓ’ இல் ஓட்டு போடுறவங்க எல்லாம், கேவலத்திலும் ரொம்பவே ஓவரா போய்க்கொண்டு இருந்த வேட்பாளர்களது அங்கீகார உரிமங்களை பிடுங்கி ஓரங்கட்டுறதுல கத்து குட்டியா இருந்து, இனி நீங்களும் அத்துபடியா  'ஓ' போடுற  அளவிற்கு வழியமைத்து கொடுத்திருக்கிறோம். 

எனக்கு தெரிய இப்படியொரு நிராகரிக்கும் வாக்குரிமை சட்டப்படியே இருப்பது 2001 இல் நடக்க இருந்த தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தலை ஒட்டிய தன்னார்வலர்களின் ஆராய்ச்சியில்தாம் தெரிய வந்தது.

இதுவும் எனது சட்ட ஆராய்ச்சியில் என்று தவறாக நினைக்காதீர்கள். என்னா, அப்போ நான் களமிறங்கி ஒருவருடம் தான் ஆச்சு!

ஆனாலும், அதன்படி ஆர்வலர்கள் வாக்களிக்க முடியாமல் போனது. நானும்தான்.

ஏனெனில், அதற்கான பிரத்தியோக படிவம் எங்களுக்கு வழங்கப்படவில்லை என்று, தேர்தலை முன்னின்று நடத்திய ஊழியர்கள் தெரிவித்ததே. பிரத்தியோக படிவம் என்பது வாக்களிக்கும் ரகசிய உரிமைக்கு எதிரானது என்கிற கூக்குரலோடு இவ்விவகாரம் அடங்கி போனது

மீண்டும் 2004 ஆம் ஆண்டில், பாராளுமன்ற தேர்தல் வந்த போது உயிர்ப்பெற்றது. அப்போதும், மெத்தப்படித்த மேதாவிகளும், ஆர்வலர்களும் '49 ஓ ' குறித்து விழிப்பறிவுணர்வு இல்லாத பிரச்சாரத்தை விழிப்புணர்வு என்கிற பெயரில் செய்தனர்.

ஆம்! "49 ஓ" இல் ஒட்டு போட விரும்புபவர்கள் அதற்கென தனியாக கொடுக்கும் படிவத்தை பூர்த்தி செய்து தர வேண்டும் என்றே பிரச்சாரம் செய்தனர். இதனால், வெகுசில ஆர்வலர்களை தவிர, மற்ற ஆர்வலர்கள் அதிருப்தி வாக்கை பதிவு செய்ய இயலாமல் போனது. இவர்களுக்கு என்னப் பிரத்தியோகப் படிவம் கொடுக்கப்பட்டது என்பதும், அப்படிவங்கள் கணக்கீட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டதா என்பதும் தெரியவில்லை.

சில ஆர்வலர்கள், இப்படி பதிவு செய்வதால் வாக்குப்பதிவு வெளிப்படையாகி விடுகிறது என்றும், அதனால் சுதந்திரமாக வாக்களிக்க முடியவில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ஏதேதோ காரணங்களின் அடிப்படையில் தள்ளுபடி செய்யப்பட்டன.

ஆனால், 49 ஓ இன்படி வாக்களிக்க தனிப்பட்ட படிவம் எதுவும் கிடையாது என்பதை சட்ட ஆராய்ச்சி முறையில் ஆராய்ந்து அறிந்திருந்ததால், '49 ஓ' இல் வாக்குபதிவை எளிதாக முதல் முறையாக வெற்றிகரமாக செலுத்தினேன்.

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வரும் இப்பிரச்சினைக்கு என்ன பெரிய ஆராய்ச்சி வேண்டி கிடக்கு என அத்தோடு விட்டு விட்டேன். 

மீண்டும் 2006 சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்க தொடங்கிய போதும், ஆர்வலர்கள் அறிவு வறுமையில் தனிப்படிவம் என்றே பிதற்றி வந்தனர். தனி பொத்தான் வேண்டுமென வழக்கும் போட்டனர். 

