No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Thursday, September 26, 2013

மதிக்கப்பட வேண்டிய மனித உரிமைகள்


ஒழுக்கமும், நாணயமும் உள்ளவர்கள் வக்கீல் தொழிலுக்கும், அரசு ஊழியத்துக்கும் அருகதையற்றவர்களாகி விட்டனர் என்று தந்தைப் பெரியார் 1931 இல் கூறியுள்ளார்.


மக்களின் நன்மைக்காக நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன என நினைப்பது தவறு. தங்களின் தகறாறுகளை, மக்கள் தங்களுக்கு உள்ளேயே தீர்த்துக் கொள்வதாய் இருந்தால், அவர்கள் மீது மூன்றாம் ஆள் எவ்வித ஆதிக்கத்தையும் செலுத்த முடியாது.


மேலும், எது நியாயம் என்பது தகறாரில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். எனவே, அதில் மூன்றாம் ஆள் கூறும் தீர்ப்பு எப்போதுமே நியாயமாக இருந்து விடப் போவதில்லை என்பது நிச்சயம் என்று, தாத்தா காந்தி 1909 ஆம் ஆண்டிலேயே கூறியுள்ளார்.


மகான்களின் ரத்தின சுருக்கமான இந்த வரிகள் எத்தனை எத்தனை விவகாரங்களை உள்ளடங்கியதுன்னு, சற்றேனும் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்!


மதிக்கப்பட வேண்டிய மனிதர்களின் உரிமைகள் எல்லாம் காலம் காலமாகவே மிதிக்கப்படுகிறது என்பதாலேயே மனித உரிமை பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. மனிதர்களின் உரிமைகளை பாதுகாக்கவும், நிலைநாட்டவும் தவறிய அரசு மற்றும் பொது ஊழியர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின்படியே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கான சட்டப்பிரிவுகள் இருக்கின்றன.  


இது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை விட, இவ்வூழியர்கள் நமக்கான சட்ட கடமையை ஆற்றுவதற்காகவே, சிறப்பு அடிமைத் தகுதிகள் மற்றும் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்பட்டு, சட்ட ஊழியத்தில் நியமிக்கப்பட்டு, நமது வரிப்பணத்தில் இருந்து தாராள கூலியும், ஏராள சலுகையும் கொடுக்கப்படுகிறது.


இதன்படி, கடமையைச் செய்ய நியமிக்கப்படாத நம்மை விட, சட்டப்படி கடமையைச் செய்ய நியமிக்கப்பட்ட அடிமை ஊழியர்கள், அக்கடமையைச் செய்ய தவறும் போது அதிகபட்ச சிறை தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.


இதுவே, நியாயம்தாம் சட்டம் என்பதற்கு ஒப்பானது. அரசு மக்களால் தேர்வு செய்யப்படுவதற்கான மிக முக்கிய காரண காரணிகளில் இதுவும் ஒன்று.


ஆனால், பொது மக்களையோ அல்லது தனியார் நிறுவன நிர்வாகிகளையோ குற்றம் புரிந்தாய் என கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என கோரும் அரசும், அடைக்கும் நீதித்துறையும் தங்களது அடிமை ஊழியர்கள் குற்றம் புரியும்போது மட்டும் கைது செய்து சிறையில் அடைக்காமல், துறை விசாரணை என்கிற பெயரில், அவர்களை துரையாக வழி நடத்தி, தனக்கு ஏதோவொரு வகையில் சகாயமானவர்களை அல்லது இனி விசுவாசமாக நடந்து கொள்வேன் என்பவர்களை தண்டனையில் இருந்து காப்பாற்றி, ஊழியத்தில் நீடிக்கச் செய்து மீண்டும், மீண்டும் குற்றம் புரிய தூண்டுகிறது.