நாங்களும் எங்களது பாணியில், சென்னை மாவட்ட நீதிமன்றத்திலேயே வழக்கு பதிவு செய்தோம். மத்திய அரசை மாவட்ட நீதிபதி கேள்வி கேட்டால், கிழித்து தொங்க விட்டுவாங்க இல்லியா... அதனால வழக்க விசாரணைக்கு எடுத்துக்கல. இதுவும் ஒரு ஆராய்ச்சி சோதனைக்குதாம்.

இதே நேரத்தில், சில வாசகர்களின் உதவியுடன், ‘‘உங்கள் பார்வையில் தேர்தல்...’’ என்கிற தலைப்பில், ‘‘ஓட்டுரிமை வந்தது எப்படி என்பதில் ஆரம்பித்து 49 ஓ இன்படி ஓட்டுப்பதிவு செய்வது எப்படி என்பது வரை 18 நிமிட கேள்வி பதில் முறையிலான குறும்படத்தை இரவு பகல் பாராமல், இரண்டு நாட்கள் உண்ணாமல் உறங்காமல் தயார் செய்து, தவறான கருத்துக்களை பரப்பி வந்த, மேலும் எப்படி பரப்புவது என்று விவாதித்துக் கொண்டிருந்த மெத்தப்படித்த மேதாவிகள் நிறைந்த அரங்கில் அவர்களை வைத்தே வெளியிட்டு உண்மையை உணர்த்திய பிறகே தூங்கினேன்’’.

இம்முயற்சியில் வியப்படைந்த, வின் தொலைக்காட்சியில் செய்தியும், அதன் மறுபக்கமும் என்கிற தலைப்பில் எதையும் தில்லாக விமர்சிக்கும் தோழர் டி.எஸ்.எஸ்.மணி அவர்கள் முக்கிய பங்காற்றினார்.

இதனையெல்லாம் இங்கு சொடுக்கி குறும்படத்தில் காணலாம்.

ஆனாலும், நீதியைத்தேடி... வாசகர்கள் போட்ட ஓட்டையும் சேர்த்து அதிகபட்சமாக 100 கூட 49 ஓ ஓட்டு விழுந்திருக்காது. வாசகர்கள் பலரும் கூட போட முடியாமல் ஏமாந்தனர்.

2008 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்ட நீதியைத்தேடி... சட்ட அறிவுகளஞ்சியம் நூலில், எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லையா என்கிற தலைப்பில் இதுகுறித்து விரிவாக தெளிவுபடுத்தி இருந்தேன்.

இதனை படித்த கரூரைச் சேர்ந்த ஆனந்தன் என்கிற நண்பர் 2009 ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி, தத்தமது வேட்பாளர்களுக்கு ஓட்டு சேகரிப்பது போல, ‘‘யார் வேண்டுமானாலும் 49 ஓ ஓட்டுக்கு வாக்கு சேகரிக்கலாம் என்கிற உத்தரவை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெற்றார்’’.

தமிழ்நாடு முழுவதும் தீவிர கருத்துப் பிரச்சாரத்தில் இறங்கினோம். 27-04-2013 அன்று விஜய் தொலைக் காட்சியில் இது குறித்த விழிப்பறிவுணர்வு நிகழ்ச்சியிலும் பங்கேற்றோம்.

இதற்கு முன்பாகவே, இவைகள் குறித்து நான் தெளிவாகவும், விரிவாகவும் எழுதிய கட்டுரையை தினமணி நாளிதழ் நடுப்பக்க கட்டுரையாக 10-04-2009 அன்றே வெளியிட்டு விட்டதால், இதுகுறித்த விழிப்பறிவுணர்வு பல வகையிலும் பரவலானது. இதனைப்படித்த வாசகர்கள் பெறும் உற்சாகம் அடைந்தனர். காரணம்.


இக்கட்டுரையில் மிக முக்கியமாக வாக்காளர்களுக்கு இருந்த அச்சங்களான, ‘‘49 ஓ ஓட்டுக்கு தனிப்படிவம் எதுவும் கிடையாது, எல்லோரும் ஓட்டு போடும் அதே படிவமேதாம் மற்றும் வெளிப்படையாக ஓட்டு போடுவதால் எந்த பிரச்சினையும் வராது, அப்படி பிரச்சினை வந்தால் தனிப் பொத்தான் வந்து விடும்’’ என்கிற தெளிவையும், துணிச்சலையும் வாசகர்களுக்கு ஏற்படுத்தியது".

இக்கட்டுரையை ஆங்காங்கே இருந்த ஆர்வலர்கள், வாசகர்கள் என பலரும் அப்படியே பேனராக வைத்ததோடு, வாக்குப்பதிவு நாள் அன்று தனிப்படிவம் என்று குழப்பும் தேர்தல் ஊழியர்களுக்கு தெளிவுபடுத்த கையோடு நகலெடுத்து சென்று அதிருத்தி வாக்கை பதிவு செய்தார்கள்.

இதனால், இவ்விழிப்பறிவுணர்வு வாக்கு எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் எகிறியது. இது குறித்த எண்ணிக்கை, விதிகளுக்கு புறம்பாக வாக்கு எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை, வெளியிடப்படவும் இல்லை. தேர்தல் ஆணைய இணையப்பக்கத்தில் இப்போது கூட கிடைப்பதாக தெரியவில்லை.

இதில் கொடுமை என்னவென்றால், மாநில தேர்தல் ஆணையராக இருந்த திரு.நரேஷ் கும்தாவும், ஆர்வலர்களோடு கூட சேர்ந்து "49 ஓ" ஓட்டுக்கு தனிப்படிவம் என ஓய்வு பெறும் வர கூத்தடித்ததுதாம்.

2011 ஐந்து மாநில சட்ட மன்ற தேர்தலின் போதுதாம், "49 ஓ" ஓட்டுக்கு தனிப்படிவம் கிடையாது என்று இந்திய தேர்தல் ஆணையமே தெளிவிற்கு வந்ததோடு, இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஐந்து மாநில தேர்தல் ஆணையத்திற்கும் சுற்றறிக்கை அனுப்பியது.

இந்த ஆங்கில சுற்றறிக்கையை இந்திய தேர்தல் ஆணைய தளத்தில் இருந்து தரவிறக்க இங்கு சொடுக்கவும்இவ்வறிக்கையின் தமிழாக்கத்தை இத்தளத்தில் இருந்து பெற இங்கு சொடுக்கவும்

நான் தினமணி கட்டுரையில என்ன படிவம், அதை எப்படி பூர்த்தி செய்ய வேண்டும் என சொல்லியிக்கிறேனோ அது போலவே, தேர்தல் ஆணையமும் சொல்லியிருக்கா... 2009 ஆம் ஆண்டுல தேர்தல் அலுவலர்கென பிரத்தியோகமாக தயார் செய்யப்பட்டுள்ள கையேட்டின், 23 வது அத்தியாயத்துல இதைப்பத்தி சொல்லியிருக்கோம்னு, சொல்லி இருக்காங்களா...

ஆனால், தனியொரு மனிதனாக நான் இதையெல்லாம் ஆராய்ந்தறிந்து, 2004 ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே வாக்கு பதிவு செய்து விட்டேன் என்கிற நிலையில், இந்திய தேர்தல் ஆணையமோ 2009 ஆண்டுதான் தெளிவுக்கு வந்திருக்கிறது. ஆனாலும், இன்னும் தெளியவில்லை. எப்படி என்பதை பின்னால் பார்ப்போம்.

இதெல்லாம் வெளிப்படையாவும், தெளிவாகவும் எனக்கு நன்றாக புரிவதால்தாம், ‘நம்ம நாட்டில் யாருக்கும் சரியா சட்டம் தெரியாது; அதுவும் யார் எந்த சட்டக் கடமையை செய்ய நியமிக்கப்படுகிறார்களோ, முதலில் அவர்களுக்கே அது குறித்த சட்ட விழிப்பறிவுணர்வு கிடையாது’ என்று துணிந்து சொல்ல முடிகிறதே ஒழிய, வெற்றுச் சம்பிரதாய பெருமைகளுக்காக சொல்வதில்லை.