அரிதிலும், அரிதாக எதற்கும் இணங்க மறுக்கும் கொள்கை ஊழியர்கள் எவராவது இருப்பின், அவர்களுக்கு நியாயம் இருந்தாலும் காத்திருப்பு பட்டியல், பணி நீக்கம், சிறையில் அடைத்தல், சிறையில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு கொடுமையாக நடத்துதல், இவைகளுக்கும் மசியாதவர்களை அவர்களின் உற்றார், உறவினர், நண்பர்களை துன்புறுத்துவதன் மூலம் மசிய வைப்பது என அனைத்து அவலங்களையும், எனக்கு நீ, உனக்கு நான் ஆதரவு என்கிற வகையில் தனித்து செயல்பட வேண்டிய பொய்யர்களும், கொள்ளையர்களும் செயல்படுவது போலவே, அரசும் நீதித்துறையும் கூட கைகோர்த்து அரங்கேற்றி வருகிறது.


இப்படித்தாம் 15-07-2006 அன்று திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற உடமைகளை அடித்து உடைத்து, கலாட்டா செய்ததால் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்கிற செய்தியை படித்த போதே இதில், நான் சொல்லும் மேற்சொன்ன கொள்கை அவலம் அரங்கேறி இருக்கின்றன என நினைத்தேன்.


ஆனால், அடுத்த ஆண்டே சிறையில் அடைக்கப்பட்ட அவரை, சில குற்றச்சாற்றுகளின் பேரில் தற்காலிக பணி நீக்கத்தில் இருந்த அவருக்கு, சிதம்பரம் கூடுதல் மாவட்ட முன்சீப் ஆக பணி வழங்கப்பட்டது என்கிற செய்தி 21-07-2007 அன்று நாளிதழில் வெளியானது. இதுதாம் அவரைப்பற்றி வெளி உலகிற்கு தெரிவிக்கப்பட்ட செய்தி.


நீதிமன்ற உடமைகளை அடித்து உடைத்ததற்காக சிறையில் அடைத்தது சரி என்றால், அவருக்கு மீண்டும் சட்டப்படி வேலை தந்திருக்க கூடாது. மீண்டும் வேலை தந்தார்கள் என்றால் சிறையில் அடைக்கப்பட்டது சட்டப்படி தவறு. உண்மையில் நீதித்துறையில் என்ன நடக்கிறது...


இதுபற்றி ஆராய்ந்து உண்மையை விரிவாக எழுத வேண்டும் என மனம் இருந்தாலும், நேரமில்லாமல் போயிற்று. அதனால், 2007 ஆம் ஆண்டில் திருத்தி வெளியிட்ட நீதியைத்தேடி... பிணை எடுப்பது எப்படி நூலில், நீதிபதிகள் திருந்த என்ன செய்யனும்! என்கிற தலைப்பில் இவ்விவகாரம் குறித்து எழுதி இருந்தேன்.


OLYMPUS DIGITAL CAMERA2008 ஆம் ஆண்டில், என்னை உலாப்பேசியில் தொடர்பு கொண்ட ஒருவர், இந்நூலில் இத்தலைப்பை படித்ததாகவும், தனக்கு தெரிய ஒரேயொரு வழிதாம் இருக்கிறது என்றும், சொல்லலாமா என்றும் அனுமதி கேட்டு தன் பேச்சை நிறுத்தினார். சொல்லுங்கள் என்றேன். சொன்னதும் அதிர்ச்சியடைந்தேன்.


ஆம்! நீதிபதிகள் திருந்த அவர்களை செறுப்பால் அடிப்பதை தவிர வேறு வழியேயில்லை என்றார்.


நீதிபதிகளால் பாதிக்கப்பட்டு, பல்வேறு வகைகளில் புலம்பும் மக்களில் ஒருவராக இவரும் இருப்பார். அதனால்தாம், இப்படி விரக்தியில் பேசுகிறார் என நினைத்து, இயல்பாகவே நீங்க யார் என கேட்டேன்.


சத்தியத்திற்கு என்றுமே சாவில்லை என்பதை நிரூபிப்பது போல, ‘‘நீங்கள் எந்த நீதிபதியைப் பற்றி நியாயமான கேள்வியை எழுப்பி எழுதி உள்ளீர்களோ, அந்த நீதிபதியே நான்தான்’’ என்றதால், மேலும் அதிர்ந்தேன். அவருக்கு என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை.


ஏனெனில், நீதிபதிகள் தங்களை தண்டிக்கும் அதிகாரம் கொண்டவர்கள் என்பது தெரிந்து வைத்திருக்கும் கைதிகளே, அவர்கள் மீது துணிந்து செறுப்பை வீசியிருக்கிறார்கள். வழக்கு நடத்திய ஒரு பெண்மணி உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது செறுப்பை வீசியிருக்கிறார்.


ஆனால், ஒரு நீதிபதியே, நீதிபதிகளை திருத்த செறுப்பால் அடிப்பதை தவிர, வேறு வழியில்லை என்கிறாரே என்பதுதாம். இந்த அளவிற்கு நீதிபதிகள் சுய மரியாதையை இழந்து கேவலப்பட்டு கிடக்கிறார்கள்.


இப்படியொரு கேவலமான நிலமை ஆங்கிலேய அடிமை ஆட்சியில் கூட இருந்ததில்லை என்பதற்கு, ‘‘வெள்ளைக்கார வக்கீல்களிடமும், வெள்ளைக்கார அதிகாரிகளிடமும் காண முடியாத அநேக ஒழுக்கக் குறைவுகளும், நாணயக் குறைவுகளும், நடுநிலையற்ற தன்மையும், நம் வக்கீல்களிடமும், அரசு ஊழியர்களிடமும் தாராளமாய் இருந்து வருகின்றன’’ என இந்த கொள்ளைக்காரர்களை விட, கொள்கையுடன் இருந்த வெள்ளைக்காரனே மேல் என 1931 ஆம் ஆண்டே எழுதிய தந்தைப் பெரியாரின் கூற்றே சான்றாக இருக்கிறது.


ஆனால், நான் எப்போதுமே பொய்யர்களையும், கொள்ளையர்களையும் மட்டுமே இலக்காக வைத்து தாக்குகிறேன் எனவும், அவர்களின் செயல்பாடுகளில் குற்றம் கண்டு பிடிப்பதை தவிர, எனக்கு வேறு வேலையே கிடையாது எனவும், இவ்வுண்மைகளைப் பற்றி அறியாத மிககுறுகிய மனமும், அளவற்ற அறிவு வறுமையும் கொண்ட அன்பர்கள் வெகுசிலர் நினைக்கிறார்கள். இதில், வருங்கால பொய்யர்களும் அடங்குவர்.


எனக்கு நீதி மீது மட்டுமே அதீத அக்கறை உண்டு.


ஆம்! நீதி சரியாகி விட்டால், மீதி எல்லாம் தானாகவே சரியாகி விடும். நீதி சரியாக விட்டால், எதுவுமே சரியாகாது என்பதோடு, கிடைப்பது எதுவுமே நீதியாக இருக்காது. நீதியில் மீதியாகத்தாம் இருக்கும்.


இது இயற்கையின் நீதியல்ல! இயலாதவர்களின் (அ)நீதி!!


ஆமாம்! நியாயம் கேட்டு நீதிமன்றத்துக்கு சென்றவர்கள் எவருக்குமே, சரியான நீதி கிடைத்ததில்லை என்பது என் கருத்து.


அதெப்படிங்க ஒவ்வொரு வழக்குலேயும், யாரோ ஒருத்தருக்கு சாதகமா தீர்ப்பு சொல்லுறாங்களே என நீங்கள் நினைக்கலாம்.