தேர்தல் ஆணையத்தின் அறிக்கையை அடுத்து, இது குறித்த விளம்பரங்களை மாநில தேர்தல் ஆணையம் நாளிதழ்களில் வெளியிட்டது. ஆனாலும், வழக்கம்போல் தேர்தல் ஊழியர்கள் விழிப்பறிவுணர்வு இல்லாமல், புண்ணாக்காகவே இருந்தனர்.

எது எப்படி இருந்தாலும், எங்களது அதிருப்தியை பதிவு செய்தே தீருவோம் என கங்கணம் கட்டிக் கொண்ட வாக்காளர்கள் மாநிலம் முழுவதும் 24859 அதிருப்தி வாக்கை பதிவு செய்துள்ளனர். சென்னையில் மட்டுமே அதிகபட்சமாக 3107 பேர் பதிவு செய்து உள்ளனர். கோவை இரண்டாம் இடத்தில் பதிவாகி உள்ளது.

இதுகுறித்த ஆணையத்தின் அதிகாரபூர்வ சான்றை தரவிறக்க TNLA2011_49O.

தமிழ்நாட்டை தவிர, வேறு எந்த மாநிலத்திலும் "49 ஓ" பற்றிய விழிப்பறிவுணர்வு வாக்காளர்களுக்கு ஏற்பட்டதாக தெரியவில்லை. இந்தியாவிலேயே அதிக அதிருப்தி வாக்காளர்களை கொண்ட மாநிலமாக தமிழகமே விளங்குகிறது.

இதற்காக பலபேர், பல ஆண்டுகளாக உழைத்திருக்கிறார்கள் என்பதால், இந்தியாவிற்கே தமிழ்நாடு விடிவெள்ளியாக இருக்கப் போகிறது.

ஆனால், உழைக்காமல் உண்டு கொழுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகளோ, தீர்ப்பை தான்தோண்றித்தனமாக தாமதப்படுத்தியதன் மூலம், மக்களின் இரத்தத்தை அட்டைப் பூச்சியாய் உறிஞ்சி, மக்களாட்சி மலரவும், வலுப்பெறவும் பெறும் தடையாக இருந்துள்ளனர்.

இப்படியொரு ஓட்டைப் பதிவு செய்து என்ன ஆகப்போகிறது என நீங்கள் நினைக்கலாம். ஆனால், இப்படியரு ஓட்டு விழுந்தாலே தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என யாருக்குமே எனது வாக்கைப் பெற தகுதியில்லை என்று சொல்லும் திருவாக்கு ஆகும்.

திருவாக்கு என்றால், மேன்மையான ஆணை (ஆட்சியை அமை) என்று பொருள்.

ஒவ்வொரு வாக்கும் மேன்மையானதுதான். ஆனால், அதனை இலவசம் என்னும் லஞ்சம், நேரடி லஞ்சம், போதையுடன் கூடிய (ப ல)ஞ்ச பிரியாணி உள்ளிட்ட பல்வேறு வகைகளுக்காக வக்கற்றவர்களும், வாக்கு அற்றவர்களும் செலுத்திடும் போது அம்மேன்மைக்கு தொண்மை இல்லாமல் போயிற்று.

இதில், ஆணையம் வாக்கு அற்றவர்களிடம் இருந்து முழுமையாக இல்லா விடினும் கூட, பெருமளவு மீட்டெடுக்கப்பட்டு விட்டது. மீதம் உள்ள வக்கற்றவர்களை மீட்டெடுக்கும் தலையாய கடமை பொறுப்பு நம் ஒவ்வொருவரிடமுமே உள்ளது.

ஒருவாக்கல்ல... இருவாக்கல்ல... 24859 திருவாக்குகள் விழுந்த பின்னும் கூட, (வ, தி)ருந்தி இருக்க வேண்டிய அரசியில்வாதிகள் (வ, தி)ருந்தவில்லை. மாறாக, தோழமை கூட்டணி முறிந்த கோபத்தில் எனது ஓட்டும், என் கட்சிக்காரர்கள் ஓட்டும் "49 ஓ" க்கே என வெளிப்படையாக அறிக்கைகளை விட்டு பேசினாலும், ஒரு ஓட்டு கூட போட்டதாக தெரியவில்லை.