சாதகமான தீர்ப்பு மட்டுமே நீதியாகாது; பாதகமான தீர்ப்பு தண்டனையும் ஆகாது. ஏனெனில், இவைகள் இரண்டிலும் சமநீதிக்கான கோட்பாடுகள் பின்பற்றப்படுவதில்லை. ஆதலால், நீதிக்கு சமாதிதாம் கட்டப்பட்டு வருகிறது.


இதனால்தாம், ஒவ்வொருவரும் எனக்கு சாதகமா அல்லது பாதகமா தீர்ப்பு கிடைச்சுதுன்னு சொல்லிக்கிறாங்க. மறந்தும் கூட யாரும் எனக்கு நீதி கிடைத்தது என்று சொல்வதில்லை. வெகுசிலர் சொல்லியிருக்கிறார்கள் என்றாலும் கூட, அது இது மீதி, எது நீதி என்பன பற்றிய அவர்களது அறியாமை.


ஆனால், சமநீதி கிடைச்சுதுன்னு யாரும் சொன்னதேயில்லை.


அதனாலேயே, அ(ந்)நீதியால் பாதிக்கப்பட்டவர்கள் எவராக இருந்தாலும், அவர்கள் வக்கீல்களாக, நீதிபதிகளாகவே இருந்தாலும் கூட, அவர்களுக்கு நியாயமாக என்ன ஆலோசனை வழங்க முடியுமோ அதை வழங்குகிறேன். என் வாசகர்களின் நியாயமற்ற செயல்பாடுகளை விமர்சித்து எழுதவும் தவறியதில்லை. இந்த அக்கறை ஒவ்வொருவருக்கும் வர வேண்டும்.


சரி, நம்ம விட்ட விசயத்துக்கு வருவோம்...


இந்த வகையில் பல கொள்கையாளர்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட, நீதித்துறையில் ஓகோவென்று இல்லா விடினும் கூட, ஓரளவாவது கொள்கையோடு இருக்க வேண்டும் என நினைத்து கடமையாற்றிய திரு.ராமராஜ் என்கிற நடுவரை (குற்றவியல் நீதிபதியை) வக்கீல்கள் முதல் நீதிபதிகள் வகை எப்படியெல்லாம் சிறையில் அடைத்து வைத்து கொடுமைப் படுத்தி, பின் எப்படி பணி உயர்வு கொடுத்து, பணி நீக்கம் செய்தார்கள் என்பது தொடர்பான ஆவணங்களை எல்லாம் பரிசீலனை செய்தேன்.


ஆம்! சட்டப்படி பணி நீக்க உத்தரவை எழுத்து மூலமாக கொடுக்க முடியாது. சிறையில் அடைத்த வழக்கை விசாரணை செய்து தண்டனை கொடுக்கலாம் என முயன்றாலும் முடியாது. மாறாக, சிறையில் சித்திரவதை செய்த நம் கதை நாறிவிடும் என எதையும் செய்ய இயலாமல் போகவே, ‘‘இனி உனக்கு வேலையும் கிடையாது, ஓய்வூதியம் உள்ளிட்ட எவ்வித பலாபலனையும் கொடுக்க முடியாது, போய் வா என தினக்கூலி செய்பவரை, பண்ணையார்கள் துரத்தி விடுவது போல துரத்தி விட்டு, அவர் பணியாற்றிய இடத்தில் வேறொரு கொள்ளையரை பணியில் அமர்த்தி விட்டார்கள்’’.


இப்ப சொல்லுங்க! இந்த இடத்துல நீங்க இருந்தீங்கன்னா, நீதிபதிகளை செறுப்பால் அடிக்க வேண்டும் நினைத்து இருக்கமாட்டிங்களா... அடித்தே இருப்பீர்கள்தானே?


என்ன, நம்ம நாட்டில இப்படியெல்லாம் கூட நடக்குதா, அதுவும் நீதிவழங்கும் நீதித்துறையிலேயே இப்படி நடக்குதா என தலை சுத்துதா... இப்பதான் விசயத்தையே ஆரம்பிச்சிருக்கேன். இன்னும் எவ்வளவோ இருக்கு... அதுக்குள்ளேயே தல சுத்துதூன்னா எப்படி?


இவைகளை எல்லாம் ஆராய்ந்து கதை, வசனம், இயக்கம் என எதுவுமே இல்லாமல், வித்தியமாசமான பாடமாக தயாரித்து தில்லோடு வெளியிட எனக்கு எப்படி சுத்தியிருக்கனும். இக்கொடுமைகளை நேரடியாக அனுபவித்த நீதிபதி எந்த நிலைக்கு போயி உயிருக்கு போராடி இருக்கனும்.


அதுவும் சிறையில் அவருக்கு நடத்தப்பட்ட சொன்ன மிகக் கேவலான கொடுமைகளை இங்கு விவரிப்பது நாகரீகமாக இருக்காது என தவி(க், ர்)கிறேன்.


இதையெல்லாம் கைவசமிருந்த ஆவணங்களின் அடிப்படையில் சரிபார்த்த பின்னரே, 2010 ஆம் ஆண்டில், மத்திய சட்ட அமைச்சகத்தின் நிதியுதவியோடு வெளியிட்ட நீதியைத்தேடி... சாட்சியங்களை சேகரிப்பது எப்படி என்கிற நூலுடன் சேர்த்து நீதியா! அநீதியா? நீதிக்குச் சமாதியா?! என்கிற தலைப்பில் அவரேயே பேசும்படி செய்து, ஒளி ஒலி (காணொலி) குறுந்தகடாக வெளியிட்டு உள்ளோம்.


சும்மா சொல்லக்கூடாது... 


நாம் நீதித்துறையில் என்னென்ன அவலங்கள் அரங்கேறுகின்றன என சொல்லுகிறோமோ அவைகள் அனைத்தும் உண்மை என்பதை அப்படியே ஆதாரப்பூர்வமாக வழிமொழிந்துள்ளார் என்பதை விட, வெளியில் இருந்து கொண்டு ஆராய்வதால் நீதித்துறையில் நடக்கும் பல்வேறு உள் விவகாரங்களில் ஒருசில நமக்கு புலப்படாமல் போய் விடுகின்றன. அவைகளையும் கூட புட்டுப்புட்டு வைத்துள்ளார்.


இவர் பல்வேறு வழிகளில், பலமுறை கேட்ட சில முக்கிய ஆவணங்களை உயர்நீதிமன்றம் கொடுக்க மறுக்கவே, பாம்பின் கால் பாம்பரியும் என்பதற்கு இணங்க, நீதிபதிகள் எதற்கு மசிவார்கள் என்பதை தெரிந்து வைத்திருந்த இவர், அப்படிப்பட்ட தொடர்பில் இருக்கும் ஒரு நடிகையைப் பிடித்து அந்த ஆவணங்களை கைப்பற்றி தனக்கு வலுசேர்த்து கொண்டு விட்டார். இதற்காக இவர் நடிகைக்கு செலவிட்ட தொகை ஐயாயிரம் மட்டுமே.


இது எவ்வளவு கேவலம்... நீதிமன்ற கோமாளிகளுக்கு ஏது கேவலம்?


இவரது மனைவி கைநாட்டு என்பதும், விவசாய வேலை பார்த்து வருபவர் என்பதும், இவர் எந்த அளவிற்கு நீதிக்கொள்கையில் உறுதியாக இருந்திருப்பார் என்பதை பறைச் சாற்றுகின்றன.


இவர் விசயத்தில் சதி செய்யும் சாதி வெறியும், மதம் பிடித்த மத வெறியும் கூட, அரசுப் பொய்யர்களாலும், கொள்ளையர்களால் அரங்கேற்றப்பட்டு இருக்கிறது.