நாடு சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆன பின்புதாம், ‘வேட்பாளரை நிராகரிப்பது அடிப்படை உரிமை என, அளவற்ற அறிவு வறுமையும், இவ்வறிவு வறுமையிலும் தங்களைத் தாங்களே நீதியரசர்கள் என சொல்லிக் கொள்ளும் அளவிற்கு மெத்தப் படித்த மூதேவிகளான உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கே தெரியவந்திருக்கிறது’ என்னும் போது 2014 இல் நடக்க இருக்கிற பாராளுமன்ற தேர்தலில், இது எத்தனை குடிமக்களுக்கு தெரியப் போகிறதோ...

மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில்தாம் அதிகபட்ச "49 ஓ" லட்சிய ஓட்டுகள் லட்சக் கணக்கில் விழும் எனவும், ஆதரவு வேட்பாளர்களை விட அதிருப்தி வேட்பாளரான "49 ஓ" பல தொகுதிகளை கைப்பற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் ஆனால், அவதிப்படுவதற்கு நிறையவே இருக்கிறது என்றும் நம்பலாம்.

ஆம்! இந்திய குடியரசில் இதுவரை நடந்துள்ள தேர்தல்களில் வெற்றி பெற்று மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்தவர்கள் யாரும் உண்மையில், பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களே அல்ல; சிறுபான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே என்று சொன்னால், உங்களுக்கு எல்லாம் அதிர்ச்சியாகத்தாம் இருக்கும்.

ஆனால், இதுதாம் உண்மை. உண்மையாக, தேர்தல் நடத்தை விதிகள் 1961 இன் விதி  "49 ஓ" இன்படி, வேட்பாளரை நிராகரிக்கும் உரிமை வழங்கப்படாத எந்த தேர்தலும், எப்படி நியாயமான தேர்தல் என்றும், மக்களாட்சிக்கான தேர்தல் என்றும் சொல்லமுடியும். சரி, இப்போதுதாம் நிராகரிப்பு உரிமையை வழங்கி விட்டார்களே...

எனவே, அடுத்த தேர்தல் முதல் மக்கள் ஆட்சி உறுதிதானே என்றால் அதுவும் கிடையாது. இன்னும் எத்தனை எத்தனையோ சங்கதிகள் இருக்கின்றன. இவைகள் அனைத்திற்கும் அடித்தளமாக இருக்கப் போவது, இந்நிராகரிப்பு உரிமைதாம்.

இது குறித்து மகத்தான மக்களாட்சி மலர... என்கிற தலைப்பில் கட்டுரை ஒன்று விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. இதனை படிக்க இங்கு சொடுக்கவும்.

இங்கு மிக முக்கியமாக மேலே குறிப்பிட்ட சிறுபான்மை மக்கள் என்பதற்கு சாதி, மத ரீதியாகவோ அல்லது தங்களை தாங்களே சிறுபான்மையினர் என பெருமையாக குறிப்பிட்டுக் கொள்ளும் மக்கள் என்றோ தவறாக பொருள் கொள்ள கூடாது.

குழந்தைகளுக்குள் பிடிக்காத சம்பவம் எதாவது நடந்து விட்டால், அதனால் பாதிக்கப்பட்ட குழந்தை வேறு ஏதோவொரு விதத்தில், வீம்புக்காக ஏடாகூடமாக எதையாவது செய்து மடக்கி விட்டு, இப்ப என்ன பண்ணுவ என்று கேட்கும். இதில், மற்ற குழந்தைகளும் மாட்டிக் கொள்ளும்.

"49 ஓ" குறித்து காலம் கடந்த உச்சநீதிமன்றத்தின் (து, த)ப்பில்லாத தீர்ப்பு, நம்மைப் (மக்களைப்) பொருத்தவரை   இப்படித்தான் இருக்கப் போகிறது.
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)