இது குறித்து  2011 ஆம் ஆண்டில் நீதியைத்தேடி வாசகரான, தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கான ஓய்வுற்ற குற்றவியல் துறை இயக்குனரை விசாரித்த போது திட்டவட்டமாகவும், தெளிவாகவும் பதில் அளிக்க முடியவில்லை என்பதோடு, கொடுக்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வில்லை (அடிபணிந்து ஏற்றுக் கொள்ளவில்லை) என்றார்.


தனக்கு மீண்டும் வேலையும், பிற பலன்களையும் கொடு. இல்லையென்றால் திறந்த நீதிமன்றத்தில் உங்களை செறுப்பால் அடிக்காமல் விடமாட்டேன் என்கிற புலம்பலோடு பொய்யர்கள் பாணியில் உயர்நீதிமன்றத்தோடு மல்லுக்கு நின்று கொண்டு இருந்தவரை, என்னை சட்டப்படி விசாரணை செய்து சிறையில் அடை என நமது கொள்கை பாணியில் போராட திருப்பி விட்டதை ஏற்றுக் கொண்டார். உண்மையில் நீதிபதிகளுக்கு தில் இருந்தால், இவரது வழக்கை விசாரித்துப் பார்க்கட்டும்.


இப்படி ஒவ்வொரு ஊழியர் மீதும் இந்திய தண்டனைச் சட்டப்படி எடுக்க வேண்டிய அரசும், பொதுத்துறையும் ‘இப்படி எடுக்க ஆரம்பித்தால், அத்துறைகளுக்கு தலைமைப் பொறுப்பு தாங்களே என, நாமும் ஒருநாள் பதில் சொல்ல வேண்டியிருக்கும், சிறை தண்டனைக்கும் கூட உள்ளாக நேரிடும் என கணக்கு போட்டே அரசு மாற்று வழிமுறையாக மனித உரிமைகள் போன்று புதுப்புதுப் பெயரில் சட்டங்களை அமல்படுத்துகிறது.


இதனாலேயே, எத்தனை சட்டங்கள் வந்தாலும், அது தொடர்பான குற்றங்கள் குறையாமல், அதிவேகமாக வளர்ந்து வருகிறது என்னும் போது, உண்மையில் இதற்கு அடிப்படை காரணமாக விளங்கும் மத்திய, மாநில அரசுகள் மற்றும் நீதித்துறை உள்ளிட்ட கட்டமைப்புகளும், அதில் கூலிக்கு மாரடிக்கும் ஊழியர்களும் எதற்கு என்பதே கேள்வி?


இவைகளின் செலவுகளுக்காகவும், கூலிக்காகவும் நாம் உழைப்பை ஏன் வரியாக செலுத்த வேண்டும்... என ஆங்கிலேயனைப் பார்த்து கேள்வி கேட்ட வீரபாண்டிய கட்டபொம்மனைப் போல, இந்திய அரசுக்கு தலைமை பொறுப்பு வகிக்கும் குடியரசுத் தலைவரை, ஒவ்வொரு இந்திய குடிமகனும் கேட்க வேண்டிய சூழ்நிலையும் வந்து விட்டது.


ஆனாலும், அரசு கொண்டு வரும் நுகர்வோர், மனித உரிமை, தகவல் பெறும் உரிமை ஆகிய சட்டங்களை வைத்து பணம் சம்பாதிப்பதற்கு என்றே, பல்வேறு தன்னார்வ நுகர்வோர், மனித உரிமை, தகவல் உரிமை அமைப்புகள், லட்சங்களுக்காக தனித்தனியாகவும், கோடிகளுக்காக கூட்டமைப்புகளாகவும் இயங்குகின்றனவே தவிர, உண்மையான நுகர்வோர் உரிமையை பேனவும், மனித உரிமையை காக்கவும், ஊழல் முறைகேடுகளை களையெடுப்பதற்கும் இல்லவே இல்லை.


நம் நாட்டில் எது எதைக் காப்பாற்ற வேண்டுமோ அதுதான் அதனை சீரழித்துக் கொண்டு இருக்கிறது என்பது மறுக்க முடியாத வரலாறாகவே இன்று வரை இருக்கிறது.


நுகர்வோர், மனித உரிமை பாதுகாப்பு மற்றும் தகவல் பெறும் உரிமை அமைப்புகளை தொடங்குவது என்பது கால நேரத்துக்கு தக்கபடி, தன்னார்வ கேடிகள் லட்சத்திலும் கோடியிலும் பணம் புரலும் வியாபாரம் ஆகி விட்டது. இந்த வகையில் அடுத்து வரப்போகும் சட்டம் எதுவோ?


மனித உரிமை ஆணையம் என்பது மட்டுமே மாநில அல்லது மத்திய அரசின் அதிகாரத்தோடு இயங்கும் அமைப்பு. மற்றபடி எல்லா அமைப்புகளும் தனி நபர்களின் சங்கமே என்ற விபரம் கூட தெரியாமல் அரசு ஊழியர்கள் கூட, மனித உரிமை சங்கப் பிரதிநிதிகளால் ஏமாற்றப்பட்டு உள்ளனர் என்றால் விபரமறியா மக்கள் எம்மாத்திரம்?


சட்டத்துக்குப் புறம்பாக செயல்பட்ட அரசு ஊழியர்கள் சிலர் மீது, நான் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட போது, அதனை கைவிட வேண்டும் என, சர்வதேச மனித உரிமை கழகத்தை சேர்ந்த ஒரு தறுதலை, என்னிடமே கட்டப்பஞ்சாயத்து செய்ய முயற்சித்து இருக்கிறார் என்றால், சட்ட விழிப்பறிவுணர்வில்லா மக்கள் எம்மாத்திரம்?


Mathi பொதுவாக மனித உரிமை மீறல் என்றாலே காவல்துறையின் மீறல் மட்டுமே என்ற தவறான கருத்து சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கிற இந்த காலகட்டத்தில் ‘‘நீதித்துறையும் & மனித உரிமை மீறலும்’’ என்ற தலைப்பை தேர்ந்து எடுக்கவே ஒரு தில் வேண்டும். தில்லுக்கு சட்ட விழிப்பறிவுணர்வு வேண்டும்.


நாமக்கல்லைச் சேர்ந்த நீதியைத்தேடி... வாசகர் மதி சட்ட விழிப்பறிவுணர்விலும் மதியானவர் என்பதால், இத்தலைப்பை தில்லோடு தேர்ந்தெடுத்து என்னை சிறப்புரையாற்ற அழைத்ததன் பேரில் சென்றிருந்தேன். அக்கூட்டம் நடந்த கூடம் முழுவதும் சட்ட விழிப்பறிவுணர்வு குறித்த பதாகைகளைப் (பேனர்கள்) பார்த்து வியந்தேன்.


குறிப்பாக, நமக்காக நாமே வாதாடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து நீதியைத்தேடி... குற்ற விசாரணைகள் நூலில் வக்கீல் தொழிலுடன் ஒப்பிட்டு கொடுத்துள்ள வேறுபாடு விபரப்பட்டியலைப் அப்படியே போடாமல், வக்கீல் பகுதியை நீக்கி விட்டு போட்டிருந்தார்.


வக்கீல்கள் இப்படித்தாம் ஒழுங்கீனமாக தொழில் செய்வார்கள் என்பதை வெளிப் படையாக பட்டியல் போட்டு காட்டுவது கூட, பொய்யர்களின் தொழிலுக்கு செய்யும் உரிமை மீறல் என நினைத்தார் போலும்!


காவல்துறை, நீதித்துறை மட்டுமல்லாது அனைத்து இடங்களிலும் மனித உரிமை மீறல் நடப்பதற்கு சட்ட விழிப்பறிவுணர்வு இல்லாத நாமே அடிப்படை காரணம் என்பது நான் உங்களுக்குச் சொல்லும் அனுபவ ஆய்வுச் செய்தி.


சட்ட விழிப்பறிவுணர்வு என்றால் அனைத்து விதமான சட்டங்களையும் கரைத்து குடித்திருக்க என நினைக்கிறீர்கள். இது தவறு.


சுதந்திரம் எப்படி குற்றமாகும், உரிமை எப்படி பிரச்சினையாகும் என்பதற்கு தெளிவானதொரு விளக்கத்தை தெரிந்து கொள்வதுதான் ஆதி முதல் அந்தம் வரையிலான அடிப்படை சட்ட விழிப்பறிவுணர்வு.


அதாவது, நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு சுதந்திரமாக இருக்க முடியுமோ, அவ்வளவுக்கு அவ்வளவு சுதந்திரமாக இருப்பது உங்களின் (சு)தந்திரம். ஆனால், உங்களின் இந்த சுதந்திரம் அடுத்தவரின் சுதந்திரத்தை எவ்விதத்திலும் பறிப்பதாக இருக்க கூடாது. அப்படி பறித்தால், அது குற்றமாகி விடும்.


அதேபோல, எவ்வளவுக்கு எவ்வளவு உரிமையை எடுத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு உரிமையையும் எடுத்துக் கொள்வது உங்களின் உரிமையே. ஆனால், உங்களுக்கு உள்ள உரிமை அடுத்தவருக்கு இல்லை என எந்த நிமிடத்தில் நினைக்கிறீர்களோ, அந்நிமிடமே பிரச்சினையின் ஆரம்பம்.


இப்போது யோசித்து பாருங்கள். இதற்கு மேல் சட்ட விழிப்பறிவுணர்வு என்று சொல்ல என்ன இருக்கிறது. இந்த அடிப்படை கோட்பாடுகளை மட்டும் கடைப்பிடித்து வாழக் கற்றுக் கொண்டாலே, நாம் எந்த குற்றத்திலும், பிரச்சினையிலும் தெரிந்தே ஈடுபடமாட்டோம். நாம் ஈடுபடவில்லை என்றாலே, நம்மிடமும் யாரும் ஈடுபடமாட்டார்கள்.


ஒருவேளை நம்மிடம் யாராவது வம்புதும்பில் ஈடுபட்டால் கூட, நான் சொல்வதை நீங்கள் கேட்பது போல, அவர்களுக்கு இவ்விரு இலக்கணங்களையும் தக்க அறிவுரைகளாக எடுத்துக் கூறி, நீங்களும் அவர்களை கேட்க வைக்க முடியும்.


இப்படி ஒவ்வொருவரையும் சட்ட விழிப்பறிவுணர்வுக்கு கொண்டு வந்து விட்டால் காவல்துறை, நீதித்துறை மட்டுமல்ல; எந்த து(றை, ரை)யையும் நாம் யாரும் நாட வேண்டியிருக்காது. யாருக்கும் மனித உரிமை மீறலும் நடக்காது.


ஒருவேளை எவரையாவது உங்களது அ(ற, றி)வுரைக்கு கொண்டு வர முடியா விட்டாலும் கூட, வக்கீல்களையும், நீதிபதிகளையும் வறு, வறு என வறுத்தெடுப்பது போல, அவர்களையும் வேறு யாரிடமும் வாலாட்டாத வகையில் வறுத்தெடுத்து விடலாம்.


இப்படி நீதியைத்தேடி... வாசகர்கள் பலரும், வக்கீல்கள், நீதிபதிகள் மட்டுமல்லாது, பலரையும் வறுத்தெடுத்திருக்கிறார்கள். இதுதாம், சட்ட விழிப்பறிவுணர்வின் சாகசம்.

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)